Published:Updated:

"காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் இதுதான் நடக்கப்போகிறது" - மணியரசன்!

"காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் இதுதான் நடக்கப்போகிறது" - மணியரசன்!
"காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் இதுதான் நடக்கப்போகிறது" - மணியரசன்!

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே காவிரி மேலாண்மை வாரியத்தின் முதல் கூட்டம் வரும் ஜுலை 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. மத்திய அரசின் இழுபறி நடவடிக்கை, கர்நாடக அரசின் அரசியல் சூழ்ச்சி என பல்வேறு பிரச்னைகளுக்குப் பிறகு காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டு, அதன் பணிகள் தொடங்க உள்ளன.

மத்திய நீர்வளத்துறை ஆணையத்தலைவர் மசூத் ஹுசைன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் தமிழகம்,கேரளா உள்ளிட்ட 4 மாநில உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே பிரபாகர் மற்றும் தலைமைப் பொறியாளர் செந்தில்குமார்  ஆகியோர்  பங்கேற்க உள்ளனர். காவிரி மேலாண்மை வாரியக் கூட்டத்தின் முதல் கூட்டம் தமிழக விவசாயிகளிடையே முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியோ  எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், 'கர்நாடக மாநிலத்தை மத்திய அரசு வஞ்சித்துவிட்டதாக'வும் கூறியுள்ளார். இது தொடர்பாக 'சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாகவும்' கூறியுள்ளார். அதனால் வரும் 2 ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டம் அமைதியான முறையில் நடைபெறுமா... தமிழகத்தின் உரிமை மீட்கப்படுமா... என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 

இதுகுறித்து காவிரி உரிமை மீட்புக் குழுவின் தலைவர் பெ.மணியரசனிடம் பேசியபோது, " உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 1-5-2018 -க்குள் காவிரி மேலாண்மை வாரியத்தைக் கூட்டியிருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசும் கர்நாடக அரசும் சேர்ந்து பல்வேறு  அரசியல் சூழ்ச்சிகள் செய்து முட்டுக்கட்டைகளைப் போட்டு வந்தது. எனவேதான் காலம் தாழ்த்தி இந்தக் கூட்டத்தை கூட்டியுள்ளனர்.

 தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படக்கூடிய வகையில், அந்த அமைப்பை மத்திய அரசு, முழுமையாக அமைக்கவில்லை என்பதுதான் உண்மை. நீர்வளத்துறைத் தலைவர் மசூத் ஹுசைனை ஆணையத் தலைவராக நியமித்துள்ளது மத்திய அரசு. இது அவருக்கு கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு. மேலும், ஆணையத்தின் வேறு சில பதவிகளுக்கும் பெயர் குறிப்பிடப்படாமல் பலரை நியமனம் செய்துள்ளது. இதிலிருந்தே மத்திய அரசின்  சூழ்ச்சி தெரிகிறது. 

ஆரம்பத்திலிருந்தே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் உள்நோக்கத்துடன் மட்டுமே செயல்பட்டு வருகிறது மத்திய அரசு. தற்போது வேறு வழியே இல்லாமல் செயல்பட்டாக வேண்டிய நிலைமை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின்  இந்த அரை குறையான நடவடிக்கையையும் முடக்க முயற்சித்து வருகிறார் குமாரசாமி. அதற்கு ஏற்றாற் போல் மத்திய அரசும் ரகசியமாக அரசியல் காய்களை நகர்த்தி வருகிறது. குறிப்பாக வாரியம் அமைத்தாகிவிட்டது. உறுப்பினர்கள் நியமனமும் முடிந்துவிட்டது. பிறகு ஏன் உடனடியாக இந்தக் கூட்டத்தைக் கூட்டவில்லை என்பதுதான் கேள்வி. இத்தனை நாள் தள்ளி வைத்து ஏன் கூட்டத்தை கூட்ட வேண்டும்? 

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு வரை 18 ஆயிரம் கன அடி தண்ணீரைத் திறந்துவிட்டது கர்நாடக அரசு. தற்போது அதனை அப்படியே 500 கன அடியாக குறைத்துவிட்டது. அணையில் அதிகமாகத் தண்ணீர் தேங்கும்போது அணை உடைந்துவிடும் என்பதால், 18 ஆயிரம் கன அடி தண்ணீரைத் திறந்துவிட்டது. அணையில் தேக்கி வைக்கும் தண்ணீரின் அளவு குறைந்தவுடன் நீர் திறப்பையும் 500 கன அடியாகக் குறைத்துள்ளது. எனவே அவர்களுக்கு எது சவுகரியமோ அதற்கேற்றவாறு செயல்படுத்துகிறார்கள். கர்நாடக அரசின் இந்த சட்டவிரோத செயலுக்கு துணை போகிறது மத்திய அரசு. இந்த விவகாரத்தில், கர்நாடக அரசுக்கு மத்திய அரசு  துணைபோகிற காரணத்தால்தான் தற்போதும் 2 ஆம் தேதிக்கு கூட்டத்தைத் தள்ளி வைத்துள்ளனர். 

அதேபோல, மத்திய அரசுக்கு எதிராக குமாரசாமி பேசியதுகூட, மோடிக்கு விரோதமானது அல்ல. அதில் பல அரசியல் நடவடிக்கைகள்  உள்ளன. குறிப்பாக நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன். நீ அழுகிற மாதிரி அழு என்பது மத்திய அரசு நாடகத்தின் ஒரு பகுதி. அந்த நாடகத்தின் மற்றொரு பகுதிதான் குமாரசாமி  பேசியதும் உச்சநீதிமன்றம் செல்லப் போவதாகக் கூறுவதும். இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்துக்கு போய்விட்டால், வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், வழக்கு முடியும் வரை பழைய விதிமுறைகளையேப் பின்பற்றுங்கள் என அறிவுறுத்தப்போகிறது மத்திய அரசு. இதுதான் நடக்கப்போகிறது.

ஒருவேளை 2 ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டம் நேர்மையாக நடந்தால், தமிழகத்துக்கு தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக ஜுன் மாதத்துக்கு 9 டி.எம்.சி தண்ணீர் கர்நாடகம் தரவேண்டும். அதனை அப்படியே  கர்நாடக அரசு வழங்க, காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட வேண்டும். அதேபோன்று ஜுலை முதல் வாரத்தில், 10 டி.எம்.சி தரவேண்டும். இவற்றையெல்லாம் சரியாக ஆராய்ந்து காவிரி மேலாண்மை  வாரியம் உத்தரவு போட்டால் மட்டுமே தமிழகத்துக்கு தீர்வு கிடைக்கும். அன்றையக் கூட்டத்தில், இப்படியான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றால், காவிரி மேலாண்மை வாரியமும் தமிழகத்தை வஞ்சிக்கிறது என்றும் மத்திய அரசின் மற்றொரு ஜெராக்ஸ்தான் 'காவிரி மேலாண்மை  வாரியம்' என்றும் எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்றார்.