மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சசிகலா ஜாதகம் - 23 - “பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு... கழற்றாமல் விடமாட்டேன்!”

சசிகலா ஜாதகம் - 23 - “பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு... கழற்றாமல் விடமாட்டேன்!”
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா ஜாதகம் - 23 - “பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு... கழற்றாமல் விடமாட்டேன்!”

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

தினகரன் பற்றி ஜெயலலிதாவுக்கு வழக்கறிஞர் ஜோதி எழுதிய கடிதத்தில் அப்படி என்னதான் இருந்தது? 19.5.2007 தேதியிட்டு எழுதப்பட்ட 19 பக்கக் கடிதத்தில் இடம்பெற்ற விஷயம் என்ன?

சசிகலா ஜாதகம் - 23 - “பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு... கழற்றாமல் விடமாட்டேன்!”

மாண்புமிகு அம்மா மற்றும் மதிப்புக்குரிய சின்னம்மா அவர்களுக்கு,

ஜோதி எழுதிக்கொள்வது!


வழக்குகள் ஒரு நிலைக்கு வரட்டும் என அமைதி காத்துவிட்டு இப்போது இந்தக் கடிதத்தை அனுப்புகிறேன். கடந்த 3.4.2007 அன்று, இரவு இடி இறங்கியது போல் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தோட்டத்தில்தான் இருந்தேன். அதற்கு சில வாரங்கள் முன்பு சில நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பெங்களூரு நீதிமன்றத்தில் ‘சொத்து வழக்கையும், லண்டன் ஓட்டல் வழக்கையும் ஒன்றாக விசாரிக்க வேண்டும்’ என்ற மனுவின் மீது, நீதிபதி பச்சபூரே, நமக்கு ஏற்ற உத்தரவைப் போட்டார். இந்த வழக்கில் அம்மா, சின்னம்மா, அண்ணி (இளவரசி) ஆகியோருக்காக நானும், சுதாகரன், தினகரன் ஆகியோருக்காக அவரவர் வக்கீல்களும் பேச வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அந்த இரண்டு வழக்குகளையும் ஒன்று சேர்க்க வேண்டும் என நான் எடுத்த முடிவுக்குக் காரணம், அதில் சட்ட முறையிலான பல அனுகூலங்கள் உள்ளன என்பதுதான்.

எனது உடல் நலம் சரியில்லாத நிலையில் வாய்தா வாங்கச் சொல்லிக் கேட்டபோது தினகரனின் வழக்கறிஞர் உரிய ஒத்துழைப்பு தரவில்லை. எழுந்து நிற்கக்கூட சக்தியில்லாத நான், நான்கு நாட்கள் வழக்காடினேன். நீதிபதி நமக்கு சாதகமாகத் தீர்ப்பு அளித்தார். இதற்காக தி.மு.க உச்ச நீதிமன்றம் சென்றது. இந்த விஷயத்தில் தினகரனின் வக்கீல், உச்ச நீதிமன்றத்தில் எந்தவிதமான ஆர்வத்தையும் காட்டவில்லை. இறுதியாக 9.4.2007 அன்று வழக்கு போடப்பட்ட
போது வாய்தா வாங்கவேண்டிய நிலை நமக்கு இருந்தது. அந்தச் சூழ்நிலையில் சுதாகரன், தினகரன் சார்பில் எந்தவிதமான பதிலும் தாக்கல் செய்யப்படவில்லை. இவர்கள் உதவி இருந்தால்தான் வாய்தா கிடைக்கும்... இல்லையென்றால் வழக்கை 18.5.2007 அன்றுக்குள் முடிக்க தேதி குறித்துவிடுவார்கள். சுதாகரனின் வழக்கறிஞர் ஒத்துக்கொண்டார். 9.4.2007 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாத வகையில், 4.4.2007 மாலை 4 மணிக்குள் வாய்தா கேட்டு, தினகரனின் வழக்கறிஞர் ரிஜிஸ்டிரியில் கடிதம் தர வேண்டும். தினகரன் வழக்கறிஞர் கே.கே.மணியிடம் வாய்தா கேட்கச் சொன்னேன். இதோ, அதோ என்றவர், 2.4.2007 அன்று கடைசி நேரத்தில் ‘நீ சொன்னால் நான் கேட்க முடியாது, என் கட்சிக்காரர் சொன்னால்தான் கேட்பேன்’ என்றார். அதிர்ச்சி அடைந்த நான், மறுநாள் 3.4.2007 அன்று சின்னம்மாவிடம் விஷயத்தைச் சொன்னேன். ‘தினகரனிடம் சொல்லி, அவர் வக்கீலிடம் சொல்லச் சொல்ல வேண்டும்’ என்றேன். ‘சரி’ என்றார். அன்று இரவு 9.30 மணிக்கு தினகரனிடமிருந்து எனக்கு போன்.

சசிகலா ஜாதகம் - 23 - “பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு... கழற்றாமல் விடமாட்டேன்!”

சுமார் 55 நிமிடங்கள் கீழ்த்தரமாக, அசிங்கமான வார்த்தைகளால், அநாகரிகமான முறையில் பேசினார். அதிர்ச்சி அடைந்த நான், தோட்டத்தில் உள்ள பலா மரத்தின் அடியில் செய்வதறியாமல் உட்கார்ந்துவிட்டேன். இடி இறங்கியதுபோல் மனம் வேதனைப்பட்டது. அவர் பேசிய நாகரிகமான பகுதிகளை மட்டுமே குறிப்பிடுகிறேன்.

தினகரன்: ‘என்னுடைய வக்கீலிடம் நீ எப்படி பேசலாம்? நேரடியாக பேசுவதற்கு உனக்கு என்ன உரிமை? அவரை வாய்தா கேட்க சொல்வதற்கு நீ யார்?’

நான்: ‘இன்று புதிதாக அவருடன் பேசவில்லை. பல ஆண்டுகளாகப் பேசிக்கொண்டு இருக்கிறேன்.’

தினகரன்: ‘நீ அவர் சம்பந்தியாகக்கூட இரு. ஆனால், பேசியது எனது வழக்குப் பற்றி. என் வழக்கு பற்றி நீ எப்படி என் வக்கீலிடம் பேசலாம்.’

நான்: ‘பலர் ஒன்றுபட்ட வழக்கில் ஒரே நோக்கமுள்ள கட்சிக்காரர்களுக்காக ஆஜராகும் இரண்டு வழக்கறிஞர்கள் பேசிக்கொள்வது சாதாரண விஷயம். எதிர்தரப்பு வக்கீலிடம் பேசுவதுதான் தவறு. ஒருவருக்கொருவர் ஆதரவான வழக்கறிஞர்களிடம் பேசுவதில் என்ன தவறு?’

உடனடியாக என்னை அவர் ஒருமையில் ‘வாடா, போடா’ என்றார். ‘60 வயதாகும் உனக்கு மண்டையில் மூளை இருக்கிறதா? நீ எல்லாம் எப்படி வக்கீல் வேலைக்கு வந்தாய்’ என்றார். ‘பிறகு பேசிக்கொள்ளலாம்’ என்றேன். மறுபடியும் தரக்குறைவாகப் பேசினார். ‘எங்கள் குடும்பத்தில் பிரச்னை செய்கிறாயா? என்னைப் பற்றி உனக்குத் தெரியாது. நான் செயல்பட ஆரம்பித்தால் நீ தாங்க மாட்டாய்’ என்றார். ‘இப்போது நீ எங்கே இருக்கிறாய்’ எனக் கேட்டார். ‘நான் வெளியில் இருக்கிறேன்’ என்றேன். அதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், ‘இப்போது உன்னை சித்தி பார்த்ததாகச் சொல்கிறார். ஆனால், நீ வெளியூரில் இருப்பதாகச் சொல்கிறாயே, ஏண்டா பொய் சொல்கிறாய்’ என்றவர், ‘நீ எங்கே இருக்கிறாய் என்று தெரிந்தால், வந்து உதைக்கப் போகிறேன். அதற்குத்தான் கேட்கிறேன்’ எனச் சொன்னார். அதற்கு நான், ‘நீங்கள் இவ்வளவு சிரமப்பட வேண்டாம். உங்கள் வீட்டுக்கு நானே வருகிறேன். என்ன செய்ய வேண்டுமோ செய்யுங்கள்’ என்றேன். தொடர்ந்து பலமுறை அசிங்கமாகப் பேசினார். நான் தொலைபேசியை கட் செய்தாலும் மறுபடியும் மறுபடியும் லைனில் வந்தபடி இருந்தார். இப்படி அவர் இழிவாகப் பேசியது இது முதல் முறையல்ல, மூன்றாவது முறை.

நான் (ஜோதி) பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு. அதனால் ஆட்டம் போடுகிறேன் என்றும், அம்மாவின் அன்புக்குப் பாத்திரமாக இருக்கிறேன் என்றும் கூறினார். ‘அந்தப் பாம்பை வெளியே எடுத்துக் கொல்லும் வித்தை தனக்குத் தெரியும்’ என்றார். தன் வழியில் குறுக்கிட்டவர்களை கட்சியில் காணாமல் செய்திருப்ப தாகவும், தற்போது என் முறை வந்துவிட்டது என்றும் சொன்னார். ‘நீ ரொம்பவும் துள்ளுகிறாய், நல்ல பிள்ளையாக நடிக்கிறாய். இந்த நடிப்பைக் கண்டு அம்மாவும், சின்னம்மாவும் ஏமாறலாம். என்னை ஏமாற்ற முடியாது’ என்றார். ‘இனிமேல் உன்னை விட்டுவைப்பது தவறு. எனக்கு சென்னையிலும், பெங்களூரிலும் ஆட்கள் இருக்கிறார்கள். உன்னை எப்படி ஒழிப்பது என்று எனக்குத் தெரியும்’ என்றார். ‘நீ ஒரு அப்பனுக்குப் பிறந்தவனா? உன் தாய் ஒருவனுக்குத்தான் உன்னைப் பெற்றாளா? உன் பிறப்பிலே குற்றம், உன் கருவில் குற்றம் இருக்கிறது’ என்றெல்லாம் பேசினார். இதே வார்த்தைகளை வேறு யாராவது பேசியிருந்தால், அந்த மனிதர் அடைந்திருக்கும் கதியே வேறு. சின்னம்மாவின் அக்கா மகன் என்ற ஒரே ஒரு தகுதிதான். அதுதான் இவரை கண் மண் தெரியாமல் ஆக்கியிருக்கிறது. இவருக்குப் பாம்பு மட்டும் பிடிக்கவில்லையா? அல்லது பரமசிவனையும் சேர்த்தே பிடிக்கவில்லையா? என் மதிப்பில் வீழ்ந்துவிட்ட இவரை இனி எப்போதும் பார்க்கக்கூடாது. இனிமேல் அவர் திருந்துவார் என்ற நம்பிக்கை எனக்கில்லை. காலம் இவருக்குப் பதில் சொல்லும். எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது.

சசிகலா ஜாதகம் - 23 - “பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு... கழற்றாமல் விடமாட்டேன்!”

இந்தச் சூழ்நிலையில் நான் கட்சியில் தொடர்வதும் வழக்கினை நடத்துவதும் சரியாக தோன்றவில்லை. அரசியலின் அடிப்படை பாடமே அரவணைத்துச் செல்வதுதான். அதற்கு இவர் தயாராக இல்லை. எல்லோரையும் சூழ்ச்சி செய்து கட்சியை விட்டு விரட்டிவிட்டு, இவர் மட்டும் தனியாக சாம்ராஜ்யம் நடத்தப் போகிறாரா? இவருடைய வக்கீலிடம் பேசியதற்கு இந்தப் பேச்சு பேசுகிறார். என்னை அப்புறப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வந்துவிட்டது. ‘எதற்கோ நான் குறுக்கே நிற்கிறேன்’ என்று இவருக்குத் தோன்றிவிட்டது. அவர் மொழியில் சொல்வதென்றால் நடுத்தெருவில் நான் அடிபட்டு சாகப் போகின்றேன். என்னைக் கொலை செய்துவிட்டு அதன் விளைவாக இவர் சிறைக்குச் செல்ல வேண்டாம். நானே விலகி விடுகிறேன். நான் யாருக்கும் பயப்படுபவன் அல்ல. தகுதியில்லாத மனிதர்களிடம் இருந்து தகுதிக் குறைவான வார்த்தைகளை இனியும் பெற விரும்பவில்லை. வழிப்போக்கனாக வந்தேன். அப்படியே போய்விடுகிறேன். எப்பேர்ப்பட்ட இந்திரலோகப் பதவியாக இருந்தாலும், இவ்வளவு மான அவமானங்களுக்குப் பிறகு அது எனக்குத் தேவையில்லை.

அற்ப அரசியல் சுகங்களுக்கு ஆசைப்பட்டு ஒரு சர்வ சாதாரண மனிதன் என் தாய், தகப்பனாரை விமர்சிக்கும் அளவுக்கு அவர்களுக்கு அவமானத்தைத் தேடித் தந்துவிட்டேன். என் நிழலைக்கூட தொட யோக்கியதை இல்லாத மனிதன், என்னைப்பற்றி பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. ‘இதையெல்லாம் நான் பேசியதற்காக நீ எங்கே போவாய் என்று எனக்குத் தெரியும், பரவாயில்லை, அங்கு போய்ச் சொல், அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. அதை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியும்’ என்றார். ஆக, உங்களைப் பற்றிய கவலைக்கூட அவருக்கு இருக்கவில்லை. அவர் எதையும் விட்டு வைக்கவில்லை. எல்லாம் தெரிந்துதான் பேசினார். எனவேதான், நான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன்.


- ந.ஜோதி

தனது எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்துவிடுவதாக கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். தனது பதவிக்காலம் முடிந்தபிறகு ‘எம்.பி பென்சன்கூட வேண்டாம்’ என எழுதிக் கொடுத்துவிட்டார்.

(தொடரும்)