Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

சுதாகர், சென்னை.10

இரோம் சர்மிளா தோற்றுப் போய்விட்டாரே?

இரோம் சர்மிளா வெற்றி பெற்றிருந்தால்தான் ஆச்சர்யப்பட வேண்டும். இரோம் சர்மிளாக்களை வெற்றி பெற வைக்கும் அளவுக்கு மணிப்பூர் உள்ளிட்ட எந்த மாநிலமும் விழிப்பு உணர்வு பெற்றுவிட வில்லை. மணிப்பூரில் ராணுவத்துக்கு எல்லையற்ற அதிகாரம் தந்திருக்கும் அடக்குமுறைச் சட்டத்துக்கு எதிராக, அவர் 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்தார். சட்டமன்றத்துக்குள் சென்று போராடி இந்தச் சட்டத்தை நீக்க வைக்க வேண்டும் என்று சர்மிளா நினைத்தார். அதற்காகத்தான், ‘மக்கள் எழுச்சியும் நீதியும்’ என்ற கட்சியைத் தொடங்கினார். ‘உள்ளூர் அரசியல் மீது எனக்கு ஆர்வம் இருந்தது இல்லை’ என்று சொல்லி வந்தவர் அவர். அப்படிப்பட்டவர் திடீரென மனம் மாறியது ஏன் என்று தெரியவில்லை. ஏதாவது ஒரு கட்டத்தில் போராட்டத்தை முடித்துக்கொள்ள அவர் நினைத்திருக்கலாம். பிரசாரத்தின்போது தனக்குத் தரப்பட்ட பாதுகாப்பை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை. ஆனால், மக்கள் இவ்வளவு மோசமான தோல்வியைத் தனக்குத் தருவார்கள் என்றும் அவர் எதிர்பார்க்கவில்லை. மக்கள் ஏமாற்றிவிட்டதாகவும், அவர்கள் மனச்சாட்சிப்படி வாக்களிக்கவில்லை என்றும், கட்சி எல்லைகளைத் தாண்டி வாக்காளர்கள் இன்னும் முடிவெடுக்கத் தயாராக இல்லை என்றும் சொல்லி, சோர்ந்துபோன மனநிலையில் சர்மிளா பேசி இருக்கிறார்.

தேர்தலில் வெற்றி, தோல்விகள் இயல்பானவைதான். அவர் தனது போராட்ட வாழ்க்கையைத் தொடர வேண்டும். மேலும், ‘தேர்தல் முடிந்ததும் திருமணம் செய்து கொள்வேன்’ என்றும் சொல்லி வந்தார். குடும்ப வாழ்க்கையையும் கொள்கை வாழ்க்கையையும் அவர் தொடர வேண்டும்.

கழுகார் பதில்கள்!

டி.சந்திரன், ஈரோடு.

மீனவர்கள் விஷயத்தில் இலங்கையின் அட்டூழியம் தொடர என்ன காரணம்?


இந்தியாவைப் பற்றிய பயம் இல்லாததுதான் காரணம். ‘இந்திய மீனவர்களை சிங்களக் கடற்படை சுடுகிறது என்றால், இந்தியாவைப் பற்றிய பயம் அவர்களுக்கு இல்லை. தட்டிக் கேட்கும் துணிச்சலான தலைமை இந்தியாவில் இல்லை என்பதே இதற்குக் காரணம். இதைக் கேள்வி கேட்காத, முதுகெலும்பு இல்லாத பிரதமராக மன்மோகன் சிங் இருக்கிறார்’ என்று சென்னை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். மன்மோகன் சிங் ஆட்சி முடிந்து மோடியே பிரதமராக வந்துவிட்டார். ஆனாலும், கொலை நடக்கிறது.

கழுகார் பதில்கள்!

இன்னொன்றையும் மோடி சொன்னார். ‘தமிழக மீனவர்களுக்கு இலங்கையால் பிரச்னை. குஜராத் மீனவர்களுக்கு பாகிஸ்தானால் பிரச்னை. இரண்டு மாநில மீனவர்களுக்கும் ஒரே பிரச்னைதான். எனவே, ஒன்றுபட்ட தீர்வை சேர்ந்து எட்டுவோம்’ என்றும் சென்னையில் மோடி பேசினார். இவை எல்லாம் நடக்காமல் போனதன் விளைவுதான், கொலைகள் தொடர்கின்றன. மன்மோகன் சிங்கிடம் முதுகெலும்பைத் தேடிய மோடி, தன்னிடம் அது இருக்கிறது என்று காட்டவேண்டிய நேரம் இது என்பதை உணரவேண்டும்.

கழுகார் பதில்கள்!

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

 ‘ஓ.பன்னீர்செல்வத்துக்குத் தெரியாமல் ஜெயலலிதாவுக்கு எந்தச் சிகிச்சையும் அளிக்கவில்லை’ என்று அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்லியிருப்பது பற்றி?

 ஜெயலலிதா உடல்நிலை பற்றி ஓ.பன்னீர் செல்வத்துக்கு நிறைய விஷயங்கள் தெரியும். அதை அவர் இன்னமும் வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஜெயலலிதாவுக்குத் தரப்பட்ட சிகிச்சை குறித்து தனக்குச் சந்தேகம் இருப்பதாக பன்னீர் இப்போது சொல்வது தவறு. அவர் தனது சந்தேகத்தை முன்பே சொல்லி, ஜெயலலி தாவைக் ‘காப்பாற்றி’ இருக்க வேண்டும். அதைச் செய்யாமல் இப்போது பேசுவது ஜெயலலிதாவுக்கே செய்யும் துரோகம்.

‘பன்னீர்செல்வத் துக்குத் தெரியாமல் ஜெயலலிதாவுக்கு எந்தச் சிகிச்சையும் அளிக்கவில்லை’ என்று விஜயபாஸ்கர் சொல்வது சரியா என்பதை விஜயபாஸ்கரின் மனச்சாட்சி அறியும். உண்மையில், ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை என்ற ஒன்று அளிக்கப்பட்டதா என்பதை அப்போலோ ரெட்டியின் மனச்சாட்சி அறியும்!

எஸ்.பவதாரிணி சீனிவாசன், ஆலத்தம்பாடி.

கழுகார் பதில்கள்! தமிழக காங்கிரஸ் கட்சியில் என்னதான் நடக்கிறது?

 ‘கட்சி’ நடக்கவில்லை!

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

 அரசியல்வாதிகள் எப்படிப்பட்ட பிசினஸ் பார்ட்னர்கள்?

 எல்லாவற்றிலும் எல்லா நேரமும் லாபம் மட்டுமே வர வேண்டும் என்று நினைக்கும் பார்ட்னர்கள், அதுவும் ‘முதல்’ எதுவும் போடாமலேயே!

ரெ.பாபு, கோவில்பட்டி.

  ஆவிக்கும் ஆன்மாவுக்கும் உள்ள வேறுபாடு?

 இருக்கும் விஷயங்களுக்குத்தான் வேறுபாடு காட்ட முடியும். இல்லாதவற்றுக்குள் என்ன வேறுபாடு?

கழுகார் பதில்கள்!


லா.ரா.கணபதி, மடிப்பாக்கம்.

 தமிழக அரசியலில் தற்போதைய ஹீரோ யார்?

 அப்படி யாரும் இல்லை!

எஸ்.பூவேந்த அரசு, பெரியமதியாக்கூடலூர்.

 பெங்களூருக்குப் போகாமல், தமிழகத்திலேயே சொத்துக் குவிப்பு வழக்கு நடந்திருந்தால், அந்த வழக்கு என்னவாகி இருக்கும்?

 எப்போதோ சாம்பல் மேடு ஆகி இருக்கும். சொத்து மதிப்பு பல நூறு மடங்கு அதிகம் ஆகி இருக்கும்!

கழுகார் பதில்கள்!

சம்பத்குமாரி, பொன்மலை.

 ‘நான் 1989-ல் எம்.எல்.ஏ ஆனேன். பன்னீர்செல்வம் 2001-ல்தான் எம்.எல்.ஏ ஆனார். எனவே, பன்னீரை விட எனக்குத்தான் முதலமைச்சர் ஆகும் தகுதி இருக்கிறது’ என்கிறாரே முதல்வர் எடப்பாடி பழனிசாமி?

 ஜெயலலிதாவும் 1989-ம் ஆண்டுதான் முதன்முதலாக எம்.எல்.ஏ ஆனார். அதற்காக ஜெயலலிதாவும் எடப்பாடி பழனிசாமியும் ஒரே தகுதி உடையவர்களாக ஆகிவிடுவார்களா? யார், எப்போது எம்.எல்.ஏ ஆனார்கள் என்பது முக்கியமல்ல. 2001, 2014 ஆகிய இரண்டு முறையும் தனக்குப் பதிலாக முதலமைச்சர் நாற்காலியில் பன்னீர்செல்வத்தையே ஜெயலலிதா உட்கார வைத்தார். அதனால்தான் அவர் தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றார். அப்போலோ மருத்துவமனைக்கு வந்துசென்ற கவர்னர் வித்யாசாகர் ராவ்கூட, ஜெயலலிதாவின் ஆலோசனைப்படியே அவருடைய பொறுப்புகளை பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கியதாக கூறினார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எடப்பாடியின் ஒப்பீடு சரியானது அல்ல.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள்,
ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com  என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!