Published:Updated:

சசிகலா கையெழுத்து செல்லுமா? - ‘சூது’ கவ்வும் ஆர்.கே.நகர்!

சசிகலா கையெழுத்து செல்லுமா? - ‘சூது’ கவ்வும் ஆர்.கே.நகர்!
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா கையெழுத்து செல்லுமா? - ‘சூது’ கவ்வும் ஆர்.கே.நகர்!

சசிகலா கையெழுத்து செல்லுமா? - ‘சூது’ கவ்வும் ஆர்.கே.நகர்!

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலா அணி, ஓ.பி.எஸ் அணி, தீபா அணி என்று மூன்றாகப் பிளவுபட்டுள்ளது அ.தி.மு.க. 1989-ம் ஆண்டு ஜானகி அணி, ஜெயலலிதா அணியாகப் பிரிந்து அ.தி.மு.க தேர்தலைச் சந்தித்தபோது இரட்டை இலை சின்னத்தைக் கேட்டு இரு தரப்பினருமே உரிமை கொண்டாடினார்கள். அதனால் இரட்டை இலையை முடக்கியது தேர்தல் ஆணையம். ‘1989 தேர்தல் சரித்திரம் ஆர்.கே.நகரில் திரும்பலாம்’ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஆர்.கே.நகரில் எப்படியும் ஜெயித்து பலத்தை நிரூபிக்க வேண்டும் என சசிகலாவும், பன்னீரும், தீபாவும் மல்லுக்கட்டுகிறார்கள். தேர்தல் பரீட்சையில் ஜெயிப்பதற்காக நடத்தப்படும் விளையாட்டில் ஆர்.கே.நகரில் ‘சூது’ கவ்விக் கொண்டிருக்கிறது. பொதுச்செயலாளர் நியமனமே தேர்தல் கமிஷனால் கேள்விக்குறி ஆக்கப்பட்டிருக்கும் நிலையில், ‘ஆர்.கே.நகர் வேட்பாளருக்காக தேர்தல் ஆவணங்களில் சசிகலா கையெழுத்துப் போட்டால் அது செல்லுபடி ஆகுமா?’, ‘இரட்டை இலை சின்னம் முடங்குமா?’ என்கிற கேள்விகளால் ஆர்.கே.நகர் தகிக்க ஆரம்பித்திருக்கிறது.

சசிகலா கையெழுத்து செல்லுமா? - ‘சூது’ கவ்வும் ஆர்.கே.நகர்!

‘‘ஜெ சாய்ஸ் மதுசூதனன்!’’

தேர்தலில் அதிகாரபூர்வ வேட்பாளரால் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மாற்று வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். அதிகாரபூர்வ வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பட்டால் அதே கட்சியைச் சேர்ந்த இன்னொருவர் மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்வது வழக்கமான விஷயம். ஆர்.கே. நகரில் கடைசியாக நடந்த இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் ஜெயலலிதாதான் போட்டியிட்டார். அவருக்கு மாற்று வேட்பாளராக இருந்தவர் மதுசூதனன். ‘‘முதல்வர் வேட்பாளருக்கே மாற்று வேட்பாளராக மதுசூதனன்தான் நியமிக்கப்பட்டார். தனது வேட்புமனு நிராகரிப்படும் சூழல் வந்தால், மாற்று வேட்பாளராக மதுசூதனன்தான் போட்டியிட வேண்டும் என அம்மாவே நினைத்திருக்கிறார். அந்தவகையில் பார்த்தால் ஆர்.கே.நகரில் அம்மாவின் சாய்ஸ் மதுசூதனன்தான்’’ என பன்னீர் அணியினர் சொல்லி வருகிறார்கள்.

‘‘அங்கீகரிக்கப்பட்ட அவைத் தலைவர்!’’


அ.தி.மு.க-வின் அவைத் தலைவராக இருந்த காளிமுத்து மறைந்த பிறகு, 2007 பிப்ரவரி 5-ம் தேதி கூடிய பொதுக்குழுவில் மதுசூதனன் அவைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். முதலில் நடந்த செயற்குழுவில் புதிய அவைத் தலைவராக மதுசூதனனைத் தேர்ந்தெடுக்கும் தீர்மானத்தை ஜெயலலிதாதான் முன்மொழிந்தார். அதை அன்றைக்கு தேர்தல் பிரிவு செயலாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் வழிமொழிந்தார். செயற்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக மதுசூதனனைத் தேர்ந்தெடுத்தனர். அதன்பிறகு நடந்த பொதுக்குழுவில் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இப்படி பொதுக்குழுவால் தேர்வுசெய்யப்பட்டு, பிறகு ஒவ்வோர் ஆண்டும் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு, அவைத் தலைவராக தொடர்ந்து நீடித்து வருகிறார் மதுசூதனன். கடைசியாக தலைமைக் கழக புதிய நிர்வாகிகள் பட்டியலை கடந்த ஆண்டு ஜூன் 8-ம் தேதி ஜெயலலிதா வெளியிட்டபோதும் அவைத் தலைவராக மதுசூதனனின் பெயர்தான் இருந்தது. மதுசூதனன் இப்போது பன்னீர் அணிக்குத் தாவிய பிறகு, அதிரடியாக அவரை நீக்கிவிட்டு, கே.ஏ.செங்கோட்டையனை அவைத் தலைவராக நியமித்தார் சசிகலா. ஆனாலும் ‘‘அங்கீகரிக்கப்பட்ட அவைத் தலைவர் மதுசூதனன்தான். அம்மாவால் நியமனம் செய்யப்பட்டவர்’’ என தம் கட்டுகிறார்கள் பன்னீர் அணியினர். ‘‘கட்சியில் இருந்து என்னை நீக்க சசிகலாவுக்கு அதிகாரம் கிடையாது’’ என அடித்துச் சொல்கிறார் மதுசூதனன்.

பிபி ஏற்றும் Form B


தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே தனிச் சின்னம் வழங்கப்படும். பதிவுபெற்ற இதர கட்சிகளுக்கு, சுயேச்சை சின்னங்கள்தான் தரப்படும். அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்களுக்குத் தனிச் சின்னம் வழங்க வேண்டுமெனில், அந்தக் கட்சிகளின் தலைமையிடம் இருந்து ‘ஃபார்ம் பி’ (Form B) என்கிற அத்தாட்சி படிவத்தை சம்பந்தப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள், தொகுதியின் தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஃபார்ம் பி-யில் கட்சியின் தலைவரோ அல்லது பொதுச்செயலாளரோ கையெழுத்துப் போட்டு வேட்பாளர்களுக்குத் தருவார்கள். அதை வேட்பாளர்கள் தொகுதியின் தேர்தல் அதிகாரியிடம் அளிப்பார்கள். அப்போதுதான் அவர்களுக்குத் தனிச் சின்னம் ஒதுக்கப்படும். இந்த ‘ஃபார்ம் பி’-யை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தராமல் போனால், அவர்களுக்கு தனிச் சின்னம் கிடைக்காது.

இந்த ஃபார்ம் பி-யோடு, ஃபார்ம் ஏ-வும் (Form A) இணைத்துத் தர வேண்டும். இந்த ஃபார்ம் ஏ-வை தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும் தொகுதியின் தேர்தல் அதிகாரிக்கும் தர வேண்டும். ஃபார்ம் பி-யில் கையெழுத்துப் போடும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்பதை ஃபார்ம் ஏ-யில் குறிப்பிட வேண்டும். ‘கட்சி சின்னம் ஒதுக்கீட்டுக்குக் கையெழுத்து போடும் அங்கீகரிக்கப்பட்ட நபர் இவர்தான்’ என்பதை ஃபார்ம் ஏ தெளிவுபடுத்துகிறது. கையெழுத்திடும் நபரின் (கட்சியின் தலைவர்) பெயர், அவரின் கட்சிப் பதவி ஆகியவை ஃபார்ம் ஏ-யில் இருக்கும். அதில் மாதிரி கையெழுத்துகளையும் அவர் போட வேண்டும். வேட்புமனுவை மட்டும் முதலில் தாக்கல் செய்துவிட்டு ஃபார்ம் ஏ, ஃபார்ம் பி படிவங்களைப் பிறகும் அளிக்கலாம். எப்படியிருந்தாலும், வேட்பு மனு திரும்பப் பெறும் கடைசி நாளில் மாலை மூன்று மணிக்குள் ஃபார்ம் ஏ, ஃபார்ம் பி படிவங்களைத் தந்துவிட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட நபர் மட்டுமே ஃபார்ம் ஏ, ஃபார்ம் பி படிவங்களில் கையெழுத்திட வேண்டும். மற்றவர்கள் கையெழுத்திட்டால் அது செல்லாது. கையெழுத்துப் போடும் அதிகாரத்தை மற்றவர்களுக்கு மாற்றித் தருவதையும் தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொள்ளாது.

கடந்த காலங்களில் இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கக்கோரும் ஃபார்ம் பி-யில் ஜெயலலிதாதான் கையெழுத்துப் போட்டு வந்தார். அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளின் தேர்தல் நடைபெற்றபோது ஜெயலலிதா அப்போலோவில் இருந்தார். ஃபார்ம் பி மற்றும் ஃபார்ம் ஏ-யில் கையெழுத்துப் போடாமல், கைரேகைதான் வைத்தார். இப்போது ஜெயலலிதா இல்லாததால், ஃபார்ம் பி மற்றும் ஃபார்ம் ஏ-யில் கையெழுத்துப் போடும் அதிகாரம் யாருக்கு வழங்கப்பட்டிருக்கிறது எனத் தெரியவில்லை. இப்படி கையெழுத்துப் போடும் அதிகாரத்தை வேறு ஒருவருக்கு மாற்றிக் கொடுக்க வேண்டிய சூழல் எழுந்தால், சம்பந்தப்பட்ட கட்சிகளின் பொதுக்குழு, செயற்குழு, நிர்வாகக்குழு போன்ற அதிகாரம் மிக்க அமைப்பில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினால்தான், அதைத் தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொள்ளும். டெல்லியில் இருக்கும் தலைமைத் தேர்தல் கமிஷனுக்கு இது முறையாக சொல்லப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்ட மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அது அனுப்பி வைக்கப்படும்; அவர் தொகுதி தேர்தல் அதிகாரிக்கு அனுப்புவார்.

சசிகலா பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டதையே தேர்தல் கமிஷன் கேள்விக்குறியாக்கி அவரிடம் விளக்கம் கேட்டிருக்கும் சூழலில், சசிகலாவுக்கு ஃபார்ம் பி மற்றும் ஃபார்ம் ஏ-யில் கையெழுத்துப் போடும் அதிகாரம் ஒருவேளை தரப்பட்டிருந்தாலும், அதுவும் சேலஞ்சுக்குரியதுதான். ஃபார்ம் பி மற்றும் ஃபார்ம் ஏ-யில் கையெழுத்துப் போடும் அதிகாரம் பற்றியும் பன்னீர்செல்வம் அணி கேள்வி எழுப்பலாம். சசிகலா தவிர வேறு யாருக்காவது அந்த அதிகாரம் தரப்பட்டிருந்தால், ‘எந்த அடிப்படையில் அதை வழங்கினார்கள்? அதற்காக செயற்குழுவோ, பொதுக்குழுவோ, நிர்வாகக் குழுவோ கூடியதா?’ என்கிற சந்தேகங்கள் எழுப்பப்படலாம். இதில் இருந்தும் சசிகலா அணி தப்பிவிட்டால், ‘நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க’ என பன்னீர் அணி பரபரப்பைப் பற்ற வைக்கலாம்.

கைகொடுக்காத கெடுநாள்!

2011 டிசம்பர் மாதம் சசிகலாவைக் கட்சியில் இருந்து ஜெயலலிதா நீக்கினார். ‘என் உறவினர்கள் அக்காவுக்குத் துரோகம் செய்தது எனக்குத் தெரியாது. அக்காவுக்கு எதிரான சதித் திட்டங்களும் தீட்டப்பட்டன. துரோகம் செய்தவர்களுடன் தொடர்புகளைத் துண்டித்து விட்டேன். எனக்கு அரசியல் ஆசையும் கிடையாது’ என்று சொல்லி 2012-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி, மன்னிப்பு அறிக்கை விட்டார் சசிகலா. மார்ச் 31-ம் தேதி ஜெயலலிதா அதை ஏற்றுக்கொண்டார். ஜெயலலிதாவால் சசிகலா மன்னிக்கப்பட்ட அன்றோ அல்லது அதற்குப் பிறகோதான் சசிகலா கட்சியில் மீண்டும் இணைந்திருக்க முடியும். ‘ஐந்தாண்டுகள் கட்சியில் இருந்திருக்க வேண்டும்’ என்கிற அ.தி.மு.க சட்டதிட்ட விதி கணக்குப்படி, வரும் ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகுதான் சசிகலா கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உண்டு. (இப்போது நியமனம்தான் செய்யப்பட்டிருக்கிறார். அதுவும் தேர்தல் கமிஷனில் கேள்விக்குறியாகி இருக்கிறது!)

தேர்தல் கமிஷனில் சசிகலா தந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளப்படாமல் போனால், ஏப்ரல் 1-ம் தேதி பொதுக்குழுவைக் கூட்டி, சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வுசெய்யக்கூடிய வாய்ப்பு உண்டு. அதன்பிறகு ஃபார்ம் பி அதிகாரம் சசிகலாவுக்குத் தரப்பட்டாலும் பயன் அளிக்காது. ஏன் தெரியுமா? ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறுகிறது. வரும் 16-ம் தேதியில் இருந்து வேட்புமனுக்கள் தாக்கல் தொடங்கி 23-ம் தேதி முடிவடைகிறது. அடுத்தநாள் 24-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் 27-ம் தேதி. வேட்புமனு திரும்பப் பெறும் கடைசி நாள் மாலை மூன்று மணிக்குள் ஃபார்ம் ஏ, ஃபார்ம் பி விண்ணப்பங்களைத் தந்துவிட வேண்டும். அந்த நாள் மார்ச் 27-ம் தேதி. அப்போது சசிகலாவால் பொதுச்செயலாளர் ஆக முடியாது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சசிகலா கையெழுத்து செல்லுமா? - ‘சூது’ கவ்வும் ஆர்.கே.நகர்!

காய் நகர்த்தும் பன்னீர்!

அ.தி.மு.க-வின் ஆட்சிமன்றக் குழுதான் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு புதிய ஆட்சிமன்றக் குழு உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால் உஷாரான பன்னீர் அணியில் இருக்கும் அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனன், ஓ.பி.எஸ்-ஸையும் சேர்த்து 13 உறுப்பினர்கள் கொண்ட ஆட்சி மன்றக் குழுவை அமைத்திருக்கிறார். இது எல்லாமே ஆர்.கே.நகர் தேர்தலை வைத்தே நடைபெற்று வருகிறது.

முடிவு பத்மஜா தேவி கையில்!

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியாக பத்மஜா தேவி நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த சட்டசபைத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதி அதிகாரியாகப் பணியாற்றியவர் பத்மஜா தேவி. டான்சி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், 2001 சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தேர்தலில் நிற்க முடியாது. ஆனால், அதையும் மீறி அவர் ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, புவனகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது வேட்புமனு நிராகரிக்கப்படுமா என்கிற கேள்விகள் எழுப்பப்பட்டபோது ‘‘சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் அதிகாரிதான் வேட்புமனுவை நிராகரிப்பது பற்றி முடிவு செய்வார்’’ என அப்போது தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தார்கள். அதன்படி பார்த்தால் பத்மஜா தேவி கையில்தான் அதிகாரம் இருக்கிறது.

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி
படம்: ஆ.முத்துக்குமார்
அட்டை ஓவியம்: பிரேம் டாவின்ஸி