Published:Updated:

‘‘ஏற்றத்தாழ்வை சமன் செய்தோம்... சமூக நீதி அடைந்தோம்... உலக மனிதனாய் மாறினோம்!”

‘‘ஏற்றத்தாழ்வை சமன் செய்தோம்... சமூக நீதி  அடைந்தோம்... உலக மனிதனாய் மாறினோம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
‘‘ஏற்றத்தாழ்வை சமன் செய்தோம்... சமூக நீதி அடைந்தோம்... உலக மனிதனாய் மாறினோம்!”

க.திருநாவுக்கரசு சொல்லும் மூன்று சாதனைகள்திராவிட ஆட்சி 50 ஆண்டுகள்

‘‘ஏற்றத்தாழ்வை சமன் செய்தோம்... சமூக நீதி  அடைந்தோம்... உலக மனிதனாய் மாறினோம்!”

1967, மார்ச் 6.

தி.மு.க அரியணையில் ஏறிய நாள். பொன்விழா கொண்டாட்டத்துக்குத் தயாராகிறது திராவிட முன்னேற்றக் கழகம். 50 ஆண்டுகள் ஆகிவிட்டதே! பொற்காலமாகக் கொண்டாட முடியுமா இந்தக் காலத்தை? ‘தி.மு.க வரலாறு’ என ஆறு பெரிய தொகுதிகளில் நூல் உருவாக்கிவரும் திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு, தி.மு.க செய்த அரசியல், சமூக, பண்பாட்டு மாற்றங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

‘‘திராவிட முன்னேற்றக் கழகம் உருவான காலகட்டத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?’’


‘‘தி.மு.க-வைப் பொறுத்தவரை அது, இயக்கமாகவும் கட்சியாகவும் இருக்கிற ஓர் அரசியல் அமைப்பு. பெரியாரின் இயக்கத்தில் இருந்து அண்ணா பிரிந்து வந்ததற்கு முக்கியக் காரணம் என, மணியம்மையை பெரியார் மணந்துகொண்ட விவகாரத்தைச் சொல்வார்கள். திராவிடர் கழகத்தில் இருந்து பிரிவதற்கு அது ஒரு துணைக் காரணமாக இருந்தது, அவ்வளவே! முக்கியமானக், காரணம் ஒன்று இருந்தது. ‘ஆட்சியில் இருப்பவரை வேலை வாங்குபவராக நம் இயக்கம் இருக்க வேண்டும்’ எனப் பெரியார் நினைத்தார். ‘இந்த இயக்கம் சொல்வதை எடுத்துச் செய்யும் வேலைக்காரனாக அரசு இருக்க வேண்டும்’ என்பது அவருடைய கொள்கை. அண்ணா, ‘அந்த இரண்டுமாகவே நாம் இருக்க வேண்டும்’ என நினைத்தார். ‘கொள்கைகளை நிறைவேற்றுபவர்களாகவும் நாமே இருக்க வேண்டும்’ என அண்ணா முடிவெடுத்தார். தம் எளிய தம்பிகளின் பட்டாளத்தோடு, காங்கிரஸ் எனும் மாபெரும் கட்சியை எதிர்க்கத் துணிந்தார். இதனால்தான் தி.மு.க உருவானது.’’

‘‘தி.மு.க ஒரு அரசியல் கட்சியாகவும் இயக்கமாகவும் இருக்கிறது என எப்படிச் சொல்கிறீர்கள்?’’


‘‘பொதுவாக ‘திராவிடர் இயக்கம்’ என்று பலரும் சொல்கிறோம். ‘திராவிடர் இயக்கம்’ என்ற பெயரில் ஒன்று இருக்கிறதா என்றால், இல்லை. ‘நீதிக்கட்சி’ என்கிறோம்... ‘சுயமரியாதை இயக்கம்’ என்கிறோம்... ‘திராவிடர் கழகம்’ என்கிறோம்... ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ என்கிறோம். இந்த நான்கு கட்சிகளை ஒன்றிணைத்தே ‘திராவிடர் இயக்கம்’ எனப் பொதுப் பெயர்வைத்து அழைக்கிறோம். அ.தி.மு.க-வையோ ம.தி.மு.க-வையோ நான் திராவிடர் இயக்கமாகப் பார்ப்பது இல்லை. ஆக, இந்த நான்குக்கும் பொதுவாக ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதுதான் இவற்றை ‘திராவிடர் இயக்கம்’ எனச் சொல்ல வைக்கிறது. ‘சாதிகள் அற்ற, வர்ணாசிரமம் முற்றிலும் நீங்கிய, சமதர்மக் கொள்கையோடு, தமிழியல் சார்ந்த சமுதாயத்தைப் படைப்பது’ என்பதுதான் திராவிடர் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை... லட்சியம். இவற்றை யாரெல்லாம் கொண்டு செலுத்துகிறார்களோ, அவர்கள் எல்லாம் திராவிடர் இயக்கம். தி.மு.க அரசியல் கட்சியாகவும், புரையோடிப்போன சமூக அவலங்களை மாற்றுவதற்கான லட்சியங்களைக்கொண்ட இயக்கமாகவும் இருக்கிறது.’’

‘‘ஏற்றத்தாழ்வை சமன் செய்தோம்... சமூக நீதி  அடைந்தோம்... உலக மனிதனாய் மாறினோம்!”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz‘‘சாதிகள் அற்ற சமுதாயம், சமதர்மம், மொழி உணர்வு ஆகியவற்றில் அவர்கள் என்ன சாதனையைப் படைத்தார்கள் என நினைக்கிறீர்கள்?”


‘‘பேராசிரியர் அன்பழகன், ‘நம் இயக்கம் தொடங்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றியிருக்கிறோமா என்றால்... முற்றிலுமாக நிறைவேற்றவில்லை என்றாலும் முடிந்தவரை நிறைவேற்றியிருக்கிறோம்’ என்பார். ஏன் நிறைவேற்ற முடியாது என்றால், இங்கே எல்லா தரப்பு மக்களும் இருக்கிறார்கள். திராவிடர் இயக்கத்தை ஏற்றுக்கொண்டவர்களும், நம்மை எதிர்த்து வாக்களித்தவர்களும், வேறு சமுதாய மக்களும் இங்கே இருக்கிறார்கள். எனினும், இலக்கை நோக்கி நகர்வதில், தி.மு.க முனைப்பாக செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது.

இந்தியச் சமூகம் பிராமண, வைசிய, சத்திரிய, சூத்திர, அவர்ணஸ்தர் எனும் ஐந்து பகுப்புகளாகக் கட்டப்பட்டுள்ளது. இதில் பிராமணன் வைசியனாகவோ, வைசியன் சத்திரியனாகவோ, சத்திரியன் சூத்திரனாகவோ மாறமுடியாது. ஆனால், சமூகநீதிக் கொள்கை மூலமாக நாங்கள் அதை மாற்றியிருக்கிறோம். பிராமணர்கள் கற்றக் கல்வியை நாம் கற்றோம்; அவர்கள் பெற்றப் பதவிகளை நாம் பெற்றோம். இது முக்கியமான மாற்றம். எந்த வர்ணாசிரமம் மக்களிடையே ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தி வைக்கிறதோ... அதன் அடிப்படையிலேயே சமூகநீதி கேட்டு, இடஒதுக்கீடு பெற்று அதை ஒழிக்க நினைக்கிறோம். மக்களிடையே சமநிலையை உருவாக்கப் பாடுபடுகிறோம்.

இரண்டாவது... இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்க்கிறோம். இந்தி என்பது என்ன? அது, சமஸ்கிருதத்தின் கள்ளப்பிள்ளை. பார்ஸி, உருது, சமஸ்கிருதம் ஆகியவற்றின் கலப்படம் அது. ஆனால், அதன் பெரும்பகுதி சமஸ்கிருத மொழியை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது. ஒரு மொழி என்பதால் அதை எதிர்க்கவில்லை. அந்த மொழியில் மனித சமுதாய சமநிலைக்கு எதிரான பல கருத்துகள் இருந்தன. அதற்காகத்தான் அந்த மொழியை எதிர்க்கிறோம். இந்தியை எதிர்க்கிறோம். அதனால்தான் நமக்கு இணைப்பு மொழியாக ஆங்கிலம் கிடைத்தது. இது இரண்டாவது சாதனை. ஆங்கிலம் இருந்ததால்தான் உலகம் முழுக்க தமிழர்கள் பரவ, வாழ வழிவகை அமைக்கப்பட்டது. இந்தி மட்டுமே தெரிந்தவர்கள், தமிழ்நாட்டில் கூலி வேலைக்குக் குவியும் அவலத்தைத்தான் பார்க்கிறோமே!

வர்ணாசிரம தர்மம் என்பது வைதீக தர்மம். நாம் அவைதீகர்கள். வர்ணாசிரம அடிப்படையில் இந்தியாவில் பல ஆயிரம் சாதிகள் இருந்ததை எட்கர் தர்ஸ்டன் போன்ற ஆங்கிலேயர்கள் ஆய்ந்து எழுதியிருக்கிறார்கள். அம்பேத்கர், ‘பிராமணர்களிலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரிவுகள் இருந்தன’ என்று சொல்கிறார். வர்ணாசிரமத்தையே நமது சமூகநீதி ஓ.சி., பி.சி., எம்.பி.சி., எஸ்.ஸி., எஸ்.டி என்று மாற்று ஐந்து பிரிவுகளாக உருவாக்கிற்று. இந்த ஐந்து பிரிவுகள் வைதீகப் பிரிவில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை. அந்தப் பிரிவினைகள் ஏற்படுத்திய ஏற்றத்தாழ்வை நாம் கொஞ்சம் கொஞ்சமாக சமன் செய்கிறோம்.

இது மூன்றாவது சாதனை. நுட்பமாகப் பார்ப்பவர்களுக்குத்தான் இது தெரியும்!”

‘‘ஏற்றத்தாழ்வை சமன் செய்தோம்... சமூக நீதி  அடைந்தோம்... உலக மனிதனாய் மாறினோம்!”

‘‘சுயமரியாதைத் திருமணத்தை திராவிடர் இயக்கம் ஏன் செய்கிறது? தி.மு.க-தானே அதற்கான சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்தது... அதற்கு என்ன காரணம்?

‘‘திருமணங்களை நிகழ்த்துவதன் மூலம், பிராமணர்கள் சமூக மேலாண்மையைத் தங்கள் கையில் வைத்திருந்தார்கள். பிறந்தால் தீட்டுக்கழிப்பது முதல், பெயர் சூட்டுவது, சாதகம் கணிப்பது, திருமணம் செய்வது, இறந்தால் காரியம் செய்வது, அதன் பிறகு திதி கொடுப்பது எனத் தமிழர்களின் வாழ்க்கையில் அனைத்துவிதமான மேலாண்மைகளையும் அவர்கள் கையில் வைத்திருந்தார்கள். சுயமரியாதைத் திருமணம், அதை முதன்முதலாக உடைத்தெறிய வழிவகுத்தது. நம் குடும்பத்தில், நாம் பெரியவர் என நினைக்கும் ஒருவரை வைத்துக்கூட சுயமரியாதைத் திருமணத்தை நடத்திக்கொள்ளலாம். வைதீக மதத்தை எதிர்க்கிற அவைதீக பண்பாட்டு இயக்கமாகத் தமிழர் வாழ்க்கையில் தி.மு.க பெரும் பங்காற்றியது என்பதை யாரும் மறுக்க முடியாது.’’

‘‘திராவிடர் இயக்க ஆட்சி அரியணையில் ஏறிய 50 ஆண்டுகள் எனக் கூறினாலும், அண்ணாவின் ஆட்சிக்காலம் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள்தான். 48 ஆண்டுகாலமாகக் கட்சியின் தலைமையில் இருப்பவர் கருணாநிதி. அவருடைய காலகட்டத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘அண்ணா அவர்கள் இரண்டு ஆண்டுகள்தான் அரியணையில் இருந்தார். அதற்குள் அவர் நோய் வாய்ப்பட்டுவிட்டார். அவர் காலத்தில்தான், தமிழ்நாட்டு பெயர் சூட்டல், இருமொழித் திட்டம், சுயமரியாதைத் திருமணச் சட்டத்திருத்தம் போன்றவை கொண்டு வரப்பட்டன. மற்ற சாதனைகள் கலைஞர் ஆட்சிக்காலத்தில் நடந்தவை. சொல்லப்போனால் கலைஞர் ஆட்சியில் இருந்த காலம் குறைவுதான். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் 25ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தார்கள். கவர்னர் ஆட்சிக்காலம் போக, மீதி 19ஆண்டுகாலம் கலைஞர் ஆட்சியில் இருந்தார். இயக்கக் கொள்கை என நான் முதலில் குறிப்பிட்டேனே, அவற்றிலிருந்து எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் வெகுதூரம் விலகிவிட்டார்கள். அதைச் சரி செய்யவே கலைஞருக்கு நேரம் சரியாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். குடிசை மாற்று வாரியத் திட்டம், கை ரிக்‌ஷா ஒழிப்புத் திட்டம், சமத்துவபுரம் எனப் பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்தார். இவையும் கூட ஒருவகையில் மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்பதற்கான ஒரு முயற்சிதான்.’’

‘‘தி.மு.க வரலாறு ஆறு தொகுதிகளாக வெளிவர இருப்பதாகச் சொன்னீர்கள்? அந்தப் பணி எப்படி உள்ளது?’’


‘‘இப்போது மூன்று தொகுதிகள் நிறைவடைந்துவிட்டன. மார்ச் 25-ம் தேதி செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட இருக்கிறார். அடுத்த மூன்று தொகுதிகள் விரைவில் தயாராகிவிடும். அவற்றை முதல்வராக ஸ்டாலின் வெளியிட வேண்டுமென்பது என் விருப்பம்.’’

- தமிழ்மகன்

படம்: ஆ.முத்துகுமார்