18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு 3-வது நீதிபதி சத்யநாராயணன் முன்பு விசாரணைக்கு வர உள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை எனக் கூறி, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் ஆளுநரிடம் மனு அளித்தனர். இது தொடர்பாக மனு அளித்த சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்யக் கோரி, அ.தி.மு.க கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரைசெய்தார். இதையடுத்து, ஆளுநரிடம் மனு அளித்த எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை தகுதிநீக்கம்செய்து உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, கடந்த மாதம் 14-ம் தேதி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர்.
இதையடுத்து, இந்த வழக்கில் 3-வது நீதிபதி விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டு, நீதிபதி விமலா நியமிக்கப்பட்டார். 3-வது நீதிபதிமீது நம்பிக்கையில்லை எனக் கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள், உச்ச நீதிமன்றத்தை நாடினர். இதையடுத்து, 3-வது நீதிபதியாக அறிவிக்கப்பட்ட நீதிபதி விமாலாவுக்குப் பதிலாக நீதிபதி சத்யநாராயணன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் நேற்று சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் மனு அளித்தார். இதையடுத்து, 3-வது நீதிபதி சத்யநாராயணன் முன்பு இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.