Published:Updated:

`ஸ்டாலினையும் கனிமொழியையும் விமர்சித்தாரா?' - மகளிரணி நிர்வாகிப் பதவியைப் பறித்த ஆடியோ

`ஸ்டாலினையும் கனிமொழியையும் விமர்சித்தாரா?' - மகளிரணி நிர்வாகிப் பதவியைப் பறித்த ஆடியோ
`ஸ்டாலினையும் கனிமொழியையும் விமர்சித்தாரா?' - மகளிரணி நிர்வாகிப் பதவியைப் பறித்த ஆடியோ

வடக்குத் தொகுதியில் மீனா லோகு போட்டியிட்டதை உள்ளூரில் உள்ள முக்கியப் பிரமுகர்கள் சிலர் விரும்பவில்லை. அவர்களில் சிலரது ஏற்பாட்டின் பேரில் கனிமொழியைச் சந்தித்துப் பேசியுள்ளனர் கோவை மகளிர் அணியைச் சேர்ந்த ஐந்து பெண்கள். 

தி.மு.கவின் மாநில மகளிர் அணிப் பிரிவின் துணைச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார் கோவையைச் சேர்ந்த மீனா லோகு. `சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து மீனா பேசிய பேச்சு அறிவாலயத்தில் புயலைக் கிளப்பியது. அவரை நீக்கியதன் பின்னணியில் கனிமொழி உள்ளிட்ட சிலர் உள்ளனர்' என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில். 

சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவிடம் வெற்றியைப் பறிகொடுத்தது தி.மு.க. ஒரு சதவிகித வாக்கு வித்தியாசத்தில் இந்தத் தோல்வி அமைந்ததால், உடன்பிறப்புகள் உறைந்து போனார்கள். வழக்கம்போல, தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வதற்காகச் செயற்குழு கூட்டத்தைக் கூட்டினார் கருணாநிதி. இந்தக் கூட்டத்தில் பேசிய கோவை வடக்குத் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்ற மீனா லோகு, ``என்னை வேட்பாளராக கட்சி அறிவித்ததும் மாவட்டச் செயலாளர் வீரகோபாலைப் போய்ப் பார்த்தேன். அவர் எடுத்த எடுப்பிலேயே, `மாவட்டச் செயலாளர் தேர்தலில் எனக்கு எதிராக நீங்கள் நின்றீர்கள். ஒன்றரை கோடி ரூபாய் செலவு செய்துதான் என்னால் வெற்றி பெற முடிந்தது' என அதிருப்தியாகப் பேசினார். தேர்தலில் எனக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யவும் அவர் விரும்பவில்லை. தன்னந்தனியாகத்தான் பிரசாரம் செய்தேன். நான்கு வார்டுகளில் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடு திருப்தியாக இல்லை. அவர்கள் வேண்டுமென்றே என்னைப் புறக்கணித்தார்கள். வாக்கு கேட்கச் செல்லும் இடங்களில் எல்லாம் குடிப்பதற்குப் பணம் கேட்டால் எங்கே போவது. ஏழாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி கிடைக்காமல் போவதற்கு இவர்கள்தாம் காரணம். அதேநேரம், அ.தி.மு.க வேட்பாளர் அருண்குமாருக்காக மலரவன், கே.பி.ராஜு, மேயர் ராஜ்குமார் எனக் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கும்பலாக ஓட்டுக் கேட்கச் சென்றார்கள். எனக்கு ஆதரவாகக் கட்சி நிர்வாகிகள் ஒருவரும் இல்லை" எனக் கொந்தளித்தார். 

மீனாவின் இந்தச் சரவெடி, முன்னணி நிர்வாகிகள் மத்தியில் புகைச்சலை உருவாக்கியது. இதற்கு முன்னதாக, கோபாலபுரத்தில் கருணாநிதியைச் சந்திக்கச் சென்றிருக்கிறார் மீனா லோகு. அந்த இடத்தில் இருந்த சண்முகநாதன், `தேர்தல் முடிவு வெளியாகும்போது பல ரவுண்டுகளில் நீங்கள்தான் முதலிடத்தில் இருந்தீர்கள். நீங்கள் தோற்பீர்கள் என நினைக்கவில்லை. தலைவரிடம் பேசும்போது அழுதுவிட வேண்டாம்' எனச் சொல்லி அனுப்பியிருக்கிறார். உள்ளே கருணாநிதியைப் பார்த்ததும் கதறி அழுதுவிட்டார் மீனா. அவர் அழுததைப் பார்த்து கருணாநிதியும் கதறி அழுத தகவல் உடன்பிறப்புகளை உலுக்கியது. இதன்பிறகும் கட்சிப் பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த மீனா லோகுவின் மாநிலப் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய கோவை மாவட்ட தி.மு.க பிரமுகர் ஒருவர், `` வடக்குத் தொகுதியில் மீனா லோகு போட்டியிட்டதை உள்ளூரில் உள்ள முக்கியப் பிரமுகர்கள் சிலர் விரும்பவில்லை. அவர்களில் சிலரது ஏற்பாட்டின்பேரில் கனிமொழியைச் சந்தித்துப் பேசியுள்ளனர் கோவை மகளிர் அணியைச் சேர்ந்த சில  பெண்கள். 

இந்தச் சந்திப்பில், `உங்களைப் பற்றியும் செயல் தலைவரைப் பற்றியும் தாறுமாறாகப் பேசி வருகிறார் மீனா. குறிப்பாக, தலைமையின் செயல்பாடுகளைப் பற்றி பொது இடங்களில் சிலரிடம் விமர்சனம் செய்து பேசியிருக்கிறார். அதற்கான ஆடியோ ஆதாரங்கள் உள்ளன' எனக் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் கொடுத்த ஆதாரங்களையும் புகார் மனுவையும் ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார் கனிமொழி. இதையடுத்து, மகளிர் தொண்டரணியின் மாநிலத் துணைச் செயலாளர் பொறுப்பிலிருந்து மீனா லோகுவை நீக்கிவிட்டார் ஸ்டாலின். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தலைமைக்கு விளக்கமளித்திருக்கிறார் மீனா" என்றார்.

ஆனால், இந்த விவகாரம் குறித்துப் பேசும் அறிவாலய நிர்வாகிகளோ, " மீனா லோகு மீது குறித்து வந்த புகார்கள் அனைத்தும் அதிர்ச்சி ரகம். மாவட்டத்தில் உள்ள மகளிரணி நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து, அவர்களது கணவர்களுக்குத் தவறான தகவல் தெரிவிக்கிறார் என்பதுதான் புகார். ' இதனால் குடும்பத்துக்குள் குழப்பம் ஏற்படுகிறது. இந்தநிலை நீடித்தால் கட்சிப் பணி செய்வதற்கே மகளிர் யாரும் வர மாட்டார்கள்' என கனிமொழியிடம் முப்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் அழுதபடியே கூறியுள்ளனர். இதன்பிறகே செயல் தலைவரின் கவனத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றார் கனிமொழி. இந்த விவகாரம் தொடர்பாக மீனா லோகுவிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினார் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. இதற்கு மீனா லோகு அளித்த விளக்கமும் திருப்தியாக இல்லை. செயல் தலைவர் நடத்திய அறிவாலய ஆய்விலும், மீனா லோகு மீது ஏராளமான புகார்கள் சொல்லப்பட்டன. இதன் தொடர்ச்சியாகவே கட்சிப் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்" என்கின்றனர்.  

இதுகுறித்து மீனா லோகு தரப்பில் பேசியபோது, ``தலைமையின் முடிவுக்குக் கட்டுப்பட்டு, கட்சிப் பணி செய்து வருகிறார் மீனா. கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து கழகத் தொண்டர்கள் அவரிடம் கேட்டபோதும், `கட்சித் தலைமை என்னைப் புரிந்து கொள்ளும். நான் குற்றமற்றவள் என்பதை காலம் நிரூபிக்கும்' எனப் பதில் அளித்தார். மீண்டும் வடக்குத் தொகுதியில் அவர் சீட் கேட்டுவிடக் கூடாது என்பதற்காகச் சில நிர்வாகிகள் செய்த சதிச் செயல் இது" என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு