
மிஸ்டர் கழுகு: அரசர் பதவிக்கு ஆபத்து!
கை நிறைய புத்தகங்களோடு திடுமென வந்து நின்றார் கழுகார். ‘‘இந்த ஆண்டு பிறந்த நாளில் தனக்குப் புத்தகங்கள் பரிசளிக்குமாறுச் சொல்லிவிட்டார் ஸ்டாலின். அதனால், அறிவாலயத்தைச் சுற்றியிருக்கும் புத்தகக் கடைகளில் நல்ல வியாபாரம்’’ என்றார்.

‘‘பிறந்த நாள் விழாவில் புதிய முகங்கள் தென்பட்டனவே?’’ என்றோம்.
‘‘பிறந்த நாள்அன்று காலையில் தனது வீட்டில் கேக் வெட்டி, அப்பாவிடம் ஆசீர்வாதம் வாங்க கோபாலபுரம் போனார் ஸ்டாலின். ஆனால், கருணாநிதி ரெடி ஆகாமல் இருந்ததால், அங்கிருந்து நேராக அண்ணா அறிவாலயம் வந்துவிட்டார். மதியம்தான் மீண்டும் அவர் கோபாலபுரம் போய் அப்பாவைப் பார்த்து, அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டார்.
கலைஞர் அரங்கத்தில்தான் கட்சியினரை ஸ்டாலின் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் வரிசையாக வாழ்த்துத் தெரிவிக்க, கையில் புத்தகங்களுடன் நின்றதைப் பார்க்க முடிந்தது. ஒரு அறை முழுவதும் நிரம்பி வழியும் அளவுக்குப் புத்தகங்கள் சேர்ந்துவிட்டன. இளைஞர் பட்டாளம் அதிகமாக இருந்தது. இன்று கட்சியில் கோலோச்சும் முக்கியப் புள்ளிகளின் வாரிசுகள் நிறைய வந்திருந்தார்கள். இதைப் பார்த்த அடிமட்ட தொண்டர்கள்தான் பொங்கிவிட்டார்கள். ‘வாரிசு அரசியல் நம்ம கட்சியைப்போல வேறு எதிலும் இல்லையப்பா’ என்று புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். பொன்முடியின் மகன் கௌதம் சிகாமணி, எ.வ.வேலு மகன் கம்பன் வேலு, டி.ஆர்.பி.ராஜா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரின் தலைகள்தான் பிரதானமாக இருந்தன. வரிசைகட்டி நின்ற தொண்டர் அணியினர், கட்சிக்காரர்களை மேடையில் இருந்து நெட்டித் தள்ளிவிட்டதால், கடுப்பாகிவிட்டார்கள் பலர்.’’
‘‘அப்படியா?’’
‘‘இந்த முறை டெல்லி தலைவர்களும் ஸ்டாலினை வாழ்த்தினர். மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் எனப் பலரும், திருச்சி சிவாவின் போன் லைனுக்கு வந்து ஸ்டாலினிடம் வாழ்த்துச் சொன்னார்கள். இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டவர்கள் நேரடியாக வந்து வாழ்த்துத் தெரிவித்தார்கள்.’’
‘‘தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வரவில்லையா?’’

‘‘வரவில்லை. திருநாவுக்கரசர் அன்று ஊரில் இல்லை என்கிறார்கள். போனில் பேசியிருக்கிறார். அவரை மாற்ற வேண்டும் என தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பலரும் பொங்கிவிட்டார்கள். ‘நம்மோடு கூட்டணி வெச்சுகிட்டு, விசுவாசத்தை நடராசனுக்குக் காட்டுறார்’ என்று பலரும் வெளிப்படையாகப் பேசினர். உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேண்டாம் எனப் பலரும் சொன்னார்கள். தென் மாவட்டத்தைச் சேர்ந்த செயலாளர் ஒருவர், ‘காங்கிரஸ் கூட்டணி இருந்தா, நாம் கூடுதலா கொஞ்சம் சீட்டைப் பிடிக்கலாம்’ என இழுத்துள்ளார். உடனே, ‘உங்க மாவட்டத்தில் நீங்க அந்த நிலையில்தான் கட்சியை வெச்சுருக்கீங்க. எங்களுக்கு காங்கிரஸ் கூட்டணியே தேவையில்லை’ எனப் பல மாவட்டச் செயலாளர்கள் கோரஸாக எதிர்ப்பு தெரிவித்தனர்.’’
‘‘ஸ்டாலின் ரியாக்ஷன் என்ன?”
‘‘கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும், இப்ப தேர்தல் நடந்தாகூட நாம ஜெயித்துவிடுவோம். மக்கள் இப்ப நம்ம பக்கம்தான் இருக்காங்க. இப்போது உள்ள நிலையே தொடரட்டும். கூட்டணி வேண்டாம்னு நாம சொல்ல வேண்டாம். ஆனா, நாம் கொடுக்குற இடங்களை அவங்க வாங்கிக்கணும்னு சொல்லிடுவோம். திருநாவுக்கரசர் விவகாரத்தை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றாராம்...’’
‘‘திருநாவுக்கரசர் என்ன நினைக்கிறார்?’’
‘‘அவர் கொஞ்சம் பதற்றத்தில்தான் இருக்கிறார். இவரைப் பற்றி டெல்லிக்கு வரிசையாகப் புகார்கள் பறக்கிறதாம். போதாக்குறைக்கு ‘காங்கிரஸ் தலைமையை மாற்ற வேண்டும்’ என்று தி.மு.க-வும் கிளம்பிவிட்டது. ஸ்டாலின் டெல்லி சென்று சோனியாவையும் ராகுல் காந்தியையும் சந்தித்தபோது, தமிழக காங்கிரஸ் நிலை பற்றி வருத்தப்பட்டுவிட்டுதான் வந்தாராம். அப்போது ராகுல் காந்திதான், ‘தமிழகத்தில் நாங்கள் தி.மு.க-வுடன்தான் கூட்டணியைத் தொடருவோம்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருநாவுக்கரசரையும் டெல்லியில் இருந்து எச்சரித்துள்ளார்களாம். திருநாவுக்கரசருக்கு எதிராக ப.சிதம்பரமும் புகார் தெரிவித்துள்ளார். ‘நாம் தி.மு.க-வுடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டில் இருக்கும்போது. எதற்காக இவர் அ.தி.மு.க-வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்’ என்று டெல்லி தலைமையிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார் சிதம்பரம்.’’
‘‘ம்!’’
‘‘திருநாவுக்கரசருக்கு எதிராக ப.சி திரும்பி இருப்பது இளங்கோவனுக்கு சந்தோஷத்தைத் தந்துவிட்டது. சிதம்பரத்துக்கு எதிராக இருந்த இளங்கோவன், இப்போது சிதம்பரத்தை நோக்கி வருகிறாராம். சிதம்பரத்துக்கு நெருக்கமானவர் களிடம் போன் செய்து, ‘எப்படி இருக்கிறார் உங்கள் தலைவர்?’ என்று விசாரிக்கிறாராம். இந்த தகவலை அவர்கள் சிதம்பரத்திடம் சொன்னபோது சிரித்துக்கொண்டாராம். டெல்லியில் இருந்து இரண்டு தினங்களுக்கு முன், இளங்கோவனுக்கு முக்கிய பிரமுகர் ஒருவர் போன் செய்துள்ளார். ‘திருநாவுக்கரசர் மீது சோனியா மேடம் கொஞ்சம் கோபத்தில் இருக்காங்க. எதுவும் நடக்கலாம்’ என அவர் தகவல் சொன்னாராம். இனி அவர் தலைவராகத் தொடர மாட்டார் என்ற கணிப்பில்தான், ‘திருநாவுக்கரசர் யார் என்றே தெரியாது’ என ஸ்டாலின் பிறந்த நாள் அன்று அறிவாலயத்தில் சொன்னார் இளங்கோவன்.’’
‘‘அ.தி.மு.க-வில் என்ன நடக்கிறது?” எனக் கழுகாரின் கவனத்தைத் திருப்பினோம்.
‘‘ ‘அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்தது செல்லாது’ என்று ஓ.பன்னீர்செல்வம் அணி, தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்துள்ள மனு ரொம்பவும் ஸ்ட்ராங்காக இருக்கிறதாம். இவர்கள் வைத்துள்ள வாதங்களைப் படித்துப் பார்த்து டி.டி.வி.தினகரன் அதிர்ச்சி ஆகிவிட்டாராம். இதற்கு பதில் மனுவை யார் பெயரில் தாக்கல் செய்யலாம் என்று நீண்ட விவாதம் நடந்துள்ளது. தினகரனைக் குளிரவைக்க வேண்டும் என்று அவர் பெயரில் பதில் அனுப்பி இருக்கிறார்கள். ‘சசிகலா நியமனமே செல்லாது என்று புகார் கொடுத்துள்ளார்கள். அதற்கு, சசிகலா நியமித்த ஆள் மூலம் பதில் அனுப்புவது சரியாக இருக்காது’ என்று சிலர் சொல்லி இருக்கிறார்கள். ஆனாலும், அதை யாரும் மதிக்கவில்லை. இப்போது, ‘அந்த மனுவோடு கூடுதலாக ஒரு மனு போடலாமா’ என்றும் திடீர் ஆலோசனையில் இறங்கி இருக்கிறார்களாம். முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை தலைமை நிலையச் செயலாளராக ஜெயலலிதாதான் நியமித்தார். எனவே, அவர் பெயரில் ஒரு மனுவை அனுப்பத் தயாராகிறார்கள்.’’
‘‘ஓ.பி.எஸ் தரப்பு என்ன சொல்கிறது?’’
‘‘அவர்கள் ‘தங்களுக்குத்தான் வெற்றி’ என்று சொல்லி வருகிறார்கள். ‘ஜெயலலிதா நியமித்த அவைத்தலைவர் மதுசூதனன், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் நம் பக்கம் இருக்கிறார்கள். சசிகலா நியமனம் செல்லாது என்று நிச்சயமாக தேர்தல் கமிஷன் சொல்லும். அப்போது, சசிகலாவின் அனைத்து நியமனங்களும் செல்லாமல் ஆகிவிடும். தினகரன் நியமனம் ஏற்கனவே கட்சியின் சட்டவிதிகளின்படி செல்லாது. ஏனென்றால், கட்சி விதிப்படி குறைந்த பட்சம் ஐந்து வருடங்கள் கட்சியில் இருப்பவர்கள்தான் பொறுப்புக்கு வர முடியும். எனவே, தினகரன், சசிகலா நியமனங்கள் எல்லாம் செல்லாமல் ஆகிவிடும். அதன் பின்னர், சசிகலா பக்கம் இருக்கும் நிர்வாகிகள் நம் முகாமுக்கு ஓடிவருவார்கள்’ என்று ஓ.பி.எஸ் அணி கணக்குப் போடுகிறது. ‘அதன் பின்னர் பொதுக்குழுவைக் கூட்டுவோம். கட்சியும் ஆட்சியும் நம் கைக்கு வரும்’ என்று தன்னைப் பார்க்க வருபவர்களிடம் ஓ.பி.எஸ் நம்பிக்கையோடு சொல்லி வருகிறாராம்.’’

‘‘உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சசிகலா தரப்பு, சீராய்வு மனுவை எப்போது தாக்கல் செய்வார்களாம்?’’
‘முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க வழக்கறிஞர் அணியின் முன்னாள் செயலாளருமான ஒரு வி.ஐ.பி., ‘எனக்கு டெல்லியில் செல்வாக்கு உள்ள ஒரு வி.ஐ.பி-யைத் தெரியும். சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரும் நானும் ஒன்றாகத் தொழில் செய்தோம். நான் சொன்னால் அவர் கேட்பார்’ என்று தினகரனிடம் நம்பிக்கை கொடுத்து இருக்கிறாராம். ‘மூன்று மாதங்கள் கழித்து சீராய்வு மனு போடலாம்’ என்று அவர் தரப்பில் சொல்லி இருக்கிறார்கள். அதற்காக, தீர்ப்பை வரிக்கு வரி படித்து பாயின்ட்களை தேடிக்கொண்டு இருக்கிறார்களாம்.’’
‘‘வழக்கை டீல் செய்த முறை சரியில்லை என்று சசிகலா வருத்தப்பட்டாராமே?’’
‘‘ஆமாம். அவருக்கு வருத்தம் இருக்கிறது என்பது உண்மைதானாம். தன்னைப் பார்க்க வந்தவர்களிடம் அதுபற்றிப் பேசி இருக்கிறார் சசிகலா. அதற்கு சசிகலா தரப்பு வக்கீல்கள், ‘இந்த வழக்கை போடும்போது கவனமாக எதிர்கொண்டிருந்தால் அப்போதே உடைத்து இருக்கலாம். 1996-ம் ஆண்டுகளில் சும்மா இருந்துவிட்டார்கள். பின்னர், அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தபோதும் உஷாராக இல்லாமல் இருந்துவிட்டார்கள். எல்லாம் முடிந்து தீர்ப்பு என்ற நிலையில்தான் இந்த வழக்கு எங்களிடம் வந்ததது. நாங்கள் முடிந்த அளவுக்கு முயற்சி செய்து இருக்கிறோம்’ என்று புலம்புகிறார்களாம். இவர்களுக்கும், தினகரனின் ஆலோசகராக இருக்கும் முன்னாள் அமைச்சருக்கும் இப்போது மோதல் ஆரம்பித்துள்ளதாம்.’’
‘‘தலைமைச் செயலகத் தகவல் ஏதேனும் உண்டா?”
‘‘பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பே அமைச்சரவையில் சில மாற்றங்களைச் செய்யலாம் என்று யோசனை இருக்கிறதாம். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கும் நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறையைப் பிரித்துக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அதுபோல, பள்ளிக்கல்வித் துறையில் இருந்து இளைஞர் நலன் துறையைப் பிரிக்கவும், நிதி அமைச்சரிடம் இருந்து மீன் வளத்துறையை பிரிக்கவும் யோசனை இருக்கிறதாம். யார் யாரை அமைச்சர்களாக நியமிக்கலாம் என்று பயோடேட்டா ஆய்வு நடக்கிறதாம். அமைச்சரவை லிஸ்ட்டில் இடம் பிடித்துவிட வேண்டும் என்று தினகரனை வளைக்க, ரகசிய மூவ்களை சில எம்.எல்.ஏ-க்கள் தொடங்கி இருக்கிறார்கள்” என்ற கழுகார், சட்டென பறந்தார்.
படங்கள்: ரமேஷ் கந்தசாமி, கே.ஜெரோம்
``சிறை சௌகரியமா இருக்காம்மா?’’
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை, இதுவரை உறவினர்கள் மட்டுமே சந்தித்து வந்த நிலையில், கடந்த 28-ம் தேதி தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு மற்றும் காமராஜ் வந்து பார்த்தனர். சைரன் வைத்த அரசு வாகனங்களில் சிறைக்குச் சென்றால் சர்ச்சை ஆகிவிடும் என்பதால், கர்நாடக அ.தி.மு.க மாநிலச் செயலாளர் புகழேந்தியின் காரில் வந்தார்கள். அவர்கள் வாங்கி வந்த பிஸ்கட், முந்திரி, திராட்சை, பிஸ்தா, பாதாம் போன்ற பொருட்களை சிறைக்காவலரிடம் பரிசோதனைக்குக் கொடுத்துவிட்டு சிறைக்குள் இருக்கும் பார்வையாளர்கள் அறையில் சென்று அமர்ந்தார்கள். அதையடுத்து சசிகலாவும், இளவரசியும் அங்கு வந்தனர்.

‘‘வாக்கெடுப்பில் தி.மு.க பெரிய அராஜகம் செய்துவிட்டது. அதை நானும் டி.வி-யில் பார்த்தேன். நீங்கள் அமைதியாக இருந்து நினைத்த காரியத்தை சாதித்துவிட்டீர்கள். அதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். அதை முதல்வர் பழனிசாமியிடமும் சொல்லுங்கள்” என்றாராம் சசிகலா. சசிகலாவை கட்சியின் பொதுச் செயலாளராக நியமித்தது பற்றி விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ் பற்றி பேச்சு வந்தது. ‘‘நான் பொதுச் செயலாளர் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் இன்னொரு பெரிய குழப்பம் வரும். அதிலிருந்து மீண்டுவருவது சிரமம்’’ என்றாராம் சசிகலா. நான்கு அமைச்சர்களும், ‘‘அப்படியெல்லாம் எதுவும் நடக்காதும்மா. நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் தைரியமாக இருங்கள்” என்றார்களாம்.
‘‘சிறைக்குள் சௌகரியமெல்லாம் பரவாயில்லையாம்மா?’’ என்று செங்கோட்டையன் கேட்க, ‘‘என்ன தேவை என்றாலும் செய்துதருவதாக சிறை அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால், பெரும்பாலும் நான் எதையும் கேட்பதில்லை’’ என்று சொன்ன சசிகலா, ‘‘மத்திய அரசை எக்காரணம் கொண்டும் எதிர்க்க வேண்டாம்” என்று திரும்பத் திரும்ப சொல்லி அனுப்பினாராம்.

