Published:Updated:

முடங்கிய முதல்வர் அலுவலகம்... பந்தாடப்படும் அதிகாரிகள்!

முடங்கிய முதல்வர் அலுவலகம்... பந்தாடப்படும் அதிகாரிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
முடங்கிய முதல்வர் அலுவலகம்... பந்தாடப்படும் அதிகாரிகள்!

முடங்கிய முதல்வர் அலுவலகம்... பந்தாடப்படும் அதிகாரிகள்!

மிழக அரசியல் குழப்பங்கள், உயர் அதிகாரிகள் மட்டத்திலும் பல குளறுபடிகளை உருவாக்கியுள்ளன.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவரின் செயலகம் படு பிஸியாக இருக்கும். ஓய்வுக்குப் பிறகு பணி நீட்டிப்பு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஷீலா பாலகிருஷ்ணன், வெங்கடரமணன், முதல்வரின் தனிப்பிரிவு ஸ்பெஷல் ஆபீஸர் சாந்தா ஷீலா நாயர் ஆகியோர் முதல்வர் அலுவலகத்தில் இருந்தபடி நிர்வாகத்தைக் கவனித்து வந்தனர். அனைத்துக்கும் மகுடமாக தலைமைச் செயலாளராக ராம மோகன ராவ் இருந்தார். முதல்வரின் சந்திப்புகள் மற்றும் புரோட்டோகால் விவகாரங்களை முதல்வரின் செயலாளர்களில் ஒருவரான ராமலிங்கம் ஐ.ஏ.எஸ்., கவனித்து வந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானபோதும் இதே டீம் நீடித்தது. ராம மோகன ராவ் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு அவர், வீட்டில் உட்கார வைக்கப்பட்டு விட்டார்.

முடங்கிய முதல்வர் அலுவலகம்... பந்தாடப்படும் அதிகாரிகள்!

சசிகலாவை முதல்வராக்குவதற்கான முயற்சிகளைத் தொடங்கியதும், அரசின் ஆலோசகரான ஷீலா பாலகிருஷ்ணன், முதல்வரின் செயலாளரான வெங்கடரமணன், சாந்தா ஷீலா நாயர் ஆகிய மூவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுப் போனார்கள். ராமலிங்கமோ, மூன்று மாதம் லீவில் போய்விட்டார். ‘‘இந்த நால்வரும் சுய விருப்பத்தின் பேரில் போகவில்லை. சசிகலா தரப்பினர் கொடுத்த நெருக்கடியால் போனார்கள்’’ என்று தலைமைச் செயலக அதிகாரிகள் சொல்கிறார்கள். இந்த நால்வரை அவசரம் அவசரமாக வெளியே அனுப்பியதே, சசிகலா தரப்பினருக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளை நியமிக்கத்தான். ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பால் சசிகலா பெங்களூரு சிறைச்சாலைக்குப் போய்விட்டார். அதனால், சசிகலா அந்த அதிகாரிகளை நியமிக்க முடியாமல் போனது. எனவே, தற்போதுள்ள மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் கொண்டே அனைத்து அரசுத் துறைகளையும் முதல்வரின் செயலகம் இயக்கி வருகிறது. முதல்வரின் இரண்டாம் செயலாளர் ஷிவ்தாஸ் மீனாவிடம் 12 துறைகள் இருக்கின்றன. முதல்வரின் மூன்றாம் செயலாளர் டாக்டர் விஜயகுமாரிடம் 23 துறைகள் இருக்கின்றன. முதல்வரின் கூடுதல் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரனிடம் மூன்று துறைகளுடன் சில கூடுதல் பொறுப்பு களும் உள்ளன. இதுதான் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் அலுவலகம்.

ராம மோகன ராவ் என்ன ஆனார்?


அதிகாரிகள் மட்டத்தில் மர்மமான பல விஷயங்கள் நிகழ்கின்றன. ‘‘ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் அலுவலகம், வீடு ஆகிய இடங்களில் வருமானவரித் துறை ரெய்டு நடத்தியது. அதன் எதிரொலியாக, அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப் பட்டார். ரெய்டுக்குப் பிறகு, அப்போதைய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் வருமானவரித் துறையையும் விமர்சித்து காட்டமான பேட்டி கொடுத்தார் ராவ். பிறகு, அந்தப் பேட்டிக்கு வருத்தம் தெரிவித்தது வேறு விஷயம்! ராவ் மீதான விசாரணை முடிவடையவில்லை. இவர் ஓய்வுபெற இன்னும் ஏழு மாதங்கள் உள்ளன. ஆனால், இவர் மீது நடவடிக்கை எடுக்கும் விஷயத்தில் வருமானவரித் துறை அடக்கியே வாசிக்கிறது. மாநில அரசும் ஏனோ மௌனம் காக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
முடங்கிய முதல்வர் அலுவலகம்... பந்தாடப்படும் அதிகாரிகள்!

இது ஒருபுறம் இருக்க, ஜெ. முதல்வராக இருந்தபோது, கடந்த ஆகஸ்ட் மாதம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஞானதேசிகனும் அதுல் ஆனந்தும் பல்வேறு காரணங்களுக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனுக்கு வேண்டப்பட்டவர்கள். பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த காலகட்டத்தில், அவரது அணியில் நத்தம் விசுவநாதன் இணைந்தார். மின்னல் வேகத்தில், அந்த இரு ஐ.ஏ.எஸ்-களின் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இவர்கள் செய்த தவறு என்ன? அதெல்லாம் என்ன ஆனது? எந்தப் பின்னணியில் மீண்டும் சேர்க்கப்பட்டார்கள் என்பது சஸ்பென்ஸாக இருக்கிறது’’ என்கிறார் தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர்.

அபூர்வ வர்மா அவுட், நிரஞ்சன் மார்டி இன்?

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, உள்துறைச் செயலாளர் பதவியில் இருந்தவர் அபூர்வ வர்மா. அவரை மாற்றிவிட்டு நிரஞ்சன் மார்டியை கொண்டு வந்திருக்கிறார்கள். இவர் ஏற்கெனவே உள்துறையில் பணியாற்றியவர். இவரைக் கொண்டு வந்த பின்னணியில் சில போலீஸ் அதிகாரிகள் இருப்பதாகச் சொல்லப் படுகிறது. ‘‘இரண்டாக அ.தி.மு.க பிளவுபட்டு இருக்கும் நிலையில், சசிகலா தரப்பினர் முன்னிறுத்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சித் தேர்தலை மே மாதத்துக்குள் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதற்கு வசதியாக போலீஸ் உயர் பதவிகளில் தங்களுக்கு விசுவாசமானவர்களை நியமிக்க சசிகலா தரப்பு நினைக்கிறது. அதைச் செய்யவேண்டுமானால், அபூர்வ வர்மா சரிபட்டு வரமாட்டார். எனவே, அவரை மாற்றிவிட்டு, அந்த இடத்தில் நிரஞ்சன் மார்டியை உட்காரவைத்துள்ளனர்” என்று சொல்கிறார்கள். ‘‘நிரஞ்சன் மார்டி நியமனத்தை விடுங்கள்! அவர் இனி நியமிக்கப் போகும் உயர் போலீஸ் அதிகாரிகளை உற்றுக் கவனியுங்கள். தற்போது டம்மி பதவியில் இருக்கும் இரண்டு ஐ.பி.எஸ் அதிகாரிகள், விரைவில் அதிகாரமுள்ள பதவிகளுக்கு வரப் போகிறார்கள். எதை வேண்டுமானாலும் செய்து தருகிறோம் என்று போயஸ் வட்டாரத்துக்கு அவர்கள் உறுதிமொழி கொடுத்திருக்கிறார்கள்’’ என்று கோட்டை வட்டாரம் இப்போதே அபாயச்சங்கு ஊதுகிறது. ‘சட்டமன்றத்தில் சசிகலா அணி வெற்றிபெறக் காரணமாக இருந்தது நான். எனக்குக் காவல்துறையின் தலைமைப் பதவியைத் தரவேண்டும்’ என்று அடித்துக் கேட்கிறாராம் ஒரு அதிகாரி. சில மாதங்களில் ஓய்வு பெற இருக்கிற இவரை அந்தத் தலைமைப் பதவியில் உட்கார வைத்தால், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பணி நீட்டிப்பு கிடைக்கும். இதை எதிர்பார்த்து அவர் காய் நகர்த்தி வருகிறாராம். இவருக்கு எதிராக மூன்று அதிகாரிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

தலைமைச் செயலக தகிடுதத்தம்

ஆளும்கட்சி பிரிந்து கிடப்பதால், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தலைமைச் செயலகத்தில் ஒரு சில அதிகாரிகள் பாலிடிக்ஸ் செய்கிறார்களாம். உதாரணத்துக்கு, ஒரு சம்பவம்... 600 ஊழியர்களுக்குப் பல ஆண்டுகளாக சம்பள விகிதத்தில் குளறுபடி நிலவியது. தலைமைச் செயலகத்தின் நிதித்துறையில் பணிபுரியும் ஜூனியர்களுக்கு இணையான ஊதிய விகிதங்களை ஓரலகுத் துறையில் பணிபுரியும் சீனியர்களுக்கு அமல்படுத்தினால் இது சரியாகும். பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தினர், அவரின் கவனத்துக்கு இதைக் கொண்டுபோனார்கள். கை மேல் பலன் கிடைத்தது. ஆனால், அது இன்னும் செயல்வடிவம் பெற்று, அதிகாரிகளுக்கு பணப் பலன் கிடைக்கவில்லை. தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தில் நடந்த தேர்தல் பகையை மனதில் வைத்துள்ள சிலர், ஜெயித்த அணி இந்த விஷயத்தில் பெயர் வாங்கிவிடக்கூடாது என்கிற எண்ணத்தில், இந்த ஃபைலை ரவுண்ட்ஸில் விட்டுவிட்டார்களாம். இப்படி அரசுத் துறைகளில் சில முக்கிய ஃபைல்களை கிடப்பில் போட்டுவிட்டு, தி.மு.க., பன்னீர்செல்வம், எடப்பாடி பெயர்களைச் சொல்லி, சதுரங்க ஆட்டம் ஆட ஆரம்பித்திருக் கிறார்கள் சில அதிகாரிகள்.

ஆட்சியில் சரியான தலை இல்லை என்பது மட்டும் தெரிகிறது!

- கனிஷ்கா

மூன்று பேர்... 38 துறைகள்!

முடங்கிய முதல்வர் அலுவலகம்... பந்தாடப்படும் அதிகாரிகள்!

தமிழக முதல்வரின் அலுவலகம், கடந்த 23.2.2017 அன்று வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, தற்போது முதல்வரின் செயலகத்தில் பணிபுரியும் மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கவனிக்கும் அரசுத்துறைகளின் விவரங்கள்...

ஷிவ்தாஸ் மீனா,
முதல்வரின் இரண்டாம் செயலாளர்
(12 துறைகள்):


* பொதுத்துறை * உள்துறை, ஆயத்தீர்வை மற்றும் கலால் துறை * பொதுப்பணி lநெடுஞ்சாலை மற்றும் சிறிய துறைமுகங்கள் * போக்குவரத்து l வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு, * எரிசக்தி * நிதித்துறை * தொழில் * குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை lபணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தம் * திட்டம் மற்றும் வளர்ச்சி

விஜயகுமார்
முதல்வரின் மூன்றாம் செயலாளர்
(23 துறைகள்)


*நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், * ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் * ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை * கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் * பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை * சுற்றுலா மற்றும் பண்பாடு * வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு * சுகாதாரம் மற்றும் குடும்பநலம் * சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை * கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் காதி தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு * விவசாயம் * சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டம் * சட்டமன்ற செயலகம் * சட்டம் * உயர்கல்வி * பள்ளிக்கல்வி * வருவாய் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாடு * சிறப்புத் திட்ட அமலாக்கம் * மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு * தகவல் தொழில்நுட்பத் துறை * கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

ஜெயஸ்ரீ முரளிதரன்
கூடுதல் செயலாளர்
(மூன்று துறைகள் மற்றும் கூடுதல் பணிகள்)


* இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை * செய்தி மற்றும் விளம்பரத் துறை * தமிழ் வளர்ச்சித் துறை  * முதல்வரின் சந்திப்புகள், விழாக்கள், கூட்டங்கள், மரபுவரிசை முறை மற்றும் ஒருங்கிணைப்பு * முதன்மைச் செயலாளருடன் ஒருங்கிணைப்பு, தேர்தல் வாக்குறுதிகள் அடிப்படையில் சிறப்புத் திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பான பணிகளை கவனித்தல்.