அலசல்
சமூகம்
Published:Updated:

நியூஸ் ரூம்!

நியூஸ் ரூம்!
பிரீமியம் ஸ்டோரி
News
நியூஸ் ரூம்!

நியூஸ் ரூம்!

‘‘பன்னீருக்கு நன்றி!’’

சீமைக்கருவேல மரம் அகற்றும் வழக்கில் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஆஜராக, கடந்த 27-ம் தேதி மதுரை வந்தார் வைகோ. அவரே களத்தில் இறங்கி, கருவேல மரங்களை அகற்றியதற்கு நீதிபதிகள் பாராட்டிய மகிழ்ச்சியில் இருந்தார் வைகோ. அன்றுதான், வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடையை அகற்றுவதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் செய்த அப்பீல் மனு தள்ளுபடியானது. இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள அவசரமாக அன்றே பிரஸ்மீட் வைத்தார் வைகோ.

“கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டுமென்று அங்கு ஊராட்சி மன்றத்தலைவராக இருக்கும் என் தம்பி ரவிச்சந்திரன், ஊர்மக்கள் எல்லோரும் சேர்ந்து கடந்த ஆண்டு தீர்மானம் போட்டு நெல்லை கலெக்டரிடம் மனு கொடுத்தனர். ஆனால், மாவட்ட நிர்வாகம், கடையை மூட மறுத்தது. பெரிய போராட்டத்திற்குப்பின் உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டோம். கடையை அடைக்க வேண்டுமென்று தீர்ப்பளித்தது உயர் நீதிமன்றம். மகிழ்ச்சியடைந்தோம்.

ஆனால், ஜெயலலிதா மருத்துவமனைக்குச் சென்ற பிறகு      ஓ.பன்னீர்செல்வம் ஏற்பாட்டில், இந்தத் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது அரசு. இதில் ஓ.பி.எஸ் பின்னணியில் யார் இருந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், அந்த அப்பீல் மனுவை முதல் பார்வையிலேயே தள்ளுபடி செய்துள்ளனர். கலிங்கப்பட்டியை சுப்ரீம் கோர்ட் வரைக்கும் கொண்டு சென்ற பன்னீருக்கு நன்றி” என்றார் வைகோ கிண்டலாக!

- செ.சல்மான்
படம்: க.விக்னேஷ்வரன்

நியூஸ் ரூம்!

மணமகன் அறையில் விஜயகாந்த்!

தமிழக அரசியல் கட்சிகள் எல்லாமே ஜல்லிக்கட்டு, ஆட்சி மாற்ற சர்ச்சை, நெடுவாசல் போராட்டம் என பிஸியாக இருக்க, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். அதாவது, ‘உங்களுடன் நான்’ என்ற நிகழ்ச்சி மூலம் தமிழகம் முழுவதும் தொண்டர்களைச் சந்தித்து. அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார் விஜயகாந்த்.

கடந்த பிப்ரவரி 27-ம் தேதி, கடலூர் மாவட்டம் காடாம்புலியூரில் ஒரு திருமண மண்டபத்துக்கு விஜயகாந்த் வந்தார். தொண்டர்களுக்கு, பத்து நாட்களுக்கு முன்பாகவே டோக்கன்கள் கொடுக்கப்பட்டிருந்தன. கட்டுக்கடங்காதக் கூட்டம். அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள பலர் முண்டியடித்தனர்.  உடனே விஜயகாந்த் சூடானார். அங்கிருந்த மணமகன் அறைக்குள் போய் உட்கார்ந்துகொண்டார்.  நிலைமை சீரான பிறகே வந்தார்.

குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வந்த ஒரு தொண்டர், ‘‘மாமாவுக்கு ஒரு முத்தம் கொடு...” என்று குழந்தையிடம் சொல்லிக்கொண்டே இருந்தார். அதனால் போட்டோ எடுக்க தாமதமானது. கடுப்பான விஜயகாந்த், ‘‘அங்க பார்றா...” என்று அந்தத் தொண்டரின் முதுகில் சாத்தினார். பிறகு, அந்தத் தொண்டரின் மனைவியை அழைத்து  விஜயகாந்த் சமாதானம் செய்தார்.

- க.பூபாலன்