Published:Updated:

`ஆளுநர் குறித்துப் பேச வேண்டாம்!’ - அமைச்சருக்கு அனுமதி மறுத்த சபாநாயகர்

கலிலுல்லா.ச
`ஆளுநர் குறித்துப் பேச வேண்டாம்!’ - அமைச்சருக்கு அனுமதி மறுத்த சபாநாயகர்
`ஆளுநர் குறித்துப் பேச வேண்டாம்!’ - அமைச்சருக்கு அனுமதி மறுத்த சபாநாயகர்

சட்டப்பேரவையில் ஆளுநர் குறித்துப் பேச அனுமதி கேட்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு, சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்தார்.

சட்டப்பேரவையில், மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த விவாதத்தின்போது, ஆளுநர் ஆய்வு குறித்து முதல்வர் பதில் அளிக்காததைக் கண்டித்து, ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க-வினர் வெளிநடப்புச்செய்தனர். பிறகு, அமைச்சர் ஓ.எஸ். மணியன் எழுந்து, மாநில சுயாட்சிகுறித்து எதிர்கட்சித் தலைவர் பேசியது தொடர்பாக விளக்கம் அளிக்க சபாநாயகரிடம் அனுமதி கோரினார். ஆனால், சபாநாயகர் இதுகுறித்துப் பேசி, மேலும் விவாதத்தை உருவாக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். ஆனால், அமைச்சர் ஓ.எஸ். மணியன் தொடர்ந்து பேச அனுமதி கேட்டதோடு, அப்படி நான் தவறாகப் பேசினால், அவைக்குறிப்பில் இருந்து நீக்கிக் கொள்ளலாம் என்றார். அமைச்சர் பேசுவதை அவைக்குறிப்பிலிருந்து நீக்குவது முறையாக இருக்காது என சபாநாயகர் பதிலளித்தார். எனவே, அமைச்சரை உட்காருமாறு தனபால் கேட்டுக்கொண்டார். அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அமர மறுத்ததால், சபாநாயகர் பேச அனுமதி வழங்கினார்.

அப்போது, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குறுக்கிட்டு, ஆளுநர் பற்றி அவையில் பேச வேண்டாம் எனக் கூறினார். மேலும் அமைச்சர் பெருமக்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் ஆளுநர் குறித்துப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார். இதனால், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசாமலே அமர்ந்துவிட்டார். சட்டப்பேரவையில், எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதில் அளித்து, பல முறை சர்ச்சைகளும் அமளிகளும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.