Published:Updated:

மிஸ்டர் கழுகு: தினகரன் எதிரில் திகுதிகு மோதல்!

மிஸ்டர் கழுகு: தினகரன் எதிரில் திகுதிகு மோதல்!
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு: தினகரன் எதிரில் திகுதிகு மோதல்!

மிஸ்டர் கழுகு: தினகரன் எதிரில் திகுதிகு மோதல்!

மிஸ்டர் கழுகு: தினகரன் எதிரில் திகுதிகு மோதல்!

வசரமாக ஆபீஸுக்குள் நுழைந்த கழுகார், ‘நமது எம்.ஜி.ஆர்’ பத்திரிகையைத் தேடி எடுத்தார். பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் அ.தி.முக ஆட்சிமன்றக் குழு மாற்றி அமைக்கப்பட்ட செய்தியைப் பார்த்தபடி நம்மிடம் பேச ஆரம்பித்தார்.

‘‘ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பன்னீர் தனியாகப் பிரிந்து போனதால் கட்சியின் நிர்வாகிகள் பலர் மாற்றப்பட்டனர். தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களைத் தேர்வு செய்வது அ.தி.மு.க-வின் ஆட்சிமன்றக் குழுதான்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டிருக்கும் நிலையில், ஆட்சிமன்றக் குழு மாற்றியமைக்கப்பட்டதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் மிஸ்ஸிங். இதனால் கட்சிக்குள் உள்குத்து தொடங்கியிருக்கிறது. ‘கவுண்டர் சமூகத்திலிருந்து செங்கோட்டையன், குழுவில் இடம்பெற்றிருப்பதால் எடப்பாடி பெயர் சேர்க்கப்படவில்லை’ என தினகரன் தரப்பு சொல்கிறது. கட்சியின் முக்கிய அதிகார மையமாக இருக்கும் ஆட்சிமன்றக் குழுவில் எடப்பாடியின் பெயர் இல்லை என்கிற வருத்தம் ஒருபக்கம் இருந்தாலும், கொங்கு மண்டலத்துக்காரர்கள் கோபம் இன்னொரு வகையில் தினகரன் மீது பாய்ந்திருக்கிறது...’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மிஸ்டர் கழுகு: தினகரன் எதிரில் திகுதிகு மோதல்!

‘‘என்ன கோபம்?’’

‘‘கோவை வடக்கு தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏ மற்றும் மாநகர் மாவட்டச் செயலாளராக இருக்கும் அருண்குமார், கூவத்தூர் ரிசார்ட்ஸில் இருந்து கடைசி நாளில் எஸ்கேப் ஆகி, சசிகலா அணிக்கு எதிர்ப்பைத் தெரிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பிலும் பங்கேற்காமல் புறக்கணித்தார். ஆனால், உடனடியாக பன்னீர் அணிக்கு போகவில்லை. அதனால், அவரது மாவட்டச் செயலாளர் பதவியில் புதியவரை நியமிக்காமல், மூன்று வாரங்களாகக் காத்திருந்தது சசிகலா தரப்பு. அருண்குமாரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்துவிடலாம் என்கிற நம்பிக்கையில்தான் அமைதி காத்தார்களாம். இதை வைத்து கோவை அ.தி.மு.க-வில் கோஷ்டி மோதல் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இதுபற்றி விவாதம் கிளம்பியது. ‘புதிய மாவட்டச் செயலாளரை நியமிக்கலாம்’ என ஒரு தரப்பினர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ‘கொஞ்சம் பொறுத்திருப்போம். கோவை மாவட்டத்தில் இருந்து அதிகமான எம்.எல்.ஏ-க்கள் பன்னீர் அணிக்குப் போயிருக்கிறார்கள். இதனால் இங்கு கட்சி பலவீனமாக இருக்கிறது. உள்ளூர் அமைச்சர் என்ன செய்கிறார் என்று தெரியவில்லை’ என்ற ரீதியில் பேசினாராம். இது அமைச்சர் எஸ்.பி.வேலுமணியைக் குறி வைத்துப் பேசப்பட்டதாம். பதிலுக்கு வேலுமணி, ‘அமைச்சர் பதவிக்கு அச்சாரம் போடுவதற்காகத்தான் பொள்ளாச்சி ஜெயராமன் இப்படி என் மீது பாய்கிறார். அதனால் அவரை அமைச்சர் ஆக்கிவிடுங்கள்’ என டென்ஷன் ஆனார். இப்படி காரசார விவாதம் நடந்து கொண்டிருந்தபோது தினகரனும் கூட்டத்தில்தான் இருந்தார். அவர்தான் வேலுமணியை சமாதானப்படுத்தியிருக்கிறார். இந்தச் சம்பவம் நடந்த மறுநாளே அருண்குமார் சென்று பன்னீர்செல்வம் அணியில் ஐக்கியமாகி விட்டதுதான் ஆச்சர்யம்!’’

‘‘ம்...’’

‘‘கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க-வின் ஐந்து எம்.எல்.ஏ-க்கள் வேலுமணி பக்கம் நிற்கிறார்கள். பொள்ளாச்சி ஜெயராமன் மட்டும் தனியாக இன்னொரு பக்கம் இருக்கிறார். இந்நாள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள்  எனப் பலரிடம் எதிர்ப்பு அரசியல் நடத்தியவர் பொள்ளாச்சி ஜெயராமன். வேலுமணியும் ஜெயராமனும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் சூழலில்   இருவரையும் கூட்டத்தில் பேசவிட்டதுதான் பிரச்னையாம். இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது தினகரன் என்பதால் அவர் தலை உருள்கிறது’’ என்றவர், டேபிளில் இருந்த சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கட்டுரையைப் படித்துவிட்டு நிமிர்ந்தார்.

‘‘சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் பரபரப்பாகத்தான் இருக்கும். பட்ஜெட் விவாதத்தைவிட சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் வேலையில்தான் தி.மு.க தீவிரமாக இருக்கிறது. ஆனால், அது வெற்றி பெறுமா என்பது சந்தேகம்தான். இந்தத் தீர்மானம் முதலில் விவாதத்துக்கு வருவதே சந்தேகம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். எடப்பாடி ஆட்சியின் மீது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கலாட்டாக்கள் அரங்கேறின. இதனால், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் வெளியேற்றப்பட்டனர். சபாநாயகரை இழுத்தது, அவர் இருக்கையில் அமர்ந்தது என தி.மு.க உறுப்பினர்களின் செயல்களுக்கு சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் மீது இப்போது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கலாம் என்கிறார்கள். தி.மு.க உறுப்பினர் களில் கணிசமானவர்கள் குறிப்பிட்ட சில நாள்களுக்கு சஸ்பெண்டு செய்யப்படலாம். அப்படி செய்யப்பட்ட பிறகு, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் அவையில் எடுத்துக் கொள்ளப்படுமாம். அப்போது தீர்மானத்துக்கு இசைவு அளிக்கும் உறுப்பினர்களை எழுந்து நிற்கச் சொல்லும்போது, தி.மு.க உறுப்பினர்கள் 35-க்கும் குறைவானவர்கள்தான் எழுந்து நிற்கக்கூடிய சூழல் உருவாகும். அதனால், தீர்மானம் விவாதத்துக்கு வராமலேயே நிராகரிக்கப்படும். 35-க்கும் மேற்பட்டவர்கள் எழுந்து நின்றால்தான் தீர்மானம் விவாதத்துக்கு வர முடியும். வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் தேவையில்லாமல் ஆட்சிக்கு சங்கடம் நேரும் என்பதால் தி.மு.க உறுப்பினர்களை சஸ்பெண்டு செய்யும் மூவ் நடந்து கொண்டிருக்கிறது...’’

‘‘ஆர்.கே.நகர் யாருக்குக் கைகொடுக்கும்?’’

மிஸ்டர் கழுகு: தினகரன் எதிரில் திகுதிகு மோதல்!

‘‘இரண்டு கட்சிகள் களத்தில் நின்றாலே இடைத்தேர்தலில் அனல் பறக்கும். ஆர்.கே.நகரில் பலமுனைப் போட்டி இருக்கும் போல. ஆனால், தி.மு.க-வினர் கொஞ்சம் உற்சாகமாகத்தான் இருக்கிறார்கள். அ.தி.மு.க-வில் ஏற்பட்ட பிளவு, தீபா தனித்து நிற்பது, ஜெயலலிதா மரண சர்ச்சை என எல்லாமே தங்களுக்குச் சாதகமாக இருப்பதாக அவர்கள் கணக்குப் போடுகிறார்கள். அ.தி.மு.க-வில் தான் குழப்பம் இன்னும் நீடித்து வருகிறது...’’

‘‘என்ன குழப்பமாம்?’’

‘‘கட்சியின் சார்பில் வேட்பாளரை யார் அங்கீகரிப்பது என்பதிலேயே குழப்பம் உள்ளது. ‘ஓ.பி.எஸ் தரப்பு ஏதும் சிக்கலை ஏற்படுத்தி இரட்டை இலை சின்னத்தை முடக்காமல் இருந்தாலே நாம் வெற்றி பெற்ற மாதிரிதான்’ என தினகரன் தரப்பு நினைக்கிறது. சென்னையில்     ஓ.பி.எஸ் உண்ணாவிரதத்துக்கு ஆர்.கே.நகரில் இருந்துதான் அதிக ஆட்கள் வந்தார்கள் என்ற தகவல் அ.தி.மு.க தரப்பை யோசிக்கவைத்துள்ளது.’’

‘‘மக்கள் நலக்கூட்டணியும் களம் இறங்குகிறதே?’’

‘‘அதில் இருக்கும் மூன்று கட்சிகளுமே வேறு வேறு யோசனையில் உள்ளன. ‘வாக்குகள் சிதறக்கூடாது’ என்பதால் ஸ்டாலின் மக்கள் நலக் கூட்டணியின் ஆதரவைக் கேட்டிருக்கிறார்.  தி.மு.க-வை ஆதரிக்கலாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சொல்கிறது. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், ‘நாங்கள் வேட்பாளரை நிறுத்துகிறோம்’ எனக் கேட்டிருக்கிறார்கள். ‘உங்களுக்குள் பேசி ஒருமித்த முடிவுக்கு வாருங்கள். நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும், அதை நான் ஆதரிக்கிறேன்’ என்று சொல்லிவிட்டாராம் திருமாவளவன்.”

‘‘தீபாவின் நிலை?’’

‘‘தீபா களத்தில் நின்றால், அதனால் வாக்குகள் பிரியுமே தவிர, வெற்றிக்கு வாய்ப்பில்லை என்று உளவுத்துறை கூறியுள்ளதாம். ‘பன்னீர் அணி வெயிட்டான வேட்பாளரை களத்தில் இறக்கினால் அ.தி.மு.க-வுக்குச் சிக்கல்’ என்று குறிப்பு போட்டுள்ளதாம். ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு ஆர்கே.நகரில் தோல்வியடைந்தால் அது கட்சிக்கும், ஆட்சிக்கும் ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்ற பீதியில் சசிகலா தரப்பு அனைத்து ஆயுதங்களையும் இறக்கத் தயாராகி வருகிறது’’ என்ற கழுகாரை காங்கிரஸ் பக்கம் திருப்பினோம்.

‘‘இளங்கோவன் இருக்கும் மேடையில் இனி ஏற  மாட்டேன் என்று சொல்லிவிட்டாராமே திருநாவுக்கரசர்?’’

‘‘ஆமாம்! சென்னை அயனாவரத்தில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பீட்டர் அல்போன்ஸ் இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து, முதலில் ப.சிதம்பரத்திடம் ஒப்புதல் வாங்கியுள்ளார். பணமதிப்பிழப்பு பிரச்னை குறித்த கூட்டம் என்பதால், அவரும் ஓகே சொல்லிவிட்டு ‘திருநாவுக்கரசர் ஒப்புதலுடன்தானே கூட்டம் நடைபெறுகிறது’ என்று கேட்டுள்ளார். ‘அவர் தலைமையில்தான் கூட்டம் நடைபெறவுள்ளது’ என்று சொல்லியிருக்கிறார் பீட்டர்.’’

‘‘ம்!’’

‘‘அதன்பிறகு திருநாவுக்கரசரைக் கூட்டத்துக்கு அழைத்துள்ளார் பீட்டர். ‘நீஙகள் தலைமை, சிதம்பரம் சிறப்புரை, நான், இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறோம்’ என பீட்டர் சொன்னதும், சீறிவிட்டார் திருநாவுக்கரசர். ‘இனி இளங்கோவன் கலந்துகொள்ளும் எந்தக் கூட்டத்திலும் நான் கலந்துகொள்ள மாட்டேன். நீங்களே நடத்திக்கொள்ளுங்கள். மாநிலத் தலைவரையே யார் எனக் கேட்டவரோடு, மேடையில் சரிநிகராக அமரமுடியுமா?’ என்று எகிறியுள்ளார். சிதம்பரத்துக்கும் போன் அடித்து போக வேண்டாம் என்றும் தடுத்துள்ளார் திருநாவுக்கரசர். ஆனால், அவரோ ‘உங்கள் தலைமையின் கீழ் உள்ள பணமதிப்பிழப்பு பிரசாரக் குழுதான் இந்தக் கூட்டத்தை நடத்துகிறது. நான் தேதி கொடுத்து ஒப்புதல் சொல்லிவிட்டேன். இனி மறுத்தால் டெல்லி தலைமைக்கு நான் பதில் சொல்ல வேண்டிவரும்,  நீங்கள் வேண்டுமென்றால் டெல்லியில் சொல்லி கூட்டத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்’ என்றாராம். திருநாவுக்கரசர் தவிப்பில் இருக்கிறார்.’’

‘‘ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள், தமிழக  பி.ஜே.பி-யிலும் எதிரொலிக்கும் போல...’’

‘‘தமிழகத்தின் ஆளும் தரப்பும், பி.ஜே.பி-க்குச் சிவப்புக்கம்பளம் விரித்துவிட்டதாம். ஜனாதிபதி தேர்தலைத் தீர்மானிக்கும் அளவுக்குக் கணிசமான வாக்குகள் அ.தி.மு.க கையில் உள்ளன. ‘இந்த வாக்குகள் முழுவதும் உங்களுக்குத்தான்’ என்று முக்கிய நபர் மூலம் பி.ஜே.பி தலைமைக்குத் தூதுவிட, அங்கிருந்தும் சாதகமான பதில் வந்துள்ளதாம். அதனால் இனி சர்ச்சைகள் தொடராது என நம்புகிறார்கள்.’’

‘‘அரசியல் உள்குத்துகள் ஒருபக்கம் என்றால், போலீஸிலும் உள்குத்து நடக்கிறதாமே?”

‘‘ஆமாம்! தமிழக டி.ஜி.பி (சட்டம் ஒழுங்கு) பதவி கடந்த ஆறு மாதங்களாக காலியாகக் கிடக்கிறது. அதில் யார்தான் உட்காரப்போகிறார்கள் என்பது இன்னமும் சஸ்பென்ஸாக இருக்கிறது. ‘போலீஸ் தலைமைப் பதவியில் நியமிக்கப்படுகிறவர்கள் ஓய்வுபெறும் நிலையில் இருந்தால், அடுத்த இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்பு செய்யலாம்’ என்று சுப்ரீம் கோர்ட் நல்ல நோக்கத்துக்காக சொன்னது. இதைத் தமிழக அரசு கனகச்சிதமாகப் பிடித்துக்கொண்டது. முந்தைய ஜெயலலிதா அரசு, ஆட்சிக்கு வேண்டப்பட்ட ராமானுஜம், அசோக்குமார் ஆகிய இருவருக்குமே ஓய்வுக்குப் பிறகு பணி நீட்டிப்பு தந்தது. இதனால், தலைமைப் பதவிக்கு வர ஆசைப்பட்ட தகுதியுள்ள சில அதிகாரிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள். எதிர்காலத்தில் இப்படி ஏதும் நடக்கக்கூடாது என்பதை மனதில் கொண்டு, ஜெயலலிதா அப்போலோவில் அட்மிட் ஆகியிருந்த நேரத்தில் அப்போதைய உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா, தமிழக டி.ஜி.பி (பொறுப்பு) ராஜேந்திரனிடம் சொல்லி, ‘ஓய்வுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்பு சிஸ்டமே வேண்டாம்’ என்று குறிப்பு ஒன்றைக் கேட்டு வாங்கினார். அதை அவர் ஏன் செயல்படுத்தவில்லை என்று தெரியவில்லை.’’

‘‘சரி! இந்தப் பதவியில் உட்கார இப்போதைய நிலவரப்படி யார் முன்னிலையில் இருக்கிறார்கள்?’’

‘‘ஆறு மாதங்களுக்கு முன்பு, அசோக்குமார் திடீரென ராஜினாமா செய்தபோது, ஐவர் பெயர் கொண்ட லிஸ்ட்டை மத்திய அரசுக்கு அனுப்பியிருக்க வேண்டும். அதில், மூவரைத் தேர்வு செய்து இங்கே அனுப்புவார்கள். அதில், ஒருவரை சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி பதவியில் மாநில அரசு அமர்த்தும். இதுதான் சம்பிரதாயம். இதில், அர்ச்சனா ராமசுந்தரம், கே.ராதாகிருஷ்ணன், மகேந்திரன், ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற வேண்டி இருந்திருக்கும். இங்கேதான் உள்குத்து நடந்திருக்கிறது. ஜார்ஜுக்காக தமிழக அரசின் ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் தலையிட்டு அந்தக் கடிதத்தை அனுப்பாமல் காலம்கடத்தியதாக உயர் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் பேச்சு உண்டு. காரணம், இரண்டு பேர் ஓய்வு பெற்றபின், புது அதிகாரிகள் இருவரின் பெயர்களைச் சேர்த்து ஐந்து பேர் லிஸ்ட் டெல்லிக்குப் போனால்... சீனியாரிட்டிபடி ஜார்ஜுக்கு சான்ஸ் அடிக்கலாம் அல்லவா?’’

மிஸ்டர் கழுகு: தினகரன் எதிரில் திகுதிகு மோதல்!

‘‘ஓஹோ!”

‘‘ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு புதிய அரசு அமைந்தவுடன், தலைமைச் செயலாளர் பதவியைப் பிடிக்க ஐ.ஏ.எஸ் மட்டத்தில் ஏக போட்டி நிலவியதே? கடைசியில் கிரிஜா வைத்தியநாதனுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதேபோல், இங்கும் சீனியாரிட்டிக்குத்தானே டி.ஜி.பி பதவி வாய்ப்பு கிடைக்கும்? சீனியாரிட்டி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மத்திய அரசு பரிசீலித்தால், இப்போதைய தமிழக அரசு விரும்புகிறவரை நிச்சயமாகக் கொண்டுவர முடியாது. அதனால்தான், லிஸ்ட்டை அனுப்பாமல் காலதாமதம் செய்து கொண்டிருக்கிறது தமிழக அரசு. ஜூலைக்குள் டி.கே.ராஜேந்திரன், கே.ராதாகிருஷ்ணன் இருவரும் ஓய்வுபெற்று விடுவார்கள். எனவே, ஜார்ஜ் ஓய்வு (14.9.17) பெறுவதற்கு முன்பு தமிழக அரசின் லிஸ்ட் டெல்லிக்குப் போகலாம். ஆக, பழைய லிஸ்ட்டில் இடம்பெற்ற இரண்டு பேர் நீக்கப்படுவார்கள். அவர்களுக்குப் பதிலாக, இரண்டு புதியவர்கள் இடம்பெறுவார்கள். எனவே, சசிகலா அணியினரின் ஆசி பெற்ற ஜார்ஜுக்கு சான்ஸ் அடிக்கலாம். தமிழக டி.ஜி.பி லிஸ்ட்டில் நம்பர் ஒன் இடத்தில் அர்ச்சனா ராமசுந்தரம் இருக்கிறார். மத்திய அரசுப் பணியில் துணை நிலை போலீஸ் படைப் பிரிவின் தலைவராக இருக்கிறார் அவர். இந்த வருடம் அக்டோபரில் அவர் ரிட்டயர் ஆகிறார். அர்ச்சனாவின் கணவரும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான ராமசுந்தரம், சசிகலா  குடும்பத்துக்கு ஒருவகையில் உறவு. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அர்ச்சனா மத்திய அரசு பணிக்கு தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் போனார் என சர்ச்சை எழுந்தது.  இதிலிருந்து  வெளியேறினால்தான் அவர் பதவியில் வந்து டி.ஜி.பி-யாக (சட்டம்-ஒழுங்கு) அமர முடியும். அதற்கான மூவ்கள் நடக்கின்றன. அந்த ரூட்டில் நடக்கும் முயற்சி ஜெயித்தால், டி.ஜி.பி பதவிக்கு அர்ச்சனாவா? ஜார்ஜா? என்ற போட்டி சூடுபிடிக்கும்’’ என சொன்ன கழுகார், பறந்தார்.