Published:Updated:

தண்டிக்கப்பட்டவர் பளிச்... பன்னீருக்கு ஸ்டிக்கர்...

தண்டிக்கப்பட்டவர் பளிச்... பன்னீருக்கு ஸ்டிக்கர்...
பிரீமியம் ஸ்டோரி
News
தண்டிக்கப்பட்டவர் பளிச்... பன்னீருக்கு ஸ்டிக்கர்...

அரசுப் பொருட்காட்சி அசிங்கம்!

தண்டிக்கப்பட்டவர் பளிச்... பன்னீருக்கு ஸ்டிக்கர்...

‘சட்டப்படி அமைக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும், மாறா பற்றும் கொண்டிருப்பேன்’ எனப் பதவிப்பிரமாணம் எடுத்துவிட்டு, நீதிமன்றத்தால் குற்றவாளி என உறுதிப்படுத்தப்பட்டவர்களைக் கொண்டாடுகிற அரசு இது! சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவும் சசிகலாவும் ஆளும்கட்சியால் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ‘‘சிறையில் இருக்கிற சசிகலாவின் ஆலோசனைப்படிதான் ஆட்சியே நடக்கிறது’’ என்கிறார்கள். ஜெயலலிதாவின் சமாதி ‘தியான’ மண்டபமாகிவிட்டது. 28கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் ஆர்.கே.நகர் வேட்பாளர் ஆகிவிட்டார்.

தண்டிக்கப்பட்டவர் பளிச்... பன்னீருக்கு ஸ்டிக்கர்...

அரசியல் ரொம்ப அமர்க்களமாகப் போய்க் கொண்டிருக்கிறது. அம்மா குடிநீர் தொடங்கி, உப்பு வரையில் குற்றவாளியின் படங்கள் நீக்கப்படவில்லை. குற்றவாளியின் பிறந்த நாளை அரசு செலவில் கொண்டாடுகிறார்கள். இந்த வரிசையில் அரசுப் பொருட்காட்சியையும் விட்டுவைக்கவில்லை. சென்னை தீவுத் திடலில் நடைபெற்று வரும் பொருட்காட்சியில் திரும்பிய பக்கமெல்லாம் ஜெயலலிதாவின் படங்கள்தான். அரசுப் பொருட்காட்சியில் முதல்வர் படம் வைப்பது வழக்கமான சம்பிரதாயம்தான். ஆனால், இப்போது ஜெயலலிதா குற்றவாளி. டெல்லி மிளகாய் பஜ்ஜியை கடித்தபடியே பொருட்காட்சியை ஒரு ரவுண்ட் அடித்தோம்.

அரசின் அனைத்துத் துறை அரங்கங்களின் முகப்பிலும் உள்ளேயும் நீக்கமற நிரம்பியிருக்கிறார் ஜெயலலிதா. அரங்கங்களின் வாசலில் பார்வையாளர்கள் செல்வதற்காக ‘உள்ளே... வெளியே’ என எழுதி வைத்திருக்கிறார்கள். ஜெயலலிதா படத்தை பெரிதாக வைத்துவிட்டு கீழே ‘உள்ளே... வெளியே’ என போட்டிருப்பது பொருத்தமாகத்தான் இருக்கிறது. சமூகநலத் துறையின் அரங்கத்தில்தான் ஜெயலலிதா படங்கள் ஏராளம். இந்துசமய அறநிலையத் துறை அரங்கம், கோயில் வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. கோயில் கோபுரத்தின் உச்சியிலும் ஜெயலலிதாவை வைத்திருந்தார்கள். கடவுள் நிலை இப்படியென்றால், கல்வியை போதிக்கும் அரங்கமும் ஜெயலலிதாவைக் கொண்டாடி இருக்கிறது.

தண்டிக்கப்பட்டவர் பளிச்... பன்னீருக்கு ஸ்டிக்கர்...

மற்றவர்களைவிட குற்றவாளிகளை நன்கு அறிந்தவர்கள் காவல்துறையினர். அந்தக் காவல்துறை அரங்கத்திலேயே ஜெயலலிதாவின் படத்தை வைத்திருந்தது கொடுமை. குடையில் விஷ ஊசியை இணைத்துக் கொன்ற குற்றவாளிகளின் படங்களை வைத்துவிட்டு, கூடவே ஜெயலலிதாவின் படத்தையும் வைத்திருக்கிறார்கள். இந்தக் காவல் துறை அரங்கத்துக்கு எதிரேதான் இருக்கிறது ‘தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை’. ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கைப் போட்டது இந்தத் துறைதான். நீதிமன்றத்துக்கு பயந்திருப்பார்களோ என்னவோ, அந்த அரங்கத்தில் மட்டும் ஜெயலலிதாவின் படம் ஒன்றுகூட இல்லை. இதன் பக்கத்திலேயே இருக்கிற ‘அரசு சிமென்ட்’ அரங்கத்தில் ஜெயலலிதா சிரிக்கிறார். ‘அன்று இந்திய மண்ணுக்கு சுதந்திரம் தந்தது மகாத்மாவின் எளிமை. இன்று ஊழலற்ற பாரதத்துக்குத் தேவை எங்கள் உறுதிமொழி’ என ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அரங்கத்தில் உபதேசம் போல எழுதி வைத்திருக்கிறார்கள். ‘பொது ஊழியர் தனக்குரிய அரசுப் பணியைச் செய்ய பொருளோ, சலுகையோ, பணமோ பெற்றால் அது ஊழல்’ என அச்சிட்டிருக்கிறார்கள். அடுத்து ஒரு போர்டில் இருந்த வாசகம் இது... ‘லஞ்சம் கேட்பவர்களை பொறி வைத்துப் பிடிப்பது, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை சேர்க்கும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது எங்கள் பணி’.

தண்டிக்கப்பட்டவர் பளிச்... பன்னீருக்கு ஸ்டிக்கர்...

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமும் அரங்கம் அமைத்திருக்கிறது. ரயிலுக்குள் நுழைவது போலவே முகப்பை வடிவமைத்திருக்கிறார்கள். ஆலந்தூர் - கோயம்பேடு இடையே மெட்ரோ ரயில் சேவையை 2015 ஜூனில் ஜெயலலிதா தொடங்கி வைத்தபோது எடுத்த படம் மிகப் பெரிய அளவில் அரங்கத்தின் மையத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த விழாவில் ஜெயலலிதாவுக்கு பக்கத்தில் நின்றிருந்த ஒருவரை மட்டும் வெள்ளை பேப்பர் ஒட்டி மறைத்திருந்தார்கள். அவர் வேறு யாருமல்ல, ஓ.பன்னீர்செல்வம். தனிப்பாதையில் செல்வதால் அவர் படத்தை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்திருந்தார்கள். தண்டனை உறுதி செய்யப்பட்டவர் படத்தை மறைக்காமல், அன்றைக்கு அமைச்சராக இருந்து இப்போது எம்.எல்.ஏ-வாக இருக்கிற பன்னீர்செல்வத்தின் படத்தை மறைக்கிற அளவுக்கு அறிவுஜீவிகளைக் குடிகொண்டிருக்கிறது மெட்ரோ ரயில் நிறுவனம். மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசும் 50 சதவிகித பணம் அளிக்கிறது. மத்திய பி.ஜே.பி அரசு பணம் கொடுத்தாலும், பன்னீரை பி.ஜே.பி ஆதரித்தாலும் கவலையில்லை எனச் சொன்ன கனவான்கள் யாராக இருக்கும்?

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

படங்கள்: பா.காளிமுத்து