
எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி
கொடநாடு எஸ்டேட்டில், 2007 ஆகஸ்ட் மாதம் நடந்த பிரளயம்தான், அ.தி.மு.க-வின் பொருளாளராக இருந்த டி.டி.வி.தினகரனின் பதவி பறிப்புக்கு காரணம்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருடன் டி.டி.வி. தினகரனும் முதலில் சேர்க்கப்பட்டிருந்தார். ஜெயலலிதாவின் சொத்து பட்டியலில் ஒன்றாக, லண்டனில் உள்ள காப்ஸ் கிராப்ட் ஹோட்டலும் சேர்க்கப்பட்டிருந்தது. ‘இந்த ஹோட்டலை வாங்கிய ஐந்து பேரில் தினகரனும் ஒருவர்’ என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பிறகு அதிலிருந்து தினகரன் விடுவிக்கப்பட்டார்.
இந்த ஹோட்டல் வழக்கை சொத்துக் குவிப்பு வழக்கோடு சேர்த்து விசாரிக்கச் சொல்லி, அதன்மூலம் சொத்துக் குவிப்பு வழக்கை இன்னும் தாமதப்படுத்தத் திட்டம் போட்டார் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதி. இது தனக்கு சிக்கலை உண்டாக்கிவிடும் என்பதால் ஜோதி மீது கடும் கோபத்தில் இருந்தார் தினகரன். டென்ஷனான மூடில் இருந்த தினகரன், இரவில் ஜோதிக்கு போன் போட்டு சகட்டுமேனிக்கு திட்டித்தீர்த்தார். ‘‘வழக்கை ஒன்றாகச் சேர்க்க நீ யார்? பரமசிவன் கழுத்தில் இருக்கிற பாம்பு நீ... உன்னைக் கழற்றாமல் விடமாட்டேன்’’ என இரண்டு மூன்று தடவை தினகரன் பேசியபோதும், ஜோதி ஆரம்பத்தில் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் அவருடைய பெற்றோர்களைப் பற்றி மிகவும் மோசமாகத் திட்டியதால், வேறுவழியில்லாமல் விஷயத்தை ஜெயலலிதாவிடம் தெரிவித்தார் ஜோதி.
‘‘உங்கள் நன்மைக்காகத்தான் சொத்துக் குவிப்பு வழக்கோடு லண்டன் ஹோட்டல் வழக்கையும் சேர்த்தேன். இந்த ஏற்பாடு தினகரனுக்குப் பிடிக்கவில்லை. அதற்காக என்னை மோசமான வார்த்தைகளில் அவர் திட்டினார். நான் தெய்வமாகவே வணங்கி வரும் என் பெற்றோர்களை இழிச்சொல்லால் அர்ச்சித்தார். என்னைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். இப்படிப்பட்ட சூழலில் நான் பணியாற்ற விரும்பவில்லை. தயவுசெய்து என்னை விடுவித்து விடுங்கள்’’ என 23 பக்கங்களுக்கு ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியிருந்தார் ஜோதி.

ஜோதியையும் தினகரனையும் அழைத்து விசாரித்தார் ஜெயலலிதா. ஓய்வு எடுக்கச் செல்லும் கொடநாட்டில், 2007 ஆகஸ்ட் தொடக்கத்தில் விசாரணை நடைபெற்றது. பொருளாளர், ராஜ்யசபா எம்.பி என கட்சியில் பெரும் செல்வாக்கோடு இருந்த தன் மீது யாரும் புகார் சொல்லிவிட முடியாது என்கிற தைரியத்தில் இருந்த தினகரனுக்கு இது அதிர்ச்சி. காலையில் கோவை போய் இறங்கிய ஜோதியையும் தினகரனையும் பிக்அப் செய்வதற்காக கொடநாட்டில் இருந்து தனித் தனியாக கார்கள் ஏர்போர்ட்டில் வந்து நின்றன. கொடநாட்டில் இளவரசிதான் ஜோதிக்கு உணவு பரிமாறினார். ஃப்ரைடு ரைஸ் சாப்பிட்டுவிட்டு, ஜெயலலிதா அழைப்புக்காக ஜோதி காத்திருந்தார்.
ஜெயலலிதா அறைக்கு முதலில் ஜோதி அழைக்கப்பட்டார். ‘‘அம்மா... மனம் பொறுக்க முடியாமல்தான் நீண்ட யோசனைக்குப் பிறகு கடிதத்தை எழுதினேன். வாழ்நாளில் இப்படி மோசமாக என்னை யாரும் திட்டியதில்லை. உங்களுக்கு நான் கட்டுப்படுகிறேன். ஆனால் வேறு யாரிடமோ நான் திட்டு வாங்க வேண்டியதில்லை’’ என்றார் ஜோதி. அடுத்து தினகரனை அழைத்து விசாரித்தபோது, அனைத்தையும் மறுத்திருக்கிறார் அவர். பிறகு இருவரையும் ஒன்றாக அழைத்து, ‘‘ஜோதி... நீங்க சொன்ன புகார் அனைத்தையும் தினகரன் மறுக்கிறாரே” என ஜெயலலிதா சொன்னபோது, ‘‘என் பெற்றோர்கள் மீது சத்தியம். அவர் என்னை திட்டியது உண்மை’’ என சொல்லியிருக்கிறார் ஜோதி. உடனே தினகரன், ‘‘அம்மா... அண்ணன் மீது நான் ரொம்ப மரியாதை வைத்திருக்கிறேன். எப்போது பார்த்தாலும் அவரை நான் அண்ணன் என்றுதான் அழைத்திருக்கிறேன். மரியாதைக் குறைவாக நான் யாரையும் நடத்தியதில்லை. பேசியதும் கிடையாது. அண்ணன் விஷயத்திலும் நான் அப்படித்தான் நடந்து கொண்டேன்’’ என தினகரன் சொன்னார்.
உடனே ஜோதி, ‘‘கடவுளாக வணங்கும் என் அப்பா அம்மாவை மோசமான வார்த்தைகளில் திட்டியது எல்லாம் பொய்யா? என்னை திட்டியபோது காட்டிய வேகம், அம்மாவை பார்க்கும்போது எங்கே போனது? தவறு செய்தால் ஒத்துக்கொள்ளுங்கள். அம்மாவிடம் மறைத்து என்னை பொய்க்காரன் ஆக்க முயற்சிக்க வேண்டாம்’’ என தினகரனை பார்த்து கோபப்பட்டார் ஜோதி.

பிறகு ஜெயலலிதா பக்கம் திரும்பி, ‘‘தினகரன் மீது எனக்கு என்னம்மா கோபம்? அவரைப் பற்றி உங்களிடம் எப்போதாவது குறை சொல்லி இருக்கிறேனா? சின்னம்மா குடும்ப உறுப்பினர்களை விமர்சித்து எங்கேயாவது பேசியிருக்கிறேனா? கடைசியாக என்னிடம் அவர் பேசியபோது, 50 நிமிடங்கள் திட்டினார். ‘கொலை செய்துவிடுவேன்’ என்றார். நான் செத்து இவர் ஏன் கொலைகாரன் ஆக வேண்டும். அதனால் ஒதுங்கிவிடுகிறேன்மா’’ என ஜெயலலிதாவிடம் சொல்லியிருக்கிறார் ஜோதி.
விசாரணைப் படலம் முடிந்தது. ‘‘ஜோதி... நீங்க வெளியே இருங்க. மீண்டும் உங்களை அழைக்கிறேன்’’ எனச் சொல்லி ஜோதியை வெளியே அனுப்பி வைத்தார் ஜெயலலிதா. உள்ளே தினகரனை ஜெயலலிதா திட்டுவது கொடநாடு பங்களா முழுவதும் எதிரொலிக்கிறது. சில நாட்களில் தினகரனின் பொருளாளர் பதவியும் பறிபோகிறது.
(தொடரும்)