Published:Updated:

கர்நாடகாவில் அதிருப்தியைச் சரிக்கட்டியவருக்குத் தலைவர் பதவி! ராகுல்காந்தி கொடுத்த பரிசு

கர்நாடகாவில் அதிருப்தியைச் சரிக்கட்டியவருக்குத் தலைவர் பதவி! ராகுல்காந்தி கொடுத்த பரிசு
கர்நாடகாவில் அதிருப்தியைச் சரிக்கட்டியவருக்குத் தலைவர் பதவி! ராகுல்காந்தி கொடுத்த பரிசு

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டுள்ளார். `புதிய அமைச்சரவையில் ஏற்பட்ட குழப்பங்களைத் தீர்த்து வைத்ததில் தினேஷின் பங்கு முக்கியமானது. அதன் தொடர்ச்சியாக தலைவர் பதவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்' என்கின்றனர் காங்கிரஸ் நிர்வாகிகள். 

கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தலில் 78 இடங்களைக் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. தேர்தல் முடிவில் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தது காங்கிரஸ். இதன் பயனாக கர்நாடக முதல்வராகப் பதவியேற்றார் குமாரசாமி. புதிய அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியின் ஜி.பரமேஷ்வரா துணை முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். இவர் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தவர். துணை முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டதால், புதிய மாநிலத் தலைவர் நியமிக்கப்படுவார் என்ற பேச்சு எழுந்தது. 

இந்நிலையில், மாநிலத் தலைவராக தினேஷ் குண்டுராவை நியமித்திருக்கிறார் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி. இவர் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக இருந்தவர். தினேஷுக்குப் பதவி வழங்கப்பட்டது குறித்துப் பேசும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், `மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை பலப்படுத்தியதில் தினேஷுக்கு முக்கியப் பங்கு உண்டு. மதச்சார்பற்ற ஜனதாதளத்துடன் கூட்டணி அமைத்தபிறகு, அமைச்சரவையில் இலாக்காகளை ஒதுக்கும் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது. இதில், அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தியதில் தினேஷின் பங்கு அதிகம். `இவர்தான் அடுத்த தலைவர்' எனத் தொண்டர்களே பேசி வந்தனர். அதை ராகுல்காந்தியும் உறுதிப்படுத்திவிட்டார்' என்கின்றனர்.