Published:Updated:

“தேசியக் கட்சிகள் செய்யவேண்டியதை திராவிடக் கட்சிகளே செய்துவிடுகின்றன!”

“தேசியக் கட்சிகள் செய்யவேண்டியதை திராவிடக் கட்சிகளே செய்துவிடுகின்றன!”
பிரீமியம் ஸ்டோரி
News
“தேசியக் கட்சிகள் செய்யவேண்டியதை திராவிடக் கட்சிகளே செய்துவிடுகின்றன!”

கொதிக்கும் தியாகுதிராவிட ஆட்சி 50 ஆண்டுகள்

‘‘1967 ஆட்சி மாற்றம், காங்கிரஸ் ஏகபோகத்துக்கு முடிவு கட்டிய அளவில் அண்ணா சாதித்த வரலாற்றுத் திருப்பம்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அந்தச் சாதனை மீதே தி.மு.க படுத்து உறங்கிவிட்டது” என்கிறார், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு.

“தேசியக் கட்சிகள் செய்யவேண்டியதை திராவிடக் கட்சிகளே செய்துவிடுகின்றன!”

காங்கிரஸ் கட்சியை வீழ்த்திவிட்டு, திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்து ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த ஐம்பது ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியால் மீட்சி பெற முடியவில்லை. அழுத்தமான கொள்கைகளையும் ஆழமான லட்சியங்களையும் தமிழ் மக்கள் மனதில் விதைத்து ஆட்சிக்கு வந்தது தி.மு.க. அந்தக் கட்சியும், அதிலிருந்து கிளை பிரிந்த அ.தி.மு.க-வும் இந்த ஐம்பது ஆண்டுகளில் என்ன செய்திருக்கின்றன? விரிவாகப் பேசுகிறார் தியாகு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“தி.மு.க என்ற கட்சி எந்த நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்டதோ, அதனை நிறைவேற்றி இருக்கிறதா?”

‘‘இல்லை! தி.மு.க-வின் முக்கியக் கொள்கைகளில் ஒன்று, இந்தியப் பேரரசின் இந்தித் திணிப்பை எதிர்ப்பது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பதினேழாவது பகுதியைத் திருத்தி, தமிழ் உள்ளிட்ட தேசிய மொழிகள் அனைத்தையும் இந்தியாவின் ஆட்சி மொழிகளாக்குவது. இந்தக் கோரிக்கையோடு தான் மொழிப் போராட்டங்களை நடத்தியது தி.மு.க. 1965-ம் ஆண்டு மாணவர் போராட்டத்தின் கோரிக்கையும் இதுவேதான். அந்த மொழிப்போரின் வீச்சுதான் 1967-ம் ஆண்டு, தமிழ்நாட்டில் காங்கிரஸை வீழ்த்தி தி.மு.க-வை ஆட்சியில் அமர்த்தியது. ஆனால், இந்த அரை நூற்றாண்டுக் காலத்தில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பதினேழாவது பகுதியைத் திருத்தவோ, மாற்றவோ தி.மு.க-வால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இத்தனைக்கும் தி.மு.க அல்லது அ.தி.மு.க தயவிலான ஆட்சிதான் பெரும்பாலும் மத்தியில் நடைபெற்றுள்ளது. பல ஆண்டுகள் இந்தக் கட்சிகள் மத்திய அரசிலும் அங்கம் வகித்துள்ளன. அரசியலமைப்புச் சட்டம் இந்த ஐம்பதாண்டு காலத்தில் பலமுறை திருத்தப்பட்டு விட்டது. பகுதி 17 மட்டும் திருத்தப்படவே இல்லை. இது மிக முக்கியமான தோல்வி!

‘திராவிட நாடு’ கோரிக்கையைக் கைவிட்டபோது, ‘மாநில சுயாட்சிதான் எங்கள் குறிக்கோள்’ என்று அறிவித்தார் அறிஞர் அண்ணா. இந்தக் குறிக்கோளை நோக்கிய பயணத்தில் தி.மு.க முன்னேறியுள்ளதா? நடுவணரசில் பங்கு வகித்தபோது, அல்லது அனைத்திந்தியக் கட்சிகளோடு கூட்டுச் சேர்ந்தபோது இதுகுறித்து தி.மு.க வலியுறுத்தியதாவது உண்டா?


“தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகு, காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சிகள் எதுவும் காலூன்ற முடியவில்லையே?”

“இதற்காக தேசியக் கட்சிகள் கவலைப்படவில்லை. ஒரு சின்ன சம்பவத்தைச் சொல்கிறேன். 2009-ம் ஆண்டு கருணாநிதி இங்கு முதல்வராக இருந்தது தான் காங்கிரஸுக்குப் பெரும் உதவியாக இருந்தது. கருணாநிதியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டுதான் இலங்கை அரசுக்கு உதவி செய்தது மத்திய காங்கிரஸ் அரசு. ஆனால், அப்போது இங்கு ஒரு காங்கிரஸ் முதலமைச்சர் இருந்திருந்தார் என்றால், தமிழ்நாட்டின் எழுச்சியே வேறுவிதமாக இருந்திருக்கும். தமிழகத்தில் நடந்த ஈழப் போராட்டத்துக்கே கருணாநிதி ஆட்சிதான் தடையாக இருந்தது. இந்திய தேசிய ஆதிக்கக் கொள்கைகளுக்கும் நோக்கங்களுக்கும், இங்கு மாநிலக் கட்சியைச் சேர்ந்த யாரோ ஒருவர் ஆட்சியில் இருப்பதுதான் உதவியாக இருக்கிறது. இங்கு உள்ள காங்கிரஸ்காரர்களுக்கு வேண்டுமானால், ‘நாமும் முதலமைச்சர் ஆக வேண்டும்; பதவிக்கு வர வேண்டும்’ என்ற ஆசை இருக்கலாம். ஆனால், அனைத்து இந்தியத் தலைமைக்கு இதுதான் வசதி. ஈழம், ஜி.எஸ்.டி என்று எந்தப் பிரச்னையை எடுத்தாலும் தி.மு.க-வும் அ.தி.மு.க–வும் தேசியக் கட்சிகளுடன் ஒத்துப் போகின்றன. ‘நம்ம வேலையை அவனே செய்யறான், நாம் ஏன் அவனைத் தொந்தரவு செய்யணும்’ என்ற எண்ணம்தான் அவர்களுக்கு இருக்கும். எனவே, தேசியக்கட்சிகளின் சார்பாகத்தான் இவர்கள் வேலை செய்கிறார்கள்.”   

“தேசியக் கட்சிகள் செய்யவேண்டியதை திராவிடக் கட்சிகளே செய்துவிடுகின்றன!”

“கம்யூனிஸ்ட்டுகள் கூட தமிழகத்தில் ஆட்சி அதிகார அரசியலில் பெரும் பங்கு வகிக்க முடியவில்லையே?”

“இந்தியாவின் நீண்ட கால வரலாற்றைப் பார்க்கும்போது, கம்யூனிஸ்ட் இயக்கத்துக்குப் பல சாதனைகள் இருக்கின்றன. நான் மறுக்கவில்லை. ஆனால், இந்தியாவின் புறச்சூழலை உள்வாங்கி சரியான கொள்கைகளை வகுக்காததால், இந்திய தேசிய காங்கிரஸின் இடதுசாரி வாலாகத்தான் கம்யூனிஸ்ட்டுகள் இருக்கிறார்கள். இது இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரண்டுக்குமே பொருந்தும். இந்தியாவின் தனித் துவமான சிக்கல்களில் ஒன்று, தேசிய இனச் சிக்கல். இன்னொன்று, சாதிச் சிக்கல். இந்த இரண்டிலும் ஆளும் வர்க்கக் கட்சிகளுக்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் அடிப்படை வேறுபாடு இல்லை. இதனால், அகில இந்திய அளவிலேயே தேய்ந்து போனார்கள். தமிழகத்திலும் இதுதான் நடந்தது.”

“அண்ணாவுக்குப் பிறகு, தி.மு.க-வை எப்படி வழிநடத்தினார் கருணாநிதி?”

“1991-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வில் கருணாநிதி மட்டும் வெற்றி பெறுகிறார். வேறு யாரும் வெற்றி பெறவில்லை. என்னிடம் ஒரு தி.மு.க நண்பர், ‘இனி தி.மு.க தேறுமா?’ எனக் கேட்டார். ‘தி.மு.க தோல்வி அடைந்து இருக்கிறது என்றும், மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதுதான் தி.மு.க-வின் வெற்றி என்றும் நீங்கள் கருதிக் கொண்டு இருக்கிற வரை உங்கள் கட்சி தேறவே தேறாது’ எனச் சொன்னேன். இங்கு வெற்றி-தோல்வி என்பது குறிக்கோளை வைத்து அளவிடப்படவில்லை. எத்தனை எம்.எல்.ஏ., எத்தனை எம்.பி என்றுதான் பார்க்கிறார்கள். தி.மு.க-வின் நோக்கமே ஆட்சியைப் பிடிப்பதும், முதலமைச்சர் ஆவதும்தானா? அதற்காகத்தான் இந்தக் கட்சி தொடங்கப்பட்டதா? இந்தக் கட்சிக்கு வேறு நல்ல குறிக்கோள்கள், நோக்கங்கள் ஒரு காலத்தில் இருந்தன. அவை எல்லாம் இப்போது சிதைந்து போய்விட்டன. லட்சியத்தை வெல்வதற்காகத்தான் கட்சி. ஆனால், தி.மு.க லட்சியத்தை விற்று, கட்சியைப் பாதுகாக்கத் தொடங்கி விட்டது.

“தேசியக் கட்சிகள் செய்யவேண்டியதை திராவிடக் கட்சிகளே செய்துவிடுகின்றன!”

1962-ம் ஆண்டு தேர்தலில் அண்ணா, காஞ்சிபுரம் தொகுதியில் நின்றபோது, அவருக்கு எதிராக நடேச முதலியார் என்ற பேருந்து முதலாளியை வேட்பாளராக நிறுத்தினார் காமராசர். காங்கிரஸ் பின்பற்றிய வழிமுறை, ஓட்டுக்குக் காசு கொடுப்பது. ஒரு ஓட்டுக்கு ஐந்து ரூபாய் கொடுத்தார்கள். இது காமராசருக்கும் தெரிந்துதான் இருந்தது. ‘வாக்குக்கு ஐந்து ரூபாய் கொடுக்கிறார்கள்’ எனக் கேள்விப் பட்டதும்... அண்ணா எழுதிய கட்டுரை, அன்றைக்கு அதிர வைத்தது. இன்றைக்கும் ஓட்டுக்குக் காசு கொடுப்பதற்கு எதிராக, அழுத்தமான முழக்கமாக அந்தக் கட்டுரை இருக்கிறது. 

ஆனால், இப்போது ஓட்டுக்குக் காசு கொடுப்பதில் முதலிடம் பெறுவதே அண்ணா வழிவந்த கட்சிகள்தான். இது வெளிப்படையான உண்மை. ‘கொள்கைகள் முக்கியம் இல்லை; பதவிதான் முக்கியம்’ என்பதே இதற்குக் காரணம். ‘கொள்கை என்பது வேட்டியைப்போல; பதவி என்பது தோளில் போடும் துண்டைப்போல! நான் துண்டை இழப்பேனே தவிர, வேட்டியை இழக்கமாட்டேன்’ என்று சொன்னவர் அண்ணா. ஆனால், ஐம்பது ஆண்டு காலத்தில் துண்டை மட்டும்தான் வைத்திருக்கிறது தி.மு.க. கோவணம் உட்பட அனைத்தையும் இழந்துவிட்டு நிற்கிறது. இதுதான் கருணாநிதி காட்டிய வழி!”
 
“தி.மு.க-வுக்கு தற்போது ஸ்டாலின் செயல் தலைவராகப் பொறுப்பு ஏற்றிருக்கிறார். இதனால், கட்சியில் ஏதாவது மாற்றம் வருமா?”

“யார் தலைவராக இருக்கிறார் என்பதைப் பொறுத்து கட்சியில் மாற்றம் வந்துவிடாது. சில வருடங்களுக்கு முன்னால், ‘தென் மண்டல அமைப்புச் செயலாளர்’ என்று ஒரு பதவியை உருவாக்கி அழகிரிக்குக் கொடுத்தார்கள். இது தி.மு.க-வில் இல்லாத பதவி. அப்படியென்றால் வட மண்டல அமைப்புச் செயலாளர் யார்? ஒருத்தரும் கிடையாது. தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்காகவே புதிதாக ஒரு பதவியை உருவாக்குவதும், பங்கு போடுவதும் ஜனநாயகத் துக்கு எதிரானது இல்லையா? கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தோல்வி அடைந்ததற்கே இந்தக் குடும்ப அரசியல்தான் காரணம். ஜெயலலிதா 1991-ல் இருந்து 1996 வரைக்கும் செய்த ஊழலுக்கு, திரும்பவும் அ.தி.மு.க ஆட்சிக்கே வந்திருக்க முடியாது. ஐந்தே வருடங்களில் அவர்கள் திரும்பவும் வர முடிகிறது என்றால், செத்த பாம்புக்கு உயிர் கொடுத்தது இவர்கள்தான். ‘திரும்பவும் ஜெயலலிதா வர முடியுமா?’ என்று என்னிடம் கேட்பார்கள். ‘அதற்காகத்தானே கலைஞர் ஓவர் டைமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்’ என்று நான் அடிக்கடி நகைச்சுவையாகச் சொல்வேன். இவர்கள் பண்ணக்கூடிய தவறால், எதிர்ப்பக்கத்தில் இருப்பவர்கள் ஆட்சிக்கு வந்துவிடுகிறார்கள்.

நெருக்கடி நிலைக்குப் பிறகு காங்கிரஸ் இங்கு வீழ்த்தப்பட்டது. நெருக்கடி நிலையில் மிகவும் பாதிக்கப்பட்ட கட்சி தி.மு.க-தான். ஆனால், ‘நேருவின் மகளே வருக... நிலையான ஆட்சியைத் தருக...’ என்று கருணாநிதி கூப்பிட்டது என்ன நியாயம்? அவர் வழி வந்த ஸ்டாலினும் இப்போது சோனியா வீட்டில்தான் நிற்கிறார்.

தி.மு.க மற்றும் அ.தி.மு.க இரண்டுமே வரலாற்றுக் கண்ணோட்டத்தில் வழக்கொழிந்து போன கட்சிகள்தான். இனிமேல் நம் இளைஞர்கள் இவர்களிடம் நல்லதைத் தேடுவதை விட்டுவிட்டு, கொள்கை சார்ந்து, போராட்டம் சார்ந்து மாற்று இயக்கம் தேட வேண்டும். மாற்றுக் கட்சிகளைத் தேடாமல், இளைஞர்களே அதை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.” 

“அ.தி.மு.க இன்று பல பிரிவுகளாகப் பிரியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதே?”


“அ.தி.மு.க இனி தேர்தல் அரசியலில்கூட திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. ஜெயலலிதா மறைந்து விட்டார் என்பதாலேயே அவர் செய்த ஊழல்களை மறைத்துப் பேச வேண்டிய அவசியமில்லை. சசிகலாவுக்கு 10 கோடி ரூபாய்தான் அபராதம். ஜெயலலிதாவுக்குத்தான் 100 கோடி ரூபாய் அபராதம். முழு ஆட்சிக்கும் ஊழலுக்கும் தலைமை தாங்கியது ஜெயலலிதாதான். அவர் பெயரைச் சொல்லி இனி அரசியல் செய்வது தேறாது. இந்த எதிர்ப்பை மட்டுமே வைத்துக்
கொண்டு ஸ்டாலின் அரசியல் செய்யலாம் என்றால், அதுவும் போதாது!”

- நா.சிபிச்சக்கரவர்த்தி படம்: மீ.நிவேதன்