Published:Updated:

இனி சசிகலா குடும்பத்தில் ஒருவர் பின் ஒருவராக சிறைக்குப் போவார்கள்!

இனி சசிகலா குடும்பத்தில் ஒருவர் பின் ஒருவராக சிறைக்குப் போவார்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
இனி சசிகலா குடும்பத்தில் ஒருவர் பின் ஒருவராக சிறைக்குப் போவார்கள்!

சவால் விடும் மதுசூதனன்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனன். 1991-ம் ஆண்டு தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் வென்று, ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் என்பதால் அவர் மீதான எதிர்பார்ப்பும், பரபரப்பும் தொகுதிக்குள் இயல்பாகவே எழுந்துள்ளது. அவரைச் சந்தித்தோம்...

‘‘வடசென்னையில் மதுசூதனன் என்றாலே ஒரு டெரரர் இமேஜ் இருக்கிறதே... தொகுதி மக்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள்?’’

“என்மீது சொல்லப்படும் ‘டெரர்’ எல்லாம் கட்டுக்கதை. நான் அமைதியான ஆளு. என் வீட்டு வாசலில் உட்கார்ந்திருக்கும் இவர்கள் வேலைக்குப் போனால் தினமும் நூறோ, இருநூறோ சம்பளம் கிடைக்கும். ஆனால், இங்கே வந்து கிடக்கிறார்கள். நான் அவர்களுக்கு என்ன பெரிதாகக் கொடுக்க முடியும்? பாசத்தையும், அன்பையும்தான் கொடுப்பேன். இந்தக் கூட்டத்தைப் பார்க்கிறவர்கள் டெரராக நினைக்கிறார்கள்.”

இனி சசிகலா குடும்பத்தில் ஒருவர் பின் ஒருவராக சிறைக்குப் போவார்கள்!

‘‘ஊடகங்கள்தான் உங்கள் பிம்பத்தை வேறுமாதிரி கொண்டுபோய்விட்டன என்று சொல்ல வருகிறீர்களா?’’

“அதானே உண்மை! சசிகலா குடும்பம் செய்த அத்தனை அக்கிரமங்களுக்கும், கட்சிக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் என்னை மாதிரி தொண்டர்கள் பெயரைப் பயன்படுத்திக்கொண்டார்கள். இப்போது மக்களும் நாங்களும் தெளிவாகிவிட்டோம். இப்போது சந்தர்ப்பவாத, சதிகாரக் கும்பல், தினகரனுக்கு ஓட்டு கேட்டு, பிரசாரத்துக்குப் போனால் மக்கள் சும்மா விடுவார்களா? அதை ஆர்.கே.நகரில் நீங்கள் பார்க்கத்தானே போகிறீர்கள்.”

‘‘எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என இரண்டு முதல்வர்களுடன் இருந்துள்ளீர்கள். இவர்களுடனான உங்கள் மறக்க முடியாத அனுபவத்தைச் சொல்லுங்களேன்?’’

‘‘ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்காக இரண்டு முதல்வர்களுடனும் நான் சண்டை போட்டிருக் கிறேன். தலைவர் முதலமைச்சராக இருந்தபோது, ஆர்.கே.நகர் தொகுதியின் குடிநீர்ப் பஞ்சத்தைத் தீர்க்கறதுக்கு, புதிய ஏரித் திட்டம் ஒன்றைக் கொண்டுவர நினைத்தார். தொகுதிக்காரன் என்ற முறையில் என்னிடமும் இதுகுறித்து கேட்டார். ‘தலைவரே, பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் ஐயாயிரம் பேரை இங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு ஒரு ஏரியை உருவாக்கினால், அவர்கள் எங்கே போவார்கள்? பெரிய மனதுவைத்து நீங்கள் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்றேன். ‘நான் காலத்துக்கும் குடிநீர் பஞ்சம் போக்க வழி சொன்னால், நீங்கள் இப்படிச் சொல்கிறீர்களே’ என்று சொல்லிவிட்டு, கோபத்துடன் கிளம்பிப் போய்விட்டார். மறுநாள் செய்தித்தாளில் பார்த்தால், ஆர்.கே.நகரில் உள்ள ஐந்து நகர்களின் சீரமைப்புக்கு நிதி ஒதுக்கீடுசெய்து தலைவர் கொடுத்த அறிவிப்பு வந்திருந்தது.

இங்கே இருக்கும் ஜெ.ஜெ. நகர், ஒரு காலத்தில் குப்பைமேடு. வெள்ளம் வந்தால் வீடுகளுடன் சேர்ந்து, மக்களும் மிதப்பார்கள். 1993-ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த அம்மாவை அங்கே அழைத்துப் போய் காட்டினேன். நிலைமையைப் பார்த்துவிட்டு, சீரமைப்புக்கு மிகப் பெரிய தொகையை ஒதுக்கினார். சீரமைப்புப் பணி முடிந்ததும், ஜெ.ஜெ. நகர் பகுதி மக்களோடு, திருவல்லிக்கேணி ரயில்வே மேம்பாலத்தின் கீழே வசிக்கும் ஏழைகளுக்கும் இங்கு ஒரு பகுதியை ஒதுக்கி உத்தரவைப் போட்டுவிட்டார். நான் பதறிப்போய் அம்மாவைப் பார்த்தேன். ‘ஆர்.கே.நகரில், போஜராஜ நகர் போன்ற இடங்களில் மக்கள் வாழமுடியாத சூழ்நிலை இருக்கிறது. மிகுதியான இடங்களை இதே தொகுதி மக்களுக்குத்தான் கொடுக்கவேண்டும் அம்மா’ என்று முறையிட்டேன். ‘உங்க தொகுதிப் பாசம் உங்களை விட்டுப்போகாதே’ என்று கோபமாய் முறைத்தார். ஆனால், தலைவர் போலவே அம்மாவும் மறுநாள் ஜெ.ஜெ. நகர் மக்களுக்குப் போக எஞ்சிய இடத்தை போஜராஜ நகர் மக்களுக்கு ஒதுக்கி அறிவிப்பை வெளியிட்டார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இனி சசிகலா குடும்பத்தில் ஒருவர் பின் ஒருவராக சிறைக்குப் போவார்கள்!

தலைவரும் சரி, அம்மாவும் சரி, ‘தொகுதி மக்களுக்காக இப்படி வீம்புப் பிடிக்கிறானே’ என்று என்னிடம் கோபப்பட்டு இருக்கிறார்களே தவிர... வேறெந்த கோபமும் என்மீது அவர்களுக்கு இல்லை. இப்படி என்னைப்போல ‘தொகுதி மக்களுக்காகக் கட்சியின் தலைமையுடன் சண்டை போட்ட மானஸ்தன் இங்கே போட்டியிடுகிறான்’ என்று ஒரு ஆளைக் காட்டுங்கள், பார்க்கலாம்.

கிழக்கு மேற்காக தனித்தனி தீவு போல கிடந்த ஆர்.கே.நகரை இணைக்கும்விதமாக வைத்தியநாதன் மேம்பாலத்தைக் கட்டியவன் நான். இப்போது அதன் மீது நின்று கொண்டுதான் எல்லாக் கட்சிக்காரங்களும் ஓட்டு கேட்கிறார்கள். இதே பகுதியில் உள்ள பட்டேல் நகர் ரயில்வே இடம் சம்பந்தமாக டெல்லி வரை போய், ரயில்வே அமைச்சரிடம் பேசி, இடத்துக்கு உண்டான தொகையை ரயில்வேக்குக் கொடுத்து வாங்கினேன். அப்படி வாங்கிய இடத்தில்தான் இன்று குடிநீர் வாரியத் திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. மக்களின் தண்ணீர்ப் பிரச்னை தீர்ந்திருக்கிறது.”

‘‘இந்தத் தேர்தலில் டி.டி.வி.தினகரனை மட்டும்தான் எதிரியாகப் பார்க்கிறீர்கள். பிற கட்சிகள் எதிரிகளாகத் தெரியவில்லையா?’’

“தலைவரும், அம்மாவும் உருவாக்கிய மக்கள் சொத்துதான் அ.தி.மு.க. அதிலிருந்து ஒரு சின்னத்துண்டுதான் எகிறிப்போய் இருக்கிறது. அந்த சின்னத்துண்டிலும், ஒரு துண்டுதான் தினகரன். ‘ஒரு காலத்துல அது நம் வீட்டில் கிடந்த துண்டாச்சே’ என்றுதான் அதைப்பத்திப் பேசுகிறேன். மற்ற கட்சிகள் பற்றி பேச என்ன இருக்கிறது? அதி.மு.க-வுக்கு போட்டிக் கட்சியே இல்லை.”

இனி சசிகலா குடும்பத்தில் ஒருவர் பின் ஒருவராக சிறைக்குப் போவார்கள்!

‘‘ஜெயலலிதா இறந்த பின், சசிகலாவை தலைமையேற்க வரவேற்ற முதல் ஆள் நீங்கள்தானே?’’

“அந்தப் பாவத்துக்குத்தானே இப்போது பிராயச்சித்தம் தேடிக்கொண்டிருக்கிறேன். என் பாவத்தை நான் கழிக்க வேண்டாம் என சொல்றீங்களா? அவங்க, கட்சியைக் காப்பாத்துவாங்கன்னு நினைத்தேன். ஆனால், தம்பிதுரையைவைத்து, கட்சி சொத்துகளைக் குடும்பச் சொத்தாக மாற்றத் துடித்தார்கள். தமிழ்நாட்டில் இருக்கிற கட்சி சொத்துகளைக் காப்பாற்ற, செங்கோட்டையனுக்குப் பதவி கொடுத்து வைத்துக் கொண்டார்கள்.

கோடானுகோடி தொண்டர்களுக்கும் எனக்கும் தெரிய வேண்டிய ஒன்று இருக்கிறது, அது அம்மாவின் மரண ரகசியம். அதை அந்தக் கும்பல் சொல்லியே ஆகவேண்டும். அதுவரை மக்களும் விடமாட்டார்கள்; அம்மாவின் ஆன்மாவும் விடாது. இனி, சசிகலா குடும்பத்தில் ஒருவர் பின் ஒருவராக சிறைக்குப் போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

ரவுடிகளையும், ஆதரவான போலீஸ் அதிகாரிகளையும் கையில் வைத்துக்கொண்டு உருட்டி மிரட்டி தேர்தலை நடத்தி ஜெயிக்கலாம் என்று திட்டம் போட்டு வைத்திருக்கிறார்கள். திருமண மண்டபங்களை வாடகைக்குப் பிடித்து, அங்கே கூலிப்படையினரைத் தங்க வைத்திருக்கிறார்கள். கூவத்தூரில் பாதுகாப்புக்குப் போன ரவுடிகள் ஆர்.கே.நகருக்குள் வந்துவிட்டார்கள். சிறையில் இருப்பவர்களுடன் பேசி, இங்கிருந்தபடி அசைன்மென்ட் கொடுக்கிறார்கள். உளவுத்துறை போலீஸார் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் மிரட்டல்களைத் தாண்டித்தான் இத்தனை பேர் என்னுடன் இருக்கிறார்கள்.’’

‘‘தி.மு.க-வில் இருக்கும் சேகர்பாபு உங்கள் உறவினர் என்பதால் இந்தத் தேர்தலில் நீங்கள்...’’

(அவசரமாகக் குறுக்கிட்டு) “எத்தனை வருஷமா இதே கேள்வி சுற்றுமோ தெரியவில்லை. எனக்கும் சேகர்பாபுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. இளைஞர்களை ஆளாக்கி விடற ஒரு வேகத்துல, பல பொறுப்புகளைப் படிப்படியா கட்சியில் வாங்கிக் கொடுத்தேன். என்னோட மைத்துனர் ஜேப்பி மூலமா அவர் மேலே போய்விட்டார். அவ்வளவுதான்! சேகர்பாபு செய்ததுகூட பலமுறை என் தலையில் வந்துதான் விடிந்தது. சேகர்பாபு என் உறவினரா எப்படி ஆனார் என்றே தெரியவில்லை. ஒரு வதந்தியைத் தொடர்ந்து அணையாம கிளப்பி விடுகிற கும்பல் இன்னும் ஊரில் இருக்கத்தான் செய்கிறது’’ என்றவர், வாக்குக் கேட்பது போல் கும்பிட்டு விடைபெற்றார்.

- ந.பா.சேதுராமன்