Published:Updated:

``மோடி தலைமையில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடைபெறுகிறது” சீறும் நாராயணசாமி

``மோடி தலைமையில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடைபெறுகிறது” சீறும் நாராயணசாமி
``மோடி தலைமையில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடைபெறுகிறது” சீறும் நாராயணசாமி

``தமிழகமோ அல்லது புதுச்சேரியோ எதுவாக இருந்தாலும் அரசின் அன்றாட நடவடிக்கையில் ஆளுநர் தலையிடுவதற்கு அதிகாரம் இல்லை"

``மோடி தலைமையில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடைபெறுகிறது” என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

ஆளுநர் ஆய்வுக்குச் செல்லும்போது இடையூறு செய்பவர்களுக்கு ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை தமிழக அரசியல் கட்சிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அந்த அறிக்கையை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ள புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, ``கள ஆய்வுதான் சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களையும் ஆளுநருடன் இணைக்கிறது. உண்மை நிலையை அறியவும், மக்கள் கருத்தைக் கேட்கவும், இது உதவி செய்கிறது. ஆளுநர் மாளிகைக்கு வரும் புகார்கள் குறித்து நேரில் சென்று விசாரித்து அதன் உண்மைத் தன்மையைக் காண முடிகிறது. மூன்றாம் தரப்பினரைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. கள ஆய்வும் ஒருவிதத்தில் மக்கள் சேவைதான். அந்த வகையில் ஆளுநரின் பணிகளைத் தடுத்தால் ஏழு ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை கிடைக்க சட்டத்தில் வழிவகை உள்ளது என்று தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை புதுச்சேரிக்கும் பொருந்தும்” என்று தெரிவித்திருந்தார். அவ்வளவுதான்... ஏற்கெனவே, ஆளுநர் கிரண்பேடியின் தனி ரூட்டைக் கடுமையாக விமர்சித்துவந்த முதல்வர் நாராயணசாமிக்கு இந்தப் பதிவு மேலும் உஷ்ணத்தை ஏற்படுத்தி விட்டது.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, ``தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வுக்குச் செல்லும்போது தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் தங்களுடைய எதிர்ப்பைக் கடுமையாகப் பதிவுசெய்து வருகின்றன. மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு நடத்துவதற்கு கவர்னருக்கு அதிகாரமில்லை எனத் தொடர் போராட்டத்தை அக்கட்சியினர் நடத்தி வருகிறார்கள். அதேபோல எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கவர்னரின் ஆய்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி, கைதானார். நிலைமை இப்படியிருக்க, கவர்னர் பணி செய்வதை யாராவது தடுத்தால் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என கவர்னர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இந்தியத் தண்டனைச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள விதிகளின்படி, கவர்னர் தன்னுடைய அலுவலகத்தில் பணியில் இருக்கும்போது அவருக்கு இடையூறு விளைவித்தால் மட்டுமே குற்றமாகக் கருதப்படும். மாவட்டங்களுக்கு அவர் ஆய்வுக்குச் செல்லும்போது, அரசியல் கட்சிகளுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் ஏற்புடையதாக இல்லையெனில் அவர்கள் போராட்டம் நடத்த முழு உரிமை உண்டு. இது எந்தவிதக் குற்றத்திலும் அடங்காது. இந்த விஷயம் தெரியாமலும், புரிந்து கொள்ளாமலும் தமிழக ஆளுநர் அலுவலகத்திலிருந்து அறிக்கையை விட்டிருக்கிறார்கள். அதை அப்படியே காப்பியடித்து, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் கிரண்பேடி, அவரது பணிக்கு இடையூறு செய்தால் அதற்கும் ஏழு ஆண்டு சிறைத்தண்டனை எனக் கூறியுள்ளார்.

தமிழகமோ அல்லது புதுச்சேரியோ எதுவாக இருந்தாலும் அரசின் அன்றாட நடவடிக்கையில் ஆளுநர் தலையிடுவதற்கு அதிகாரம் இல்லை. அதேபோல அரசு தொடர்பான காரியங்களில், தேர்வு செய்யப்பட்ட அரசின் அனுமதியில்லாமல் எந்தவிதமான முடிவை எடுக்கவும் ஆளுநருக்கு அதிகாரமில்லை. நாம் ஒன்றும் சர்வாதிகாரிகள் ஆட்சியில் இல்லை. ஜனநாயகத்தின் ஆட்சில்தான் இருக்கிறோம். மக்களுக்கான நல்வாழ்வுத் திட்டங்களை நிறைவேற்றும்போது ஆளுநர் என்ற பெயரில் முட்டுக்கட்டைகளைப் போடக் கூடாது. இரண்டு தினங்களுக்கு முன்பு பாகூர் பகுதிக்கு ஆளுநர் கிரண்பேடி ஆய்வுக்குச் சென்றபோது, `இதுவரை இங்கு 11 முறை ஆய்வுக்கு வந்திருக்கிறீர்கள். நீங்கள் சாதித்தது என்ன? எம்.எல்.ஏ இல்லாமல் தொகுதிக்கு ஏன் வந்தீர்கள்?' என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளிக்க முடியாமல் கிரண்பேடி, ஆளுநர் மாளிகைக்குத் திரும்பி விட்டார். அமைச்சர்களுக்குத் தெரியாமல் தன்னிச்சையாக ஆய்வு செய்வதற்கு ஆளுநர் கிரண்பேடிக்கு அதிகாரம் கிடையாது. இதுதொடர்பாக பலமுறை அவருக்குக் கடிதம் மூலமாகவும், நேரடியாகவும் தெரிவித்தும், அவர் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. அரசினுடைய நிகழ்வுகளை சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அவருக்கு நிர்வாகம் தொடர்பான விஷயத்தில் விவரம் தெரியவில்லை. காவல்துறை அதிகாரிபோல் செயல்படுகிறாரே தவிர, நிர்வாகியாகச் செயல்படத் தெரியவில்லை.

ஒரு துணைநிலை ஆளுநரின் செயல்பாடுகளுக்கான முகாந்திரம் எதுவும் அவரிடம் இல்லை. தன்னார்வத் தொண்டு நிறுவனத்துக்குப் பணிபுரிவதற்குத்தான் அவர் தகுதியானவர். அரசு என்றால் சட்ட திட்டங்கள் மற்றும் விதிகளுக்கு உட்பட்டுத்தான் செயல்பட வேண்டும். இது தொடர்பாக பிரதமர் மோடியைச் சந்தித்து ஆளுநர் கிரண்பேடி மீது புகார் மனு கொடுக்க நேரம் கேட்டுள்ளேன். ஏற்கெனவே இலவச அரிசி உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களை முடக்கும் கிரண்பேடிக்கு எதிராக முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் லட்சுமி நாராயணன் வழக்கு தாக்கல் செய்துள்ளார். பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனில் ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராகப் புதுச்சேரியின் குடிமகனாக, நானே வழக்கு தொடருவேன். கடந்த இரண்டு நாள்களாக பி.ஜே.பி. தலைவர்கள், பிரதமர் மோடி, அருண்ஜெட்லி உள்ளிட்டோர், இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தில் எமர்ஜென்சி கொண்டுவரப்பட்டதாகவும், ஹிட்லர் போல அவர் செயல்பட்டதாகவும் விமர்சனம் செய்கிறார்கள். குறிப்பாக எமர்ஜென்சி குறித்து விமர்சனம் செய்ய சில கட்சிகளுக்கு மட்டுமே அருகதை உள்ளது. ஆனால், அதைப்பற்றிப் பேசுவதற்கு பி.ஜே.பி-க்கு எந்தவிதத் தகுதியும் கிடையாது. தற்போது நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடந்து வருகிறது.

பி.ஜே.பி. தலைமையிலான மத்திய அரசு அனைத்து அரசுத் துறைகளையும், தன் கட்டுபாட்டில் வைத்துக்கொண்டு அதிராக துஷ்பிரயோகம் செய்து வருகிறது. மத்தியப் புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ., மத்திய பி.ஜே.பி. அரசின் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷனாக மாறிவிட்டது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்காகவே வருமான வரித்துறையை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. அதேபோல அமலாக்கப்பிரிவை அவர்களுக்கு வேண்டாதவர்களை களங்கப்படுத்துவதற்காகவே வைத்திருக்கிறார்கள். `நிதி ஆயோக்' என்ன வேலை செய்கிறது என்றே தெரியவில்லை. இவர்கள் ஆட்சியில் மத்திய அரசு அதிகாரிகள் சுயமாக முடிவெடுக்கப் பயப்படுகிறார்கள். மாநிலங்களில் பி.ஜே.பி. அல்லாத மாற்றுக்கட்சி ஆட்சியில் இருந்தால், அந்த மாநில அரசாங்கங்கள் திட்டமிட்டுப் பழிவாங்கப்படுகின்றன. மோடி ஆட்சியில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடந்து வருகிறது. மாநில அதிகாரம், நீதித்துறையில் தலையீடு என ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் பி.ஜே.பி. ஆட்சியில்தான் நடந்துகொண்டிருக்கிறது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு