Published:Updated:

சசிகலா குடும்பத்துக்குள் குத்துச்சண்டை! - தீபக் திடீர் புரட்சியின் பின்னணி

சசிகலா குடும்பத்துக்குள் குத்துச்சண்டை! - தீபக் திடீர் புரட்சியின் பின்னணி
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா குடும்பத்துக்குள் குத்துச்சண்டை! - தீபக் திடீர் புரட்சியின் பின்னணி

சசிகலா குடும்பத்துக்குள் குத்துச்சண்டை! - தீபக் திடீர் புரட்சியின் பின்னணி

சசிகலா குடும்பத்துக்குள் குத்துச்சண்டை! - தீபக் திடீர் புரட்சியின் பின்னணி

சசிகலா குடும்பத்துக்குள் குத்துச்சண்டை! - தீபக் திடீர் புரட்சியின் பின்னணி

Published:Updated:
சசிகலா குடும்பத்துக்குள் குத்துச்சண்டை! - தீபக் திடீர் புரட்சியின் பின்னணி
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா குடும்பத்துக்குள் குத்துச்சண்டை! - தீபக் திடீர் புரட்சியின் பின்னணி

“பன்னீர்செல்வம் திரும்பி வரவேண்டும்; அவர் வந்தால் ஏற்றுக் கொள்வோம்; அவர், தலைமைப் பொறுப்பைக் கேட்டால் விட்டுக்கொடுப்போம்; கட்சி உடையக்கூடாது என்பதற்காக எதையும் செய்வோம்; அதே நேரத்தில், அ.தி.மு.க-வின் துணைப்பொதுச்செயலாளராக இருப்பதற்கு டி.டி.வி.தினகரனுக்குத் தகுதி இல்லை” என்று ஸ்டேட்மென்ட்களை அடுக்கி அ.தி.மு.க-வை அதிர வைத்துள்ளார், ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகன் தீபக். இன்றைய தேதிக்கு சசிகலா குடும்பத்துக்கு பரம எதிரிகளாகப் பார்க்கப்படும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தீபா அணிகளே சற்று அடங்கி இருக்கும் நிலையில், இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த தீபக் திடீரென வாய் திறந்திருப்பது டி.டி.வி.தினகரனையும் அவர் தலைமையில் இயங்கும் அ.தி.மு.க-வினரையும்அதிரவைத்துள்ளது. தீபக், திடீரென வெடித்துக் கிளம்ப என்ன காரணம்?

சசிகலா குடும்பத்துக்குள் குத்துச்சண்டை! - தீபக் திடீர் புரட்சியின் பின்னணி

“அத்தை வழியே என் வழி!”

2016 டிசம்பர் 6-ம் தேதி ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில், சசிகலாவால் கைபிடித்து அழைத்துவரப்பட்ட நபர்தான், ஜெயலலிதாவின் சொந்த அண்ணன் ஜெயக்குமாரின் மகன் தீபக். போயஸ் கார்டனுக்கும் சசிகலா குடும்பத்துக்கும் இடையில் அப்படி ஒரு கதாபாத்திரம் இருப்பதை அன்றுதான் தமிழகம் அறிந்துகொண்டது. அவரை, தேடிப்பிடித்து கடுமையான முயற்சிகளுக்குப்பிறகு ‘ஜூனியர் விகடன்’ பேட்டி கண்டது. தீபக், முதன்முதலாகக் கொடுத்த பேட்டி அதுதான். அந்தப் பேட்டியிலேயே, “சசி அத்தையை நான் மதிக்கிறேன்; அவரை நம்புகிறேன். ஏனென்றால் அவரைத்தான் என் அத்தை 30 வருடங்களாக நம்பினார்; அதனால், நானும் அவரையே நம்புகிறேன். சசிகலாவைத் தவிர அவர் குடும்பத்தில் உள்ள திவாகரன், சுதாகரன், பாஸ்கரன், தினகரன் உள்ளிட்டவர்களை நான் நம்பமாட்டேன். ஏனென்றால், அவர்களை என் அத்தை நம்பவில்லை. சசி அத்தையை கடைசிவரை கூடவே வைத்திருந்த என் அத்தை, மற்றவர்களைத் தள்ளியே வைத்திருந்தார்” என்று தீபக் தெளிவாகக் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், “கட்சியிலும், போயஸ் கார்டன் வீட்டுக்குள்ளும் சசி அத்தை இருப்பதை நான் எதிர்க்கமாட்டேன். ஆனால், மற்றவர்கள் உள்ளே வந்து சொந்தம் கொண்டாட முயன்றால், அப்போது தீபாவைப்போல் நானும் களம் இறங்குவேன்” என்றும் குறிப்பிட்டு இருந்தார். தீபக்கின் இந்தக் கோபத்துக்கு விதிவிலக்கான நபர் நடராசன் மட்டுமே. ஏனென்றால், சசிகலாவைவிட நடராசனுடன்தான் தீபக் மிகநெருக்கமாக இருந்தார். அந்த வகையில் இப்போதும் சசிகலாவின் மீது மரியாதையும், நடராசன் மீது பாசமும் வைத்துள்ளார் தீபக். ஆனால், மற்றவர்கள் மேல் உள்ள வெறுப்பு அப்படியே நீடிக்கிறது. அதனால்தான், தினகரன், கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக ஆனதை தீபக் எதிர்க்கிறார்.

இளைய வாரிசுகளுக்குள் முட்டல்-மோதல்!

சசிகலா குடும்பத்தை தீபக் வெறுப்பதற்கு, அந்தக் குடும்பத்தினரின் நடவடிக்கைகள், ஜெயலலிதாவுக்கும் அ.தி.மு.க என்ற கட்சிக்கும் அவர்களால் ஏற்பட்ட தொந்தரவுகள் என்று ஏகப்பட்ட காரணங்கள் இருந்தாலும், தனிப்பட்ட காரணங்களும் நிறைய உண்டு. குறிப்பாக அந்தக் குடும்பத்தில், திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த், இளவரசியின் மகன் விவேக், சசிகலாவின் அக்காள் மகன்கள் தினகரன், பாஸ்கரன், சுதாகரன் ஆகியோரோடு தீபக்குக்கு எப்போதும் ஒத்துப்போனது இல்லை. அந்த வெறுப்பு அவ்வப்போது வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது. குறிப்பாக, ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கில் தீபக் கலந்துகொண்டதை அனைத்துத் தொலைக்காட்சிகளும் காட்டின. ஆனால், ஜெயா தொலைக்காட்சியில் அந்தக் காட்சிகள் வேண்டுமென்றே வெட்டப்பட்டு இருந்தன. அதற்குக் காரணம் ஜெய் ஆனந்த், விவேக் உள்ளிட்ட இளைய வாரிசுகள்தான். அதில், தீபக் மிகவும் காயம்பட்டு இருந்தார். அதுபற்றி அப்போதே அவருக்கு  நெருக்கமானவர்களிடம் குறைபட்ட தீபக், ‘‘ஜெயா தொலைக்காட்சியின் உரிமையை நான் வாங்கியபிறகு பார்த்துக்கொள்கிறேன்’’ என்றாராம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சசிகலா குடும்பத்துக்குள் குத்துச்சண்டை! - தீபக் திடீர் புரட்சியின் பின்னணி

ஜெ. சொத்துகள் பத்திரம்!

ஜெயலலிதா சொத்துகள் பற்றி ஏற்கெனவே பேசியிருந்த தீபக், “அத்தை பெயரில் உள்ள சொத்துகள் யாருக்குப் போய்ச்சேர வேண்டுமோ, அவர்களுக்குச் சரியாகப் போகும். தவறான ஆட்களிடம் போக நானும் விடமாட்டேன்; சசி அத்தையும் விடமாட்டார்; நடராசன் அங்கிளும் விடமாட்டார். சசி அத்தை, நடராசன் அங்கிள் தவிர, அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்கள் யாராவது வந்து உரிமை கொண்டாட முயன்றால், அதை நானும் விடமாட்டேன்; தீபாவும் விடமாட்டார்” என்று தெளிவாகக் குறிப்பிட்டு இருந்தார். ‘ஜெயலலிதா பெயரில் உள்ள சொத்துகளை, பத்திரமாக சசிகலாவும் நடராசனும் தங்களிடம் ஒப்படைத்து விடுவார்கள்’ என்று தீபா, தீபக் இருவருமே இப்போதுவரை நம்புகின்றனர்.

ஆனால், தற்போது உள்ள சூழ்நிலையில் சசிகலா சிறையில் இருக்கிறார்; நடராசன் உடல்நலம் இல்லாமல்  இருக்கிறார். இந்த நேரத்தில், போயஸ் கார்டன் வீட்டுக்குச் சொந்தம் கொண்டாடவும் அதை அனுபவிக்கவும் சிலர் முயற்சிப்பதாக தீபக் காதுகளைத் தகவல்கள் எட்டி உள்ளன. அதுபோல, ஜெயலலிதா பெயரில் உள்ள சொத்துகளைப் பெறுவதிலும் ஏதேனும் சிக்கலை சசிகலா குடும்பம் ஏற்படுத்தும் என்ற அச்சம் தீபக்குக்கு இருக்கிறது. அதனால்தான் அவர், “என் அத்தைக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை நானே கட்டுவேன்; போயஸ் கார்டன் வீடு எனக்கும், தீபாவுக்கும் சொந்தமானதே” என்று தெளிவுபடுத்தி உள்ளார்.

நடராசன், திவாகரன் Vs தினகரன், வெங்கடேஷ்!

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலாவின் குடும்பத்தினர், சசிகலாவை முன்னிலைப்படுத்தினர். ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தண்டனை விதித்த பிறகு, ஜெயிலுக்குப் போவதற்குமுன்பே சசிகலா ஒரு சூழ்நிலைக் கைதியாக ஆகியிருந்தார். “தினகரனும், டாக்டர் வெங்கடேஷும் பன்னீர்செல்வத்தை மட்டும் மிரட்டி கையெழுத்து வாங்கவில்லை; சசிகலாவையும் மிரட்டிக் கையெழுத்து போடச் சொல்லித்தான் அவர்கள் கட்சியில் சேர்ந்தார்கள்” என்கிறார்கள், விவரம் அறிந்தவர்கள்.

சசிகலாவின் உறவு வட்டாரத்துக்கு உள்ளேயும், கட்சிக்கு உள்ளேயும் தினகரன் மற்றும்  வெங்கடேஷின் ஆதிக்கம் ஓங்கியுள்ளது. இவர்கள், சசிகலாவின் சகோதரர் திவாகரனின் குடும்பத்தையே ஒதுக்கிவிட்டனர். நடராசன் எதிலும் கலந்துகொள்வதில்லை. ‘போயஸ் கார்டன் பக்கமே வரக்கூடாது’ என்று சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவனுக்குத் தடைவிதித்துவிட்டனர். இளவரசியின் குடும்பத்தையும் ஓரம்கட்டிவிட்டனர். தினகரன், வெங்கடேஷின் இந்தச் செயல்பாடுகள் திவாகரனுக்கும் பிடிக்கவில்லை. அதனால்தான் அவர் தனியாக தன் மகன் ஜெய் ஆனந்தை அழைத்துக் கொண்டுபோய் கவர்னர் வித்யாசாகர் ராவைப் பார்த்தார். அதுபோல, நடராசனுக்கும் தினகரன் மற்றும் வெங்கடேஷின் போக்குப் பிடிக்கவில்லை. அதை யொட்டித்தான் தீபக், மீடியாக்களில் பேட்டி கொடுத்துள்ளார். நடராசன் சொல்லாமல் எதையும் மனம் திறந்து பேசும் ஆள் அல்ல தீபக்.

சசிகலாவுக்கு நடராசன் கடிதம்!

பிப்ரவரி 20-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை தீபக் சந்தித்தார். அப்போது, சசிகலாவுக்கு தீபக் மூலம் நடராசன் ஒரு கடிதம் கொடுத்து அனுப்பி இருந்தார். அதில், ‘தற்போது இருக்கும் சூழல் சரியில்லை; இந்த நேரத்தில் நம் குடும்பம் மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. தீபா-தீபக் இருவர் மீதும் அனுதாபமும் நல்ல பெயரும் இருக்கிறது. அதனால் தீபக்குக்கு கட்சியில் ஒரு நல்ல பொறுப்பைக் கொடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார். அந்தக் கடிதத்தைப் படித்த சசிகலா, தீபக்கிடமும் அதுபற்றிப் பேசியிருக்கிறார். ஆனால், இப்போது எந்தப் பொறுப்பையும் ஏற்க தீபக் சம்மதிக்கவில்லை. ‘‘தினகரன், துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் வரை, நான் சாதாரணப் பொறுப்பில்கூட இருக்கமாட்டேன். எனக்கு எந்தப் பொறுப்பும் தேவையில்லை” என்று சொல்லிவிட்டு வந்தாராம் தீபக். அதேநாளில் தினகரனும் பெங்களூரு சிறைக்கு வந்திருந்தார். அவருடன் ஒரு வார்த்தைகூட தீபக் பேசிக்கொள்ளவில்லை. தினகரனுடன் ஏன் பேசவில்லை என்று தீபக்கிடம் கேட்டபோது... ‘‘அவரிடம் நான் பேசுவதற்கு என்ன இருக்கிறது?’’ என்று அவர் திருப்பிக்கேட்டாராம்.

சசிகலா குடும்பத்துக்குள் குத்துச்சண்டை! - தீபக் திடீர் புரட்சியின் பின்னணி

ஓ.பி.எஸ் - தீபா அணிக்கு செக்!

தீபக்கின் இந்த அதிரடிக்குப் பின்னால் நடராசனின் ஒரு திட்டம் இருப்பதாகவும் தினகரன் தரப்பு சொல்கிறது. ஜெயலலிதா பிறந்தநாளில் அறிவிப்பு செய்துவிட்டு, ஓ.பி.எஸ்-தீபா அணி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் கிளம்பத் திட்டம் போட்டிருந்தனர். இதையொட்டி 23-ம் தேதி காலையில் பத்திரிகையாளர்களை தினகரன் சந்தித்தார். அப்போது அவர், “போனவர்கள் திரும்பி வருவார்கள்” என்று பேட்டியளித்தார். இதையடுத்து, அன்று மாலையே தீபக்கும், “ஓ.பி.எஸ் திரும்ப வரவேண்டும்” என்று பேட்டி அளித்தார். அதோடு, ‘‘அவர் வந்து தலைமைப் பொறுப்பைக் கேட்டால்கூட தர வேண்டும்’’ என்று கூடுதலாக ஒன்றைச் சொன்னார். இதன்மூலம் ஓ.பி.எஸ்., தீபா பக்கம் உள்ள சீனியர்களைக் குழப்பி அவர்களை இந்தப் பக்கம் இழுப்பதற்கு நடராசன் கொடுத்த ஐடியாதான் இது என்று தினகரன் தரப்பினர் பேசிக்கொள்கிறார்கள்.

இவற்றின் அடிப்படையில் தீபக்கைத் தொடர்பு கொண்டு பேசினோம். அவர் அளித்த விளக்கம்...

“என்னைப் பொறுத்தவரை அ.தி.மு.க என்ற கட்சி உடையக்கூடாது. அந்தப் பிளவைத் தடுக்க யார் வேண்டுமானாலும்... எதை வேண்டுமானாலும் விட்டுத்தரலாம். இந்தக் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் திரும்பி வரவேண்டும். அவர் வந்து ‘கட்சிக்குத் தலைமை ஏற்கிறேன்’ என்று சொன்னால், அந்தப் பொறுப்பையும் அவருக்குக் கொடுக்கலாம். அவருக்கு முழுத் தகுதியும் இருக்கிறது. இரண்டு முறை என் அத்தையே அவருக்கு முதல்வர் பொறுப்பைக் கொடுத்துள்ளார். இந்த முறை அவர் அவரசப்பட்டு, யாரோ சிலரின் பேச்சைக் கேட்டு, எங்கள் அத்தையை அவமானப்படுத்தும் வகையில் சில நடவடிக்கைகளில் ஈடுபட்டுவிட்டார். குறிப்பாக, சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்த அன்று,  ஓ.பி.எஸ் வீட்டில் அது கொண்டாடப்பட்டது மிகப் பெரிய தவறு. ஆனால், கட்சியின் நலனைக் கருத்தில்கொண்டு அதை மன்னிக்கலாம். மன்னித்து அவரையும், அவருடன் சென்றவர்களையும் திரும்ப ஏற்றுக்கொள்ளலாம்.

தினகரன், துணைப் பொதுச்செயலாளர் ஆனதை நான் ஏற்கவில்லை. எந்தத் தொண்டனும் ஏற்கவில்லை. அதனால் அவர் அந்தப் பதவியில் நீடிப்பது அழகல்ல. நீதிமன்றம் சொன்னதுபோல் 100 கோடி ரூபாய் அபராதத்தை நானே கட்டுவேன். போயஸ் கார்டன் வீடு இப்போதும் எனக்குச் சொந்தமானதுதான். அபராதத்தை நான் கட்டினாலும் சரி... வேறு யார் கட்டினாலும் சரி... போயஸ் கார்டன் வீட்டின் உரிமை, நியாயமாக எனக்குத்தான் உள்ளது. அதை யாராலும் மாற்ற முடியாது. சசி அத்தையை பெங்களூரில் சந்தித்தபோது, அவர் எனக்கு கட்சிப் பதவி தருகிறேன் என்று சொன்னது உண்மைதான். ஆனால், இப்போதைக்கு அதை ஏற்க எனக்கு மனமில்லை. அதற்கு இன்னும் நாள் இருக்கிறது. தினகரன் துணைப்பொதுச் செயலாளராக இருப்பதில் நடராசன் அங்கிளுக்கு அதிருப்தியா என்பதை நீங்கள் அவரிடம்தான் கேட்கவேண்டும். அதற்கு நான் பதில் சொல்லமுடியாது” என்றார்.

- ஜோ.ஸ்டாலின்
படங்கள்:  கே.ராஜசேகரன், ஜெரோம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism