Published:Updated:

திராவிட ஆட்சியில் இரட்டை டம்ளர் இருக்கிறது! - மூத்த பத்திரிகையாளர் சுப்பு

திராவிட ஆட்சியில் இரட்டை டம்ளர் இருக்கிறது! - மூத்த பத்திரிகையாளர் சுப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
திராவிட ஆட்சியில் இரட்டை டம்ளர் இருக்கிறது! - மூத்த பத்திரிகையாளர் சுப்பு

திராவிட ஆட்சி 50 ஆண்டுகள்

திராவிட ஆட்சியில் இரட்டை டம்ளர் இருக்கிறது! - மூத்த பத்திரிகையாளர் சுப்பு

திராவிட இயக்கப் பங்களிப்பால் தமிழகத்துக்கு ஏதாவது பலனுண்டா என்று கேட்டால், என்னுடைய பதில், ‘பெரும்பாலும் நல்லதாக இல்லை’ என்பதுதான். ஒரே சொல்லில்தான் சொல்லவேண்டும் என்ற கட்டாயமிருந்தால், ‘இல்லை’ என்பதுதான் பதில்.

திராவிட இயக்கம், பிராமண ஆதிக்கத்துக்கான எதிர்ப்பு மற்றும் சமூக நீதிக்கான கோரிக்கை ஆகிய நோக்கங்களோடு துவக்கப்பட்டது. இதைத் தவிர அன்று ஆட்சியிலிருந்த ஆங்கிலேயர்களுக்கு ஆதரவான குரலும், இந்து சமயத்தை இழிவு செய்யும் வசைச் சொற்களும் அதில் இருந்தன. ‘அரசு வேலைவாய்ப்புகளில் பெரும்பகுதி பிராமணர்களுக்குக் கிடைக்கிறது. மற்ற சமூகத்தினரின் உரிமை மறுக்கப்படுகிறது. இதைச் சமன் செய்யவேண்டும்’ என்பது முதல் கோஷம். ஆனால், வேலைவாய்ப்புக்கான கோரிக்கை என்பது விடுதலைப்போரில் ஈடுபட்டிருந்த தேசிய வாதிகளுக்கு எதிர்ப்பாகவும், வெள்ளைக்காரன் வெளியே போய்விடக் கூடாது என்று கெஞ்சுகிற இழிநிலையாகவும் மாறிவிட்டது.

வேலைவாய்ப்பு, கல்விநிலையங்களில் வாய்ப்பு என்பதை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால், இது ஓரளவு திராவிட இயக்கத்தின் சமூகநீதிக் கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இந்த சமூகநீதி சட்ட வடிவமாவதற்கு பெருமளவில் காரணமாக இருந்தவர்கள், அன்றிருந்த காங்கிரஸ் அரசும், சட்ட மேதை அம்பேத்கர் அவர்களும்தான் என்பது தமிழக ஊடகங்களில் தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்படுகிற விஷயமாக இருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
திராவிட ஆட்சியில் இரட்டை டம்ளர் இருக்கிறது! - மூத்த பத்திரிகையாளர் சுப்பு

‘சமூகநீதி... சமூகநீதி...’ என்று குரல் எழுப்புகிறவர்கள், சமூகத்தின் ஒரு பகுதிக்கு மட்டுமே நீதியை மறுப்பது ஏன் என்ற கேள்விக்கு பதில் இல்லை. ‘பொருளாதாரப் பின்புலம் இல்லாத முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு செயல்படுத்தப்படாதது ஏன்’ என்ற கேள்வியும் இருக்கிறது. இட ஒதுக்கீடு என்ற ஏணியில் ஏறி வசதிகளைப் பெருக்கிக் கொண்டவர்களும், உயர்பதவியில் இருப்பவர்களும் ஒதுங்கி வழிவிட்டால், அதே பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் அதிகப்படுமே, அதை மறுப்பது எந்த வகையில் நியாயம்?

நாம் மற்ற விஷயங்களுக்கு வருவோம். இவர்கள் ஆரம்பித்தது எங்கே, இப்போது வந்து நிற்பது எங்கே என்பதை விளக்க ஒரு உதாரணம்.

எல்லாக் காதலர்களுக்கும் இருப்பதுபோல் அந்தக் காதலனுக்கும் ஒரு ஆசை வந்தது. தன்னுடைய மனதுக்கு இனியவளை மகிழ்விக்க வேண்டுமென்பது அந்த விருப்பம். யோசித்தான். மீசையில்லாத தன் முகத்தில் மீசை வைத்துக் கொண்டால் காதலி ரசிப்பாள் என்பது அவன் கணக்கு. வைத்துக்கொண்டான். அவளும் ரசித்தாள். அவனுக்குக் கால் தரையில் ஒட்டவில்லை. கொஞ்சம் முயற்சி செய்து மீசையைப் பெரிதாக்கிக் கொண்டான். அவளுடைய நெருக்கம் அதிகமானது. இந்த வழி சுலபமாக இருக்கிறதே என்ற எண்ணத்தில் அடுத்ததாக தாடி வைத்துக்கொண்டான். அதற்கும் அதிகபட்சப் பலன்.

திராவிட ஆட்சியில் இரட்டை டம்ளர் இருக்கிறது! - மூத்த பத்திரிகையாளர் சுப்பு

தாடியின் அளவு வளர வளர, காதலியின் ஆசையும் அதிகமாகிக் கொண்டே போனது. இந்த மர்மம் அவனைக் குடைந்தெடுத்தது. ‘தாடியும், மீசையும் ஒருவனை எப்படிக் கவர்ச்சியாக்க முடியும்’ என்ற கேள்வி அவனைத் துரத்தியது. இறுதியில், நல்ல நண்பன் ஒருவன் அதனை உடைத்து விட்டான். ‘‘நீ எவ்வளவுக்கு எவ்வளவு உன் முகத்தை மூடிக்கொள்கிறாயோ, அவ்வளவுக்கு அவ்வளவு அழகாயிருக் கிறாய்’’ என்றான் நண்பன்.

திராவிட இயக்கம் எவ்வளவுக்கு எவ்வளவு நீர்த்துப் போகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. திராவிட இயக்கப் பின்புலத்திலிருந்து புறப்பட்டு, நாளடைவில் தமிழக மக்களால் மிகப் பெரிய அளவில் நேசிக்கப்பட்ட சி.என்.அண்ணாதுரை, கடவுள் மறுப்புக் கொள்கையை ஒதுக்கி வைத்தார். அதுமட்டுமல்ல, காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்தில் உரையாற்றும் போது, தன்னை மதத்தின் உள்ளே இருந்துச் செயல்படும் துப்புரவாளனாக அடையாளம் காட்டிக் கொண்டார். இந்த விஷயத்தில் தனக்கு முன்னோடியாக சுவாமி விவேகானந்தரைக் குறிப்பிட்டார். இது ஏதோ ஆட்சியில் அமர்ந்த பிறகு செய்து கொண்ட சமரசமல்ல. திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சியாக இருந்தபோதே, இதற்கான அஸ்திவாரம் அமைக்கப்பட்டது. கன்னியாகுமரி கடலுக்குள் இருக்கும் பாறையில், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் நிறுவுவதற்கான முயற்சி மேற்கொண்டபோது அண்ணா துரையும் தி.மு.க-வின் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு ஆதரவளித்தனர்.

துரதிர்ஷ்டவசமாக அண்ணாதுரையின் மறைவு ஏற்பட்டது. அதற்குப் பிறகு தி.மு.க-வின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட மு.கருணாநிதி, கட்சியையும் ஆட்சியையும் ரிவர்ஸ் கியரில் செலுத்தினார். அது அதிக காலம் நீடிக்கவில்லை. ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையுடைய எம்.ஜி.ஆர், ‘காஞ்சிபுரம் சங்கர மடத்தின் எதிரில், ஈ.வெ.ரா-வின் சிலையையும், கடவுள் இல்லை என்ற வாசகத்தையும் அனுமதிக்கமாட்டேன்’ என்று சட்டமன்றத்தில் கருணாநிதியிடம் நேரடியாகத் தெரிவித்தார். எம்.ஜி.ஆருக்குப் பிறகு, அ.தி.மு.க-வின் தலைமைப் பொறுப்பேற்ற ஜெயலலிதாவின் காலத்தில், அ.தி.மு.க ஒரு மாபெரும் பிரார்த்தனைக் கூடமாக மாறிப்போனது என்பது அனைவரும் அறிந்ததே.

சாதி மறுப்பு பேசும் திராவிட இயக்கம், தலித்துகள் விஷயத்தில் செய்தது என்ன? கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, திண்ணியம் என்ற ஊரில், பஞ்சாயத்துத் தலைவரின் ஊழலைப் பற்றிக் கேள்வி கேட்டதற்காக ஏழை தலித் ஒருவர், மனித மலத்தை உண்ணும்படி தண்டிக்கப்பட்டார். இந்த அயோக்கியத்தனத்தைச் செய்தவர் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், பாதிக்கப்பட்டவருக்கு இறுதிவரை நீதி கிடைக்கவில்லை. கூலிப் பிரச்னைக்காக  திருநெல்வேலியிலே ஊர்வலம் போனார்கள், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள். அதில் பெரும்பாலானோர் தலித்துகள். கருணாநிதியால் ஏவப்பட்ட காவல்துறை, அவர்கள் மீது தடியடி நடத்தியது. தடியடியின் விளைவாக தாமிரபரணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர் பலர். இதற்கான நீதியும் இன்றுவரை வழங்கப்படவில்லை.

இப்படி ஏதோ ஒன்றிரண்டு கோளாறுதான் என்று நினைத்துவிட வேண்டாம். ஈ.வெ.ரா தன் வாழ்நாளில் எப்போதாவது, எங்காவது தமிழ்நாட்டுத் தாழ்த்தப் பட்டோருக்காகப் போராடியிருக்கிறாரா? தமிழகத்தின் மனசாட்சியை உலுக்கிய வெண்மணி படுகொலையின் போதுகூட, ஈ.வெ.ரா பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு எதிராகத்தான் பேசினார். மொத்தத்தில், திராவிட ஆட்சியில் இரட்டை டம்ளர் இருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.