Published:Updated:

பன்னீரைப் பார்க்க தீபா போனது எனக்குத் தெரியாது!

பன்னீரைப் பார்க்க தீபா போனது எனக்குத் தெரியாது!
பிரீமியம் ஸ்டோரி
News
பன்னீரைப் பார்க்க தீபா போனது எனக்குத் தெரியாது!

கணவர் மாதவன் தடாலடி

ரம்பித்த வேகத்திலேயே கோஷ்டி மோதல்கள், குழப்ப அறிவிப்புகள் என ‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை’யில் பரபரப்புகளுக்குப் பஞ்சம் இல்லை. முன்பு தீபாவுக்கு ஆதரவு தெரிவிக்க அவர் வீட்டு வாசலில் பெரும் கூட்டம் கூடும்; இப்போது நிர்வாகிகள் நியமனத்தில் நிகழ்ந்த குழப்பங்களுக்கு நியாயம் கேட்க கூட்டம் வருகிறது. 

பன்னீரைப் பார்க்க தீபா போனது எனக்குத் தெரியாது!

ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி ‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை’யைத் தொடங்கி, கொடியையும் வெளியிட்டார் தீபா. அப்போது, பேரவையின் தலைவராக ஆர்.சரண்யா, செயலாளராக ஏ.வி.ராஜா ஆகியோரை நியமனம் செய்துள்ளதாகவும் அறிவித்தார் தீபா. இந்த ஏ.வி.ராஜா என்பவர் தீபாவின் கணவரான மாதவனின் டிரைவர்-உதவியாளர். தலைவரான சரண்யாவோ, ஏ.வி.ராஜாவின் மனைவி. இந்த நியமனத்துக்கு, பலரும் கோபமாக எதிர்ப்பு தெரிவித்ததால், இவர்களிடமிருந்து பதவியைப் பறித்தார் தீபா. இதற்கிடையில், ‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை’யில் முக்கியப் பொறுப்புகள் வாங்கித் தருவதாக உறுதியளித்து, ஏ.வி.ராஜா பலரிடமும் பண வசூலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு கிளம்பியது. ‘நிர்வாகிகள் குறித்துப் புதிய அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லையென்றால் விளைவு வேறு விதமாக இருக்கும்’ என்று தீபாவின் வீட்டு வாசலுக்கு வந்து மிரட்டிச் செல்கிறார்கள் சிலர்.

திருவொற்றியூரைச் சேர்ந்த வழக்கறிஞர் மு.ப.ஜாகிர் உசேன் நம்மிடம், “தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்று ராத்திரி பகலாக பாடுபட்டவங்க வேற.... இப்போ கட்சி ஆரம்பிச்சதும் பதவிக்கு வந்திருக்கிறவங்க வேற... யார் சார் இந்த ராஜா, சரண்யா? பொறுப்பிலிருந்தே தூக்கி விட்டாலும், இப்பவும் கட்சியோட எல்லா முடிவுகளையும் இவங்கதான் எடுத்துக்கிட்டு இருக்காங்க. இவங்களோட ஆட்கள் 13 பேர்தான் எப்போதும் தீபாவை சுத்தியே இருக்காங்க. தீபாவை யாரும் பார்க்க விடாம தடுக்கறாங்க. உள்ள என்ன நடக்குதுன்னே யாருக்கும் தெரியல. ஜெயலலிதா அம்மாகூடதான் ஒரு கும்பல் இருந்துச்சுன்னா, தீபா அம்மா கூடவும் ஒரு கும்பல் இருக்குது. இவங்களோட செயல்பாடு பிடிக்காமத்தான் பல தொண்டர்கள் இங்கிருந்து வேறபக்கம் போயிட்டாங்க” என்றார் கோபத்துடன்.

பேரவைக்குள் நடக்கும் குழப்பங்கள் குறித்து, தீபாவின் கணவரான மாதவனிடம் பேசினோம். ‘‘இங்கே குழப்பமும் இல்லை. தொண்டர்கள் அதிருப்தியாகவும் இல்லை. இது எல்லாமே சில பேரோட சதிதான். தேவை இல்லாத விஷயங்களை அவங்கதான் செய்றாங்க. இந்தக் கட்சியை அழிக்கணும்னு சிலர் முடிவு பண்ணி செயல்படுறாங்க. நான் தீபாவுடன் இருக்கிறவரைக்கும் எல்லா சதிகளையும் முறியடிப்பேன்.”

“ஆரம்பத்துல ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவுன்னு சொல்லிட்டு, அப்புறம் தனியா வந்துட்டீங்களே?”

“ஓ.பன்னீர்செல்வத்தை தீபா பார்க்கப் போனதே எனக்குத் தெரியாது. டி.வி-யைப் பாத்துதான் நானே தெரிஞ்சிக்கிட்டேன். இங்க எல்லாமே தீபாவோட முடிவுதான். அவர் எது செய்தாலும் அது கட்சியின் வளர்ச்சிக்காகத்தான் இருக்கும். அவரின் செயல்களில் நான் தலையிடமாட்டேன்.  அவருக்கு ஆலோசனை தேவைப்படும் பட்சத்தில் ஆலோசனை வழங்குவேன்.”

“தீபாவைப் பார்க்கவிடாம தொண்டர்களை நீங்கதான் தடுக்கிறீங்களாமே?”

“அப்படியெல்லாம் இதுவரை நான் செய்தது இல்லை. இன்றுவரை தீபாவைச் சந்திக்க வரும் தொண்டர்களை முதலில் பார்த்துப் பேசுவதே நான்தான். யார் வந்தாலும் தீபாவிடம் சொல்லிவிடுவேன். தீபாவும் தொண்டர்களைச் சந்தித்து வருகிறார். நான் ஒருபோதும் தொண்டர்களைத் தடுத்ததே இல்லை.”

“கட்சியைப் பற்றி தீபா ஓர் அறிக்கை வெளியிடுகிறார்... நீங்கள் ஓர் அறிக்கை வெளியிடுகிறீர்கள் எனச் செய்திகள் வருகின்றன. ஏன் இந்தக் குழப்பம்?”

“நான் இதுவரைக்கும் எந்த அறிக்கையும் வெளியிட்டது கிடையாது. பத்திரிகையாளர் களிடமும் கட்சி சம்பந்தமாக எதுவும் சொன்னது இல்லை. சில பத்திரிகைகளில் நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாகச் செய்திகள் வெளியிடுகிறார்கள். சமூக வலைதளத்திலும் இப்படிச் செய்கிறார்கள். ஆனால், தீபாவின் சம்மதம் இல்லாமல் எதையும் நான் அறிவிக்க மாட்டேன்.”

“தீபாவுக்கும், உங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் எழுந் துள்ளதாகப் பேசப்படுகிறதே?”

“எனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடு என்று சமூக வலைதளங்களில் வேண்டு மென்றே சிலர் பரப்பி வருகின்றனர். அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. எங்கள் கட்சியை உடைப்பதற்கு சில விஷக்கிருமிகள் செய்யும் நாசவேலைகள்தான் இவை. இதுபோன்ற செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்.”

‘‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையை ஆரம்பிக்க, சிலர் உங்களுக்குப் பண உதவி செய்துவருவதாக சொல்லப்படுகிறதே?”

“நான் என்ன சொல்றதுன்னு தெரியல சார்! ஒருத்தரைப் பிடிக்கலன்னா, அவங்க ஒரு செருப்பு வாங்கினாக்கூட அது யாரோ கொடுத்த பணத்தில்தான் வாங்கினதுன்னு சொல்வாங்க...”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz


“உங்களுக்கு மிரட்டல் ஏதேனும் வந்துள்ளதா?”

“என்னை ஒழித்துக் கட்டவேண்டும் என்று ஒரு கூட்டமே செயல்பட்டு வருகிறது. அடிக்கடி மிரட்டல்கள் வரும். ஆனால், எதற்கும் நான் பயப்படமாட்டேன். கடைசிவரை என் மனைவிக்குப் பக்கபலமாக இருப்பேன்.”

இதையெல்லாம் பேசுவதற்கு அவர் தீபாவிடம் அனுமதி வாங்கினாரா என்பது தெரியவில்லை.

- ஜெ.அன்பரசன் படம்: சொ.பாலசுப்ரமணியன்