Published:Updated:

"திராவிடத் தராசு சமநிலையில் இருக்கும்!” - நாகநாதன்

"திராவிடத் தராசு சமநிலையில் இருக்கும்!” - நாகநாதன்
பிரீமியம் ஸ்டோரி
News
"திராவிடத் தராசு சமநிலையில் இருக்கும்!” - நாகநாதன்

திராவிட ஆட்சி 50 ஆண்டுகள்

“அண்ணா முதல்வராகப் பதவியேற்றதும் ராஜா சர் முத்தையா வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர்கள் அனைவரும் அங்கே கிளம்பிச் சென்று விட்டார்கள். அண்ணாவுடன் செல்ல கலைஞர் காத்திருந்த சமயத்தில், அவர் காஞ்சிபுரம் கிளம்பிச் சென்றுவிட்டார் என்று தெரிந்தது. அண்ணாவுக்கு அந்த விருந்தில் கலந்து கொள்வது பிடிக்கவில்லை. ‘முதலமைச்சர் ஆகிவிட்டால் பணக்கார வீட்டில் விருந்து சாப்பிடணுமா என்ன? நாம் எப்படி இருக்கிறோமோ, அப்படியே இருப்போம்’ என்று சொன்னார் அண்ணா. எளிமையின் மீது எழுப்பப்பட்டதுதான் திராவிடர்கள் முன்னேற்றத்துக்கான இந்த இயக்கம்” என்கிறார், கலைஞரின் நண்பரும் மாநிலத் திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவரும் அரசியல் ஆய்வாளருமான, பேராசிரியர் மு.நாகநாதன்.

"திராவிடத் தராசு சமநிலையில் இருக்கும்!” - நாகநாதன்

‘‘ திராவிட இயக்கக் கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் அடைந்துள்ள வளர்ச்சிப் படிநிலைகள் என்ன?

‘‘பெண்களுக்கு வாரிசு உரிமை உண்டு என்பதை அம்பேத்கர்தான் முதன்முதலில் வலியுறுத்தினார். அதைப் பின்பற்றித்தான் கலைஞரின் ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. சுயமரியாதைத் திருமணச் சட்டம் அண்ணாவால்தான் கொண்டு வரப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் 2006-ல் ‘அனைத்து சாதியினரும் ஆலயங்களில் அர்ச்சகராகலாம்’ என்கிற சட்ட திருத்தத்துக்கான முன்னெடுப்பைக் கொண்டு வந்தது. நீதிக்கட்சியின் அடிப்படைக் கொள்கை, ‘அனைவரும் அனைத்திலும் உட்படுத்தப்பட வேண்டும்’ என்பது. அதனை திராவிட இயக்க ஆட்சி சிறப்பாகச் செய்திருப்பதாகத்தான் நம்புகிறேன். ஆனால் கட்சியளவில், சமூக சீர்திருத்தக் கொள்கைகள் தளர்ந்திருப்பதாகவே பார்க்கிறேன். மற்றவற்றுடன் ஒப்பிடுகையில் அது மோசமடைந்துவிடவில்லை. இருதரப்பிலுமே ஊழல் இருக்கிறது. ஆனால், ஊழல்வாதிகளைக் கடவுளாகக் கொண்டாடும் நிலை தி.மு.க-வில் உருவாகவில்லை. அதற்குக் கொள்கைகள் எஞ்சியிருப்பதும் ஒரு காரணம்.’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
"திராவிடத் தராசு சமநிலையில் இருக்கும்!” - நாகநாதன்

‘‘திராவிடக் கட்சிகள் முன்னிறுத்திய இடஒதுக்கீட்டுக் கொள்கைகளுக்காக இன்றளவும் போராட்டம் தொடர்ந்தபடிதானே இருக்கிறது?’’

‘‘இடஒதுக்கீடு வேண்டாம் என்று இப்போது கூறுபவர்கள், அதன் உண்மை வரலாறு அறியாதவர்கள். 1921-ல் கொண்டுவரப்பட்ட சமுதாய வாரியான அரசாணையில், ஒவ்வொரு பிரிவினருக்கும் இடஒதுக்கீடு இருந்தது. ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும் இதர சமூகத்தினரும் அதில் அடக்கம். ஆனால், முற்பட்ட வகுப்பினர் அதை எதிர்த்ததால்தான் இன்று சிக்கல். அன்று அது எதிர்க்கப்படாமல் இருந்திருந்தால், 3 சதவிகித இடஒதுக்கீடு முற்பட்ட வகுப்பினருக்குக் கிடைத்திருக்கும். 50 வருடங்களில் எத்தனையோ மருத்துவர்களும் பொறியாளர்களும் மதிப்பெண் குறைவாக இருந்தாலும் கிடைத்திருப்பார்கள். இடஒதுக்கீடு தொடர்பாக மக்களிடையே தெளிவு வேண்டும்.’’

‘‘காமராசர் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட கல்விப்புரட்சியை திராவிடக் கட்சிகளால் எட்ட முடிந்ததா?’’

‘‘காமராசர் கல்விப் புரட்சியைச் செய்தார் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் கூட்டாகக் கல்வியில் பல முன்னேற்றங்களைக் கொண்டு வந்தவர், அறிஞர் அண்ணா. பத்தாம் வகுப்பு வரை இலவசக் கல்வியை அறிவித்தார் அவர். ‘இளங்கலைப் பட்டம் வரை இலவசக் கல்வி’ என்று கலைஞர் அதனை மாற்றி அமைத்தார். திருவண்ணாமலை, தர்மபுரி போன்ற பின் தங்கிய மாவட்டங்களில்தான் கலைஞர் ஆட்சிக்காலத்தில் பல கல்லூரிகள் கட்டப்பட்டன. பொருளாதார வசதியில்லாத பல பிள்ளைகள் அதில் படித்தார்கள். இன்றளவும் படிக்கிறார்கள். ஜெயலலிதாவின் கடைசிக்கால ஆட்சியில்கூட பல கல்லூரிகள் கட்டப்பட்டன. அவரது செயல்பாடுகளில் அது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று. காமராசர் கொண்டுவந்த கல்வி வளர்ச்சித் திட்டங்களை தராசில் ஒரு புறம் வைத்து, திராவிடக் கட்சிகளின் கல்வி வளர்ச்சித் திட்டங்களை தாராளமாக மற்றொரு தட்டில் வைக்கலாம். நிச்சயம் தராசு சமநிலையில் நிற்கும்.’’

"திராவிடத் தராசு சமநிலையில் இருக்கும்!” - நாகநாதன்

‘‘மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தின் பொருளாதாரத் தற்சார்பு எப்படி இருக்கிறது?’’

‘‘அண்ணா காலத்தைவிட தற்போது மும்மடங்கு அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறது. மாநிலத்துக்கான நலத்திட்டங்களை, அதன் முதல்வருடன் விவாதிக்காமல் மத்திய அரசு முன்பு செய்யாது. ஆனால், தற்போது மத்தியில் இருக்கும் அதிகாரிகள் அவர்களாகவே நம் நலனுக்கு என்று திட்டங்களை அறிவிக்கிறார்கள். ‘நெடுவாசல் திட்டம், தனக்கு முன்னரே தெரிவிக்கப்படவில்லை’ என்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. நமக்கான முழு சுயாட்சி அதிகாரம் கிடைக்காதவரை, அதற்கான தேவையைத் திராவிடக் கட்சிகள் தொடர்ந்து நிர்பந்திக்காதவரை, பொருளாதார அளவில் நாம் முன்னேற்றத்தை எட்ட முடியாது. இதனை நாம் உணர்ந்திருக்கிறோம். ஆனால், மற்ற மாநிலங்கள் இன்னும் உணரவில்லை. அத்தகைய ஒப்பீட்டு அளவில் நாம் முன்னேறியே இருக்கிறோம்.”

‘‘ஐம்பது ஆண்டு கால ஆட்சியின் பெரும் சாதனையாக எதைக் குறிப்பிடுவீர்கள்?’’

‘‘கம்யூனிசவாதியான சோம்நாத் சாட்டர்ஜி ஒருமுறை கலைஞரை சந்திக்கத் தமிழகம் வந்தார். அப்போது அவர் என்னிடம் கூறியது, ‘நான் என்னதான் கம்யூனிசக் கொள்கைகள் பேசினாலும். என் மகளுக்குத் திருமணம் செய்தபோது அவருக்காக வரதட்சணை கொடுக்கவேண்டி யிருந்தது. சடங்குகளைப் பின்பற்ற வேண்டியிருந்தது. மேற்கு வங்காளத்தில் நாங்கள் செய்யமுடியாததை உங்கள் கட்சியின் ஆட்சி இங்கு செய்துகொண்டிருக் கிறது’ என்றார். ஐம்பது ஆண்டு காலங்கள் இதுதான் கொள்கை என்று வரையறுத்து, அதில் ஊன்றி நின்று, வேறு எந்த அந்நிய சக்திகளும் தமிழகத்தை பாதித்துவிடாமல் காத்திருப்பதுதான் திராவிட இயக்கத்தின் சாதனை.’’

- ஐஷ்வர்யா
படம்: சொ.பாலசுப்ரமணியன்