Published:Updated:

போட்டியிடத் தடை? - ஆர்.கே.நகர் வேட்பாளர் சிங்கப்பூர் குடிமகனா?

போட்டியிடத் தடை? - ஆர்.கே.நகர் வேட்பாளர் சிங்கப்பூர் குடிமகனா?
பிரீமியம் ஸ்டோரி
News
போட்டியிடத் தடை? - ஆர்.கே.நகர் வேட்பாளர் சிங்கப்பூர் குடிமகனா?

போட்டியிடத் தடை? - ஆர்.கே.நகர் வேட்பாளர் சிங்கப்பூர் குடிமகனா?

போட்டியிடத் தடை? - ஆர்.கே.நகர் வேட்பாளர் சிங்கப்பூர் குடிமகனா?

டி.டி.வி.தினகரனின் அரசியல் பிரவேசத்துக்கு வைக்கப்பட்டுள்ள அக்னிப்பரீட்சை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல். சசிகலா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், அ.தி.மு.க என்ற கட்சியையும், அதன் தலைமையில் அமைந்துள்ள ஆட்சியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளத் திட்டமிட்டு செயல்படுகிறார் தினகரன். நிழல் அதிகார மையமாக இருப்பதில் நிறைவு காணாமல், நிஜ அதிகாரத்தை வசப்படுத்தும் வேட்கையுடன் அ.தி.மு.க வேட்பாளராக ஆர்.கே.நகரில் களம் இறங்கி உள்ளார். அந்தக் களத்தில் கிடைக்கப்போகும் வெற்றி-தோல்வியைப் பொறுத்தே, தினகரனின் கனவுகள் நிஜத்தில் நிறைவேறுமா.... கலைந்து காணாமல் போகுமா... என்பதில் ஒரு முடிவுக்கு வரமுடியும். ஆனால், “தேர்தல் வரைக்கும் கூட தினகரனின் ஆட்டத்தை நீட்டிக்கவிடமாட்டோம்; அவரைத் தேர்தலில் போட்டியிடவே விடமாட்டோம்” என்று கங்கணம் கட்டிச் செயல்படுகிறது தினகரனுக்கு எதிர்(ரி) அணியான ஓ.பி.எஸ் அணி. 

“தினகரன் ‘ஃபெரா’ வழக்குகளின் நாயகன்; அதில் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது; அதனால், அவர் ஆர்.கே.நகரில் போட்டியிட முடியாது. ‘தான் சிங்கப்பூர் சிட்டிசன்’ என்று சொன்ன தினகரனை ஆர்.கே.நகரில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது. குறுக்கு வழியில் கட்சிக்குள் புகுந்து, அங்கு இல்லாத ஒரு பொறுப்பில் அமர்த்திவைக்கப்பட்ட தினகரன், இரட்டை இலையில் போட்டியிட முடியாது” என்று அடுக்கடுக்காய் குற்றம்சாட்டி கட்டையைப் போடுகிறது ஓ.பி.எஸ். அணி.

போட்டியிடத் தடை? - ஆர்.கே.நகர் வேட்பாளர் சிங்கப்பூர் குடிமகனா?

‘தினகரன் தேர்தலில் வெற்றி பெறுவாரா... இல்லையா?’ என்பதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்; அவர் தேர்தலில் போட்டியிட முடியுமா... முடியாதா? என்பதை உறுதி செய்ய சட்ட வல்லுநர்களிடம் பேசினோம்.

மண்ணின் மைந்தனா... சிங்கப்பூர் சிட்டிசனா? 


1991-96 காலகட்டத்தில் டி.டி.வி.தினகரன், ஜெயலலிதாவின் வெளிநாட்டு பணப்பரிமாற்றங்களின் தளகர்த்தராகத் திகழ்ந்தார். ஜெ.ஜெ டி.வி ஒப்பந்தம், லண்டன் ஹோட்டல், ஃபாரின் கார்கள், இங்கிலாந்து பார்க்கிலே வங்கி, அமெரிக்க டாலர்கள் என்று ஜெயலலிதாவைச் சுற்றிய பல விவகாரங்களில் சூட்சும முடிச்சுகள் தினகரன் போட்டவைதான். இதையடுத்து அவர் மீது ஃபெரா சட்டத்தின்படி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. அதன்பிறகு காஃபிபோசா சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப் பட்டார். அந்தச் சூழலில் தினகரன், தன்னைச் சிங்கப்பூர் சிட்டிசன் என்று கூறினார். அவர் அமலாக்கத்துறைக்கு எழுதிய கடிதம், அவருடைய மனைவி அனுராதா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு ஆகியவற்றில் ‘தினகரன் வெளிநாடு வாழ் இந்தியர்’ என்று திரும்பத் திரும்பக் கூறப்பட்டது. தினகரனின் மனைவி, “என் கணவரைக் காணவில்லை” என்று கூறி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விவகாரம், உச்ச நீதிமன்றம் வரை சென்றது. அதை விசாரித்துத் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், “தினகரன் வெளிநாடு வாழ் இந்தியர் என்றாலும் அவர் இந்தியக் குடிமகன்தான். அவர் வெளிநாடு வாழ் இந்தியர் என்பதைச் சொல்லி இந்த வழக்குகளிலிருந்து தப்பிக்கமுடியாது” என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டது.

அதன்பிறகு ஃபெரா வழக்கில் அமலாக்கத்துறை 31 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. (நீதிமன்றம் விதிக்கவில்லை; அமலாக்கத்துறை விதித்தது). அந்த அபராதத்தை எதிர்த்து தினகரன், அந்நியச் செலாவணி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், சென்னை உயர் நீதிமன்றம் என்று அடுத்தடுத்து மனு தாக்கல் செய்தார். ஒவ்வொரு மனுவிலும், “நான் வெளிநாடுவாழ் இந்தியர்; சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்; எனக்கு இந்தியாவில் உள்ள வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனை விதிமுறைகள் பொருந்தாது” என்றுதான் குறிப்பிட்டார்.

இறுதியாக தினகரனின் மேல்முறையீட்டு மனுவை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு விசாரித்துத் தீர்ப்பளித்தது. அதில், “மனுதாரர் டி.டி.வி.தினகரன், தான் இந்தியக் குடிமகன் இல்லை; வெளிநாடுவாழ் இந்தியர் என்று கூறியுள்ளதை ஏற்கமுடியாது. அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ‘காஃபிபோசா’ சட்டத்தின் கீழ் மனுதாரர் மீது வழக்குப் பதிவுசெய்து, அவரைக் கைது செய்துள்ளனர். அந்த வழக்கு விசாரணையின் போதும் ‘நான் வெளிநாட்டில் வசிக்கிறேன்’ என்று கூறியவர், இந்தியாவில் உள்ள தமிழகத்தின் பெரியகுளம் மக்களவைத் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார். அது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில்  தொடரப்பட்ட தேர்தல் வழக்கில் மனு தாக்கல் செய்துள்ளார். அப்படிச் செய்தபோது, ‘நான் இந்தியக் குடிமகன்’ என்று தெளிவாகக் கூறியுள்ளார். தனக்கு எதிரான வழக்கில் ‘தான் வெளிநாடு வாழ் இந்தியர்’ என்கிறார்; மற்றவர்களுக்கு எதிராக தான் தொடரும் வழக்கில் ‘தான் ஒரு இந்தியக் குடிமகன்’ என்கிறார். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நிலைப்பாட்டை எடுத்துள்ளார். எனவே அதை ஏற்க முடியாது. எனவே டி.டி.வி.தினகரன் தாக்கல் செய்த அப்பீல் மனுவை தள்ளுபடி செய்கிறோம்’’ என்று உத்தரவிட்டனர்.

போட்டியிடத் தடை? - ஆர்.கே.நகர் வேட்பாளர் சிங்கப்பூர் குடிமகனா?

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டால், தினகரன் சிங்கப்பூர் சிட்டிசன் என்பதை கீழ் நீதிமன்றங்கள் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரை எல்லாமே புறக்கணித்துள்ளன. இந்த விவகாரங்கள் பற்றி மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயனிடம் பேசினோம். “சிங்கப்பூரில் தினகரன் பெற்றிருப்பது ரெசிடன்சியல் ஸ்டேட்டஸ். அங்கு அவர் சிட்டிசன்ஷிப் வாங்கவில்லை. அவர் இன்றுவரை இந்தியக் குடியுரிமை பெற்ற இந்தியக் குடிமகன்தான். அந்த அடிப்படையில்தான் அவர் பெரியகுளம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். ராஜ்யசபா உறுப்பினராகப் பொறுப்பு வகித்தார். ஒருவர் இரண்டு நாட்டின் குடியுரிமைகளை ஒருபோதும் வைத்திருக்க முடியாது. ஒரு நாட்டில் குடியுரிமை வாங்கி விட்டால், மற்றொன்று தானாக ரத்தாகிவிடும். அந்த அடிப்படையில் தினகரன் சிங்கப்பூர் குடியுரிமை வாங்கி இருந்தால், எப்போதோ அவருக்கு இந்தியக் குடியுரிமை ரத்தாகி இருக்கும். அவர் பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டிருக்கவே முடியாது. அதனால், சிங்கப்பூரில் அவர் பெற்றுள்ள வசிப்புரிமை (Residential Status), ஆர்.கே.நகரில் போட்டியிடத் தடையாக இருக்காது. சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஒரு தொகையை முதலீடு செய்தால் அந்த அரசாங்கம் அந்த வசதியைக் கொடுக்கும். அப்படி தனக்கு கிடைத்த ஒரு வசதியை தற்காப்பு ஆயுதமாகப் பயன்படுத்தி, ஃபெரா வழக்கில் இருந்து தப்பிக்க தினகரன் முயன்றார். ஆனால், அதை எந்த நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அந்த அடிப்படையில் அவர் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க முடியாது. ஆனால், ‘தினகரன்  இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியுமா’ என இன்னொரு கேள்வி எழுகிறது.

‘இரட்டை இலை’ கிடைக்காது!


அ.தி.மு.க என்ற கட்சியில், அதன் சட்ட திட்டங்களின்படி துணைப் பொதுச் செயலாளர் என்ற பதவியே கிடையாது. எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அதுதான் நடைமுறை. அந்தக் கட்சியின் ‘பை-லா’விலும் அப்படித்தான் இருக்கிறது. அதனால் தினகரன் துணைப்பொதுச் செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டது செல்லாது என்பது ஒருபக்கம்; அவர் கையெழுத்துப் போடும்
ஃபார்ம் பி படிவத்தை தேர்தல் ஆணையம் ஏற்காது என்பது இன்னொரு பக்கம். சமீபத்தில்கூட சசிகலா பொதுச் செயலாளர் ஆன விவகாரத்தில் விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையத்துக்கு, தினகரன் ஒரு விளக்கம் அனுப்பினார். அதை ஏற்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திருப்பி அனுப்பிவிட்டது.

ஏனென்றால், அந்தக் கட்சியின் ‘பை-லா’படி பொதுச் செயலாளருக்குத்தான் எல்லா அதிகாரமும். அதனால்தான் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் கோமாவில் இருப்பதாக சொல்லப்பட்டபோதும்கூட, தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்களின் ஃபார்ம் பி படிவத்தில் ஜெயலலிதாவின் கைநாட்டு வைக்கப்பட்டது. அன்றைக்கு முதலமைச்சரின் இலாகாக்களை கவனித்தபடி கட்சியில் பொருளாளராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வத்திடமோ, அவைத்தலைவராக இருந்த மதுசூதனனிடமோ, அல்லது வேறு யாரிடமோ வாங்கப்படவில்லை. துணைப்பொதுச் செயலாளர் என்ற பதவியை அப்போது உருவாக்கி, யாருக்கும் அந்த அதிகாரத்தையும் கொடுக்கவில்லை. ஜெயலலிதா மருத்துவமனையில் செயற்கை சுவாசத்தில் இருந்தபோதுகூட அதனால்தான் துணைப்பொதுச் செயலாளர் பதவி என்ற பேச்சே அடிபடவில்லை. எனவே, தினகரனின் ஃபார்ம் பி படிவத்தில் அவரே கையெழுத்து போட்டாலும் செல்லாது; தற்போது பொதுச் செயலாளராக உள்ள சசிகலா போடும் கையெழுத்தும் செல்லாது. காரணம், அவர் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதே செல்லாது என்ற தாவா தேர்தல் ஆணைத்தில் இருக்கிறது. அதில் முடிவு வருவதற்கு முன் அவருக்கும் பொதுச் செயலாளர் அதிகாரம் இல்லை. அதனால், தினகரன் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட முடியாது. வேறு சின்னத்தில் வேண்டுமானால் போட்டியிடலாம்’’ என்கிறார் விஜயன்.

‘பெனால்டி’ வேறு... ‘ஃபைன்’ வேறு!

‘‘தினகரன் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதற்குக் காரணமாக இரண்டு வாதங்கள் வைக்கப்படுகின்றன. ஒன்று, அவர் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்; மற்றொன்று, அவர் ஃபெரா சட்டத்தில் தண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டவர். இந்த இரண்டு காரணங்களும் அவர் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதை எந்தவகையிலும் தடை செய்யாது’’ என்கிறார், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரமேஷ். ‘‘இதற்குக் காரணம் இருக்கிறது. 1995-96 காலகட்டத்தில், காஃபிபோசா சட்டத்தில் கைது செய்யப்பட்டது, அமலாக்கத்துறை தினகரனுக்கு அபராதம் விதித்தது தொடர்பாக கீழ் நீதிமன்றங்கள் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரை நடந்த வழக்குகள் அனைத்திலும், ‘தினகரன் வெளிநாடு வாழ் இந்தியர்’ என்ற வாதம் நிராகரிக்கப்பட்டது. தினகரன் தரப்பு முன்வைத்த அந்த வாதத்தை எந்த ஒரு நீதிமன்றமும் ஏற்கவில்லை. அதன் அடிப்படையில் அவருக்கு எந்த விடுதலையும், நிவாரணமும் வழங்கவில்லை. அதனால், அந்த வாதத்தின் மூலம் தினகரன் போட்டியிடுவதைத் தடுக்க முடியாது. இதே காரணத்தை வைத்து பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியில் அவர் வெற்றி பெற்றதை எதிர்த்து சுப்ரமணியன் சுவாமி போட்ட வழக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

போட்டியிடத் தடை? - ஆர்.கே.நகர் வேட்பாளர் சிங்கப்பூர் குடிமகனா?

இரண்டாவது விவகாரம், ‘ஃபெரா வழக்கில் தினகரனுக்கு 28 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதனால், அவர் தேர்தலில் போட்டியிட முடியாது’ என்பது. தினகரனுக்கு அபராதம் விதித்தது அமலாக்கத்துறைதான். மாறாக, குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டு, அந்த நீதிமன்றம் தினகரனை குற்றவாளி என்று அறிவித்து அபராதம் விதிக்கவில்லை. வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனையில் விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக அமலாக்கத் துறைதான் அபராதம் விதித்தது. இதை ‘ஃபைன்’ என்று சொல்லக்கூடாது. இது ‘பெனால்டி’ என்ற அடிப்படையில் வரும். இந்தத் தொகையை தினகரன் கட்டாததால் அது தொடர்பான வழக்கு குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அது இன்னும் நிலுவையில்தான் இருக்கிறது. தீர்ப்பு இன்னும் வரவில்லை.

மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின் பிரிவு 8-ன்படி ‘ஒரு நீதிமன்றத்தில் குற்றவாளி என தண்டிக்கப்பட்டு, அபராதமோ அல்லது தண்டனையோ விதிக்கப்பட்டு இருந்தால்தான், அவர் தேர்தலில் போட்டியிட முடியாது’. ஆனால், தினகரனை இன்னும் நீதிமன்றம் குற்றவாளி என்று அறிவிக்கவில்லை. ஃபெரா வழக்கில் அமலாக்கத்துறை விதித்த அபராதத்தை, நீதிமன்றம் குற்றவாளி என்று அறிவித்து அபராதம் விதித்ததாகக் கருத முடியாது. இந்த சர்ச்சைகள், ஆட்சேபனைகளெல்லாம் 1999, 2004-ம் ஆண்டுகளில் பெரியகுளம் தொகுதி நாடாளுமன்றத் தேர்தலில் தினகரன் போட்டியிட்டபோது எழுப்பப்பட்டவைதான். அப்போது தேர்தல் ஆணையம் இவற்றை எல்லாம் நிராகரித்து, தினகரனைப் போட்டியிட அனுமதித்தது. அதனால், இப்போது எழுப்பப்படும் இந்த சர்சைகளை தேர்தல் ஆணையம் நிராகரித்து தினகரனைப் போட்டியிட அனுமதிப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஏனென்றால், அப்போது இருந்த சூழ்நிலைக்கும் இப்போது இருக்கும் சூழ்நிலைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை’’ எனத் தீர்மானமாகச் சொல்கிறார் ரமேஷ்.

தார்மீக உரிமை இல்லை!

மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், இந்த இரண்டு கருத்துகளில் இருந்தும் வேறுபடுகிறார். ‘‘தினகரன் சிங்கப்பூர் குடிமகன் என்பதை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அதனால் அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அவர் மீது ஏகப்பட்ட வழக்குகள் இருக்கின்றன. மேலும், தன்னுடைய பிரமாணப் பத்திரங்களில் தொடர்ந்து அவர், தன்னை முழுநேரமாக சிங்கப்பூரில் வசிப்பவர் என்று குறிப்பிட்டே வந்துள்ளார். அதனால், இவற்றைக் கருத்தில்கொண்டே, தினகரனின் மனுவைத் தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்யலாம். மேலும் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள், இத்தனை வழக்குகளில் சிக்கி உள்ளவரை, அதில் தண்டனைப் பெற்று அபராதத்துக்கு உள்ளானவரை, நிரந்தரமாக சிங்கப்பூரில் வசிக்கிறேன் என்று குறிப்பிட்டவரை தேர்ந்தெடுக்க வேண்டுமா என்பதை கணக்கில்கொண்டு அவரை நிராகரிக்கலாம்’’ என்கிறார் அவர்.

சிங்கப்பூர் குடியுரிமை, இந்தியக் குடியுரிமை, சசிகலாவின் நியமன துணைப் பொதுச்செயலாளர் பதவி, இரட்டை இலை யாருக்கு... இப்படி பல தலைவலிகளோடு இருக்கிறார் தினகரன்!

- ஜோ.ஸ்டாலின்

படம்: கே.ஜெரோம்