Published:Updated:

“அண்ணன்-தம்பி சண்டையை உள்ளே வெச்சு பார்த்துக்கலாம்!”

“அண்ணன்-தம்பி சண்டையை உள்ளே வெச்சு பார்த்துக்கலாம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“அண்ணன்-தம்பி சண்டையை உள்ளே வெச்சு பார்த்துக்கலாம்!”

ஓ.பி.எஸ்-ஸுக்கு செந்தில் அழைப்பு!

டந்த வாரத்தில் ஒருநாள்... செந்தில், சிங்கமுத்து, குண்டு கல்யாணம், வையாபுரி, பொன்னம்பலம், வாசுகி, அனுமோகன், அனிதா குப்புசாமி, அஜய்ரத்னம், பபிதா... என்று அ.தி.மு.க நட்சத்திரப் பட்டாளம் அ.தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் முன் திரண்டது. அவர்களை லைனில் பிடித்து என்ன விவகாரம் என்று கேட்டோம்.

செந்தில்: ‘‘மூன்று முறை முதல்வர் பதவி கொடுத்த அம்மாவுக்குத் துரோகம் செய்துவிட்டு போய்விட்டார் ஓ.பி.எஸ். உண்மையில் அவர் நல்லவர்தான். அவருடன் சில புல்லுருவிகள் ஊடுருவி அவரை இப்படி ஆக்கிவிட்டார்கள். அவர்கள் தி.மு.க-விடம் விலை போய்விட்டவர்கள். அவர்களின் கைப்பாவையாக ஓ.பி.எஸ் மாறிவிட்டார். எங்க பிரச்னையில் தி.மு.க-காரன் குளிர் காயறான். ஓ.பி.எஸ் இதைப் புரிஞ்சுகிட்டு திரும்பி வரணும். பேச்சாளர்கள் சந்திப்பில், ‘நீங்க எல்லோரும் கட்சிக்கு நம்பிக்கையா இருங்க’னு தினகரன் சொன்னார். அப்புறம், போனவங்களையெல்லாம் (நடிகர்கள்) சந்திச்சுப் பேசி திரும்பக் கழகத்துக்குக் கொண்டுவரச் சொல்லியிருக்கிறார்.

“அண்ணன்-தம்பி சண்டையை உள்ளே வெச்சு பார்த்துக்கலாம்!”

ஓ.பி.எஸ்-ஸுக்கு ஒண்ணு சொல்லிக்க விரும்பறேன். திரும்ப வந்திடுங்க... அண்ணன் -  தம்பி சண்டையை உள்ளே வெச்சுப் பார்த்துக்கலாம்.’’

குண்டுகல்யாணம்: ‘‘கட்சியின் நெருக்கடியான நேரத்தில், மக்களின் மனத்தைத் திசைமாற்றும் விதமாக  புரளிகளைக் கிளப்பி விட்டுக்கொண்டிருக்கிறார் ஓ.பி.எஸ். அதனால், அவற்றை முறியடிக்கும்படி பேச, தினகரன் அறிவுரை சொன்னார். அம்மா காலத்திலேயே கட்சியில் பிளவு உண்டாகியிருக்கிறது. ஆனால், கட்சியையோ, அம்மாவையோ யாரும் வீழ்த்த முடியவில்லை. தன்னை வீழ்த்த நினைத்தவர்களையும்கூட தாயுள்ளத்தோடு ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார். அவரின் வழியில் நடக்கிற சின்னம்மாவும் தினகரனும்கூட அப்படி ஒரு குணம் கொண்டவர்கள்தான்.”

வையாபுரி: ‘‘நட்சத்திரப் பேச்சாளர்களைச் சந்திக்க வேண்டும் என்று தலைமை சொன்னதால் சென்றேன். மற்றபடி, கூட்டத்தில் நான் பேசவில்லை. ‘தனக்குப்பின்னும் அ.தி.மு.க பல நூறு ஆண்டுகள் இயங்க வேண்டும்’ என்பதுதான் அம்மாவின் கனவு. ஆனால், இப்படி ஒரு பிளவு உருவாகியிருப்பது வேதனையாக இருக்கிறது. எனவே, அம்மாவின் கனவு நிறைவேறப் பாடுபடும் தொண்டனாக நடுநிலை வகிக்கவே நான் விரும்புகிறேன். ‘இவர் ஆள், அவர் ஆள்’ என சொல்லிக்கொள்ள விரும்பவில்லை. ‘இரண்டு அணிகளும் ஒன்றிணைந்து அம்மாவின் கனவை நிறைவேற்ற வேண்டும்’ என்பது என் கருத்து. எனக்கு மேடைப்பேச்சைக் கற்றுக்கொடுத்தவர் அம்மா. அ.தி.மு.க-வைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட யாருக்கும் செல்வாக்கு இல்லை. ஓட்டு கேட்கச் செல்லும்போது 234 தொகுதிகளிலும் ‘அம்மாவுக்கு வாக்களியுங்கள்’ என்றுதான் கேட்கிறோம். அதனால் இரட்டை இலை, யாரிடம் வருகிறதோ அவர்கள்தான் அம்மாவின் ஆசையை நிறைவேற்றுபவர்களாக இருப்பார்கள். அதனால் அவர்களே என் சாய்ஸ்.’’

பொன்னம்பலம்: ‘‘எங்களுக்கான பணிகள் குறித்து தினகரன் பேசினார். அதே சமயம், நாங்களும் சில கோரிக்கைகளை அவரிடம் முன்வைத்தோம். பொதுவாக நடிகர்கள் கட்சி நிலைப்பாடு எடுக்கும்போது அவர்களது தொழில் பாதிக்கப்படும். ‘அவன் அந்தக் கட்சிக்காரன்ப்பா’ என்று வாய்ப்பு தர மாட்டார்கள் தயாரிப்பாளர்கள். அந்த ரிஸ்க்கை மீறித்தான் கட்சிப்பணி செய்கிறோம். அதனால், எங்களில் சிலருக்குக் கட்சிப்பொறுப்போ, அல்லது பதவிகளோ தரச் சொல்லி வேண்டுகோள் வைத்தோம். கட்சியில் பன்னீர்செல்வம் பிளவு ஏற்படுத்தியதைவிட, ‘அம்மாவின் மரணத்தில் சர்ச்சை கிளப்புவது’தான் மோசமான விஷயம். 75 நாள்களும் உடன் இருந்துவிட்டு இன்று பதவி போனதும், சர்ச்சை கிளப்புவது ஒன்றே அவரது நேர்மையின்மையைக் காட்டுகிறது.”

வாசுகி: ‘‘இந்தச் சந்திப்பில் தினகரன் அண்ணன் உருக்கமாகப் பேசினார். அப்போது, ‘நிர்வாகிகள் ஆயிரம் பேர் இருந்தாலும் மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் மனநிலையை அறியும் வாய்ப்பு என்பது பேச்சாளர்களுக்கு மட்டும்தான் உள்ளது. எனவே, அம்மா மீதும் ஆட்சி மீதும் உள்ள விமர்சனங்களை மக்கள் நம்பிவிடாதபடி பேச வேண்டும். அம்மா இல்லாத நேரம் கட்சியில் பிளவை ஏற்படுத்திவிட்டார் ஓ.பி.எஸ். மற்றவர்களைப்போல் தேவையற்ற வாக்குறுதிகளை நம்பி ஏமாந்துவிடாதீர்கள். அம்மா காலத்திலும் அ.தி.மு.க., ஜெ - ஜா என இரண்டு அணியாகப் பிரிந்தது. ஆனால், கட்சியினர் எதற்கும் விலைபோகாமல் அம்மாவை நம்பியதால், சோதனைகளையெல்லாம் வென்று அ.தி.மு.க-வைத் தக்கவைக்கமுடிந்தது. அதனால் உங்களில் யாரும் சலனப்படாமல் கட்சிப்பணி ஆற்றுங்கள். முன்பைவிட இப்போதுதான் உங்களுக்குப் பொறுப்பு கூடியிருக்கிறது. நன்றாகப் பேச வேண்டும்’ என்று விரிவாக எடுத்துச் சொன்னார். அவர் சொன்னதை நாங்கள் ஏற்றுக் கொண்டோம்.’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“அண்ணன்-தம்பி சண்டையை உள்ளே வெச்சு பார்த்துக்கலாம்!”

அனுமோகன்: ‘‘ஓ.பி.எஸ் எங்களுக்கு எதிராகப் பேசுவதும், நடந்துக்கறதும் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான். இதில் எங்க துணைப் பொதுச்செயலாளர் உறுதியா இருக்கார். இன்னும் கொஞ்சநாள்ல ஒவ்வொருத்தரா எங்க பக்கம் வந்திடுவாங்க. கடைசியா யாரும் இல்லாமப்போய் ஓ.பி.எஸ்-ஸும் வந்திடுவார். இதுதான் நடக்கப்போகுது. அதனால்தான் பேச்சாளர்கள் சந்திப்பில்கூட ‘கூட்டத்துல அரசோட சாதனைகளைப்பற்றி மட்டும் பேசுங்க. நம்மகிட்ட இருந்து பிரிஞ்சு போனவங்களைப் பற்றித் தரக்குறைவா எதுவும் பேசக்கூடாது. என்னிக்கு இருந்தாலும் நம்மகிட்ட திரும்பிவரப் போகிறவங்க அவங்க. எப்பவும் அவங்க அ.தி.மு.க-தான்’னு அண்ணன் ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாரு.”

அனிதா குப்புசாமி: ‘‘துணைப் பொதுச் செயலாளராகப் பதவியேற்றிருக்கும் தினகரனை மரியாதை நிமித்தமாகச் சந்திக்கச் சென்றேன். அம்மா மீது இருந்த 13 வழக்குகளில், 12 வழக்குகளில் அவர் நிரபராதி என்று நிரூபித்துள்ளார். இப்போது அவர் உயிருடன் இருந்திருந்தால் இந்த வழக்கிலும் அவர் நிரபராதி என்று நிரூபித்திருப்பார். அம்மா மீது இருக்கும் பழியைப் போக்கவே இப்போது சின்னம்மா போராடுகிறார்.”

சிங்கமுத்து: ‘‘அ.தி.மு.க-வில் எந்தக் குழப்பமும் இல்லை. பிரிந்து செயல்படும் ஓ.பன்னீர்செல்வம், தனித்துச் செயல்படும் தீபா ஆகியோர்தான் குழப்பங்களை ஏற்படுத்துகிறார்கள். நாங்களும் சரி, தீபா அல்லது ஓ.பன்னீர்செல்வமாக இருந்தாலும் சரி... அம்மா வழியில்தான் கட்சியை நடத்த முயற்சி செய்கிறோம். ஆனால், மூன்று குழுக்களாகப் பிரிந்து நிற்கிறோம். எதிரிகளுக்கு வாய்ப்பளிக்காமல், ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என்றுதான் அ.தி.மு.க அரசு நினைக்கிறது.’’

அஜய் ரத்னம்: ‘‘எங்களை வரச் சொன்ன நேரத்துக்குச் சந்திப்பு அமையவில்லை. அம்மா இருந்தவரை கட்சியின் செயல்பாடு சரியாக இருந்தது. இப்போது குழப்பங்கள் நிறைந்துள்ளன என்ற கருத்தை அங்கு பதிவுசெய்ய முடிந்தது. தமிழக அரசு, அம்மா மரணத்தைப் பற்றித் தெளிவான அறிக்கையை வெளியிட்ட பிறகும் ஓ.பன்னீர்செல்வம்  உண்ணாவிரதம் இருப்பது ஏன்?’’

பபிதா:
‘‘ ‘அம்மா மரணத்தில் சந்தேகமே இல்லை’ என்று சொன்ன ஓ.பி.எஸ்-தான் இப்போது சந்தேகத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் என்னதான் உண்ணாவிரதம் இருந்தாலும், மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தினாலும், அவரால் மக்கள் ஆதரவைப் பெற முடியாது. ஆனால், அவர் கட்சியில் வந்து சேர்ந்தால் நிச்சயமாக கட்சி அவரை ஏற்கும். இதை எல்லாம் தேர்தல் பிரசாரத்தில் சொல்வோம்.”

- எஸ்.கிருபாகரன், நந்தினி சுப்பிரமணி