Published:Updated:

வெல்ல மூட்டை டு எடப்பாடியார்... பழனிசாமி முதலமைச்சர் ஆன கதை!

எடப்பாடி கே.பழனிசாமி
News
எடப்பாடி கே.பழனிசாமி

ச.ஜெ.ரவி - படங்கள்: வீ.நாகமணி, ஆ.முத்துக்குமார்

மிழ்நாட்டின் 13-வது முதலமைச்சராகப் பதவியேற்றிருக்கிறார் எடப்பாடி கே.பழனிசாமி. வெல்ல வியாபாரியாக வாழ்க்கையைத் தொடங்கியவரை, அரசியல் தொழில் அதன் உச்சத்துக்கு உயர்த்தியிருக்கிறது. அரசியல் மூலம் பரவலாக அறியப்பட்டதற்கு முன்னரே, ஒரு கொலை வழக்கில் அடையாளம் காணப்பட்டு, அந்தப் பகுதியில் அறிமுகமானவர் பழனிசாமி. பங்காளிகள் சூழ வாழ்ந்துவந்தவர் பழனிசாமி.

தன் குடும்பத்துக்கும் பங்காளி குடும்பத்துக்கும் பாதை பிரச்னையில் சண்டை மூள... கொலை வரை நீண்டது. இதில் எதிர்தரப்பைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டனர். கொலையில் தொடர்புடையவர்கள் எனத் தேடப்பட்டு வந்தவர்கள் தலைமறைவாகினர். அவர்களில் ஒருவர்தான் எடப்பாடி கே.பழனிசாமி. கட்டப்பஞ்சாயத்து, சமரசத்தால் சாட்சிகள் பல்டி அடிக்க... வழக்கு தள்ளுபடியாகி கொலை வழக்கில் இருந்து மீண்டனர் பழனிசாமி தரப்பினர்.

வெல்ல மூட்டை டு எடப்பாடியார்... பழனிசாமி முதலமைச்சர் ஆன கதை!

பஞ்சாயத்துத் தேர்தல் தோல்வியிலிருந்து...

வெல்ல வியாபாரத்துக்கிடையே, பழனிசாமிக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டது. `அரசியலில் நுழைய வேண்டும். பதவிகளுக்கு வர வேண்டும்' என விரும்பினார். இதற்காக தனது பங்காளிகளில் ஒருவரை எதிர்த்து, பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்டார். கொலை வழக்கில் பழனிசாமி மீது இருந்த `கறை' அகலாமல் இருந்த நேரம் என்பதால், அது தேர்தல் முடிவில் எதிரொலித்தது. பஞ்சாயத்துத் தேர்தலில் தோல்வியடைந்தார் பழனிசாமி.

ஆனாலும், அரசியல் ஆசை அவரை விடவில்லை. செங்கோட்டையனிடம் அறிமுகமான பழனிசாமி, அ.தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார். கிளைச்செயலாளர் பதவியில் அரசியல் பயணத்தைத் தொடங்கினார். எம்.ஜி.ஆர். இறப்புக்குப் பிறகு அ.தி.மு.க இரண்டாக உடைய, ஜெயலலிதா அணியில் செங்கோட்டையனுடன் இருந்தார் பழனிசாமி. 1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அந்த வெற்றி, 1991-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றுத்தந்தது பழனிசாமிக்கு. அப்போதும் வெற்றிபெற்றார்.

 எடப்பாடியார்?!

1991-ம் ஆண்டு வரை தொழில்ரீதியாக `வெல்ல மூட்டை பழனிசாமி, சர்க்கரை பழனிசாமி' என்று அழைக்கப்பட்டவர் அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி ஆனார். ஆட்சிப் பதவி மட்டுமல்லாது, கட்சியிலும் வேகமாக முன்னேறினார். யாரால் கட்சியில் அடையாளம் காட்டப்பட்டு வளர்ந்தாரோ, அதே செங்கோட்டையனைப் புறந்தள்ளி வேகமாக முன்னேறினார். கிளைச்செயலாளராகத் தொடங்கிய அரசியல் பயணம், ஓரிரு ஆண்டுகளில் மாவட்டச் செயலாளர் பதவி வரை பெற்றுத்தந்தது.

வெல்ல மூட்டை டு எடப்பாடியார்... பழனிசாமி முதலமைச்சர் ஆன கதை!

1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தோல்வி, 1998-ம் ஆண்டு எம்.பி தேர்தலில் வெற்றி, 1999-ம் ஆண்டில் எம்.பி தேர்தலில் தோல்வி, 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தோல்வி எனத் தொடர்ந்து தோல்விகளைச் சந்திக்க, கட்சி பதவியும் காலியானது.

சசிகலா குடும்ப ஆசீர்வாதம்

`எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்' என்ற கணக்கில், `பதவியைப் பிடிக்க என்ன செய்யலாம்?' என நினைத்தவர், சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த ராவணன் பக்கம் ஒதுங்கினார். அந்தக் குடும்பத்தின் விசுவாசியானார்.

தொடர் தோல்விகளைச் சந்தித்தவர் 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ராவணன் மூலம் மீண்டும் போட்டியிட ஸீட் பெற்றார். அவர்கள் ஆதரவில் அமைச்சர் பதவியையும் பெற்றார். ராவணனைக் கடந்து, தினகரன், திவாகரன், சசிகலா என அனைவரின் ஆதரவைப் பெற்றது இந்தக் காலகட்டத்தில்தான்.

சேலத்தில் செல்வாக்குடன் வலம்வந்த செம்மலையை ஓரங்கட்டினார். ஜெயலலிதா பிரசாரப் பயணங்களை வகுப்பதன் மூலம் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்த செங்கோட்டையனை, சசிகலா குடும்ப ஆதரவுடன் காணாமல்போகச் செய்தார். மறுபுறம் சசிகலா குடும்ப விசுவாசம் அதிகரித்துக்கொண்டே போனது. அதனால் கட்சியின் உள்விவகாரங்களையும் வருவாய் சார்ந்த விவகாரங்களையும் கவனிக்க அனுமதிக்கப்பட்டார் எடப்பாடி பழனிசாமி.

முதலமைச்சர் பழனிசாமி

ஆட்சியிலும் கட்சியிலும் அதிகாரம் செலுத்த, ஜெயலலிதாவால் நால்வர் அணி ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், முனுசாமி, வைத்திலிங்கம் ஆகிய நான்கு பேர் இடம்பெற்றிருந்த அணியில், சசிகலாவை எதிர்த்த முனுசாமி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக பழனியப்பன் சேர்க்கப்பட்டிருந்தார். நால்வர் அணியில் இருந்த பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதனின் செயல்பாடு சசிகலா குடும்பத்தினருக்குப் பிடிக்காமல்போனது. அவர்களுக்கு செக் வைக்க நால்வர் அணி ஐவர் அணியாக மாற்றப்பட்டு, அந்த அணியில் தங்களின் விசுவாசியான எடப்பாடி பழனிசாமியைச் சேர்த்தது சசிகலா குடும்பம்.

சீஃப் கலெக்‌ஷன் ஏஜென்ட்

எடப்பாடி பழனிசாமி மீதான புகார்கள் கொஞ்சநஞ்சம் அல்ல. ‘சீஃப் கலெக்‌ஷன் ஏஜென்ட்’ என்றுதான் அமைச்சர்களே எடப்பாடியை அழைப்பார்கள் என்று சொல்வதும் உண்டு.

வெல்ல மூட்டை டு எடப்பாடியார்... பழனிசாமி முதலமைச்சர் ஆன கதை!

`வருமானவரித் துறையும் தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிசாமியின் வீட்டை உடனடியாகச் சோதனையிட வேண்டும்' என வெளிப்படையாகப் பேசினார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். கோககோலா ஆலைக்கு அனுமதி வழங்கியதில் நடந்த முறைகேடு தொடங்கி, பல முறைகேடுகளில் பழனிசாமிக்குத் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள், எந்த விசாரணையும் இல்லாமல் அப்படியே இருக்கின்றன.

அரசு கான்ட்ராக்ட் எடுத்து மணல் அள்ளியதன் மூலம் பரவலாக அடையாளம் காணப்பட்டவர் சேகர் ரெட்டி. மணல் கான்ட்ராக்ட் கொடுக்கும் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. சேகர் ரெட்டி நடத்தும் நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீபாலாஜி டோல்வேஸ் (மதுரை) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி சுப்பிரமணிய பழனிசாமி.

மிரட்டும் இரு வழக்குகள்

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ராமலிங்கா கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவன இயக்குநர் சந்திரகாந்த் ராமலிங்கம். இவர் சில மாதங்களுக்கு முன்பு, வருமானவரி சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். அப்போது அவர் 5.40 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகளை சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்திருந்ததாகக் கைதுசெய்யப்பட்டார். இந்தச் சந்திரகாந்த் ராமலிங்கம், எடப்பாடி பழனிசாமி மகனின் சகலை.

வெல்ல மூட்டை டு எடப்பாடியார்... பழனிசாமி முதலமைச்சர் ஆன கதை!

சமீபத்தில், சேலம் மத்தியக் கூட்டுறவு வங்கியில் வருமானவரித் துறை சோதனை நடத்தப்பட்டது. அங்கு ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. வங்கியின் தலைவர் அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்தக் கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவன். எடப்பாடி பழனிசாமியின் வலதுகரம் என ஊருக்குள் வளையவருபவர்தான் இந்த இளங்கோவன்.

வருமானவரித் துறை சோதனைக்கு ஆளாகி சி.பி.ஐ-யால் கைதுசெய்யப்பட்ட சேகர் ரெட்டி, சட்டவிரோதமாக புதிய ரூபாய் நோட்டுகளைப் பதுக்கிவைத்ததாகக் கைதுசெய்யப்பட்ட சந்திரகாந்த் ராமலிங்கம், வருமானவரித் துறை சோதனைக்கு ஆளான இளங்கோவன் ஆகிய மூன்று பேருக்குப் பின்னால் இருப்பவர்தான் இன்று தமிழ்நாட்டின் 13-வது முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.