Published:Updated:

பாலியல் உறவு இணக்க வயது 16 ஆக குறைப்பு... விளைவுகள் எப்படி இருக்கும்?

Vikatan Correspondent
பாலியல் உறவு இணக்க வயது 16 ஆக குறைப்பு... விளைவுகள் எப்படி இருக்கும்?
பாலியல் உறவு இணக்க வயது 16 ஆக குறைப்பு... விளைவுகள் எப்படி இருக்கும்?

- சரா

பாலியல் உறவு இணக்க வயது 16 ஆக குறைப்பு... விளைவுகள் எப்படி இருக்கும்?

பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மிகக் கடுமையான தண்டனை கிடைக்க வகை செய்யும் இந்த மசோதா, பாலியல் பலாத்கார குற்றத்துக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வழிவகுக்கிறது. இல்லையேல், குற்றவாளி தனது வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே இருக்கும் வகையில் தண்டனையை நீடிக்க முடியும்.

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் மரணம் அடைந்தாலோ அல்லது பாதிக்கப்பட்ட பெண் நிரந்தரமாக பாதிப்புள்ளாகும் நிலைக்கு தள்ளப்பட்டாலோ குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல வன்கொடுமைகளுக்கு தண்டனைகளைக் கடுமையாக்கும் அதேவேளையில், இந்த மசோதாவில் உள்ள ஒரு முக்கிய அம்சம் நாடு தழுவிய அளவில் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பி இருக்கிறது.

ஆண் - பெண் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் நடைபெறும் பாலியல் உறவுக்கான வயது வரம்பை 18-ல் இருந்து 16 ஆக குறைக்கும் அம்சம்தான் அது. இந்த அம்சம் மூலம், பொய்யான பாலியல் பலாத்காரப் புகார்களை தடுக்க முடியும் என்பதே வாதமாக முன்வைக்கப்பட்டது.

ஆனால், இந்த அம்சத்தால் ஏற்படும் பின்விளைவுகள் பெரும் ஆபத்துக்கு உரியது என்று சமூக ஆர்வலர்கள் பலரும் எச்சரிக்கின்றனர்.

பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத் திருத்த மசோதாவில், சட்டபூர்வமாக பாலியல் உறவுக்கு இணக்கம் தெரிவிக்கும் குறைந்தபட்ச வயதை 16-ஆக குறைத்துள்ளது பற்றி கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்த கருத்துகள்:

’’டெல்லி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய 17 வயது சிறுவனுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அவசரகதியில் இப்படி ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டு உள்ளது.

குற்றவாளிகளைத் தண்டிப்பதற்காக மட்டுமே கருத்தில்கொண்டுள்ளார்களே தவிர, சமூகத்தில் இதனால் ஏற்படும் கடுமையான எதிர்விளைவுகளை யோசிக்கவில்லை.

பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்கான அடித்தளத்தை பள்ளிகளில் இருந்தே முயற்சிக்க வேண்டும். கோ - எஜுகேஷனாக இருந்தாலும்கூட மாணவ - மாணவிகள் தனித்தனியேதான்

பாலியல் உறவு இணக்க வயது 16 ஆக குறைப்பு... விளைவுகள் எப்படி இருக்கும்?

உட்காரவைக்கப்படுகிறார்கள். அடிப்படையில் இதுவே தவறு. ஆண் - பெண் இருதரப்பையும் கலந்து உட்காரவைக்க வேண்டும். அப்போது, ஒரு மாணவன் தன் அருகில் அமர்ந்திருக்கும் மாணவியைத் தன்னைப் போன்ற மனுஷிதான் என்றும், ஒரு மாணவி தன்னருகில் அமர்ந்துள்ள மாணவனைத் தன்னைப்போன்ற மனுஷன்தான் என்றும் உணர்ந்து எவ்வித சஞ்சலமும் இன்றி பழகுவர். குழந்தைகள் வளரும்போதே தங்களுக்குள் வித்தியாசமில்லை என்ற மனப்போக்குடன் வளரும் சூழலை ஏற்படுத்த வேண்டும்.

பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளுக்கென அமைப்புகள் பல உருவாக்கப்பட வேண்டும். அந்த அமைப்புகளில் மாணவிகள் குழுவாக இயங்கவும் பழகவும் வாய்ப்பு இருக்கும். அப்போது, தன்னை ஒருவர் பின்தொடர்கிறார், பாலியல் ரீதியில் தொல்லைகள் தருகிறார் என்றால், அதுபற்றி மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வழி ஏற்படும். இதனால், ஆரம்ப கட்டத்திலேயே வன்கொடுமைகளைத் தடுத்துவிடலாம். ஆசிட் வீச்சு போன்ற சம்பவங்களையும் தவிர்த்திட முடியும்.

பாலியல் வன்கொடுமைகள் பற்றிய புரிதல்களை ஏற்படுத்துவது உள்ளிட்ட சமூக மாற்றங்களுக்கான நடவடிக்கைகளைச் செய்யாமல்,  சட்டபூர்வமாக பாலியல் உறவுக்கு இணக்கம் தெரிவிக்கும் குறைந்தபட்ச வயதை 16-ஆக குறைத்துள்ளது தவறான அணுகுமுறை.

சர்வதேச அளவில் குழந்தைகளுக்கான வயது வரம்பை 18 ஆக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. 18 வயதுக்கு உட்பட்டவர்களையே குழந்தையாகவே கருத வேண்டும்.

பாலியல் உறவு இணக்க வயது 16 ஆக குறைப்பு... விளைவுகள் எப்படி இருக்கும்?

இந்த நிலையில், இந்தச் சட்டத் திருத்தத்தில் குழந்தைகளுக்கான வயதை 16-க்குக் கீழாகக் குறைப்பது எந்த விதத்திலும் தீர்வைத் தராது. நம் இந்தியச் சூழலில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் அவர்களின் வயதுக்கு உரிய மனப்பக்குவத்தைப் பெறாத சமூக நிலையில்தான் இருக்கிறார்கள்.

உண்மை நிலைமை இப்படி இருக்க, ஓர் ஆண் அல்லது பெண்ணால் தன்னுடைய 16-வது வயதில் செக்ஸ் பற்றிய தகவல் அறிவுதான் இருக்குமே தவிர, அவர்களுக்கு விளைவுகள் குறித்த புரிதல்கள் இருக்காது என்பது தெளிவு.

தங்களை மீறி தப்புகள் செய்யும் அத்தகையச் சிறுவர்கள் பாதைதவறிப் போவதற்கான பாதகச் சூழலைத்தான் ஏற்படுத்துமே அன்றி, எந்த விதத்திலும் அவர்களை நெறிப்படுத்தாது.

சினிமாவில் அடல்ஸ் ஒன்லி என்பதற்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் திரைப்படம் என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்ட திருத்த மசோதாவோ 16 வயது நிரம்பியவரை நல்லது - கெட்டதைப் பகுத்துணரும் வயதுவந்தோராகச் சொல்கிறது. அடுத்தகட்டமாக, அடல்ஸ் ஒன்லிக்கான வயது வரம்பில் இதைப்போல் மாற்றம் கொண்டுவந்தால் என்ன ஆகும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

இதை இன்னொரு கன்னோட்டத்திலும் பார்க்கலாம். நம் நாட்டில் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இலவச கல்வியைப் பெறுவதற்கு உரிய வயது வரம்பையும் குறைக்கும் அபாயத்துக்கு இந்தச் சட்டத் திருத்தம் வித்திடக்கூடும் என்ற அச்சம் ஏற்படுகிறது.

சிவகாசி பட்டாசு ஆலை போன்ற இடங்களில் இனி 16 வயது நிரம்பியவர்கள் வேலை செய்வதற்கான சட்டப்பூர்வ அனுமதி கிடைத்திடுமோ என்ற பயமும் ஏற்படாமல் இல்லை.

இவை அனைத்தையும் கருத்தில்கொண்டு, சட்டபூர்வமாக பாலியல் உறவுக்கு இணக்கம் தெரிவிக்கும் குறைந்தபட்ச வயதை 16-ஆக குறைக்கும் அம்சத்தைக் கைவிடப்பட வேண்டும்” என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.