மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சசிகலா ஜாதகம் - 21 - சதியில் வீழ்ந்த ஜோதி!

சசிகலா ஜாதகம் - 21 - சதியில் வீழ்ந்த ஜோதி!
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா ஜாதகம் - 21 - சதியில் வீழ்ந்த ஜோதி!

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

கொளுத்தும் அக்னி நட்சத்திர வெயில் நாட்களிலும்கூட வெந்நீரில் குளிப்பதுதான் ஜோதியின் வழக்கம். கொதிப்பில் இருந்த அன்றைக்கும் அப்படித்தான் குளித்தார். வெப்ப உடல், வெந்நீரால் இன்னும் சூடேறி இருந்தது. அ.தி.மு.க உறவையும், ஜெயலலிதா நட்பையும் 2008 மார்ச் 13-ம் தேதியோடு தலைமுழுகினார். குளித்துவிட்டு வந்து விறுவிறு என ராஜினாமா கடிதத்தை எழுதி முடித்தார். சசிகலாவோடு போனில் பேசிய அடுத்த நாள் இந்த அதிரடியைச் செய்தார் ஜோதி.

சசிகலா ஜாதகம் - 21 - சதியில் வீழ்ந்த ஜோதி!

‘கட்சியிலிருந்து ஒதுங்கிக்கொள்கிறேன்; வழக்குகளில் இருந்து விடுவித்துக்கொள்கிறேன்; வேறு வழக்கறிஞரை நியமித்துக்கொள்ளுங்கள்; வழக்குத் தொடர்பான ஆவணங்களை எடுத்துச் செல்லுங்கள்’ எனச் சொல்லி, ராஜினாமா கடிதத்தை ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைத்தார். அதோடு, வழக்குகள் தொடர்பாகச் செய்யப்பட்ட பதின்மூன்றரை லட்சம் பாக்கி பணத்துக்கான செலவுப் பட்டியலையும் அனுப்பியிருந்தார்.

கடிதம் கிடைத்ததும், கார்டன் அதிர்ந்தது. சமாதானப் படலம் நடந்தது. ஜெயலலிதா சார்பாக முக்கியப் புள்ளி ஒருவர் ஜோதியின் வீட்டுக்கு வந்தார். பெயரிலேயே தோட்டத்தை வைத்திருக்கும் அந்தப் புள்ளி, ஜோதியிடம் சாமர்த்தியமாகப் பேசினார். ‘‘என்னங்க... இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறீங்க. அம்மா இதை விரும்பவில்லை. ராஜ்ய சபா சீட் தரவில்லை என்பதற்காக ‘வழக்குகளை நடத்த விரும்பவில்லை’ எனச் சொல்வது அழகா? ராஜினாமாவைத் திரும்பப் பெறுங்கள். பழையபடி பணியைத் தொடருங்கள்’’ என்றார். ‘‘எந்த முடிவையும் நான் அவசரத்தில் எடுக்க மாட்டேன். யோசித்து எடுக்கப்பட்ட முடிவில் இருந்தும் பின்வாங்க மாட்டேன். ராஜினாமா முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன். வழக்குகளை இனி நடத்த முடியாது’’ என அந்தப் புள்ளியிடம் கறாராகச் சொன்னார் ஜோதி. தொடர்ந்து வலியுறுத்தியும் எந்தப் பயனும் ஏற்படாத நிலையில், ‘‘நம்ம எதிரிகள்கிட்ட மாட்டிக்காதீங்க’’ என ஜோதியை எச்சரித்தார் அவர். ‘‘முடிந்தால் பாக்கிப் பணம் பதின்மூன்றரை லட்சம் ரூபாயைப் பெற்றுத் தாருங்கள்’’ என்றார் ஜோதி. ‘‘உங்க பையனுக்கு எம்.எஸ் சீட்டை சிபாரிசு பண்ணி வாங்கிக் கொடுத்ததற்கு எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா?’’ என அவர் கேட்க... ‘‘அப்படியா? எவ்வளவு செலவு செய்தீர்கள் எனச் சொல்லுங்கள். பதின்மூன்றரை லட்சத்தை அதில் கழித்துவிட்டு, மீதித் தொகையை தந்துவிடுகிறேன்’’ என்றார் ஜோதி. அந்தப் பதின்மூன்றரை லட்சம் பணம் இன்றுவரையில் வரவில்லை. ஆனால், ‘அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம்’ என்ற அறிவிப்பு அதிரடியாக வந்தது. ராஜினாமாவுக்கு  பிறகுதான் நீக்கம் என்ற அறிவிப்பு வெளியானது. ராஜ்ய சபாவில் ஜோதியின் இருக்கை எண் 144. அவருக்கே கட்சியில் ‘144’ போட்டார் ஜெயலலிதா!

சசிகலா ஜாதகம் - 21 - சதியில் வீழ்ந்த ஜோதி!

‘கழகத்தின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணாகச் செயல்பட்டார். அதனால் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார். அவரிடம் கழகத்தினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது’ - கட்சியில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் இந்த ரெடிமேட் வார்த்தைகள்தான் ஜெயலலிதாவின் நீக்கல் அறிக்கையில் இடம்பெறும். ஆனால், ஜோதி விஷயத்தில் ஏகத்துக்கும் கடுப்பு காட்டினார் ஜெயலலிதா. உபயம், சசிகலா.

ஜெயலலிதா வெளியிட்ட அந்த அறிக்கையில், ‘கீழ் கோர்ட் முதல் சுப்ரீம் கோர்ட் வரை பல்வேறு முக்கியமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வழக்குகளிலிருந்து விலகிக்கொள்வதாக ஜோதி சொன்னது மிகவும் கண்ணியக்குறைவானது. சட்டத்துறைக்கே அவர் களங்கத்தை ஏற்படுத்திவிட்டார். அ.தி.மு.க தொடர்பாக 113 வழக்குகள் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் சொல்லாமல் கொள்ளாமல் ஜோதி விலகியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரிய செயலாகும். உச்ச நீதிமன்றத்தில் ஒரு முக்கிய வழக்கில் ஆஜராகியிருந்த ஜோதி, தனக்கு ராஜ்ய சபா சீட் கிடைக்கவில்லை எனத் தெரிந்ததும், வழக்கிலிருந்து பாதியிலேயே விலகி வெளியேறியுள்ளார். இது சட்டத் தொழிலைக் கொலை செய்வதற்கு சமம். தான் சார்ந்த கட்சிக்கு அவர் துரோகம் செய்துவிட்டார். கட்சி நலனுக்கு எதிராக அவர் செயல்பட்டுள்ளார்’ எனக் குறிப்பிட்டார்.

சசிகலா ஜாதகம் - 21 - சதியில் வீழ்ந்த ஜோதி!

ஜெயலலிதாவின் இந்த அறிக்கைக்குப் பிறகு ஜோதியின் வீட்டில் கல்வீச்சுகள் நடந்தன. போனில் தொடர்ந்து மிரட்டல்கள் வந்தன. அப்படி கல் எறிந்தவர்கள் பிறகு  டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்களாகவும் வந்து உட்கார்ந்தார்கள். கல்லெறியச் சொன்னது யார்? அப்படி எறிந்தவருக்கு பதவி கொடுத்தது யார் என்பதற்கெல்லாம் விடை தேட வேண்டியது இல்லை.

‘ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வு, நீதிமன்றப் போராட்டங்களால் நிறைந்தது. அதனால், மற்ற அரசியல் உதவியாளர்களையெல்லாம்விட சட்ட உதவியாளராக விளங்கிய ஜோதிக்கு ராஜ்ய சபா பதவி நீட்டிப்பு தரப்பட்டிருக்க வேண்டும்’ எனக் கட்சியின் சீனியர்களே சொல்லி வந்தார்கள். ஆனால், தினகரனின் உண்மை முகத்தை ஜெயலலிதாவிடம் அம்பலப்படுத்தியதற்காக, ஜோதியை பழிதீர்க்க சசிகலா நடத்திய சித்து விளையாட்டில், அவர் கட்டம் கட்டப்பட்டார். கடைசியில் வேறு வழியே இல்லாமல் தன்னை தற்காத்துக்கொள்ள, ஜோதி வந்து நின்ற இடம் மீடியா!

அங்கே என்ன நடந்தது?

(தொடரும்)