Published:Updated:

சசிகலா ஜாதகம் - 22 - “கூடா நட்பு கேடாய் முடியும்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சசிகலா ஜாதகம் - 22 - “கூடா நட்பு கேடாய் முடியும்!”
சசிகலா ஜாதகம் - 22 - “கூடா நட்பு கேடாய் முடியும்!”

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

பிரீமியம் ஸ்டோரி

‘‘கூடா நட்பு குறித்து திருவள்ளுவர் ஒரு அதிகாரமே எழுதி யிருக்கிறார். கர்ணன் வீழ்ந்ததற்கும், கும்பகர்ணன் வீழ்ச்சிக்கும் கூடா நட்புதான் காரணம்’’ - அ.தி.மு.க-வுக்குத் தலைமுழுகிய பிறகு 2008-ல் முதன்முறையாக மீடியா முன்பு வந்து நின்றபோது, ஜோதி சொன்ன வார்த்தைகள் இவை!

சசிகலா ஜாதகம் - 22 - “கூடா நட்பு கேடாய் முடியும்!”

‘கட்சியில் இருந்து விலகுகிறேன்; வழக்குகளில் இருந்து விடுவித்துக்கொள்கிறேன்’ என ஜோதி நீட்டிய ராஜினாமா கடிதம் அ.தி.மு.க-வில் அதிர்வலைகளை உண்டாக்கியது. மிரட்டல்கள் தொடர்ந்ததால் மீடியா முன்பு அத்தனை உண்மைகளையும் உடைத்துப் போட்டார் ஜோதி. அப்போதுதான் ஜெயலலிதா, சசிகலாவின் கூடா நட்பு பற்றி சொன்னார்.

‘‘தினகரனுடன் எனக்கு எந்த விரோதமும் கிடையாது. சொல்லப் போனால் அவருக்கு நிறைய உதவிகளைச் செய்தேன். நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவர் பதவியை தினகரனுக்காக அப்போதைய அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜிடம் வாதாடிப் பெற்றேன். அந்தப் பதவி, ஒரு துணை அமைச்சர் அந்தஸ்துக்கு இணையானது. அதை தினகரனுக்காகக் கேட்டுப் பெற்றது, அவருக்கு நிர்வாக ஆற்றலும் அனுபவமும் ஏற்படும் என்பதற்காகத்தான். சசிகலாவின் ஒப்புதலுடன் அந்தப் பதவியை வாங்கிக் கொடுத்தும் தினகரன் அதை ஏற்கவில்லை. கடந்த 03.04.07 அன்று போனில் பேசிய தினகரன், என்னை வரம்புமீறித் திட்டித் தீர்த்தார். பத்து மாதங்களுக்கு முன்பே நான் கட்சியிலிருந்தும், எம்.பி பதவியிலிருந்தும் விலக முடிவுசெய்து ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் கடிதம் எழுதினேன். அதில் தினகரன் என்னை அவமானப்படுத்தியதைக் குறிப்பிட்டிருந்தேன். அதன்பிறகு என்னை அழைத்த ஜெயலலிதா, தினகரன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். சில நாட்கள் கழித்து கட்சியின் பொருளாளர் பொறுப்பிலிருந்து தினகரனை ஜெயலலிதா நீக்கிவிட்டார். அந்த கோபத்தில்தான் சசிகலாவும் தினகரனும் என்னைப் பழிவாங்க நினைத்தார்கள். அதற்காக ராஜ்ய சபா சீட் தரவிடாமல் தடுத்தார்கள். எனக்குத் தராததுகூட கவலையில்லை. வேறு ஒருவருக்கு தருவதை, என்னிடம் மரியாதைக்குக்கூட சொல்லவில்லை. எனக்கு மீண்டும் ராஜ்ய சபா எம்.பி பதவி கிடைக்காமல் போனதற்கு தினகரன்தான் காரணம்.

சசிகலா ஜாதகம் - 22 - “கூடா நட்பு கேடாய் முடியும்!”

ஆனால், அவரைவிட கட்சிக்குப் பெரிய கெடுதல் செய்து கொண்டிருப்பவர் சசிகலா. அவரின் முழுக் கட்டுப்பாட்டில்தான் ஜெயலலிதா இருக்கிறார். அது நீடிக்கும் வரை கட்சி தப்ப முடியாது. ஜெயலலிதா மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை. சசிகலாவின் போக்கு குறித்து ஜெயலலிதாவிடம் நான் பேசியபோது, ‘கட்சியின் அதிகார மையமாக அவர் விளங்குகிறார்’ என்றேன். அதற்கு ஜெயலலிதா, ‘அப்படியெல் லாம் இல்லை. அவர் வீட்டை நிர்வகித்து, கணக்கு வழக்குகளை மட்டுமே பார்த்துக் கொள்கிறார்’ என்றார். ஆனால், உண்மை அப்படி இல்லை. ஜெயலலிதா முற்றிலும் சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்’’ என பத்திரிகையாளர்களிடம் சொன்னார் ஜோதி.

அவர் சொல்லி ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அ.தி.மு.க சசிகலா கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டது. கூடா நட்பும் கேடாய் முடிந்துவிட்டது.  

சசிகலாவின் நடவடிக்கைக்கு ஆளானவர்கள் பலரும் அறிவாலயத்தில் ஐக்கியம் ஆவார்கள். அதில் ஜோதியும் விதிவிலக்கு இல்லை. தி.மு.க-வில் ஜோதி சேர்ந்தபோது நடந்த பிரஸ்மீட்டில், ‘‘தி.மு.க ஆட்சியில் தமிழகம் இருண்டு கிடக்கிறது என ஜெயலலிதா அறிக்கையில் சொல்லியிருந்தார். அதனால்தான் இருண்டு கிடக்கிற தமிழகத்தை ஒளிபெறச் செய்ய ஜோதியை அனுப்பியிருக்கிறார்’’ எனச் சொன்னார் கருணாநிதி. அதே பிரஸ் மீட்டில் பேசிய ஜோதி, ‘‘ஜெயலலிதாவே பாதுகாப்பற்ற நிலையில்தான் இருக்கிறார்’’ என்றார்.

சசிகலா ஜாதகம் - 22 - “கூடா நட்பு கேடாய் முடியும்!”

ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுப்பப்படும் இன்றைய விஷயங்களுக்கு ‘‘ஜெயலலிதாவே பாதுகாப்பற்ற நிலையில்தான் இருக்கிறார்’’ என அன்றைக்கு ஜோதி சொன்ன தகவல் பொருந்திப் போவதை தவிர்க்க முடியவில்லை.

ஜெயலலிதா மீது போடப்பட்ட அடுக்கடுக்கான வழக்குகளில் முன்னணி வழக்கறிஞர்கள் ஆஜரானாலும், அத்தனை வழக்குகளுக்கும் மேற்பார்வையாக இருந்தது ஜோதிதான். ‘டான்சி நில பேர வழக்கில் இருந்து ஜெயலலிதா தப்ப முடியாது’ என கணித்திருந்த வேளையில், அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம்வரை போராடி ‘ஜெயலலிதா நிரபராதி’ என தனது வாதத் திறமையால் நிரூபித்தவர் ஜோதி. ஜெயலிதாவுக்காக அவர் ஜெயித்த வழக்குகள் மட்டும் 14. இதற்கெல்லாம் பரிசாகக் கேட்டது மீண்டும் எம்.பி பதவிதான். அதுவும்கூட, ஆளும் தி.மு.க-வால் தனக்குப் பிரச்னைகள் தொடங்கிவிட்டன என்று உணர்ந்து ஒரு பாதுகாப்புக்காகவே அந்தப் பதவியில் தொடர நினைத்தார். கட்சிக்காரர்கள் போல கூழைக் கும்பிடு போட மாட்டார். அப்படி நேருக்கு நேராகச் சொன்ன தினகரன் விஷயம்தான் அவர் கட்சியைவிட்டே விலகக் காரணம் ஆனது.

க்ளைமாக்ஸுக்கு காரணமான தினகரன் பற்றி ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்தில் அப்படி என்னதான் இருந்தது?

(தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு