Published:Updated:

வாழ்க்கையை தொலைத்த தே.மு.தி.க.வினர் எத்தனை பேர் என தெரியுமா? விஜயகாந்துக்கு எம்எல்ஏ கேள்வி

Vikatan Correspondent
வாழ்க்கையை தொலைத்த தே.மு.தி.க.வினர் எத்தனை பேர் என தெரியுமா? விஜயகாந்துக்கு எம்எல்ஏ கேள்வி
வாழ்க்கையை தொலைத்த தே.மு.தி.க.வினர் எத்தனை பேர் என தெரியுமா? விஜயகாந்துக்கு எம்எல்ஏ கேள்வி
வாழ்க்கையை தொலைத்த தே.மு.தி.க.வினர் எத்தனை பேர் என தெரியுமா? விஜயகாந்துக்கு எம்எல்ஏ கேள்வி

சென்னை: சொத்து சுகங்களை விற்று வீடு வாசலை அடகு வைத்து போட்டியிட்ட வேட்பாளர்களில் எத்தனையோ பேர் இன்று கடனாளியாக தத்தளித்து வாழ்க்கையை தொலைத்து கொண்டு அலைகின்றனர் என்பதை விஜயகாந்தும், பிரேமலதாவும் அறிவார்களா என ராதாபுரம் எம்எல்ஏ மைக்கேல் ராயப்பன் கேள்வி கேட்டுள்ளார்.

சென்னையில் கடந்த 13ஆம் தேதி வள்ளுவர் கோட்டம் அருகில் தே.மு.தி.க. மதுஒழிப்பு போராட்டம் நடந்தது. அதில், பேசிய விஜயகாந்த் மனைவி பிரேமலதா, ஜெயலலிதாவை பார்த்த 5 எம்.எல்.ஏ.க்களும் உதிர்ந்த ரோமங்கள். அவர்கள் சென்றால் கட்சிக்கு எந்த பாதிப்பு இல்லை. கட்சி மாறுவது மனைவியின் கற்பை விலைபேசும் செயல் போன்றது என்று ஆவேசமாக பேசியிருந்தார்.

இந்த நிலையில் பிரேமலதா பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ராதாபுரம் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,அவர் கூறியிருப்பதாவது: எங்கள் மீது பிரேமலதா, உதிர்ந்த ரோமங்கள் என்று பண்பாடற்ற வார்த்தைகளை உபயோகித்திருக்கிறார். மதிகெட்டவர் தலையில் முடியாக இருப்பதை விட உதிர்ந்து போவதை உயர்வாக கருதுகிறோம். நன்றி உணர்ச்சியில்லாமல் எங்கள் மீது குற்றம் சுமத்துகிற பிரேமலதாவை பார்த்து நாங்கள் கேட்க விரும்புவதெல்லாம் ஒரு சீட்டு கட்சியான தே.மு.தி.க.வை 29 உறுப்பினர்கள் உள்ள கட்சியாக்கி, எதிர்க் கட்சித் தலைவர் இருக்கையையும் யாசகம் தந்தது புரட்சித் தலைவி ஜெயலலிதா.

அதற்காக ஊரெல்லாம் உழைத்து தமிழக மக்களிடம் உத்தரவாதம் கொடுத்து ஓட்டு வாங்கி தந்தது அ.தி.மு.க. தொண்டர்களின் அயராத உழைப்பு. சட்டமன்றத்தில் அதிலும் மாபெரும் தலைவர்கள் எல்லாம் அமர்ந்து அலங்கரித்த எதிர்க்கட்சி தலைவர் இருக்கையில் இருந்து கொண்டு நாக்கை துறுத்தி நன்றி மறந்ததும், ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்ததும் அவர்கள் தானே தவிர நாங்களல்ல.
 

##~~##
நாங்கள் எங்களுக்கு இப்பதவி கிடைப்பதற்கு யார் காரணமானவர்களோ அவர்களுக்கும், அவர்களின் உத்தரவாதத்தை ஏற்று வாக்களித்த தொகுதி மக்களுக்கும் நன்றி உடையவர்களாகவே இருக்கிறோம். தாய்ப்பாலை விற்பதற்கு சமம் கற்பை விற்பதற்கு சமம் என்றெல்லாம் பிரேமலதா பேசியிருக்கிறார். கூடவே மதுவுக்கு எதிராக போராட்டமும் நடத்தி இருக்கிறார்.
 
இவர் குடிக்கு எதிராக போராட்டம் நடத்துவது நகைச்சுவையின் உச்ச கட்டம். தன் கட்சித் தொண்டர்களையும், வேட்பாளர்களையும் தாறுமாறாக அடித்தார் என்பதை தமிழ்நாடே அறியும். தாய் பாலை விற்பதற்கு சமமென்று எங்கள் மீது பாய்ந்திருக்கிற பிரேமலதா ஒன்றை தெளிவாக்க வேண்டும். இன்றைக்கு கணவர் கட்சிக்கு தலைவர், மனைவி மகளிர் அணிக்கு தலைவி, மச்சான் இளைஞர் அணிக்கு செயலாளர்.
 
இப்படி தே.மு.தி.க. கட்சியை குடும்ப கட்சியாக மாற்றிவிட்ட இவர்கள் கட்சிக்கு அங்கீகாரம் வாங்கி கொடுத்த 2006 சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்களின் இன்றைய நிலை என்ன? சொத்து சுகங்களை விற்று வீடு வாசலை அடகு வைத்து போட்டியிட்ட வேட்பாளர்களில் எத்தனையோ பேர் இன்று கடனாளியாக தத்தளித்து வாழ்க்கையை தொலைத்து கொண்டு அலைகின்றனர் என்பதை இவர்கள் அறிவார்களா?
 
விலை பட்டியல் போட்டு வைத்து கொண்டு வியாபாரம் செய்தது என்பது எதை விற்றதுக்கு சமம்? கிளை செயலாளர் பதவி முதற் கொண்டு சட்டமன்ற உறுப்பினர் சீட்டு வரை விலைபேசி வியாபாரம் செய்தது யார்? பதவிகளுக்கு பணம் வசூலிப்பதற்கு தானே பார்த்தசாரதிகளும் சந்திரகுமாரர்களும்.
வியாபாரம் தான் குறிக்கோள் என்பதை குறிப்பாக உணர்த்த தானே கட்சி அலுவலகத்தை கோயம்பேட்டில் வைத்திருக்கிறீர்கள். நம்பி வருபவரின் உதிரத்தை உறிஞ்சிக் கொண்டு அவனை கடனாளியாக்கி நடுத்தெருவில் விட்டு விடுவது தானே உங்கள் வழக்கம்.
 
அடுத்து புதிதாக சிக்குபவனையும் முடிந்த வரை உறிஞ்சுவது தானே உங்களின் பாணி. உதாரணத்திற்கு எனது தொகுதியை எடுத்து கொள்ளுங்கள், தே.மு.தி.க.வின் முதல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரிடம் இப்போது பசை இல்லையென்று தானே என்னிடம் பெறுவதை பெற்றுக் கொண்டு சீட்டு தந்தீர்கள்.
 
இது எனக்கு மட்டுமல்ல அத்தனை பேர்களிடமும் ஆதாயம் பெற்று கொண்டு தானே சீட்டு தந்தீர்கள். இது யாருடைய தாய்ப்பாலை விற்பதற்கு சமம் அல்லது கற்பை விற்பதற்கு சமம்? நன்றியை பத்தி பேசுகின்ற நீங்கள் ராவுத்தர் இப்ராஹிமை மறந்து விட்டீர்களா? ஒவ்வொரு அரசியல் இயக்கத்தின் தோற்றத்திற்கும் ஒரு பிரத்தியேக கொள்கை பின்னணி உண்டு.
 
ஆனால் தனது கல்யாண மண்டபத்தின் இரண்டு தூண்களுக்காக கட்சி ஆரம்பித்தவர் விஜயகாந் தான். முன்பெல்லாம் தே.மு.தி.க.வில் இவர் இணைந்தார். அவர் இணைந்தார் என்று பத்திரிகைகளில் வரும். ஆனால் இன்றோ அந்த கட்சியிலிருந்து அனுதினமும் விலகுபவர்களின் எண்ணிக்கை தான் வெகுவாக இருக்கிறது.
 
விரைவில் விஜயகாந்தின் குடும்பத்தினர்கள் தவிர ஒருவரும் கட்சியில் இருக்கமாட்டார்கள். மற்ற கட்சிகள் எல்லாம் மக்களின் விரோத இயக்கம் என்று போகிற இடங்களிலெல்லாம் புலம்புகிறார்கள். மக்களோடு தெய்வத்தோடும் மட்டும் தான் கூட்டணி என்று பிரகடனம் செய்து கொண்டே, கூட்டணிக்கு அலைவதே இவர்களின் பிழைப்பு. மக்களை குழப்புவதையே தொழிலாக கொண்டுள்ளனர்.
இவ்வாறு மைக்கேல் ராயப்பன் கூறியுள்ளார்.