Published:Updated:

நீரின்றி அவளுலகம் அமையாது - ப்ரேமா ரேவதி

நீரின்றி அவளுலகம் அமையாது - ப்ரேமா ரேவதி
பிரீமியம் ஸ்டோரி
News
நீரின்றி அவளுலகம் அமையாது - ப்ரேமா ரேவதி

நீரின்றி அவளுலகம் அமையாது - ப்ரேமா ரேவதி

நீரின்றி அவளுலகம் அமையாது - ப்ரேமா ரேவதி

வேர் பற்றிய நிலம் காய்ந்து, பாளம் பாளமாய் வெடித்து, பச்சைவயல்கள் பொன்னிறக் கதிர்களாய் பால்முற்றும் காலத்தில், காவிரியும் கைவிட வான்மழை நோக்கி நின்ற கண்களும் பஞ்சடைத்துப்போயின. இன்று பொட்டல் வெளிகளில் நீர் தேடி அலைக்கழியும் காவிரிப்படுகைப் பெண்களின் நிலை, பெண்கள் காலம்காலமாக வறுமையோடு நடத்திவரும் போராட்டத்தின் ஒரு களமாய் விரிகிறது.

நீரின்றி அவளுலகம் அமையாது - ப்ரேமா ரேவதி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz


பெண் வாழ்வின்-இருப்பின் தவிர்க்க முடியாத பாகம், பெண் உழைப்பு. உழைக்காத பெண்ணொருத்தி உலகில் இல்லை. இந்தியாவில் 60 சதவிகிதத்துக்கும் மேலான பெண்கள் விவசாயத் தொழிலில் ஈடுபடுகிறார்கள். காவிரிப்படுகை, விவசாயப் பெருநிலம்.

வறட்சிநிலையைப் பற்றித் தெரிந்துகொள்ள சென்ற பயணத்தில் கீழ்வேளூரில் உள்ள ஓர் அடகுக்கடைக்குச் சென்றபோது, அங்கே ஓர் அட்டையில் பளீரிடும் கவரிங் கம்மல்கள் கண்களைப் பறித்தன. தங்களது கடைசிப் பொன்னான காதணிகளையும் அடகுவைத்துவிட்டுச் செல்லும் பெண்கள், பெற்ற கடனில் வாங்கியணிந்து செல்லும் அந்தக் கம்மல்கள் அந்த நிலம் காணும் வறுமையின் உச்சத்தைச் சொல்லின. அதிகமாகத் தாலிக்கொடிகள் அடகுக்கு வருவதாக அடகுக்கடைக்காரர் சொன்னார். தாலிக்கு மாற்றுத்தாலி தேவை இல்லை, அது மறைக்கக்கூடியது என்பதால்.

கிராமம் கிராமமாகச் சென்று பெண்களைச் சந்தித்தபோது, பெரும்பாலானவர்களின் காதுகளில் அந்தப் புத்தம் புதிய கவரிங் கம்மல்களைப் பார்க்க முடிந்தது. அது, கேட்காமலேயே எங்களுக்கு நிலைமையைப் பறைசாற்றியது. மிகச்சிறிய அளவிலான நிலம் வைத்திருக்கும் சிறு குறு விவசாயிகள் முற்றிலுமாக சாகுபடி இழந்திருக்கிறார்கள். விவசாயி என்கிற அடையாளம் நில உரிமை ஆவணங்கள் சார்ந்து கணக்கிடப்படுவதால், பெண்கள் விவசாயிகளாகப் பார்க்கப்படுவது இல்லை. இந்த ஆண்டின் வறட்சியில், பல பெண் விவசாயிகள் இறந்திருக்கிறார்கள். இதுவரை விவசாயிகளின் தற்கொலை மற்றும் அதிர்ச்சி மரணங்கள் அதிகமாக நிகழ்ந்த பஞ்சாப், மகாராஷ்டிரம் ஆந்திர மாநிலங்களில்கூட நிகழாத இந்தப் ‘பெண் விவசாயிகளின்’ தற்கொலை/அதிர்ச்சி மரணங்கள்தான், இன்றைக்குத் தமிழகத்தில் பெண் விவசாயிகளின் இருப்பை, தவிப்பை அவர்கள் இல்லாதழிந்த பின் உலகுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறது.

 பல விவசாயக் குடும்பங்களில், பெண்கள் கணவர்களை இழந்து கடன் சுமை சேர்ந்து நசுங்கிக்கொண்டிருக்கிறார்கள். கீழ்வேளூர் ஓர்குடி கிராமத்தில் விவசாயம் பொய்த்ததால், நெஞ்சடைத்து இறந்த கலியபெருமாள் அவர்கள் வீட்டுக்குச் சென்றோம். விவசாயிகளின் உயிரிழப்பால் பாதிக்கப்பட்டுப் பெய்கிறதோ என எண்ணும்படியாகக் காலம் தப்பித் தூறிக்கொண்டிருந்தது வானம். அந்த வீட்டின் முன் பந்தல் போட்டு மக்கள் கூடி இருந்தனர். ஒரு ஆட்டோவில் காய்கறிச் சோறு வந்து இறங்கியிருந்தது. தனது கணவரின் காரியத்திலிருந்து வெளியே வந்தார் அறிவின்கொடி. ஐந்து மா நிலம், உரிய காலத்தில் நீர் வராததால் நேரடியாக விதை தெளித்து இருக்கிறார்கள். கூட்டுறவு வங்கியில் கடன் கிடைத்தும் காலத்தில் பணம் கிடைக்கவில்லை. தவணை மைக்ரோஃபைனான்ஸ் குழுக் கடன், நகை அடமானம் என ஏராளமான கடன்கள். புலம்பி புலம்பி கணவர் உணவருந்தாமல் இறுகிக் கிடந்து பின், காய்ந்துகிடந்த வயலில் விழுந்து மாரடைப்பில் இறந்தும் போய்விட்டார்.

அருகில் கடம்பங்குடி மாரியம்மன் தெரு. ஒரு பழைய கோயிலை ஒட்டிய மண்பரப்பில் ஓலைக் குடிசைகள். பெரும்பாலானவை மிகச் சிறிய சுவர் பூசப்படாத வறிய வீடுகள். சுவர்ப்பூச்சு பெருமளவு உதிர்ந்து செங்கற்கள் தேய்ந்துபோன ஒரு வீட்டில் இருந்து வெளியே வந்தார் கவிதா. இருளில் கிடந்தது வீடு. அவருக்கு வயது 29. கணவர் வீரமணிக்கு வயது 30. விவசாயத் தொழிலாளிகளாக இருக்கும் ஏராளமான தலித் மக்களது கனவு, சொந்தமாக நிலம் வாங்குவது. நிலத்தை குத்தகைக்கு எடுப்பது என்பது அதை நோக்கிய முதல் கட்டமாகப் பலருக்கு இருக்கிறது. வீரமணியும் கவிதாவும்கூட இப்படியான மேம்பாட்டுக் கனவுகளோடே இருந்த நகைகளை அடகுவைத்து, 50,000 ரூபாய்க்கு நான்கு மா நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தனர். பின், தட்டுமுட்டுச் சாமான்களைக்கூட அடகுவைத்து, குழுவிலும் மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனங்களிடமும் கடன் வாங்கிப் பயிர் செய்தனர். “எல்லாம் கருகிட்டு” என வெறுமையாகச் சொன்னார் கவிதா. கருகிய பயிரைக் கண்டு, வாடி உதிர்ந்து போய்விட்டார் 30 வயது வீரமணி. நித்யஸ்ரீ, திவ்யதர்ஷினி எனும் இரு சின்னஞ்சிறு மகள்களோடு ஓர் உடைசல் வீட்டில் ஏராளமான கடன்களோடு நிற்கிறார் கவிதா. கைநிறையக் கண்ணாடி வளையல்கள் அணிந்திருந்தார். அதைப் பார்ப்பதைக் கண்டு, “இன்னும் சடங்கு முடியல” என்னும்போதே அது வரை படர்ந்திருந்த வெறுமை சிதறித் துயரத்தில் கரைந்தது அவர் முகம். பெரும்பாலான விவசாயிகளையும் அரசின் தரப்பில் அதுவரை எவரும் வந்து பார்த்திருக்கவில்லை.

நீரின்றி அவளுலகம் அமையாது - ப்ரேமா ரேவதி

கவிதாவின் ஊரில் அனைவரும் நிலமற்ற கூலி விவசாயத் தொழிலாளர்கள். காவிரி நீர் வராதது, மழை பொய்த்தது என வரலாறு காணாத இந்த வறட்சி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மூன்றரை லட்சம் விவசாயத் தொழிலாளிகளைத்தான் மிகக் கடுமையாகப் பாதித்திருக்கிறது. கடும் பஞ்ச காலங்களை ஒத்த சூழ்நிலையே நிலவுகிறது. ஒரே ஒரு மாறுதல், இப்போது ரேஷன் அரிசி கிடைக்கிறது என்பதும் ஏராளமான கடன்கொடுக்கும் நிறுவனங்களும் தவணைக்காரர்களும் வந்து கடன்களைக் கூவிக் கூவி  கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதும்தான்.

கீழ்வெண்மணி தலித் குடியிருப்பில், காய்ந்த குடிநீர்க் குழாய்களின் முன்னால் பிளாஸ்டிக் குடங்கள் வரிசையாக இருக்கின்றன. 1968-ல் நிலமற்ற தலித் விவசாயத் தொழிலாளப் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட 44 பேர், வீட்டுக்குள் அடைத்துவைத்துத் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட இடத்தில் ஒரு வாழைக்குருத்தின் வடிவத்தில் நினைவிடம் நிற்கிறது. ‘செங்கொடியை இறக்க மாட்டோம், கூலியும் கௌரவமும் எங்கள் உரிமை’ எனப் போராடிய வரலாற்றின் தொடர்ச்சியை அந்த நினைவுச் சின்னம் சுட்டுகிறது. இப்போது புதிய நினைவிடம் ஒன்று அருகிலேயே கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. 66 தலித் குடும்பங்கள் அங்கு இருக்கின்றன. அவற்றில் சரிபாதிப் பேருக்கு கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் தம்பதியினரின் ‘உழுபவருக்கு நிலம் சர்வோதய இயக்க’த்தில் இருந்து, ஒன்று முதல் இரண்டு ஏக்கர் வரை நிலம் வழங்கியிருக்கிறார்கள். கீழ்வெண்மணியின் பெரும்பாலான இளைஞர்கள் இன்று கரூரிலும் காங்கேயத்திலும் திருப்பூரிலும் பணிபுரிகிறார்கள். இளம்பெண்களும் கரூர் மில்களில்

நீரின்றி அவளுலகம் அமையாது - ப்ரேமா ரேவதி

வேலைபார்க்கின்றனர். விவசாயம் பொய்த்துக்கொண்டிருப்பதாக வறண்ட குரல்களில் சொல்கின்றனர்.

படித்த பெண்களோ வீடுகளில் இருக்கிறார்கள். வேலை பெற்றுத் தரக்கூடிய படிப்பை அரசுக் கல்லூரிகள் அவர்களுக்குத் தரவில்லை. வேலை கிடைக்கக்கூடிய தொழிற்கல்வி ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்தவர்கள் இன்னமும்கூட தீராக் கடன் சுமையில் தத்தளிக்கின்றனர். ரோபாட்டிக்ஸ் முதல் விவசாயம் வரை பலதரப்பட்ட படிப்புகளைப் படித்த வேலையில்லாத இளைஞர்களை கிராமங்களில் பார்க்க முடிகிறது. கீழ்வெண்மணியில் சந்தித்த அபிராமி, தெளிந்த மதியும் நேர்கொண்ட பார்வையும் உள்ள ஒரு பெண். ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு,

எம்.பி.ஏ-வும் முடித்துவிட்டு, சில காலம் பி.டி.ஓ ஆபீஸில் 100 நாள் வேலைத் திட்டத்தை சமூகத் தணிக்கை செய்யும் பணியில் இருந்துவிட்டு, இப்போது வீட்டில் சும்மா இருக்கிறார். 70-களில் ‘உழுபவருக்கு நிலம் இயக்கம்’ தனக்கு குறிக்கப்பட்ட நிலத்தை வேறொருவருக்கு மாற்றிக்கொடுத்தபோது, ‘தானே கஷ்டப்பட்டு உழைத்து நிலம் வாங்கி உழுவேன்’ என சபதம் ஏற்ற தனது தந்தை, பின்னர் கடைநிலை அரசு ஊழியராகி பணம் சேர்த்து, நிலம் வாங்கி, தனது மகளைப் பட்டமேற்படிப்பு வரை படிக்கவைத்ததை அபிராமி உணர்வுபொங்க நினைவுகூர்கிறார். ஒடுக்குமுறைக் காலத்தின் பிரதிநிதியாக அவர் தனது மகளுக்கு ஒளிபொருந்திய எதிர்காலத்தைத் தந்துவிட வேண்டுமென்று பட்ட உழைப்பு அது. அபிராமி மிக நிதானமான குரலில், “படிப்பு இன்னிக்கு ஏழைங்களுக்கு உதவுறதா இல்ல. எனக்கு உதவுற கல்வி அரசுக் கல்லூரியில் இல்ல. அதை நான் தேடிப் போனா, பணம் வேணும். அரசு கல்லூரியில் படிக்கிற படிப்புக்கு வெளியில பயனும் இல்ல, வேலையும் இல்ல” என விவரிக்கிறார்.

கீழ்வெண்மணியில் ராசம்மா எனும் மூதாட்டி, “ஆயிரம் ரூபாய் முதியோர் உதவிப்பணத்தையும் நான்கு கிலோ அரிசியையும் மட்டும் வைத்துக்கொண்டு வாழமுடியவில்லை.  பிள்ளைகள் அவர்களது குடும்பத்தைக் காப்பாற்றவே அல்லல்படுகிறார்கள். அவர்களால் எனக்கு உதவ முடியாது. திருமண முறிவால் என்னோடு இருக்கும் மகளையும் நான்தான் காப்பாற்ற வேண்டும்” என்று சொல்லும்போதே அவருக்குத் தொண்டை அடைத்தது.

சென்ற கிராமங்களில் எல்லாம் தனித்த மூதாட்டிகளின் வறுமைமிக்க நிலைமை மிகக் கொடூரமாக இருப்பதை உணர முடிந்தது. விவசாயம் மூன்று போகம் இருந்த காலம் பழங்கதையாகி, கடந்த பத்தாண்டுகளில் இரு போகமும் சிதறிப்போன பின் சம்பா பருவ விளைச்சல் மட்டுமே நாகப்பட்டினக் கடைமடைக் கிராமங்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது. இந்தமுறை சம்பா முற்றிலுமாகப் பொய்த்துவிட்டது.

நீரின்றி அவளுலகம் அமையாது - ப்ரேமா ரேவதி

கிராமப்புற வேலையின்மையையும் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்டது, 100 நாள் வேலைத் திட்டம். இதில், பல குளறுபடிகள் இருந்தாலும் ஏதோ ஒரு குறைந்தபட்ச ஊதியத்தில் வேலையை மக்களுக்கு உத்தரவாதம் செய்து வந்திருக்கிறது. ஆனால், நாகப்பட்டினத்தில் நாங்கள் சந்தித்த பெண்களுக்கு 2016-ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து வரவேண்டிய 100 நாள் வேலை சம்பளம் வந்தபாடில்லை. வேலை செய்ததற்கான நோட்டுப் புத்தகத்தோடு, பஞ்சாயத்து அலுவலகத்துக்கும் வங்கிகளுக்கும் நடையாய் நடந்துகொண்டிருக்கிறார்கள் பெண்கள். செல்லாக்காசு பிரச்னையும் வங்கி முடக்கமும் மத்திய அரசு, தாங்கள் அளிக்க வேண்டிய பங்குத் தொகையை அளிக்காமையும்தான் இந்தத் தாமதத்துக்குக் காரணம் என்கிறார்கள் அதிகாரிகள்.

காலையில் வங்கிக்குச் சென்றால், தங்களை நாள் முழுவதும் வெளியே உட்காரவைத்து மாலையில் பணம் இல்லை என மிக அலட்சியமாகச் சொல்வதாகக் குமுறினார் முன்னாள் கம்யூனிஸ்ட் பஞ்சாயத்துத் தலைவர் பேச்சிமுத்து.

கடும் கோபம் கொண்டு வங்கி அதிகாரியிடம், “உன் பணத்தை கேக்க நான் வரலை. உன்கிட்ட கடன் கேட்டும் வரலை. உழைச்சதுக்கு சம்பளம் எடுக்க வந்தேன். கேவலமாப் பேசுற வேலையெல்லாம் வேணாம்” எனச் சண்டை பிடித்து வந்ததாகச் சொன்னார்.

ஆண்டைகளும் கங்காணிகளும் காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறார்கள். பெண்களும் தமது போராட்டக் குரலை இன்றும் காப்பாற்றியே வந்திருக்கிறார்கள் என்பதுதான் ஒரே ஆறுதல். போராட்டமே வாழ்வென்பது உன்னதம்தான் என்றாலும், உழைக்கச் சலியாத இந்த மக்களுக்கு அவர்களுக்கான கௌரவமான வேலையும் அதற்கான ஊதியமும் இன்னமும்கூட போராட்டத்தின் ஊடேதான் தக்கவைக்கப்படுகின்றன என்பது இந்தச் சமூக அமைப்பின் அவலம்தானே?

வறுமையின் அளவைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் தேநீர் என்பதே இன்று மிக ஆடம்பரமாகிவிட்டது என்னும் புலம்பலில் தொடங்கலாம். இஞ்சித் தண்ணி குடிப்பது என்றால்கூட இஞ்சி அஞ்சு ரூபாய் விற்பதால் கஷ்டம் எனும் நிலை. குடும்ப அட்டைக்கு 20 கிலோ அரிசி கிடைத்தாலே நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு இரு வாரங்களுக்குக்கூட அது போதாது எனும் நிலையில், புதிதாக பல பேருக்கு 16 கிலோ அரிசிதான் வழங்குவோம் என ரேஷன் கடைகளில் கூறியிருக்கின்றனர். இரண்டு கிலோ துவரம் பருப்பு கொடுத்த இடத்தில் ஜனவரி மாதம் அரை கிலோ துவரம் பருப்புதான் தரப்பட்டிருக்கிறது. புதுச்சேரியில், மளிகைக் கடை வைத்திருக்கும் செல்வத்திடம் பேசும்போது, “கணிசமாக வியாபாரம் குறைந்திருப்பதாகவும், முன்பு 100 ரூபாய்க்குப் பொருள் வாங்குபவர்கள் இப்போது 20 ரூபாய்க்குக்கூட வாங்குவதில்லை” என்றார்.

இத்தனை வறுமையிலும் பசி பட்டினியிலும் இவர்கள் அதிக வேதனையோடு பேசுவது, பயிர் கருகுவதைப் பற்றித்தான். ‘அய்யோ வெச்ச பயிர் நின்னு கருக எப்படிப் பார்த்து இருக்க’ எனும் ஓலம் எல்லா முனைகளிலும் கேட்கிறது.  ‘விவசாயத்தை நம்பி இனி வாழமுடியாது’ என இடம்பெயர்ந்துவிட்ட இளைஞர்கள் சொல்ல, ‘மனிதர்கள் சாப்பிடும் வரை நாங்கள் விவசாயம் செய்யவேண்டும்தானே... இல்லாவிட்டால் பட்டணங்களில் நீங்கள் என்னத்தத் தின்பீர்கள்?’ எனக் கேட்கிறார்கள் விவசாய நிலத்தின் மக்கள்.

நீரின்றி அவளுலகம் அமையாது - ப்ரேமா ரேவதி


‘செத்தவர்கள் பாக்கியவான்கள்; இருப்பவர்களின் வேதனை கேடுகெட்ட தண்டனை’ என்பதாக இந்த மக்களின் வாழ்க்கை நகர்கிறது. பிள்ளைபோல வளர்த்த பயிர், கருகும் வேதனையோடு வீட்டின் தேவைகளைத் தாங்க வேண்டிய அச்சாணியாகப் பெண்கள் இருக்கிறார்கள்.

வேலை தேடி அலைகிறார்கள், பின்பு 100 நாள் வேலை செய்துவிட்டுச் சம்பளத்துக்காக அலைகிறார்கள், வறட்சியால் குடிநீர் பஞ்சம் பீடித்திருக்கும் கிராமங்களில் குடிநீர் தேடியும் போகிறார்கள், ஆடு மாடுகளுக்குத் தீவனமும் நீரும் தேடி  அலைகிறார்கள். சாப்பிடவே கடன் வாங்கும் மோசமான கடன் வலையில் வீழ்கிறார்கள். தவணைக்காரர்களும் மைக்ரோஃபைனான்ஸ் கம்பெனிக்காரனும் வந்துவிடுவானே என்கிற அச்சத்தில் உளைகிறார்கள். தினத் தவணை கட்ட முடியாத காலைகளில் தவணைக்காரரின் வண்டிச் சத்தம் கேட்டுக் கருகிய வயல்களில் ஓடி ஒளிகிறார்கள்.

ஆனால், ஓடவே முடியாத மைக்ரோ ஃபைனான்ஸ் கடன் கூட்டங்களில் பணம் செலுத்த முடியாமல் அவமானப்பட்டு கூனிக்குறுகி நிற்கிறார்கள். கடனுக்கு பணம் கட்ட மேலும் கடன் வாங்கி அதைக் கட்ட வேறொரு கடன் வாங்கி, எது முதல், எது வட்டி எனத் தெரியாத அளவுக்குக் கடன் சுழலில் சிக்கியிருக்கிறார்கள். இந்தப் புதிய  மைக்ரோஃபைனான்ஸ் ‘கடன் விற்கும் அலை’ கிராம அளவிலும் குடும்ப அளவிலும் பல மாறுதல்களைக் கொண்டுவந்திருக்கிறது. ஊரின் முக்கியமானத் தொழிலே கடன் வாங்குவதும் அதை அனைவரும் கூட்டமாய் அமர்ந்து வசூலித்துக் கட்டுவதும்தான்.உற்பத்தியும் இல்லாத உழைப்பும் இல்லாத ஆனால், நேரத்தை உறிஞ்சும் இந்த வெற்று இயக்கம், 25 சதவிகித வட்டிக்கு இந்தப் பெண்களைக் கடன்காரர்களாக ஆக்குவதை  ‘வறுமை ஒழிப்பு’, ‘பொருளாதாரப் பங்கேற்பு’ எனும் பசப்பு வார்த்தைகளோடு தனியார் கம்பெனிகள் லாபம் ஈட்டும் ஒரு வித்தையாக உருவாகியிருக்கிறது.

நீரின்றி அவளுலகம் அமையாது - ப்ரேமா ரேவதி

“ஆம்பளைங்க எல்லாம் இப்ப பொம்பளைங்க மாதிரிதான்; வீட்டிலதானே கிடக்கிறாங்க” எனச் சிரித்தார் சின்னவேர்குடியில் ஒரு பெண்.   “முன்னல்லாம் 300 ரூவா கூலி வாங்கி நேரா ‘அவங்க கடை’க்குப் போயி 150 குடிச்சிட்டு, இங்க மீதிய குடுப்பாங்க. இப்பதான் வழியில்லயே... வீட்டில படுத்துக்கிட்டு குழுக்கடன் கூட்டத்துக்கு போற என்கிட்ட,  ‘ஏ! வரும்போது அப்படியே ஒரு கட்டு பீடி வாங்கியாவே’ன்னு கேக்கறாங்க” எனச் சொல்கிறார் செந்தாமரை. கூட்டத்தில் இருந்த ஆண் ஒருவர், “ஆமா. இப்பல்லாம் குடிக்கத் தண்ணி கேட்டா கூட குழு ஆபீஸர் வந்துட்டாருனு போயிக்கிட்டே இருக்காங்க. புருஷனுக்கு மரியாத இல்ல. கடன்காரனுக்குத்தான்” என விடைத்தார்.

விவசாயத்துக்கான செலவுகூட மைக்ரோ ஃபைனான்ஸ் கடனில்தான் நடக்கிறது. ஆனால், கடன் ஆண்களுக்கு இல்லை. பெண்களுக்கு மட்டுமே. ஏனெனில், அதுதான் கடனைத் திரும்ப வாங்குவதற்கான வழியென கம்பெனிகள் தெரிந்துவைத்திருக்கின்றன. இந்தக் கடன் குழுக்கள் பெருக்கம், இயக்கம் ஆகியவை ஏதோ பெண்கள்தான் குடும்பத்திலும் கிராமத்திலும் முக்கியமானப் பங்கு வகிக்கிறார்கள் எனும் தோற்றத்தைத் தரவே செய்கிறது. கணவர்களையும் வாயடைக்க வைத்திருக்கிறது. இதை வியப்பதா இல்லை கடன் கொடுக்க முடியாத பெண்களை அவர்களின் சுற்றமும் நட்புமே சேர்ந்து நெருக்கும் இந்த முறையின் சாணக்கியத்தனத்தைக்கண்டு அதிர்வதா எனும் குழப்பமே மிஞ்சுகிறது. விவசாயிகளாக அடையாளம் காணப்பட்ட பெண்களுக்கு நில உரிமையோ, ஆவணங்களோ இல்லை. ஆனால், கடனாளி ஆவதற்கு அவர்களே மிகத் தகுதியானவர்கள் என உள்ளூர் என்.ஜி.ஓ-க்கள் முதல் உலக வங்கி வரை தெரிந்துவைத்திருக்கின்றன. வறட்சியால் நிகழ்ந்த விவசாய மரணங்களில் இந்தமுறை பெண்களும் இடம்பெற்றிருப்பதற்கு இந்த மைக்ரோஃபைனான்ஸ் நெருக்கடியும் ஒரு காரணம் எனச் சொல்லப்படுகிறது.

ஒரு நீண்ட வரலாற்றுத் தொடர்ச்சியில் பார்த்தால், விவசாயத் தொழிலாளப் பெண்களின் வறுமை ஒன்றும் புதியது இல்லைதான். ஜமீன்தார்களும் ஆதீனங்களும் கொழுத்துக்கிடக்க, உழைப்பான உழைப்பைக் கொட்டி தஞ்சையை நெற்களஞ்சியமாக ஆக்கிய மக்களின் நிலை?  போரான போராட்டம் நடத்தி, சாணிப்பால் சவுக்கடிக்கு எதிராக உயிரையும் விலையாய்க் கொடுத்து, பெற்ற நிலமும் கௌரவமும் இன்று இயற்கையின் சீரழிவால், அரசின் மெத்தனத்தால், தன்னை மீட்டுருவாக்கம் செய்துகொள்ளும் சாதீயத்தால், விவசாயிகளின் நலன் முறிக்கும் கொள்கைகளால்  மெதுமெதுவாக அவர்களை விட்டு விலகிப்போய்க் கொண்டிருப்பதை, இந்த வறட்சி தூக்கிப்பிடித்துக் காட்டுகிறது.

நீரின்றி அவளுலகம் அமையாது - ப்ரேமா ரேவதி


ஓயாத உடல் உழைப்பைக் கொடுத்து இந்தப் போராட்ட வரலாற்றுக்கு அடித்தளமாக இருந்த பெண்கள், ஓடாய் உழைத்தும் உண்ண உணவின்றி அலைக்கழியும் நிலைதான் இன்னமும் இருக்கிறது. காவிரிப்படுகையின் கிராமங்களில் எல்லாம் பெண்களின் தலைமையில் ஒரு போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. அது அடுப்பெரியவும் பசியாறவும் ஆடு மாடு கோழி எனும் உயிர்களோடு சேர்ந்த ஒரு விவசாயக் குடும்பம் தண்ணீர் குடித்து உயிர்த்திருக்கவுமான போராட்டம். குழந்தைகளைப் படிப்பித்து, உடல்நலம் பேணி, மண்ணோடும் சூழலோடும் இயைந்து வாழ்ந்திருப்பதற்கான போராட்டம். இது உழுது, பயிர் செய்து, உலகத்தை வாழ்விப்பதற்கான பிரதிபலன் நோக்காத பண்பாட்டின் போராட்டம். பெண்ணியத்தின் மிக முக்கியமான களப்போராட்டம். மண்ணில், நின்று உழைப்பதற்கும் கௌரவமாய் சமத்துவமாய் பல்லுயிர் பேணி வாழ்வதற்குமான விவசாயப் பெண்களின் போராட்டத்தில் துணை நிற்போம்.

(நாகப்பட்டினம் மாவட்டத்தில் ப்ரேமா ரேவதி, செந்தில் பாபு இருவரும் பங்குபெற்று செய்த கள ஆய்வுகளின் தரவுகளைவைத்து இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.)

புகைப்படத்தில் உள்ளவர்கள், கள ஆய்வின்போது எடுக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட விவசாயப் பெண்கள்.