Published:Updated:

இரட்டை இலை... பின்னப்படும் வலை! - சின்னம் சின்னாபின்னம் ஆகிறதா?

இரட்டை இலை... பின்னப்படும் வலை! - சின்னம் சின்னாபின்னம் ஆகிறதா?
பிரீமியம் ஸ்டோரி
News
இரட்டை இலை... பின்னப்படும் வலை! - சின்னம் சின்னாபின்னம் ஆகிறதா?

ஓவியம்: கண்ணா

‘‘தேர்தல் கமிஷன் வரலாற்றில், முடக்கப்பட்ட ஒரு கட்சியின் சின்னத்தை மீண்டும் ஒன்றுபட்ட அந்தக் கட்சிக்கே தருவது இதுதான் முதல்முறை. சின்னத்தை முடக்கிய நானே திரும்பத் தருவதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி...’’

1989-ம் ஆண்டில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு மீண்டும் தரப்பட்டபோது, அன்றைய தேர்தல் ஆணையர் பெரி சாஸ்திரி இப்படித்தான் சொன்னார். அதே சின்னம் 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முடக்கப்படும் நிலைக்கு ஆளாகி இருக்கிறது.

ஜெயலலிதாவின் மரணம், சசிகலா பொதுச் செயலாளராக நியமனம், பன்னீர்செல்வத்தின் எழுச்சி, கூவத்தூர் கூத்து, சசிகலா சிறையில் அடைப்பு, நம்பிக்கை வாக்கெடுப்பு, தினகரனின் ஆதிக்கம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது என அ.தி.மு.க-வில் அடுத்தடுத்து நடக்கும் அதிரடிகள் அத்தனையும் அக்மார்க் த்ரில்லர்தான். ‘ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஜெயிக்கப் போவது சசிகலா அணியின் தினகரனா... பன்னீர் அணியின் மதுசூதனனா... ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவா?’ என்கிற க்ளைமாக்ஸுக்கு முன்பு ‘இரட்டை இலை யாருக்கு?’ என்கிற ரிசல்ட்தான் முதலில் வரப் போகிறது.

இரட்டை இலை... பின்னப்படும் வலை! - சின்னம் சின்னாபின்னம் ஆகிறதா?

இதே பிரச்னை 1989 சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலித்தது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜானகி அணி, ஜெயலலிதா அணி என அ.தி.மு.க பிளவுபட்டபோது, இரட்டை இலைக்கு இரண்டு தரப்புமே உரிமை கொண்டாடின. அன்றைக்கு இரட்டை இலை எப்படி முடக்கப்பட்டது என்பதைவைத்து இன்றைய நிலையைப் பொருத்திப் பார்க்கலாம்.

தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி ஏதாவது இரண்டாக உடைந்தால், அந்தக் கட்சியின் பெயரை யார் உரிமை கொண்டாடுவார்கள்? கட்சியின் சின்னம் யாருக்குப் போகும்? இப்படியான சிக்கலில் இரண்டு அம்சங்களை தேர்தல் கமிஷன் கருத்தில் கொள்கிறது.

* கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் பக்கம் அதிகம்.

* அமைப்புரீதியாக நிர்வாகிகள் எந்தப் பக்கம் நிற்கிறார்கள்.

இந்த இரண்டு அம்சங்களும் ஒருங்கே பெற்ற அணிக்குத்தான் சின்னம் கிடைக்கும். எம்.பி-க்கள்,   எம்.எல்.ஏ-க்கள் இருந்தும், சட்டமன்றத்தில் மெஜாரிட்டி காட்டினாலும்கூட, அமைப்புரீதியாக நிர்வாகிகள் போதுமான அளவில் இல்லாமல் போனால் சின்னம் முடக்கப்படலாம். கட்சியின் உயர்மட்ட அமைப்பான செயற்குழு அல்லது பொதுக்குழு உறுப்பினர்கள்தான் அமைப்புரீதியான நிர்வாகிகள். இவர்கள் எந்தப் பக்கம் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிவதுதான் தேர்தல் கமிஷனுக்கு சவாலான விஷயம்.

1987 டிசம்பரில் எம்.ஜி.ஆர் இறந்ததும் அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. எம்,.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாளுக்கு 97 எம்.எல்.ஏ-கள் ஆதரவு அளித்தனர். ஜெயலலிதா பக்கம் 32 எம்.எல்.ஏ-கள் இருந்தனர். இப்படிப்பட்ட சூழலில் சட்டமன்ற கட்சித் தலைவராக ஜானகி அம்மாளைத் தேர்வுசெய்து, ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னர் குரானாவிடம் கடிதம் அளித்தார்கள் அவர் அணியினர். ஜானகி அம்மாளுக்கு குரானா பதவிப் பிரமாணம் செய்துவைத்து, மெஜாரிட்டியை நிரூபிக்கச் சொன்னார். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்து, கலவரம் ஏற்பட்டு, ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. ஜனாதிபதி ஆட்சிக்குப் பிறகு 1989 ஜனவரியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.

அதற்கு முன்பாக ஜானகி, ஜெயலலிதா அணியினர் இரட்டை இலைக்கு உரிமை கொண்டாடி, தேர்தல் கமிஷனிடம் முறையிட்டார்கள். ‘‘ஜானகி அணியில்தான் முன்பு எம்.எல்.ஏ-க்கள் அதிகமாக இருந்தார்கள். அமைப்பு நிர்வாகிகளும் அதிகமாக இருந்தால், இரட்டை இலை ஜானகி அணிக்கே போகும்’’ என பேச்சுகள் கிளம்பின. அப்போது ஜெயலலிதாவுக்கு வழக்கறிஞராக இருந்த கே.சுப்பிரமணியம், ‘‘நம்ம சைடில் பொதுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகம் காட்டினால் சின்னம் அவர்களுக்கு போகாது. முடக்கத்தான் முடியும்’’ என்றார். உடனே அதற்கான ஏற்பாட்டை செய்யச் சொன்னார் ஜெயலலிதா.

தங்களுக்குதான் ஆதரவு என்பதை நிலைநாட்ட, பொதுக்குழு உறுப்பினர்களிடம் இரண்டு அணியினரும் கையெழுத்து வாங்கினார்கள். இப்படி கையெழுத்து வாங்கியபோது ஒரு வில்லங்கம் ஏற்பட்டது. ஒரு சிலர் பணம் வாங்கிக்கொண்டு இரண்டு அணியினருக்கும் கையெழுத்துப் போட்டிருந்தார்கள். கையெழுத்துப் போட்டவர்களின் எண்ணிக்கையை வைத்து கணக்கிட்டபோது ஜானகி அணிக்கு 11 பேர் கூடுதலாக இருந்தார்கள். அதனால், இரட்டை இலை சின்னம் ஜானகி அணிக்குப் போய்விடுமோ என்கிற பதற்றம் நிலவியது. சின்னம் தொடர்பான விசாரணைகள் எல்லாம் அப்போது தேர்தல் ஆணையராக இருந்த பெரி சாஸ்திரி முன்பு நடைபெற்று வந்தது. ஜானகி அம்மாளுக்கு           கே.கே.வேணுகோபாலும், ஜெயலலிதாவுக்கு கே.சுப்பிரமணியமும் கபில் சிபலும் ஆஜர் ஆனார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இரட்டை இலை... பின்னப்படும் வலை! - சின்னம் சின்னாபின்னம் ஆகிறதா?

இப்படிப்பட்ட சூழலில், இரண்டு தரப்புக்கும் கையெழுத்து போட்டவர்களையும் சேர்த்து 42 பேரை ஜெயலலிதா அணியினர் சென்னைக்கு வரவழைத்து, ஒரு ஓட்டலில் தங்க வைத்தனர். அந்த 42 பேரையும் டெல்லிக்கு அழைத்துச் செல்லும் பணியை கே.சுப்பிரமணியம் செய்தார். ஒன்றியச் செயலாளர் மட்டத்தில் இருந்த பொதுக்குழு உறுப்பினர்கள் பலருக்கும் அதுதான் முதல் விமானப் பயணம். விமான இருக்கையின் சீட் பவுச்சில் செய்தித் தாள்கள் இருந்தன. அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து குறித்த செய்தி, தமிழ் நாளிதழ்களில் இடம்பெற்றிருந்தது. பனிப்பொழிவால் ரன்வே தெரியாமல் வேறு இடத்தில் இறக்கி, விமானம் விபத்துக்குள்ளாகி பலர் இறந்த செய்தியும் படங்களும் அதில் இடம்பெற்றிருந்தன. அந்த செய்தியைப் படித்த பொதுக்குழு உறுப்பினர்களுக்கு உள்ளுக்குள் லேசான அச்சம்.

அச்சப்பட்டபடி, விமானம் டெல்லி நெருங்கியபோது பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டது. விமானத்தின் டயர்கள் கீழே இறங்கவில்லை. அதனால் பைலட், ‘‘எமர்ஜென்ஸி லேண்டிங் செய்யப்போகிறேன். யாரும் சீட்டை விட்டு நகராதீர்கள்’’ என்றார். பலரும் கதற ஆரம்பித்தார்கள். ரன்வேயில் தீயணைப்பு வண்டிகளும் ஆம்புலன்ஸ்களும் தயாராக நிறுத்தப்பட்டிருந்தன. விமானத்தின் எரிபொருள் முழுவதையும் ஆகாயத்தில் சுற்றியபடியே பைலட் காலி செய்து கொண்டிருந்தார். அதே நேரம், டயர் இருக்கும் பகுதிக்கு மேல் புறம் உள்ள கதவைத் திறந்து, டயரை கீழே இறக்க ஒரு பக்கம் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. ஒரு வழியாக, அந்த முயற்சி வெற்றிபெற, அதன்பின் விமானம் பாதுகாப்பாகத் தரை இறங்கியது. அடுத்தநாள் பெரி சாஸ்திரியிடம் அந்த 42 பேரையும் நிறுத்தினார்கள். ‘‘அஃபிடவிட் மட்டுமல்ல... ஆளையே உங்கள் முன்பு நிறுத்திவிட்டோம்’’ என்ற கே.சுப்பிரமணியம், ‘‘அமைப்பு ரீதியாக கணக்கிட்டால், எங்கள் அணிக்குத்தான் மெஜாரிட்டி அதிகம். அதனால் சின்னத்தை அவர்களுக்குத் தர முடியாது. முடக்கத்தான் செய்ய முடியும்’’ எனறு வாதாடினார். எதிர் தரப்பில் இருந்த வழக்கறிஞர் வேணுகோபால் ஷாக் ஆகிவிட்டார். தேர்தல் நெருங்கிவிட்ட நேரத்தில், முடிவு எடுக்க வேண்டிய நிலையில் இருந்த தேர்தல் கமிஷன், கடைசியில் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது.

‘இரட்டைப் புறா’ சின்னத்தில் ஜானகி அணியும், ‘சேவல்’ சின்னத்தில் ஜெயலலிதா அணியும் சட்டசபைத் தேர்தலை எதிர்கொண்டனர். தேர்தலில் வென்று, தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. ஜெயலலிதா அணிக்கு 27 இடங்கள் கிடைத்தன. ஜானகி அணிக்கு இரு இடங்கள்தான் கிடைத்தன. அதன்பிறகு இரண்டு அணிகளும் இணைய முடிவு எடுத்து, தீர்மானம் இயற்றி தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைத்தார்கள். அதனால், இரட்டை இலை சின்னம், ஒருங்கிணைந்த அ.தி.மு.க-வுக்குக் கிடைத்தது. பொதுத் தேர்தல் நடைபெற்றபோது மதுரை கிழக்கு, மருங்காபுரி தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறவில்லை. ஒரு மாதம் கழித்து தேர்தல் நடைபெற்றது. கடைசி நேரத்தில் இரட்டை இலை சின்னம் கிடைத்தது. அதனால், அந்த இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க வென்றது. ஒரு மாதத்துக்கு முன்பு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்த தி.மு.க, இந்த இரண்டு தொகுதிகளிலும் தோற்றது. இதுதான் இரட்டை இலையின் மகிமை.

இரட்டை இலையை மீண்டும் பெற்றுத்தந்த கே.சுப்பிரமணியம் இப்போதைய சூழல் பற்றி என்ன நினைக்கிறார். அவரிடம் பேசினோம். ‘‘அதுபற்றி நான் பேச விரும்பவில்லை. சின்னம் முடக்கப்பட்டபோது அது மீண்டும் கிடைக்க முயற்சி எடுத்தவன் என்ற முறையில், கட்சிகள் உடையக்கூடாது, இரட்டை இலை இருக்க வேண்டும் என விரும்புகிறேன்’’ என்று முடித்துக் கொண்டார்.

இரட்டை இலை... பின்னப்படும் வலை! - சின்னம் சின்னாபின்னம் ஆகிறதா?

‘‘இப்போதைய அ.தி.மு.க-வில் நிலவும் சூழல், தேர்தல் கமிஷனின் பிரச்னையை ஓரளவு எளிதாக்கலாம்’’ என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ‘சின்னம் யாருக்கு?’ என்கிற பிரச்னைக்கு முன்பே, ‘சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனம் செல்லாது’ என்கிற விவகாரம் பன்னீர் அணியினரால் தேர்தல் கமிஷனுக்குக் கொண்டு போகப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா இறந்த 25-வது நாளிலேயே அ.தி.மு.க-வின் அவசரப் பொதுக்குழு கூடி சசிகலாவை ‘நியமனம்’ செய்தார்கள்.

சசிகலா, ‘தேர்வு’ செய்யப்படவில்லை. ‘நியமனம்’தான் செய்தார்கள். ‘அ.தி.மு.க-வின் அனைத்து அமைப்புகளின் பொது உறுப்பினர்களால்தான் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்’ என்கிறது அ.தி.மு.க-வின் சட்ட விதி. எம்.ஜி.ஆர் காலத்தில் இயற்றப்பட்ட இந்த விதி இன்றுவரையில் மாற்றப்படவே இல்லை. இந்த விதிப்படிதான் ஜெயலலிதா ஒவ்வொரு முறையும் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார். ‘பொறுப்புக்குப் போட்டியிடுகிறவர்கள், ஐந்தாண்டுகள் இடைவெளி இல்லாமல் கட்சியில் நீடித்திருக்க வேண்டும்’ என்கிற விதியை ஜெயலலிதா சேர்த்தார். 2011 டிசம்பரில் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, 2012 மார்ச் இறுதியில்தான் மீண்டும் சேர்க்கப்பட்டார். அதன்படி பார்த்தால் சசிகலாவால் பொதுச்செயலாளர் ஆக முடியாது. ‘ஐந்தாண்டு காலம் கட்சியில் இருந்திருக்க வேண்டும்’ என்பது இந்த மாதம் 31-ம் தேதிக்குப் பிறகுதான் முடிவடைகிறது. அ.தி.மு.க-வின் இரண்டு முக்கியமான விதிகளைப் பூர்த்தி செய்யாமலேயே, கடந்த டிசம்பரில் சசிகலா பொதுசெயலாளராக நியமனம் செய்யப்பட்டிருக் கிறார். சசிகலாவின் நியமனமே கேள்விக்கு உள்ளான நிலையில், இரட்டை இலை சின்னத்தையும் பிரச்னைக்கு உரியதாகத் தேர்தல் கமிஷன் பார்க்கலாம். வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோரும் ஃபார்ம் பி படிவத்தில் உள்ள சசிகலாவின் கையெழுத்து செல்லுமா என்கிற கேள்வியும் எழுகிறது.

தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பான மோதலுக்கு, 22-ம் தேதி விசாரணை. வேட்புமனு தாக்கல் 23-ம் தேதி முடிவடைகிறது. 24-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் 27-ம் தேதி. அன்றைக்குதான் இறுதி வேட்பாளர் பட்டியலையும் அவர்களின் சின்னங்களையும் அறிவிப்பார்கள். 22-ம் தேதி வரும் இரட்டை இலை பஞ்சாயத்து, 26-ம் தேதிக்குள் முடிவுக்கு வரலாம்.

1989 சரித்திரம் திரும்புகிறதா?

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

இரட்டை இலை... பின்னப்படும் வலை! - சின்னம் சின்னாபின்னம் ஆகிறதா?

‘‘விமானத்தில் வர மாட்டோம்!’’

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட நேரத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் சிலரை விமானத்தில் அழைத்துப் போனவர் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ மரூர் தர்மலிங்கம். அவரிடம் பேசினோம். ‘‘திண்டிவனம் தங்கவேலு, சோடாக்கடை ஜெயராமன், உளுந்தூர்பேட்டை சுப்பிரமணியம், திருக்கோவிலூர் வடிவேலு, ரிஷிவந்தியம் ராமசாமி உள்ளிட்ட 12 பேரை அழைத்து வரும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டது. அவர்களை அழைத்துவந்து சென்னை ஓட்டலில் தங்க வைத்தேன். இதைக் கேள்விப்பட்ட ஆர்.எம்.வீரப்பன், தாமரைக்கனியை அனுப்பி பொதுக்குழு உறுப்பினர்களைக் கைப்பற்ற நினைத்தார். இதனால் ஓட்டல்களை மாற்றிக் கொண்டே இருந்தோம். சேடப்பட்டி முத்தையா 20 பேரை அழைத்து வந்தார். அனைவரையும் தேர்தல் கமிஷனில் ஆஜர்படுத்தினோம். விமானத்தில் டெல்லி வந்தவர்கள், மீண்டும் திரும்பியபோது ‘விமானத்தில் வரமாட்டோம். ரயிலில் அழைத்துச் செல்லுங்கள்’ என்றார்கள். விமானப் பயணத்தின்போது ஏற்பட்ட கோளாறுதான் காரணம். அதனால் அவர்களை ரயிலில்தான் அழைத்து வந்தோம்’’ என்றார்.