அலசல்
சமூகம்
Published:Updated:

“முதல்வர் அறை சந்தைக்கடைபோல இருக்கிறது!” - கோதாவில் இறங்கும் ராதாரவி

“முதல்வர் அறை சந்தைக்கடைபோல இருக்கிறது!” - கோதாவில் இறங்கும் ராதாரவி
பிரீமியம் ஸ்டோரி
News
“முதல்வர் அறை சந்தைக்கடைபோல இருக்கிறது!” - கோதாவில் இறங்கும் ராதாரவி

“முதல்வர் அறை சந்தைக்கடைபோல இருக்கிறது!” - கோதாவில் இறங்கும் ராதாரவி

வருடைய ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால், தாய் வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார் நடிகர் ராதாரவி. அ.தி.மு.க-வில் இருந்த ராதாரவி, சில ஆண்டுகளாக அமைதியாகவே இருந்தார். தற்போது, திடீரென ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்துள்ளார். கட்சியில் சேர்ந்ததற்கு மறுநாளே, சென்னை தங்கசாலையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுவதற்காகப் புறப்பட்டுக் கொண்டிருந்த ராதாரவியைச் சந்தித்தோம்.

“முதல்வர் அறை சந்தைக்கடைபோல இருக்கிறது!” - கோதாவில் இறங்கும் ராதாரவி

‘‘இவ்வளவு நாள் அமைதியாக இருந்துவிட்டு ஏன் இந்தத் திடீர் முடிவு?’’

‘‘அம்மா இருந்தவரை அ.தி.மு.க-வில் இருந்தேன். அவர் இறந்தபோதுகூட, ‘அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்’  என்றுதான் கேட்டுக்கொண்டேன். இருந்தாலும் யாருமே ஒற்றுமையுடன் இல்லை.  ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்த சமயத்தில், ‘நமக்கு நல்ல ஜனாதிபதி இல்லை; நல்ல பிரதமர் இல்லை; நல்ல முதல்வர் இல்லை’ என்று ஒரு தமிழ்ப் பெண் வாட்ஸ்அப் மூலம் கருத்து வெளியிட்டிருந்தார். அதை யோசித்துப் பார்த்தபோது, ‘நமக்கு நல்ல தலைவர் இருக்கிறார்... அவர் ஸ்டாலின்’ என்பதை உணர்ந்தேன்.’’

‘‘பிரதமரும் சரி இல்லை என்கிறீர்களா?’’

‘‘இந்தியாவைச் சேர்ந்த எந்த மீனவர் பாதிக்கப்பட்டாலும் அவரை இந்திய மீனவர் எனச் சொல்கின்றனர். விவசாயி மற்ற மாநிலங்களில் தற்கொலை செய்துகொண்டால் அவரை இந்திய விவசாயி எனச் சொல்கிறார்கள். நம் ஊரில் இவர்கள் பாதிக்கப்படும்போது தமிழக மீனவர், தமிழக விவசாயி  என்றுதான் குறிப்பிடுகின்றனர். நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நாம் போராடுகிறோம். ஆனால், ‘ஒரு நாட்டுக்காக ஒரு மாநிலத்தைத் தியாகம் செய்யலாம்’ என பிஜே.பி-யின் ராஜ்ய சபா எம்.பி இல.கணேசன் சொல்கிறார். பி.ஜே.பி இங்கு வராது என்கிற துணிச்சல் அவருக்கு. ஆனால், தமிழ் மண்ணை ஹைட்ரோ கார்பனுக்காகத் தியாகம் செய்தால் மக்களின் கதி? இவ்வளவு பெரிய இந்தியாவில் ஏன் தமிழகத்தைக் குறிவைத்து இப்படியான திட்டங்களைக் கொண்டு வருகிறார்கள். கொண்டு வருவதும் இல்லாமல், ‘நாட்டுக்காக மாநிலம் நாசமா போகட்டும்’ என்கிறார் இல.கணேசன். அவர் பேசுவது பிரதமரின் குரல்தானே?

யானைகள் குட்டிபோடுவதற்காக, மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆறு இடங்களை தேர்வுசெய்து வைத்துள்ளன. அந்த இடங்களும், அவை நடக்கும் தடங்களும், அவற்றின் மூளையில் பதிவான விஷயங்கள். அந்த இடத்தை ஆக்கிரமித்து ஆசிரமம் அமைத்துள்ளதாக வழக்கு நடக்கிறது. இந்த நிலையில், ஒரு சாமியார் கூப்பிட்டதும் சிலை திறக்கப் பிரதமர் வந்தால் அந்த வழக்கு அதிகாரிகளாலும், நீதிமன்றத்தாலும் எப்படி அணுகப்படும்? சிலை திறக்க ஓடிவரும் பிரதமர், 10 லட்சம் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக் காகப் போராடியபோது என்ன செய்து கொண்டிருந்தார்?’’

“முதல்வர் அறை சந்தைக்கடைபோல இருக்கிறது!” - கோதாவில் இறங்கும் ராதாரவி

‘‘இப்போது உங்களை ஈர்த்ததாகச் சொல்லும் ஸ்டாலின், இதற்கு முன்பும் இதே தி.மு.க-வில்தானே இருந்தார்?’’

‘‘மக்கள் விரும்பும் தலைவராக அவர் உருவாகிவிட்டார். அந்த ‘கரிஷ்மா’ அவருக்கு வந்துவிட்டது. அவரைக் கடந்த சில ஆண்டுகளாகவே கவனித்து வருகிறேன். அவர் எப்போதோ ‘நம்பர் ஒன்’னாக உருவாகிவிட்டாலும், அதைத் தாண்டி மிகவும் பொறுப்புமிக்க தலைவராகிவிட்டார். ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டிருந்தபோது மருத்துவமனை வாசலுக்கு வந்து நின்றார். ஒரு உண்மையான எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டார். காலம் முழுவதும் எதிர்த்த ஒரு தலைவருக்கு, இதயபூர்வமான இறுதி அஞ்சலியை அவர் செலுத்தினார். அதேபோல, தொடர்ந்து நாகரிக அரசியலை முன்வைக்கிறார். அ.தி.மு.க-வில் இருக்கும் நடிகர் விஜயகுமாரின் மனைவி மஞ்சுளா மறைவுக்கும், ‘நாம் தமிழர் கட்சி’யில் இருந்த இயக்குநர் மணிவண்ணன் மறைவுக்கும் வந்தவர் ஸ்டாலின். தன் பிறந்தநாள் என்றுகூட பார்க்காமல் என் தாயார் மறைவுக்கு வந்த பெருந்தன்மை அவருக்கு உண்டு.’’

‘‘ஏன் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடியும் உங்களுக்கு ஒத்துவரவில்லை?’’

‘‘ஓ.பன்னீர்செல்வம் பொறுமையானவர் தான். ஆனால், அளவுக்கு அதிகமான பொறுமையைக் காத்துவிட்டார். அவரின் பொறுமை, அவர் மீது கைவைக்கும் அளவுக்குக் கொண்டுவந்துவிட்டது. பேச வேண்டிய நேரத்தில் பேசாமல், இப்போது அவர் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை. இப்போதைய முதல்வர் எடப்பாடியின் அறையை ஊடகங்களில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஏதோ சந்தைக்கடைபோல இருக்கிறது. அவரைச் சுற்றி எந்த நேரமும் பத்து பேர் நின்றுகொண்டே இருக்கிறார்கள். முதல்வர் போகிறார். போலீஸ்கூட அலெர்ட் பொஸிஷனுக்கு வரமாட்டேன் என்கிறார்கள். இன்னொரு பக்கம் கட்சித் தலைவர் சிறையில் இருக்கிறார்.’’

‘‘நடிகர் சங்கத் தேர்தல் தோல்விக்கும், நீங்கள் கட்சி மாறியதற்கும் சம்பந்தம் உள்ளதா?’’

‘‘காசு வாங்கிட்டு. கட்சி மாறிட்டாரு எனச் சொல்வார்கள். ‘ராதாரவி தி.மு.க-வுக்குத் தாவினார்’னு செய்தி போடுகிறார்கள். உண்மை எதுவென்று என் மனசுக்குத் தெரியும் என்பதால், இதைப் பற்றியெல்லாம் கொஞ்சம்கூடக் கவலைப்படுவது இல்லை.’’

- வரவனை செந்தில்
படம்: சு.குமரேசன்