
"கனவுகளுடன் சென்றவரைப் பிணமாகத் தந்தது மத்திய அரசு!"

சேலம் நகரின் ஒதுக்குப்புறமாக இருக்கிறது பாவேந்தர் நகர். சிறு சிறு பெட்டிகளை அடுக்கி வைத்ததுபோல சுமார் 250 வீடுகள். அதில் ஒன்றுதான், முத்துகிருஷ்ணன் வீடு. டெல்லியில் மர்மமான முறையில் மரணம் அடைந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ) ஆய்வு மாணவர் வீடு. ஐந்து பேர் கூட அமர்ந்து இருக்க முடியாத அளவுக்கு மிகச்சிறியது. வீட்டு வாசலில் முத்துகிருஷ்ணன் உடலை வைத்திருந்தார்கள். பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார்கள். “படிச்சு முடிச்சிருந்தா எங்க சமூகத்தையே முன்னேத்தி இருப்பானே” என்று ஆற்றாமையோடு கதறுகிறார் கந்தல் உடையணிந்த ஒரு மூதாட்டி.

முத்துகிருஷ்ணன் உடல் டெல்லியிலிருந்து அவரது சொந்த ஊரான சேலத்துக்கு மார்ச் 16-ம் தேதி காலையில் கொண்டுவரப்பட்டது. தந்தை ஜீவானந்தம், தாயார் அலமேலு, சகோதரிகள் கலைவாணி, ஜெயந்தி, சுபா மற்றும் உறவினர்களும், ஊர்மக்களும் முத்துகிருஷ்ணனின் உடலைப் பார்த்துக் கதறி அழுதார்கள். சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, தகடூர் தமிழ்செல்வம், சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் சிவலிங்கம், கிழக்கு மாவட்டச் செயலாளர் வீரபாண்டி ராஜா என அதிகாரிகளும் அனைத்துக் கட்சியினரும் வந்து அஞ்சலி செலுத்தும் அளவுக்கு இந்த மரணம், தமிழகத்தை பாதித்து இருந்தது.
முத்துகிருஷ்ணனின் பெற்றோருக்கும், சகோதரிகளுக்கும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்தார். பின்னர், பேட்டிக்காக பத்திரிகையாளர்கள் அவரைச் சூழ்ந்தனர். அப்போது, திடீரென அவரை நோக்கி செருப்பு வீசப்பட்டது. அவர் மீது செருப்பு படவில்லை என்றாலும், அந்தச் சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய அமைச்சர் மீது செருப்பு வீசியவர், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாலமன். இந்திய மக்கள் முன்னணி என்ற அமைப்பைச் சேர்ந்த அவரை, போலீஸார் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். பிறகு, பத்திரிகை யாளர்களிடம் பேசிய பொன்னார், ‘‘என் தம்பியைப் போல எண்ணி டெல்லியில் இருந்து சென்னை வரை முத்துகிருஷ்ணன் உடலைக் கொண்டு வந்தேன். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் 60 ஆண்டு காலமாக தாக்கப்பட்டு வருகிறார்கள். நண்பர்கள் வீட்டுக்கு ஹோலி பண்டிகைக்குச் சென்றபோது, இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து முழு விசாரணை நடத்தப்படும்’’ என்றார். அப்போது, ‘‘கனவுகளுடன் சென்ற முத்துகிருஷ்ணனைப் பிணமாகத் தந்தது மத்திய அரசு... கொலை செய்வது நியாயமா! செருப்பால் அடித்தால் பாவமா?” என்ற முழக்கங்களை எழுப்பியவாறு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும், திராவிடர் விடுதலைக் கழகத்தினரும் பொன்னாரை நோக்கிச் சென்றனர். இதனால், அங்கு களேபரச் சூழல் ஏற்பட்டது. போலீஸார் அவரைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

‘சாலமனை உடனே விடுதலைச் செய்ய வேண்டும்’ என்று விடுதலைச் சிறுத்தைகள், பகுஜன் சமாஜ் கட்சி, பொது நல மாணவர் எழுச்சி இயக்கம், மாணவர் இளைஞர் பேரவை, புரட்சிகர இளைஞர் கழகம் போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சாலையில் அமர்ந்து கோஷமிட்டனர். அங்கு, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் வந்தார். அந்த சமயத்தில், ஏராளமான பெண்கள் நான்கு ரோடு சிக்னலில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், சேலம் மாநகரில் சற்று நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அந்தப் பெண்களை கைது செய்த போலீஸார், அவர்களைக் கூட்டிச் சென்று முத்துகிருஷ்ணன் வீட்டில் விட்டார்கள்.

சாலமனை உடனே விடுதலை செய்யுமாறு விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்பினர் கமிஷனரைச் சந்தித்து வலியுறுத்தினர். அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்தார். அதனால், முத்துகிருஷ்ணனின் உடல் அருகே அமர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். கடைசியில், முத்துகிருஷ்ணன் குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க போராட்டம் கைவிடப்பட்டது. அதன்பின், சேலம் செவ்வாய்பேட்டை மயானத்தில் 2:30 மணிக்கு உடல் அடக்கம் செய்யப்பட்டது.
முத்துகிருஷ்ணனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லியிலிருந்து வந்திருந்த ஜே.என்.யூ மாணவர் விஜய் அமிர்தராஜ், ‘‘ஜே.என்.யூ-வில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள எல்லா பல்கலைக்கழகங்களிலும் தலித் மாணவர்கள் வேண்டா வெறுப்பாகவே பார்க்கப்படுகிறார்கள். தலித் பிள்ளைகள் உயர்கல்வி படிக்கக் கூடாது என்று சட்டம் எதுவும் இருக்கிறதா? முத்துகிருஷ்ணனை எனக்கு நன்றாகத் தெரியும். தற்கொலைச் செய்யும் அளவுக்கு கோழை அல்ல அவர். அவரது அறைக்குக் கீழ் அறையில்தான் நான் இருக்கிறேன். முத்துகிருஷ்ணன் இறந்ததும் ஏன் அவருடைய பெற்றோருக்குத் தகவல் கொடுக்கப்படவில்லை? விசாரணை அதிகாரியாக ஒரே சமூகத்தைச் சேர்ந்தவரை ஏன் நியமிக்க வேண்டும்? தூக்கில் தொங்கினால் கால்கள் எப்படி தரையில் கிடக்கும் என்பன உட்பட ஐந்து சந்தேகங்களை மாணவர் இயக்கத்தின் சார்பில் வைத்துள்ளோம். இந்த மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்’’ என்றார்.
- வீ.கே.ரமேஷ்
படங்கள்: க.தனசேகரன், எம்.விஜயகுமார்