
எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி
டிசம்பர் 6, 2016. எம்.ஜி.ஆர் சமாதி. சசிகலாவுக்குப் பக்கத்தில் நின்றபடியே ஜெயலலிதாவுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்த இளைஞரை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது தமிழகம். அவர், ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகன் தீபக். அத்தைக்கு இறுதிச் சடங்கை நடத்திய அந்த தீபக், சரியாக 23 ஆண்டுகளுக்கு முன்பு அதே இடத்தில் ஜெயலலிதாவைப் பார்க்கத் துடித்தபோது தடுக்கப்பட்ட வரலாறு பலருக்கும் தெரியாது.



முதல்வராக இருந்த ஜெயலலிதா, காவிரிப் பிரச்னைக்காக 1993 ஜூலை 18-ம் தேதி எம்.ஜி.ஆர் சமாதியில் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கியிருந்தார். அப்போது சிறுவனாக இருந்த தீபக், அத்தையைப் பார்க்க ஓடோடி வந்தபோது விரட்டியடிக்கப்பட்டார். ‘‘ஆன்ட்டி... ஆன்ட்டி...’’ என தீபக் கதறிய காட்சிகள் காற்றில் கரைந்தன. ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கை நடத்த சசிகலாவால் கைப்பிடித்து அழைத்துவரப்பட்ட தீபக்கை, அன்றைக்கு அப்பா ஜெயக்குமார்தான் கரம் பற்றி அழைத்து வந்தார். அவர்கள் தடுக்கப்பட்டதற்குப் பின்னால் இருந்தது, ஒரு பெரிய சதி. பின்னணியில் இருந்தது, கஞ்சா வழக்கு ஒன்று!

உதவியாளர்கள், உறவுகள், நண்பர்கள், நம்பிக்கையாளர்கள் என ஜெயலலிதாவின் உள்ளத்தில் இருந்தவர்கள் சசிகலாவின் ‘சதி’ராட்டத்தில் ஒவ்வொருவராகச் சாய்ந்து கொண்டிருந்தார்கள். அதில் மேகநாதனும் ஒருவர்். 1991-ம் ஆண்டு ஜெயலலிதா முதன் முறையாக ஆட்சிக்கு வந்தபோதுதான் புதுக் கலாசாரமாக, கஞ்சா வழக்குகள் அறிமுகம் ஆகின. எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தின் நிர்வாகி முத்துதான் கஞ்சா வழக்கில் கைதான முதல் அரசியல் நபர். இரண்டாவது, மேகநாதன். ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் உதவியாளராக இருந்தவர்தான் மேகநாதன் எனும் சுந்தரேசன்.
தாய் சந்தியாவுடன் ஜெயலலிதாவும் ஜெயக்குமாரும் இருந்த காலத்திலிருந்தே வேலை பார்த்து வந்தவர் மேகநாதன். சசிகலா வரவால் போயஸ் கார்டனில் இருந்து தி.நகர் சிவஞானம் தெருவுக்குக் குடும்பத்துடன் குடிபெயர்ந்திருந்தார் ஜெயக்குமார். (அங்கேதான் ஜெயக்குமாரின் மகள் தீபா இப்போது வசிக்கிறார்) மேகநாதனுக்குத் திருமணமாகி குழந்தையும் இருந்தது. உடல்நலம் சரியில்லாமல் இருந்த ஜெயக்குமாருக்குச் சகல பணிவிடைகளையும் மேகநாதன்தான் செய்து வந்தார். அதனால் அவர்மீது ஜெயக்குமாருக்குப் பற்றுதல் அதிகம். போயஸ் கார்டன் வீட்டுக்கு ஜெயக்குமாரும் அவரின் மனைவி விஜயலட்சுமியும் அடிக்கடி போய் வருவார்கள். கூடவே தீபாவும் தீபக்கும் செல்வார்கள். தான் கார்டனுக்குப் போக முடியாத சூழலில் மேகநாதன் மூலமாகத்தான் ஜெயலலிதாவைத் தொடர்புகொள்வார் ஜெயக்குமார்.
இப்படிப்பட்ட சூழலில்தான் 1993-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி மேகநாதனை, பாண்டி பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு அதிரடியாக கஞ்சா வழக்கில் அள்ளிக்கொண்டு போனார். பதறிப்போன ஜெயக்குமார் இன்ஸ்பெக்டர் பாபுவிடம் பேசியபோது, ‘‘எனக்கு எதுவும் தெரியாது’’ எனக் கையை விரித்துவிட்டார். ‘‘முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் நான். மேகநாதன் என் உதவியாளர்தான். அவரை ஏன் போலீஸ் அழைத்துப் போனது?’’ என ஜெயக்குமார் கதறலோடு கேட்ட எந்தக் கேள்விக்கும் காக்கிகளிடம் பதில் இல்லை. ஒருவழியாக விஷயம் தெரியவந்தபோது மேகநாதன் சிறைக்குள் தள்ளப்பட்டிருந்தார். அடுத்த நாள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் அருணா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். ‘‘மேடம்... நான் எந்தத் தப்பும் செய்யவில்லை’’ என மேகநாதன் நீதிமன்றத்திலேயே கதறி அழுதார். ஆனாலும், அவரை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டது நீதிமன்றம்.

1991-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வென்று முதன்முறையாக அரியணையில் அமர்ந்தார் ஜெயலலிதா. ஜூன் 24-ம் தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. பார்வையாளர் பகுதியில் முதல் வரிசையில் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் குடும்பத்தினரை முக்கியத்துவம் கொடுத்து அமர வைத்திருந்தார்கள். மனைவி விஜயலட்சுமி, பிள்ளைகள் தீபா, தீபக் ஆகியோருடன் ஜெயக்குமார் அமர்ந்திருந்தார். சசிகலாவுக்குக்கூட இந்த அளவுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. ஜெயக்குமார் குடும்பத்தினர் எங்கு சென்றாலும் அரசு அதிகாரிகள் உரிய மரியாதை அளித்தனர். எந்த அளவுக்கு அவர்களுக்கு மரியாதை தரப்பட்டது என்பதற்கு சாம்பிள் இது!

திருச்சிக்குக் குடும்பத்தினருடன் ஜெயக்குமார் சென்றபோது, அவர்களை மாவட்ட கலெக்டர் வரவேற்று விருந்தினர் மாளிகையில் தங்க வைத்தார். அதே நேரத்தில்தான் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம்பெற்ற முத்துசாமியும் அரசு விழாவில் பங்கேற்பதற்காகத் திருச்சிக்கு வந்தார். இன்னோர் அமைச்சர் செல்வ கணபதியும் வேறு வேலையாக அங்கே போயிருக்கிறார். விருந்தினர் மாளிகையில் இருந்த மூன்று ‘சூட்’களும் ஃபுல்லாகிவிட்டதால் முத்துசாமியும் செல்வகணபதியும் வேறு இடத்துக்குப் போய்விட்டார்கள். ஜெயலலிதாவின் அண்ணன் குடும்பம் என்பதால் அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரையில் சல்யூட் அடித்தார்கள். ஜெயக்குமார் குடும்பத்தினர் முதல்வருக்கு நெருக்கமாவதையும் செல்வாக்கு பெறுவதையும் சசிகலா குடும்பம் ரசிக்கவில்லை. ஜெயக்குமார் குடும்பத்துக்கும் ஜெயலலிதாவுக்கும் மீடியேட்டராகச் செயல்பட்ட மேகநாதன்தான் முதல் இலக்கானார். அவர்மீது கஞ்சா வழக்கு பாய்ந்தது.
நொந்துபோன ஜெயக்குமார், முதல்வர் வீட்டுக்குப் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பேசமுடியவில்லை. ‘‘முதல்வர் தூங்குகிறார்... மீட்டிங்கில் இருக்கிறார்... பிஸியாக உள்ளார்’’ என ரெடிமேடு பதில்கள்தான் கிடைத்தன. ஜாமீன் மனு போட்டார்கள். அது தள்ளுபடி ஆனது.
சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் நடந்தது என்ன?
(தொடரும்)