Published:Updated:

செல்லாக்காசை மீறிப் பெற்ற செல்வாக்கான வெற்றி!

செல்லாக்காசை மீறிப் பெற்ற செல்வாக்கான வெற்றி!
பிரீமியம் ஸ்டோரி
News
செல்லாக்காசை மீறிப் பெற்ற செல்வாக்கான வெற்றி!

செல்லாக்காசை மீறிப் பெற்ற செல்வாக்கான வெற்றி!

‘செல்லாக்காசு விவகாரத்தில் இந்தியாவையே புரட்டிப் போட்டும், இவ்வளவு எதிர்ப்புகள் கிளம்பியும், எப்படி நரேந்திர மோடியால் ஜெயிக்க முடிந்தது?’ - ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியானபோது பலரும் கேட்டது இதைத்தான். இந்தியாவின் இதயமான உத்தரப்பிரதேசத்தில் வரலாறு காணாத வெற்றி பெற்றிருக்கிறது பி.ஜே.பி; உத்தரகாண்டில் காங்கிரஸை வீழ்த்தி அரியணை ஏறியிருக்கிறது. கோவா, மணிப்பூரில் இரண்டாம் இடம் பிடித்தாலும் ஆட்சியைக் கைப்பற்ற முடிகிறது. தோல்வி என்று பார்த்தால், அது பஞ்சாப்பில் மட்டும்தான்! இப்போது இந்திய வரைபடத்தின் பெரும்பாலான மாநிலங்களில் பி.ஜே.பி கொடி பறக்கிறது. 

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மோடியை எதிர்க்க தலைவர்களே இல்லை. ‘‘வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மோடிக்கும் ‘நோபடி’க்குமான மோதலாக இருக்கும்’’ என எதிர்க்கட்சிகளின் வெற்றிடத்தைக் குறிப்பிடுகிறார் ஒரு சீனியர் ஆர்.எஸ்.எஸ் தலைவர்.  ‘‘கட்சியைத் தாண்டி நாட்டின் மிகப்பெரிய தலைவராக மோடி இருக்கிறார். வாஜ்பாய்க்கு அடுத்து, தேசம் முழுக்க எல்லோருக்கும் தெரிந்த பி.ஜே.பி தலைவர் மோடிதான். சொல்வதைச் செய்வார் என அவரைப் பற்றி மக்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைதான் இந்த வெற்றிக்குக் காரணம்’’ என்கிறார்கள் பி.ஜே.பி தலைவர்கள். உண்மையில் வெற்றிக்கு இதுமட்டும்தான் காரணமா? ‘‘இல்லை, மோடி - அமித்ஷா கூட்டணியின் தேர்தல் வியூகம்தான் காரணம்’’ என்கிறார்கள் உ.பி பத்திரிகையாளர்கள்.

செல்லாக்காசை மீறிப் பெற்ற செல்வாக்கான வெற்றி!

• உத்தரப்பிரதேசத்தின் 403 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில்கூட முஸ்லிம் வேட்பாளரை பி.ஜே.பி நிறுத்தவில்லை. ஒரு தொகுதியில் முஸ்லிம் வாக்குகள் அதிகம் என்றால், சமாஜ்வாடி கூட்டணியும், பகுஜன் சமாஜ் கட்சியும் அங்கு முஸ்லிம் வேட்பாளரையே நிறுத்துவதை வழக்கமாக வைத்திருக்கின்றன. இதுதவிர தனியாக முஸ்லிம் அமைப்புகளின் வேட்பாளர்கள். ‘இவர்கள் முஸ்லிம் ஓட்டுகளைப் பிரித்துக் கொள்ளட்டும். மற்றவர்களின் ஓட்டுகளை நாம் மொத்தமாக வாங்குவோம்’ என மாற்றி யோசித்தது பி.ஜே.பி. அவர்கள் நினைத்த மாதிரியே முஸ்லிம் ஓட்டுகள் பிரிய, பி.ஜே.பி-க்கு ஜாக்பாட் கிடைத்தது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

• உ.பி-யின் ஜாதி அரசியல் கணக்குகளை நுட்பமாக அலசி பலன் பெற்றிருப்பது பி.ஜே.பி-தான். பிற்படுத்தப்பட்ட ஜாதியினரில் யாதவ் ஓட்டுகள் எப்போதுமே சமாஜ்வாடி கட்சிக்கே போகும். அதைப் பங்கு போடுவதில் அவர்கள் நேரத்தை வீணடிக்கவில்லை. யாதவ் தவிர இதர பிற்படுத்தப்பட்டவர்கள் அங்கு 28 சதவிகிதம். அந்த ஜாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு 130 தொகுதிகளைக் கொடுத்தது பி.ஜே.பி. ‘‘இது ரிஸ்க்கான முடிவு’’ என அமித்ஷாவிடம் உத்தரப் பிரதேச பி.ஜே.பி தலைவர்கள் எச்சரித்தனர். ஆனால், மோடி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அமித்ஷாவின் கணக்கு சரியாகவே இருந்தது.

• தலித் ஓட்டு விஷயத்திலும் இதே ஜாதிக் கணக்கு பலன் தந்தது. ஜாதவ் இனத்தவர்தான் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்குத் தீவிர விசுவாசிகள். அதைத் தவிர மற்ற இனங்களைச் சேர்ந்த தலித் தலைவர்களை பி.ஜே.பி தன் பக்கம் இழுத்தது. இதனால் மாயாவதி கட்சி ‘தலித் கட்சி’ என்ற அடையாளத்தை இழந்து ‘ஜாதவ் இனத்தவர் கட்சி’யாக மாறிப் போனது. ஜாதவ் அல்லாத 34 தலித்களுக்கு சீட் கொடுத்தது பி.ஜே.பி.

• ‘உ.பி-யில் ஜெயித்தால் இவர்தான் முதல்வர்’ என யாரையும் முதல்வர் வேட்பாளராக பி.ஜே.பி அறிவிக்கவில்லை. மோடியே முன்னிலைப்படுத்தப்பட்டார். சர்ஜிகல் ஸ்டிரைக் பற்றி பெரிய அளவில் பிரசாரம் செய்து, தேசத்தின் நலனுக்காக முடிவுகளை எடுப்பவராக மோடி காட்டப்பட்டார். செல்லாக்காசு விவகாரமும், ‘பதுக்கல்காரர்களிடமிருந்து கறுப்புப் பணத்தை மீட்டு, அவர்களை முறையாக வரி கட்ட வைத்து, அந்தப் பணத்தில் ஏழைகளுக்கான திட்டங்களைச் செய்வார் மோடி’ என கிராமம் கிராமமாகப் பிரசாரம் செய்யப்பட்டது. பொதுவாக, தங்களுக்கு எதிரான விஷயங்களை அரசியல் கட்சிகள் பேசத் தயங்கும். ஆனால், இவ்வளவு விமர்சனங்கள் எழுந்த ஒரு திட்டம் பற்றி பாசிடிவ் பிரசாரம் செய்தால் செல்லுபடியாகும் என்பதை முதன்முறையாக செய்து காட்டியிருக்கிறது பி.ஜே.பி.

• எல்லாவற்றையும் தாண்டி பி.ஜே.பி வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாகச் சொல்லப்படுவது, ‘பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா’ திட்டம். வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கும் குடும்பங்களுக்கு இலவச காஸ் கனெக்‌ஷன் தரும் திட்டம் இது. விறகு அடுப்புடன் போராடிக்கொண்டிருக்கும் பெண்களுக்கு இது வரப்பிரசாதம். கடந்த 2016 மே மாதம் இந்தத் திட்டத்தை மோடி தொடங்கி வைத்தார். வரும் 2019-ம் ஆண்டுக்குள் ஐந்து கோடி குடும்பங்களுக்கு தருவது இலக்கு. மத்திய அரசின் திட்டம்தான். ஆனாலும், ஏழு மாநிலங்களில் மட்டும் செயல்படுத்தப்போவதாக அறிவித்தார்கள். தேர்தலை மனதில்வைத்து உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத் மாநிலங்களில் தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. குறிப்பாக உ.பி-யில் இதை ஒரு வெறியோடு செயல்படுத்தினார்கள். இந்த ஜனவரி வரையிலான ஒன்பது மாதங்களில், உத்தரப்பிரதேசத்தின் 50 லட்சத்து 26 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச காஸ் இணைப்பு கிடைத்துவிட்டது. சராசரியாக ஒரு சட்டமன்றத் தொகுதியில் 12 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு இந்த இணைப்பு கிடைத்தது. இதிலேயே ஒரு தொகுதிக்கு குறைந்தபட்சம் 25 ஆயிரம் ஓட்டுகள் உறுதியாகிவிட்டன.

செல்லாக்காசை மீறிப் பெற்ற செல்வாக்கான வெற்றி!

• ‘இந்தத் தேர்தலை இந்துத்வா கண்ணோட்டத்தோடு பி.ஜே.பி அணுகியதா?’ என்ற கேள்விக்கு ‘ஆம்’ என்றோ, ‘இல்லை’ என்றோ பதில் கூற முடியாது. ‘ராமர் கோயில் விவகாரம் மீண்டும் உயிர் பெறுமா?’ என்று கேட்டாலும், ‘ஆம்’ என்றோ, ‘இல்லை’ என்றோ பதில் கூற முடியாது. முஸாபர் நகர் கலவரத்தைத் தூண்டிய பி.ஜே.பி பிரமுகர்கள், அதை வைத்து அரசியல் செய்தவர்கள் எல்லோருமே இந்தத் தேர்தலில் ஜெயித்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் அமைச்சர்கள் ஆகி, இதே வேலையைத் தொடரவும் செய்யலாம். ஆனால், ‘‘கைரானா பகுதியில் முஸ்லிம்களின் அட்டகாசம் தாங்க முடியாமல் பல இந்துக்கள் அகதிகளாக வெளியேறுகிறார்கள்’’ என சூடு கிளப்பினார், கைரானா தொகுதி எம்.பி ஹுக்கும் சிங். அவர் சொன்னது பொய் என அப்போதே அம்பலமானது. அவரின் மகள் மிரிகங்கா சிங், இந்தத் தேர்தலில் படுதோல்வி அடைந்திருக்கிறார். பி.ஜே.பி-யின் அடுத்தகட்ட தலைவர்கள் பலரும் மதவாதம் பேசினாலும், மோடி அதைத் தவிர்த்தார். தன்னை ‘வளர்ச்சி அரசியலின் முகமாக’ அடையாளப்படுத்திக் கொண்டார். இதுதான் வெற்றிதேடித் தந்திருக்கிறது என்பதை மோடி நன்றாக அறிவார். மற்றவர்களுக்கு 2019 நாடாளுமன்றத் தேர்தல் முக்கியமானதல்ல. ஆனால், மோடிக்கு அதுதான் அக்னிப்பரீட்சை. அதனால், மற்ற குரல்களை அவர் கட்டுக்குள் வைத்திருப்பார் என நடுநிலையாளர்கள் நம்புகிறார்கள். இந்தத் தேர்தல் முடிவுகள், பலருக்கு அடையாளச் சிக்கலையும், எதிர்கால நிலையாமையையும் தந்திருக்கின்றன. மாயாவதி, அவர்களில் முக்கியமானவர். ‘பகுஜன் சமாஜ் கட்சியின் கர்மபூமி’ என மாயாவதியின் சொந்த மாவட்டமான பிஜ்னோரைச் சொல்வார்கள். அங்கு ஒரு தொகுதியில்கூட அவர் கட்சி ஜெயிக்கவில்லை. மொத்தமே அவருக்குக் கிடைத்திருப்பது 19 எம்.எல்.ஏ-க்கள். இப்போது மாயாவதி ராஜ்ய சபா எம்.பி-யாக இருக்கிறார். அடுத்த முறை அவர் டெல்லி போக முடியாது.

சோனியா காந்தியின் ரேபரேலி, ராகுல் காந்தியின் அமேதி தொகுதிகள் உ.பி-யில்தான் இருக்கின்றன. இவற்றில் அடங்கும் பத்து சட்டமன்றத் தொகுதிகளில் ஆறு இடங்களில் காங்கிரஸ் - சமாஜ்வாடி கூட்டணி தோற்றிருக்கிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இவர்கள் இருவருக்கும் சொந்தத் தொகுதியே சவாலானதாக இருக்கலாம். பஞ்சாப் தேர்தல் முடிவுகள் பி.ஜே.பி-க்கு ஏமாற்றம் தந்திருக்கின்றன. அங்கு மிக மோசமான தோல்வியை அகாலி தளம் - பி.ஜே.பி கூட்டணி அடைந்திருக்கிறது. ஆனால், ‘‘இது ராகுல் காந்திக்குக் கிடைத்த வெற்றி இல்லை. அமரிந்தர் சிங்குக்குக் கிடைத்த வெற்றி’’ என, காங்கிரஸ் சார்பில் நின்று ஜெயித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். மாநில காங்கிரஸ் தலைவர் அமரிந்தர் சிங் அந்த அளவுக்கு இந்த வெற்றிக்கு உழைத்திருக்கிறார். அதோடு, ஆம் ஆத்மி கட்சியையும் சேர்த்து வீழ்த்தி, அரவிந்த் கெஜ்ரிவால் தேசிய அளவில் முக்கியத்துவம் பெறுவதைத் தடுத்து இருக்கிறார். இதுபோன்ற செல்வாக்கான தலைவர்களை மாநில அளவில் உருவாக்காதது எவ்வளவு பெரிய தவறு என காங்கிரஸ் இப்போது உணர்ந்திருக்கும்.

இந்தத் தேர்தல் முடிவுகள் பற்றி, முன்னாள் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா சொன்ன கருத்து எல்லோரும் கவனிக்க வேண்டியது. ‘‘வரும் 2019 தேர்தலில் மோடியை எதிர்க்கும் அளவுக்கு இந்தியா முழுக்க செல்வாக்கு படைத்தவராக யாரும் இல்லை. நாம் எல்லோரும் அதை மறந்துவிட்டு 2024 தேர்தலுக்காக நம்பிக்கையோடு திட்டமிடுவோம்!’’

- தி.முருகன்

ஜனாதிபதி டென்ஷன் இல்லை!

வரும் ஜூலை 25-ம் தேதி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிகிறது. அடுத்த ஜனாதிபதியாக தாங்கள் விரும்பும் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கு, போதுமான ஆதரவு இல்லாமல் பி.ஜே.பி தவித்து வந்தது. உ.பி தேர்தல் அந்த டென்ஷனைக் கணிசமாகக் குறைத்திருக்கிறது. நாடாளுமன்ற இரு அவைகளின் எம்.பி-க்களும், அனைத்து மாநில எம்.எல்.ஏ-க்களும் ஓட்டு போட்டு ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இவர்களின் மொத்த ஓட்டுகளின் மதிப்பு: 10,98,882
ஜனாதிபதி வேட்பாளர் வெற்றி பெற தேவையான மெஜாரிட்டி: 5,49,442
உ.பி தேர்தலுக்கு முன்பு பி.ஜே.பி கூட்டணியின் ஓட்டு மதிப்பு: 4,74,366
இப்போது பி.ஜே.பி கூட்டணியின் ஓட்டு மதிப்பு: 5,29,398
இன்னும் தேவைப்படும் ஓட்டு: 20,044.

செல்லாக்காசை மீறிப் பெற்ற செல்வாக்கான வெற்றி!

காங்கிரஸோடு தொடர்பில் இல்லாத பிஜுஜனதா தளம் அல்லது அ.தி.மு.க ஆதரவைப் பெற்றாலே சுலபமாக பி.ஜே.பி வேட்பாளர் ஜெயித்துவிடலாம்.

மெஜாரிட்டி இல்லாத ஆட்சி!

40 உறுப்பினர் கொண்ட கோவா சட்டமன்றத்தில் பி.ஜே.பி-க்குக் கிடைத்தது 13 எம்.எல்.ஏ-க்கள்தான். ஆனால், சுயேச்சைகள் மற்றும் சிறு கட்சிகளின் ஆதரவை வளைத்துப் பிடித்து ஆட்சி அமைக்கிறது பி.ஜே.பி. முதல்வராக இருந்த லட்சுமிகாந்த் பர்சேகரும், சில அமைச்சர்களும் தோற்கடிக்கப்பட்ட நிலையில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கரை மீண்டும் கோவாவுக்கு அனுப்பி முதல்வர் ஆக்கியிருக்கிறார் மோடி.

மணிப்பூரில் தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் முதல்வராக இருந்த காங்கிரஸின் இபோபி சிங், காங்கிரஸ் மீது இருக்கும் எதிர்ப்பு அலையையும் மீறி 28 இடங்களில் கட்சியை ஜெயிக்க வைத்திருக்கிறார். 60 உறுப்பினர் சட்டமன்றத்தில் இன்னும் மூன்று எம்.எல்.ஏ-க்கள் கிடைத்தாலே காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியும். ஆனால், இங்கும் கட்சித் தாவலை ஊக்குவித்து, ஆட்சியைப் பிடிக்க அவசரம் காட்டுகிறது பி.ஜே.பி. வெறும் 21 எம்.எல்.ஏ-க்களே பி.ஜே.பி-யின் பலம். ஆனால், 31 எம்.எல்.ஏ-க்களை கவர்னர் மாளிகைக்கு அழைத்துச் சென்று ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது அந்தக் கட்சி.