Published:Updated:

“இரண்டு சைடும் ஓட்டு இருக்குனு சொல்லி தளபதி சிரித்தார்!”

“இரண்டு சைடும் ஓட்டு இருக்குனு சொல்லி தளபதி சிரித்தார்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“இரண்டு சைடும் ஓட்டு இருக்குனு சொல்லி தளபதி சிரித்தார்!”

தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ் உற்சாகம்

“இரண்டு சைடும் ஓட்டு இருக்குனு சொல்லி தளபதி சிரித்தார்!”

28 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஜெயலலிதா இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தல்... ஜெயலலிதா மறைந்த வெற்றிடத்துக்காக நடைபெறும் தேர்தல்.

டி.டி.வி.தினகரனை வேட்பாளராக்கி, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை அகில இந்திய அளவில் கவனம் பெறச் செய்திருக்கிறது அ.தி.மு.க. ‘தினகரனைச் சமாளிக்க தி.மு.க யாரை வேட்பாளர் ஆக்கும்’ எனக் கேள்விகள் எழுந்த நிலையில், அதிகம் வெளியில் அறிமுகம் இல்லாத ஒரு புதுமுகத்தைத் தனது வேட்பாளராகக் களமிறக்கி உள்ளது தி.மு.க. அவர், வழக்கறிஞர், பத்திரிகையாளர், அரசியல்வாதி என பன்முகங்கள் கொண்ட என்.எம்.கணேஷ் என்கிற மருதுகணேஷ். ‘சவால் மிகுந்த ஓர் இடைத்தேர்தலில் தம்மை வேட்பாளராக முன்னிறுத்தி, தமது கட்சி பெரும் அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளது’ என்ற மகிழ்ச்சியில் இருந்த மருதுகணேஷுடன் ஓர் உரையாடல் நடத்தினோம்.

இடம்: காசிமேடு கடற்கரை.
 
நேரம்: நள்ளிரவு 1.30 மணி.


“நாளிதழ் ஒன்றின் நிருபர், வழக்கறிஞர், இப்போது ஒரு பெரிய கட்சியின் வேட்பாளர். இந்த வாய்ப்பை எப்படி உணர்கிறீர்கள்?”

“நிருபராகப் பணியாற்றியபோது, செய்திகளைத் தருவது என்பதைத் தாண்டி, சமூகப்பணியிலும் அதிக கவனம் செலுத்தினேன். அது, இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு ஒரு காரணமாக இருந்துள்ளது. தி.மு.க-வின் வேட்பாளராக நிற்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.”

“ஆளும்கட்சியின் வேட்பாளரான டி.டி.வி.தினகரன், உங்களுக்கு வலுவான போட்டியாளர் இல்லையா?’’


“அ.தி.மு.க-வுக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியால் அந்தக் கட்சி சிதறிக்கிடக்கிறது. மு.க.ஸ்டாலினின் அணுகுமுறையும், செயல்பாடும் அவர் மேயராக இருந்தபோதும், துணை முதல்வராக இருந்தபோதும் தமிழ்நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தளபதியின் செயல்பாடும், தி.மு.க மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் எனக்கு மிகப்பெரிய பலம். அதனால், ஆர்.கே.நகரில் தி.மு.க-வுக்கு இமாலய வெற்றி கிடைக்கும்.”

“வழக்கறிஞர் கிரிராஜன், சிம்லா முத்துச்சோழன் என இங்கு வேட்பாளர் ஆவதற்கான போட்டியில் பலர் இருந்தும் நீங்கள் எப்படித் தேர்வு செய்யப்பட்டீர்கள்?’’

 “பேராசிரியர், தளபதி உள்ளிட்ட தலைவர்கள் நேர்காணலின்போது இருந்தனர். என்னுடைய குடும்பப் பின்னணி, கல்வி, தொழில் பற்றிய கேள்விகளுடன் தளபதி மிகவும் இயல்பாக நேர்காணலைக் கொண்டுபோனார். திடீரென, ‘உங்களுக்கு சீட் கொடுத்தால் வெற்றிக்காக எவ்வளவு செலவு செய்வீர்கள்?’ என்று சிரித்துக்கொண்டே தளபதி கேட்டார். ‘வெற்றிபெறும் அளவுக்குச் செலவு செய்வேன் அண்ணே’ என்றேன். ‘அப்ப... உங்ககிட்ட எவ்வளவு அமௌன்ட் இருக்குனு சொல்ல மாட்டீங்க?’ என்று சொல்லிவிட்டுச் மீண்டும் சிரித்தார். பிறகு, ‘ஆர்.கே.நகரில் எந்தச் சமூகத்தவரின் வாக்குகள் அதிகம்?’ என்று கேட்டார். ‘வன்னியர் முதலிடத்தில் உள்ளனர். தொகுதிச் சீரமைப்பில் ராயபுரம் தொகுதியில் இரண்டு வார்டுகள் ஆர்.கே.நகரில் வந்துவிட்டதால் இரண்டாம் இடத்தில் மீனவர்கள், அதற்கடுத்து ஆதி ஆந்திரர், தலித், இஸ்லாமியர், நாடார் என்று வாக்குகள் உள்ளன’ என்று சொன்னேன். ‘தொகுதி வாக்காளர்கள் எவ்வளவு என்று தெரியுமா?’ என்றார். அதுபற்றிய புள்ளிவிவரங்களைச் சொன்னேன்.

ஆர்.கே.நகரில் வன்னியர்கள் அதிகம் என்று நான் சொன்னதும், அதைப் பற்றி கூடுதல் விவரங்களை ஸ்டாலின் கேட்டார். அதற்கு, ‘நான் முதலியார் வகுப்பைச் சேர்ந்தவன். என் மனைவி வன்னியர் சாதியைச் சேர்ந்தவர். காதல் திருமணம்’ என்று சொன்னேன். ‘அப்படீன்னா, இரண்டு சைடும் ஓட்டு இருக்கு’ என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.

‘உங்களுக்கு சீட் கொடுக்கப்படவில்லை என்றால், வேறு யாருக்குக் கொடுக்கலாம்?’ என்று தளபதி கேட்டார். ‘1977 மற்றும் 80 தேர்தல்களில் இங்கு போட்டியிட்ட அ.தி.மு.க-வின் ஐசரிவேலன் தவிர, இன்று வரை எந்த பெரிய கட்சியிலும் தொகுதியில் உள்ளவர்களுக்கு சீட் கொடுக்கப்படவில்லை. நான் தொகுதிக்காரன். எனக்கு இல்லாவிட்டால், ஆர்.கே.நகர் தொகுதியில் வசிக்கும் நம் கட்சிக்காரர் யாருக்காவது கொடுங்கள்’ என்று சொன்னேன். பிறகு, தொகுதிப் பிரச்னைகள் குறித்துப் பேசினார். அதன்பின் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.’’

“உங்கள் குடும்பத்தைப் பற்றி...”

“என் தாயார் பார்வதி நாராயணசாமி, முன்னாள் தி.மு.க கவுன்சிலர். கட்சியில் பொதுக்குழு உறுப்பினர். அப்பா நாராயணசாமி, தி.மு.க-வின் தீவிரப் பற்றாளர். மனைவி கவிதா பி.ஏ., பி.லிட்., பி.எட்., எம்.ஏ., பட்டதாரி. அவர்களைவிட நான் படிப்புக் குறைவுதான். நான் படித்திருப்பது பி.காம்., எல்.எல்.பி., எம்.ஏ. மகள் பூமாலை ரோஷிணி பிளஸ் ஒன் படிக்கிறார். மகன் தனுஷ் குணசேகரன். என் பிள்ளைகளுக்குத் தலைவர் கலைஞர்தான் பெயர்கள் வைத்தார்.”

மருதுகணேஷுடனான உரையாடல் முடியும்போது நள்ளிரவு 2.30 மணி. கடற்கரை மணல்வெளியிலிருந்து வெளியே நாங்கள் வந்தபோது சில இளைஞர்கள் அங்கு காத்திருந்தனர். அவர்களிடம், ‘‘காலைல நாலு மணிக்கு வந்துடறேன். ரெடியா இருங்க. நிறைய வேலைகள் இருக்கு. மாவட்டம் வந்திடுவாரு. தூங்கிடாதீங்க சரியா...’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார் மருதுகணேஷ்.

வெறும் ஒன்றரை மணி நேரத் தூக்கம் என்பது, இடைத்தேர்தலில் மிகப் பெரிய ஓய்வு போலிருக்கிறது.

 - ந.பா.சேதுராமன்