Published:Updated:

கிரிமினல்கள் ஆதிக்கத்தில் கிறுகிறுத்துக் கிடக்கும் உ.பி.!

 கிரிமினல்கள் ஆதிக்கத்தில் கிறுகிறுத்துக் கிடக்கும் உ.பி.!
கிரிமினல்கள் ஆதிக்கத்தில் கிறுகிறுத்துக் கிடக்கும் உ.பி.!

 - ஆர்.ஷஃபி முன்னா
   படங்கள்:
பவண்குமார்

உ..பி-யில் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்த‌ அகிலேஷ் சிங் யாதவ் ஒரு வருடத்தை கஷ்டப்பட்டு நகர்த்தி முடித்திருக்கிறார். அந்த அளவுக்கு உ.பி.யின் சட்டம் - ஒழுங்கு பிரச்னை அவருக்கு தொடர்ந்து சவால் விட்டுக் கொண்டிருக்கிறது.

கடந்த வருடம் முடிந்த உ.பி. சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடிக் கட்சி 224 தொகுதிகளில் வெற்றி பெற்றதால் முதல்வரானர் அகிலேஷ் சிங் யாதவ். இதுவரை உ.பி.யில் பதவி ஏற்ற முதல்வர்களில் இளமையானவர் அகிலேஷ். 2000 ஆம் ஆண்டில் முதன் முறையாக எம்.பி. தேர்தலில் போட்டியிட்டு வென்ற அகிலேஷ், தொடர்ந்து மூன்று முறை எம்.பி.யாக இருந்தார். இவர் முதல்வரானதும் சமாஜ்வாடிக்கு ஒரு இளைமையான புதிய இமேஜ் உருவானாலும், கிரிமினல்களின் ஆதரவுக் கட்சி என்ற பெயர் மட்டும் தொடர்கிறது.

 கிரிமினல்கள் ஆதிக்கத்தில் கிறுகிறுத்துக் கிடக்கும் உ.பி.!

இதை நிரூபிக்கும் வகையில் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே உ.பி.யின் நான்கு இடங்களில் துப்பாக்கி குண்டுகள் முழங்கி, கட்சியினர் நடத்திய‌ வெற்றி கொண்டாட்டத்தில் ஒரு சிறுவன் பலியானான். மறுநாள், மேலும் ஐந்து இடங்களில் சமாஜ்வாடி கட்சியினர் நடத்திய வெறியாட்டத்தில் ஒரு கான்ஸ்டபிளின் சீருடை கிழிக்கப்பட்டது.

இதற்கு அகிலேஷ், 'சமாஜ்வாடி கட்சியின் பெயரை கெடுப்பதற்காக திட்டமிட்டு நடத்தப்படும் சதி இது. சட்டம் ஒழுங்கை கெடுக்க முயல்பவர்கள் நம் கட்சிக்காரர்களாக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.' என எச்சரித்ததுடன்  எம்எல்ஏ  ஒருவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய சிக்னலும் கொடுத்தார்.

 அதன் பிறகும், பஸ்தி ஜெயிலின் விசாரணைக் கைதிகள், அகிலேஷ் முதல்வரான மகிழ்ச்சியை கொண்டாடிய போது, சிறை அதிகாரிகளுடன் நடந்த தகராறு கலவரத்தில் முடிந்தது. இதில், நடந்த துப்பாக்கி சூட்டில் ஒரு விசாரணைக் கைதி உயிரிழந்து ஆறு பேர் காயமடைந்தனர்.சட்டம் ஒழுங்கை காப்பாற்றினால்தான் சமாஜ்வாடி கட்சியின் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளமுடியும் என்பதை நன்கு உணர்ந்திருந்தும் கடந்த‌ ஒருவருடத்தில் அதற்கான கண்டிப்பான‌ நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை அகிலேஷ்.

சமாஜ்வாடியின் எம்.எல்.ஏ.க்களில் 48 சதவிகிதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவாகி இருப்பதும் முக்கிய காரணம் என்று சொல்லும் உ..பி.-யின் காவல்துறை அதிகாரிகள், ''கிரிமினல் வழக்கில் இருப்பவர்களை அகிலேஷ் தனது அமைச் சரவையிலிருந்தாவது தள்ளி வைத்திருந்திருக்கலாம். ஆனால் அதையும் செய்யவில்லை. அகிலேஷின் அமைச் சரவை சகாக்கள் மொத்தம் 96 பேர். இவர்களில் 26 பேர் மீது கிரிமினல் வழக்குகள் விசாரணையில் உள்ளது.

அப்புறம் எப்படி சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்க முடியும்? சொந்தக் கட்சிக்காரர்களின் இம்சைகள் போதாது என்று சுயேச்சை எம்எல்ஏவான ரவுடி ராஜா பைய்யாவையும்  கேபினேட் அமைச்சராக்கினார் அகிலேஷ். கிரிமினல்கள் பட்டி யலில் முன் வரிசையில்  இருக்கும் இந்த ராஜா பைய்யா சமீபத்தில் டிஎஸ்பியின் கொலை வழக்கில் சிக்கி தம் பத வியை துறக்க வேண்டியதாயிற்று. கொல்லப்பட்ட டிஎஸ்பியுடன் சேர்த்து மாநிலத்தில் நான்கு போலீஸார் பணியில் இருந்த போது கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த அவலம் வேறு எந்த மாநிலத்திலும் நடந்திருக்காது" என்று பதறுகிறார்கள்.

அகிலேஷ், கடந்த மாதம் விரிவாக்கம் செய்த தனது அமைச்சரவையிலும் மேலும் இரு கிரிமினல்களை சேர்த்து சர்ச்சைக்குள்ளானார். இதில், தலைந‌கரான லக்னோவின் தலைமை மருத்துவ அதிகாரி கடத்தப்பட்ட வழக்கில் சிக்கியவரும், கால்நடைகளை கடத்துவதற்கு துணை நின்றவரும் அமைச்சராக்கப்பட்டனர்.

 கிரிமினல்கள் ஆதிக்கத்தில் கிறுகிறுத்துக் கிடக்கும் உ.பி.!

மேலும், பரேலி, பைசா பாத், மத்துரா மற்றும் பிரதாப்கர் ஆகிய இடங்களில் ஏற்பட்ட மதக்கலவரங்களும் அகிலேஷ் சாம்ராஜ்யத்தில் விழுந்த‌ கரும்புள்ளிகள். 2012 ஆம் ஆண்டு உ.பி-யில் நடந்த 100 மதக் கலவரங்களில் 34 பேர் உயிரிழந்து, 456 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். என்கிறது மத்திய அரசின் ஒரு புள்ளிவிவரம்.

அகிலேஷ் யாதவின் ஒரு வருட சாதனை குறித்து விகடன் டாட் காமிடம் பேசிய உ..பி. சட்டமன்ற‌ எதிர்கட்சித் தலைவரும் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ.வுமான சுவாமி பிரசாத் மௌரியா, ''எங்கள் அரசு செய்த பல நல்ல திட்டங்களை திரும்பப் பெறுவதிலேயே இந்த அரசு முழு நேரத்தையும் செலவிடுகிறது. இதனால், மாநிலத்தின் வளர்ச்சியில்  கவனம் செலுத்த முடியவில்லை. சட்டம் ஒழுங்கு கெட்டு பல்வேறு வகையான கிரிமினல் குற்றங்கள் பெருகிவிட்டன. தலித்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி கிரிமினல்களுக்கு மட்டுமே இந்த அரசிடம் பாதுகாப்பு கிடைக்கிறது" என்கிறார்.

பி.ஜே.பி.யின் உபி மாநில செய்தி தொடர்பாளர் விஜய் பகதூர் பாதக் கூறுகையில், ''கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட‌ அமைச்சர்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகிறது.  தன் தந்தை மற்றும் சித்தப்பாக்களுக்கு இடையே அகிலேஷ் சிக்கியிருப்பதே இதற்கு முக்கியக் காரணம். இவர்கள் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு மட்டுமே நல்ல சௌகரியங்கள் கிடைக்கிறது.' என்கிறார்.

இதை மறுக்கும் சமாஜ்வாடிக் கட்சியின் செய்தி தொடர்பாளரும் உ.பி. அமைச்சருமான ராஜேந்தர் சௌத்திரி, ''மாயாவதி ஆட்சியை ஒப்பிடுகையில் உ.பி.யில் சட்டம் ஒழுங்கு நல்ல கட்டுப்பாட்டில் உள்ளது. ஐம்பது சதவிகிதத்திற்கும் மேற்பட்ட  பெரிய கிரிமினல்களை முதல்வர் அகிலேஷ் ஜெயிலுக்கு அனுப்பியுள்ளார். தேர்தலில் அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை இந்த் அரசு ஒரே வருடத்தில் நிறைவேற்றி முடித்து விட்டது" எனப் பெருமிதப்படுகிறார்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு நடுவிலும் சில நல்ல காரியங்களும் நடந்திருக்கின்றன. ஐ.டி. உட்பட பல்வேறு துறைகளில் தொழில்களுக்கான முதலீடுகள் உ.பி.யில் ஓரளவுக்கு பெருகியுள்ளன. மகளிர் பாதுகாப்பு குறித்த குற் றங்களை தடுப்பதற்காக துவங்கப்பட்ட ஹெல்ப் லைனில் பதிவான 67,000 புகார்களில் சுமார் 40,000 புகார்கள் தீர்க் கப்பட்டுள்ளன.

 கிரிமினல்கள் ஆதிக்கத்தில் கிறுகிறுத்துக் கிடக்கும் உ.பி.!

வேலையில்லாத பட்டதாரிகளுக்கு உதவித் தொகை, மாணவ மாணவியருக்கு இலவசமான லேப்டாப் மற்றும் டேப்ளட் விநியோகம், விவசாயிகளுக்கான கடன் ரத்து மற்றும் இலவச பாசன வசதி திட்டம் உள்ளிட்ட நல்ல விஷயங்களும் உ.பியில் நடந்திருக்கின்றன.

அகிலேஷ் யாதவின் ஓராண்டு சாதனைக்கு மக்கள் என்ன மதிப்பெண் போடப் போகிறார்கள் என்பது நாடாளுமன்ற தேர்தலில் தெள்ள‌த் தெளிவாக புரிந்துவிடும்!