அலசல்
சமூகம்
Published:Updated:

தத்துப்பிள்ளை... கழுதை... - உத்தரப்பிரதேசத்தில் மோடி யார்?

தத்துப்பிள்ளை... கழுதை... - உத்தரப்பிரதேசத்தில் மோடி யார்?
பிரீமியம் ஸ்டோரி
News
தத்துப்பிள்ளை... கழுதை... - உத்தரப்பிரதேசத்தில் மோடி யார்?

தத்துப்பிள்ளை... கழுதை... - உத்தரப்பிரதேசத்தில் மோடி யார்?

பிரதமர் பதவியை அடையக்கூட நரேந்திர மோடி இவ்வளவு கஷ்டப்பட்டது இல்லை. ஆனால், உத்தரப்பிரதேச முதல்வர் நாற்காலியில், ஒரு பி.ஜே.பி-காரரை உட்காரவைக்க படாதபாடு படுகிறார். கிட்டத்தட்ட வார்டு கவுன்சிலர் ரேஞ்சுக்கு அந்த மாநிலத்தைச் சுற்றிச்சுற்றி வரும் மோடியை, உருளைக்கிழங்கு மாதிரி உரித்து எடுக்கின்றன எதிர்க்கட்சிகள்.  

தத்துப்பிள்ளை... கழுதை... - உத்தரப்பிரதேசத்தில் மோடி யார்?

ஏழு கட்டங்களாக நடைபெறும் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல், இப்போது க்ளைமாக்ஸை நெருங்கியிருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், உ.பி-யின் 80 தொகுதிகளில் 71 தொகுதிகளைக் கைப்பற்றியது பி.ஜே.பி. அதை சட்டமன்றத் தொகுதிவாரியாகப் பிரித்துப் பார்த்தால், மொத்தம் இருக்கும் 403 தொகுதிகளில் 337 இடங்களைக் கைப்பற்றி, அசுர பலத்தோடு ஆட்சி அமைப்பது போன்ற பலம் அது. ஆனால், சமாஜ்வாடி கட்சியும் காங்கிரஸும் கூட்டணி அமைத்ததில் தடுமாறிப் போய்விட்டது பி.ஜே.பி.

இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உ.பி-யில், அரசியல் வெற்றியை சாதியே தீர்மானிக்கிறது. யாதவ், ராஜ்புத், பிராமணர், ஜாட், தலித் என பார்த்துப் பார்த்து வேட்பாளர்களை நிறுத்துவார்கள். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஏரியாக்களில் அவர்களே ஜெயிக்க முடியும். தலித்துகளின் கட்சியாக அறியப்படும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகூட இந்த சாதிக்கணக்கைத் தாண்டி வேறு கணக்கைப் போட்டது இல்லை. பிஜே.பி இந்தக் கணக்கோடு இன்னொரு விஷயத்தையும் சேர்த்துக்கொண்டது. ஒரு தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு யாருக்கு அதிகம் எனப் பார்ப்பது. அவர் எந்தக் கட்சியில் இருந்தாலும், அவர்மீது எத்தனை வழக்குகள் இருந்தாலும், ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் கவலையில்லை. அவரை பி.ஜே.பி-யில் சேர்த்துக்கொண்டு வேட்பாளர் ஆக்கிவிடுவது. கட்சியில் காலம்காலமாக இருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் கவலைப்படுவது இல்லை. இதைத்தான் ‘வெற்றி ஃபார்முலா’வாகக் கருதுகிறது பி.ஜே.பி. ஒருவேளை இந்த ஃபார்முலா வெற்றி தந்தால், மற்ற மாநிலங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படலாம்.

உ.பி-யில் ஜெயிப்பது என்பதை, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பான செமி ஃபைனல் போலக் கருதுகிறது பி.ஜே.பி.  இந்தத் தேர்தலைத் திட்டமிட்டே, ஏழைகளுக்கு இலவச காஸ் சிலிண்டர் தரும் ‘உஜ்வால் யோஜனா’ திட்டத்தை உ.பி-யில் தீவிரமாக செயல்படுத்தியது மத்திய அரசு. சுமார் 34 லட்சம் குடும்பங்களுக்கு காஸ் கனெக்‌ஷன் தரப்பட்டுள்ளது. இதுவும், மோடியின் பிரசாரமும், எதிர்க்கட்சிகளின் ரௌடி அரசியல் இமேஜும் தங்களைக் கரை சேர்த்துவிடும் என நம்புகிறார்கள். ‘ஒரு குறிப்பிட்ட சாதிக்காரரை முதல்வர் வேட்பாளர் ஆக்கினால், மற்ற சாதிகள் விலகிச் சென்றுவிடும்’ என்ற பயத்தால், முதல்வர் வேட்பாளர் என்று யாரையும் அறிவிக்கவில்லை பி.ஜே.பி.

தத்துப்பிள்ளை... கழுதை... - உத்தரப்பிரதேசத்தில் மோடி யார்?

பி.ஜே.பி-க்கு ஆட்சியைப் பிடிக்க வேண்டிய நிர்பந்தம் என்றால், சமாஜ்வாடி கட்சிக்கு ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம். குடும்பத் தகராறுகளால், தேர்தலுக்குப் பல மாதங்களுக்கு முன்பிருந்தே தலைப்புச் செய்திகளில் நாள் தவறாமல் இடம் பிடித்த கட்சி. அப்பா முலாயம் சிங் யாதவுக்கும் மகன் அகிலேஷ் யாதவுக்கும் நிகழ்ந்த அதிகாரப் போட்டியில், முதல்வர் பதவி கையில் இருந்ததால் சுலபமாக ஜெயித்துவிட்டார் அகிலேஷ். ‘கட்சி தன் கையில் இருக்க வேண்டும் என்றால், ஆட்சி தன்னிடம் தொடர வேண்டும்’ என்பதை உணர்ந்திருக்கிறார் அவர். அப்பாவையும், அவரோடு தொடர்பில் இருந்த அடாவடி அரசியல்வாதிகளையும் எதிர்த்ததால், ஒரு ஹீரோ இமேஜ் அகிலேஷுக்குக் கிடைத்திருக்கிறது. எப்போதும் தனியாகப் போட்டியிட்டுவந்த காங்கிரஸ், இந்த முறை இவரோடு கூட்டணியில் இருப்பது புதுத் தெம்பைக் கொடுத்துள்ளது.

இது விரும்பி அமைந்த கூட்டணி அல்ல; இருவருக்குமே ‘தவிர்க்க முடியாத’ கூட்டணி. 28 ஆண்டுகளுக்கு முன்பு இழந்த உ.பி-யை மீண்டும் கைப்பற்றும் எண்ணத்துடன் ராகுல் காந்தி களம் இறங்கினார். 80 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட உ.பி-யில் கட்சியை வலுப்படுத்த முடியாமல், பிரதமர் கனவைக் காண முடியாதே! மோடிக்கு நாடாளுமன்றத் தேர்தலிலும், நிதிஷ் குமாருக்கு பீகார் சட்டமன்றத் தேர்தலிலும் பிரசார யுக்திகளைத் திட்டமிட்டுக் கொடுத்த தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்தார் ராகுல். அவர், சில மாதங்கள் இறங்கி முயற்சி செய்துபார்த்துவிட்டு, ‘‘காங்கிரஸ் இங்கே தனியாக ஜெயிக்க முடியாது. சமாஜ்வாடி கட்சியோடு கூட்டணி வைத்துக்கொள்ளுங்கள்” என ராகுலிடம் சொல்லிவிட்டார். ராகுல் காந்திக்கு இஷ்டமே இல்லாவிட்டாலும், பிரியங்கா காந்தியும் பிரசாந்த் கிஷோரும் அகிலேஷ் யாதவிடம் பேசி, கூட்டணியை முடிவுசெய்தார்கள்.

‘இப்படி ஒரு விநோதக் கூட்டணி உலகிலேயே அமைந்ததில்லை’ என்பதுபோல ஆகிவிட்டது. சமாஜ்வாடிக்கு 298 இடங்கள், காங்கிரஸுக்கு 105 இடங்கள் எனக் கூட்டணி உடன்படிக்கை ஏற்பட்டாலும், 22 தொகுதிகளில் இந்தக் கூட்டணியை மதிக்காமல், இரண்டு கட்சிகளுமே வேட்பாளரை நிறுத்தியுள்ளன.  கடந்த தேர்தலில் சுழன்று சுழன்று பிரசாரம் செய்த முலாயம் சிங் யாதவ், இந்த முறை தன் தம்பி மற்றும் மருமகள் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் பிரசாரம் செய்தார். ‘‘இந்தக் கூட்டணியை நான் ஏற்க மாட்டேன்’’ என வெளிப்படையாக சொல்லிவிட்டார்.

தத்துப்பிள்ளை... கழுதை... - உத்தரப்பிரதேசத்தில் மோடி யார்?

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரியங்கா, ஒரே ஒரு நாள் மட்டுமே பிரசாரத்துக்கு வந்தார். முதல்வர் அகிலேஷும் ராகுல் காந்தியும் இணைந்து பிரசாரம் செய்கிறார்கள். ஆனால், ‘சமாஜ்வாடி கட்சியினர் எங்களை மதிப்பது இல்லை’ என்ற காங்கிரஸ் வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்களின் கதறல், உ.பி முழுக்கக் கேட்கிறது. இந்தக்  கூட்டணிக்கும் பி.ஜே.பி-க்கும் மோதல் கடுமையாக இருக்கிறது. அகிலேஷைக் கடுமையாக விமர்சனம் செய்கிறார் மோடி. ‘‘சொந்த தந்தையையே அழித்துவிட்ட அகிலேஷை நீங்கள் எப்படி நம்ப முடியும்?” என்று மோடி கேட்க, ‘‘குஜராத்திலிருந்து வந்திருக்கும் கழுதைகளை நம்பாதீர்கள்’’ என பதிலடி கொடுத்தார் அகிலேஷ். ‘’கழுதையாக இருப்பது எனக்குப் பெருமை. நான் கழுதை போல உங்களுக்காக உழைப்பேன்’’ என உருகினார் மோடி. உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் வென்றுதான் பிரதமர் ஆகியிருக்கிறார் மோடி. எனவே, ‘‘நான் உ.பி-யின் தத்துப்பிள்ளை’’ என்கிறார் மோடி. இதற்கு, ‘‘உ.பி-க்கு தத்துப்பிள்ளைகள் தேவையில்லை. சொந்த மகன்களான அகிலேஷும் ராகுலும் உ.பி-யை கவனித்துக்கொள்வார்கள்’’ என பன்ச் அடித்தார் பிரியங்கா.

இடையில் புகுந்திருக்கும் மாயாவதி, ‘‘நான் உத்தரப்பிரதேசத்தின் மகள். என்னையே மக்கள் ஜெயிக்க வைப்பார்கள்’’ என்கிறார். மூன்றாவது போட்டியாளராகவே, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி கருதப்படுகிறது. ஆனால், ‘மாயாவதி நிறைய ஓட்டு வாங்க வேண்டும்’ என மற்ற இரண்டு தரப்புகளுமே வேண்டிக்கொள்கிறது. தலித் வாக்குகள் எப்போதுமே சமாஜ்வாடி கட்சிக்கு அவ்வளவாக விழாது. எனவே அவர்கள், ‘தலித் வாக்குகள் பி.ஜே.பி பக்கம் போகாமல், மொத்தமாக மாயாவதிக்குப் போக வேண்டும்’ என வேண்டிக்கொள்கிறார்கள். கணிசமாக இருக்கும் முஸ்லிம் வாக்குகளை பெரிதும் நம்பியிருக்கிறது சமாஜ்வாடி. ஆனால், நிறைய முஸ்லிம்களுக்கு சீட் கொடுத்து, அந்த வாக்கு வங்கியைக் கைப்பற்ற முயற்சி செய்கிறார் மாயாவதி. ‘நிறைய முஸ்லிம் ஓட்டுக்களை மாயாவதி வாங்க வேண்டும். அப்போதுதான் சமாஜ்வாடி தோற்கும்’ என வேண்டிக்கொள்கிறார்கள் பி.ஜே.பி-யினர்.

அகிலேஷ், நம்பிக்கை தரும் இளைய தலைவராகக் காட்டிக்கொண்டாலும்... மோடி, டிஜிட்டல் இந்தியா பற்றிப் பேசினாலும்... தேர்தல் என்று வந்துவிட்டால் சாதிக்குட்டையில்தான் விழுந்து எழுந்திரிக்க வேண்டும் எனச் சொல்லாமல் சொல்கிறது உ.பி தேர்தல்.

- அகஸ்டஸ்