மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சசிகலா ஜாதகம் - 20 - “சசிகலா... என் அக்கவுன்ட்டன்ட்!”

சசிகலா ஜாதகம் - 20 - “சசிகலா... என் அக்கவுன்ட்டன்ட்!”
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா ஜாதகம் - 20 - “சசிகலா... என் அக்கவுன்ட்டன்ட்!”

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

டி.டி.வி.தினகரனுக்கும் வழக்கறிஞர் ஜோதிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பற்றிய பஞ்சாயத்தை கொடநாட்டில் கூட்டியிருந்தார் ஜெயலலிதா. அன்றைக்கு கருநீல நிறத்தில் புடவை கட்டியிருந்தார்  ஜெயலலிதா. அதைவிட அவரது முகம் கறுத்திருந்தது. காரணம், தினகரன்.  விசாரணைக்குப் பிறகு அவரைக்  கண்டித்து அனுப்பிவிட்டு ஜோதியை அழைத்த ஜெயலலிதா, ‘‘தினகரன் திட்டியதற்காக என்னைவிட்டு நீங்கள் எப்படி போகலாம்?’’ என ஜோதியைப் பார்த்துக் கேட்டார்.

இப்படி ஜோதி மீது ஜெயலலிதா அக்கறைக் காட்டியதற்கு, வழக்குகளை ஜெயித்துக் கொடுத்தார் என்பது மட்டும் காரணம் அல்ல. 2001 - 2006 அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் அரசுக்கு நல்ல யோசனைகளையும் அவர் தெரிவித்தார். ‘‘கந்துவட்டியாலும் லாட்டரி சீட்டாலும் அடித்தட்டு மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்காக நாம் சட்டம் கொண்டு வர வேண்டும்’’ என ஜெயலலிதாவிடம் ஜோதி சொன்ன பிறகுதான் கந்துவட்டி ஒழிப்புச் சட்டமும் லாட்டரி சீட்டு தடையும் கொண்டுவரப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஜெயலலிதாவிடம் மற்றவர்கள் சொல்லத் தயங்கும் விஷயங்களைக்கூட சகஜமாகப் பேசிவிடுவார் ஜோதி.

சசிகலா ஜாதகம் - 20 - “சசிகலா... என் அக்கவுன்ட்டன்ட்!”

அப்படித்தான் கொடநாடு பிரளயத்தின்போது ‘‘அந்தக் குடும்பத்தைக் கைகழுவுங்கள். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து ஒதுக்கிவிடுங்கள். ராமேஸ்வரத்தில் தலை முழுகிவிட்டு மதுரை வந்தால் மொத்த தமிழ்நாடும் உங்கள் பக்கம்தான் நிற்கும்’’ என ஜெயலலிதாவிடம் சொன்னார் ஜோதி. எந்த விஷயம் பற்றியும் ஜெயலலிதாவுக்குக் கடிதம் அனுப்பும்போது அதன் ஒரு காப்பியை சசிகலாவுக்கும் போட்டுவிடுவது ஜோதியின் வழக்கம். அப்படித்தான் தினகரன் பற்றி அவர் எழுதிய கடிதமும் சசிகலாவுக்கு அனுப்பப்பட்டது. இதை சுட்டிக்காட்டிய ஜெயலலிதா, ‘‘எனக்கு எழுதிய கடிதத்தை அவளுக்கு ஏன் காப்பி போட்டீங்க... அவளுக்குப் போட வேண்டிய அவசியம் இல்லை. அவள் யார்? என் அக்கவுன்ட்டன்ட்.’’ என்றார் ஜெயலலிதா. ‘‘அம்மா... நீங்க இப்படி சொல்றீங்க... ஆனால் அவர்கள்தான் எல்லா அதிகாரமும் செய்கிறார்கள்’’ என ஜோதி சொல்ல... ‘‘எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்க கிளம்புங்க’’ என ஜோதியை அனுப்பி வைத்திருக்கிறார் ஜெயலலிதா.

கொடநாடு பிரளயம் நடந்தபோது சசிகலா அங்கு இல்லை. கொடநாட்டில் இருந்து ஜோதி கிளம்பி காரில் மலைப்பாதையில் இறங்கிக்கொண்டிருந்தார். அதே நேரம் கொடநாட்டை நோக்கி சசிகலாவின் கார் மலையில் ஏறிக்கொண்டிருந்தது. ஒரு வளைவில் இரண்டு கார்களும் சந்தித்துக் கொண்டன. காரைவிட்டு இறங்கிய ஜோதி, சசிகலாவைப் போய் பார்த்தார். ‘‘என்ன ஜோதி... தினகரனுடன் சமாதானம் ஆகிவிட்டீர்களா? இரண்டு பேரும் கைகுலுக்கிக் கொண்டீர்களா? அம்மா சமாதானம் செய்துவைத்தாரா?’’ என சசிகலா கேட்க... ‘‘இல்லம்மா.. சமாதானம் ஆகல..’’ என்றார் ஜோதி. ‘‘அதையே நினைத்து கவலைப்படாதீங்க... பழையபடி உங்கள் பணிகளை செய்யுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்.’’ என சொன்னார் சசிகலா. ஆனாலும், ஜோதியின் இறங்குமுகம் அந்த நிமிடத்தில் இருந்து ஆரம்பமாகிவிட்டது. ‘ஜெயலலிதாவிடம் இவ்வளவு நெருக்கமாக ஒருவரை விட்டதே தவறு’ எனத் தாமதமாக உணர்ந்த சசிகலா, காயை கச்சிதமாக வெட்ட காத்துக்கொண்டிருந்தார். சரியாக 11 மாதங்கள்தான். கார்டனில் இருந்து ஜோதி விரட்டப்பட்டார்.

சசிகலா ஜாதகம் - 20 - “சசிகலா... என் அக்கவுன்ட்டன்ட்!”

தினகரனுக்கு ‘பொருளாளர்’ பதவி மட்டும் பறிபோகவில்லை. அ.தி.மு.க-வில் இருந்த செல்வாக்கும் சேர்ந்தே சரிந்தது. கட்சிக்குள்ளும் கார்டனிலும் அவரால் தலைகாட்ட முடிய வில்லை. அது ஜெயலலிதா மரணம் வரையில் தொடர்ந்தது. ராஜாஜி ஹாலில் ஜெயலலிதாவின் உடல் கிடத்தப்பட்டிருந்தபோதுதான் தினகரனால் வர முடிந்தது. 

ஜெயலலிதா மீது போடப்பட்டிருந்த வழக்குகள் அப்போது நீதிமன்றங்களில் நடந்துகொண்டிருந்தன. இப்போது மத்திய நிதி அமைச்சராக இருக்கும் அருண் ஜெட்லியும் பிறகு, நீதிபதியான நாகேஸ்வர ராவும் ஜெயலலிதாவுக்காக நீதிமன்றங்களில் ஆஜர் ஆனார்கள். இதற்கான ஏற்பாடுகளை ஜோதிதான் செய்து வந்தார். வழக்கறிஞர்களுக்கான கட்டணம், ஹோட்டல் வாடகை, விமான செலவுகள் என பதின்மூன்றரை லட்சம் ரூபாய்க் கான கணக்குகளை கார்டனில் அளித்தபிறகும் ஜோதியிடம் பணம் தராமல் இழுத்தடித்தார்கள். அந்த வழக்கறிஞர்களுக்கான செலவை ஜோதியே செய்துவிட்டு, பணம் வரும் எனக் காத்திருந்தார்.

வழக்குகளில் வெற்றியைத் தேடிக் கொடுத்ததற்காக ஜோதியை 2002-ல் ராஜ்ய சபா எம்.பி. ஆக்கியிருந்தார் ஜெயலலிதா. அதன் பதவிக் காலம் 2008 மார்ச்சில் முடிவடைய இருந்தது. ‘இரண்டாவது முறையும் ராஜ்ய சபா பதவி தொடரும்’ என நம்பிகொண்டிருந்த ஜோதியின் ஆசையில் மண் விழுந்தது. ‘அ.தி.மு.க சார்பில் நா.பாலகங்கா நிறுத்தப்படுகிறார்’ என்கிற தகவலைக் கேள்விப்பட்டபோது ஜோதி டெல்லியில் இருந்தார். உடனே சசிகலாவுடன் போனில் பேசினார். ‘‘வழக்குகள் எல்லாம் எப்படி போகின்றன’’ எனக் கேட்டார் சசிகலா. சம்பிரதாயப் பேச்சுகள் முடிந்தபிறகு, ‘‘பாலகங்காவுக்கு ராஜ்ய சபா சீட் தரப்போவதாக கேள்விப்பட்டேன். அது உண்மையா?’’ என ஜோதி கேட்க... எதிர்முனையில் நிசப்தம். ‘‘அம்மா... நான் பேசுறது கேட்கிறதா...’’ என ஜோதி சத்தமாகப் பேச... ‘‘ஆமாம்’’ என்றார் சசிகலா. ‘‘டான்சி வழக்கில் ஜெயித்து கொடுத்ததற்காகத்தான் அம்மா என்னை ராஜ்ய சபா எம்.பி ஆக்கினார். எம்.பி-யாக இருந்து நிறைய விஷயங்கள் செய்வார் என நினைத்துதான் அந்தப் பதவியை அம்மா கொடுத் தாங்க. 13 வருடங்கள் கஷ்டப்பட்ட எனக்கு நீங்க காட்டுகிற மரியாதை இதுதான் என்றால் நான் பல விஷயங்களை யோசிக்க வேண்டி வரும்மா’’ எனச் சொல்லி, போனை கட் செய்தார் ஜோதி.

(தொடரும்)