அலசல்
சமூகம்
Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

அ.குணசேகரன், புவனகிரி.

? 1989-ல் ஜெயலலிதா, புடவை கிழிந்த நிலையில் சட்டசபையில் இருந்து வெளியே வந்ததும், இப்போது ஸ்டாலின் சட்டை கிழிந்த நிலையில் வெளியில் வந்ததும்?

! இரண்டும் அந்தந்த நேரத்து நாடகங்கள். அன்று, அது எப்படி திட்ட மிடப்பட்டது என்பதைப் பிற்காலத்தில் திருநாவுக்கரசர் பேசி, சட்டமன்றப் பதிவேட்டில் அது உள்ளது. இன்று நடந்ததை வருங்காலத்தில் யாராவது பேசலாம். அதுவரை காத்திருக்கவும்.

கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!

  ச.ந.தர்மலிங்கம்,  சத்தியமங்கலம்.

? ‘பிரிந்து சென்றவர்கள் திரும்பி வாருங்கள்’ என்று தினகரன் அழைப்பு விடுப்பது?


! அவரது பலவீனத்தைக் காட்டுகிறது!

  வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

? ‘எனக்குப் பதவி ஆசை கிடையாது. எந்தப் பதவிக்கும் வரமாட்டேன். வெளியில் இருந்து செய்ய வேண்டியதைச் செய்வேன்’ என்று சொல்கிறாரே  நடராசன்?

! ஜெயலலிதா இருந்தபோதுதான் கட்சிக்கு வெளியில் இருந்து செயல்பட்டார் என்றால், ஜெயலலிதா இறந்த பிறகும் அவரால் கட்சிக்குள் நுழைய முடியவில்லை. சசிகலாவை உட்காரவைத்து ஆட்சி நடத்தலாம் என்று நடராசன் நினைத்தார். சசிகலா சிறைக்குப் போவார் என்று கற்பனை செய்துகூட அவர் பார்க்கவில்லை. இந்தச் சூழ்நிலையில், பதவிக்கு வருவது நல்லதல்ல என்று நினைத்திருக்கலாம். மேலும், சசிகலாவுக்கே அ.தி.மு.க தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இவ்வளவு எதிர்ப்பு இருக்கிறது என்றால், நாம் தீவிர அரசியலுக்குள் வருவது நல்லதல்ல என்று நடராசன் நினைத்திருக்கலாம்.

கழுகார் பதில்கள்!

சம்பத்குமாரி, பொன்மலை.

? ‘சசிகலாவை ஆதரித்த எம்.எல்.ஏ-க்களுக்கு, தொலைபேசியில் மிரட்டல் விடுத்த அ.தி.மு.க தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் பட்டியல் தயாரிக்கப்படுகிறது’ என்று வெளிப்படையாக மிரட்டி இருக்கிறாரே அமைச்சர் வேலுமணி?

! இப்படி பட்டியல் எடுத்தால் ஏராளமான வர்கள் தேறுவார்கள். அவர்களை அடைக்கும் அளவுக்கு தமிழ்நாட்டில் சிறைகள் இல்லை. அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் சசிகலாவுக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை அமைச்சர் அறிய வேண்டுமானால், பொதுவாக ஒரு தேதி குறிக்கலாம். சம்பந்தப் பட்ட எம்.எல்.ஏ-க்கள், தங்கள் தொகுதி அலுவலகங்களில் போய் உட்காரட்டும். தொண்டர்களை கருத்துச் சொல்ல அழைக்கட்டும். அப்போது தெரியும். அதை விட்டுவிட்டு இதுபோன்ற பூச்சாண்டிகள் எடுபடாது.

கழுகார் பதில்கள்!

இது, தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காகச் சொல்லப்படுவது.

  கே. ஆர்.ஜி.கே.ஜி.ஸ்ரீராமன், பெங்களூர்.

? அ.தி.மு.க மீண்டும் ஒன்றுபட தடையாக இருப்பது எது?


! கூச்சம்தான்! வேறு எந்தத் தடையும் இல்லை. பன்னீருக்கும் தினகரனுக்கும் எந்தப் பெரிய தத்துவார்த்த மோதலும் இல்லை. பன்னீரையும் சேர்த்துதான் தினகரன் அழைக்கிறார். ‘தினகரன் சார்’ என்றுதான் பன்னீர் அழைக்கிறார். ஜெயலலிதாவை எதிர்த்தவர்கள் மீண்டும் அவரோடு சேர்ந்தது மாதிரி, இவர்களும் சேரலாம். சேரவே மாட்டார்கள் என்று சொல்ல முடியாது.

  திருப்பூர் அர்ஜுனன்.ஜி., அவிநாசி-54.

? தீபக் - தீபா இருவரும் குழப்புகிறார்களா? குழம்புகிறார்களா?


! அவர்கள் குழம்பவில்லை. மக்களைத்தான் குழப்புகிறார்கள். இருவரும் மிகமிக ஜாக்கிரதையாக இருக்கிறார்கள். ‘ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது’ என்று முதலில் சொல்லிவந்த தீபா, இப்போது அதைச் சொல்வது இல்லை. மெளனம் ஆகிவிட்டார். `நடராசனும் சசிகலாவும் யோக்கியம், மற்றவர்கள் தவறானவர்கள்’ என்று தீபக் சொல்வது அபத்தம். தீபக்கும், தீபாவும் சொத்துக் குவிப்பு வழக்கு பற்றிப் பேசுவதே இல்லை. ‘சசிகலா போகவேண்டிய இடத்துக்குப் போய்விட்டார்’ என்கிறார் தீபா. ஜெயலலிதா இருந்திருந்தாலும், அவரும் போகவேண்டிய இடத்துக்குப் போகத்தான் செய்திருப்பார். `100 கோடி ரூபாய் அபராதத்தைக் கட்டுவேன்’ என்று தீபக் சொல்கிறார் என்றால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவர் ஏற்றுக்கொண்டு விடுகிறார் என்று அர்த்தம். 100 கோடி ரூபாய் கட்டும் அளவுக்கு அவர் என்ன தொழில் செய்கிறார் என்று தெரியவில்லை.

கழுகார் பதில்கள்!

‘தினகரனுக்கு அந்தத் தகுதி இல்லை’ என்று சொல்லும் தீபக்குக்கு என்ன தகுதி இருக்கிறது? ‘இரட்டை இலையை மீட்போம்’ என்று சொல்கிற தீபா, செப்டம்பர் 22-ம் தேதிக்கு முன்பு வரை எங்கே இருந்தார்? இவர்கள் இருவரும் அ.தி.மு.க உறுப்பினர்களா? உறுப்பினர் அட்டையாவது அவர்களிடம் இருக்கிறதா? இவர்கள் இருவரின் பேச்சுகள், பேட்டிகளுக்கு நிறைய மர்மமான பின்னணி இருக்கிறது

த.சத்தியநாராயணன், அயன்புரம்.

? உள்ளாட்சித் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் அரசு வெற்றி பெறுமா?

! எடப்பாடி அரசு வெற்றிபெறுமா, அ.தி.மு.க வெற்றிபெறுமா என்பது எல்லாம் அப்புறம்!

அ.தி.மு.க என்ற கட்சி மிகப் பெரிய உள்கட்சி நெருக்கடியை சந்திக்கப்போகிறது. ஒருவருக்கொருவர் யார் பெரியவன் என்ற மோதல் தலைதூக்கி, சொந்தக் கட்சி வேட்பாளருக்கு எதிராகவே செயல்படும் காரியங்கள் நிறைய நடக்கும். இதனை எப்படி அந்தக் கட்சி சமாளிக்கும் என்பதுதான் அச்சத்துக்குரியது!

கழுகார் பதில்கள்!

அ.ச.நாராயணன்,  பாளையங்கோட்டை.

? சசிகலா மீது சுப்பிரமணியன் சுவாமிக்கு என்ன திடீர் பாசம்?


! அவருக்கு, யார் மீது கோபம் வந்தாலும் பாசம் வந்தாலும், அதற்கு ‘கோடி அர்த்தம்’ இருக்கும்!

 சம்பத்குமாரி, பொன்மலை.

?சசிகலாவின் குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி என்றெல்லாம் சாட கருணாநிதி குடும்பத்துக்கு அருகதை உண்டா?

! இல்லை! அவர்கள் நேற்று செய்ததை, இவர்கள் இன்று செய்கிறார்கள்.

கழுகார் பதில்கள்!

தீ.அசோகன், திருவொற்றியூர்.

? நெல்லையில் பட்டப்பகலில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் சென்ற வாகனத்தை வழிமறித்து விசாரணைக் கைதி வெட்டிக் கொல்லப்பட்டது பற்றி?


! போலீஸ் வைத்திருந்தது பொம்மை துப்பாக்கி என்பதும், கிரிமினல்கள் வைத்திருந்த அரிவாள் கூர்மையானது என்பதும் இதன்மூலம் தெரிகிறது. நெல்லையில் சட்டம் ஒழுங்கைக் கவனிக்கும் போலீஸ் அதிகாரிகள், பொம்மை ஆகி வருகிறார்கள் என்பதும் நெல்லையில் கொஞ்ச காலத்துக்கு முன்புவரை அடங்கி இருந்த கூலிப்படை, இப்போது மீண்டும் துள்ளத்தொடங்கி இருக்கிறது என்பதும் தெரிகிறது.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com  என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!