Published:Updated:

சந்நியாசி தலையில் கிரீடம்! - உத்தரப்பிரதேச அரசியல் விபரீதம்

சந்நியாசி தலையில் கிரீடம்! - உத்தரப்பிரதேச அரசியல் விபரீதம்
பிரீமியம் ஸ்டோரி
News
சந்நியாசி தலையில் கிரீடம்! - உத்தரப்பிரதேச அரசியல் விபரீதம்

சந்நியாசி தலையில் கிரீடம்! - உத்தரப்பிரதேச அரசியல் விபரீதம்

யோத்தியில் ராமர் கோயிலைக் கட்டுவதைவிட ஆபத்தான ஒரு விஷப்பரீட்சையில் இறங்கியிருக்கிறது பி.ஜே.பி. உத்தரப்பிரதேச சட்டமன்றத்தின் 403 எம்.எல்.ஏ-க்களில் பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்கள் 312 பேர். வரலாறு காணாத வெற்றி! ஆனால், இந்த 312 பேரில் யாருமே முதல்வராகவோ, துணை முதல்வர்களாகவோ பதவி வகிக்கத் தகுதியற்றவர்கள் என பி.ஜே.பி தலைமை நினைக்கிறது. இந்தத் தேர்தலில் போட்டியிடவே செய்யாத எம்.பி கேசவ் மௌர்யாவையும், லக்னோ மேயர் தினேஷ் சர்மாவையும் துணை முதல்வர்கள் ஆக்கிய பி.ஜே.பி, அங்கு முதல்வராக நியமித்திருப்பது யோகி ஆதித்யநாத் என்பவரை! ‘மதச்சார்பின்மை மீது விழுந்த மிக மோசமான அடி’ என இதை வர்ணிக்கின்றன எதிர்க்கட்சிகள். 

‘வளர்ச்சி’ என்ற முகத்தைக் காட்டி பிரதமர் நரேந்திர மோடி நம்மை முன்னால் இழுக்க, மதவாதம் பேசி நம் காலைப் பின்னால் இழுக்கும் பல சர்ச்சை ஆசாமிகள் பி.ஜே.பி-யில் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோருக்கும் தலைமை ஏற்கும் தகுதி வாய்ந்தவர், ஆதித்யநாத். 44 வயதாகும் இந்த சந்நியாசி, தொடர்ச்சியாக ஐந்து முறை கோரக்பூரில் ஜெயித்து எம்.பி-யாக இருந்தவர்.  கோரக்பூர் மடத்தின் தலைவர், யோகி ஆதித்யநாத். ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கு செல்லப்பிள்ளை. ஆனால், பி.ஜே.பி-யோடு இவருக்கு எப்போதும் இணக்கமான உறவு இருந்ததில்லை. நாடு முழுக்க பி.ஜே.பி தேசியத் தலைவர்கள் வைப்பது சட்டம் என்றால், கோரக்பூர் தொகுதியில் யோகி வைத்ததுதான் சட்டம். கட்சிப் பொறுப்பில் யார் இருக்க வேண்டும், சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் யார் போட்டியிட வேண்டும் என எல்லாவற்றையும் அவரே தீர்மானிப்பார். தலைமை மதிக்காதபோது, கட்சியிலிருந்தே விலகுவதாக மிரட்டுவார். ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் இரண்டுமுறை தலையிட்டு சமாதானம் செய்து வைத்திருக்கிறார்கள்.

சந்நியாசி தலையில் கிரீடம்! - உத்தரப்பிரதேச அரசியல் விபரீதம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தலைமை என்ன சொன்னாலும், தன் மனதுக்குப் படுவதையே செய்வார். 2010-ம் ஆண்டில், ‘நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு’ தரும் மசோதா நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தது. இதை ஆதரிக்குமாறு எம்.பி-க்களுக்கு பிஜே.பி கொறடா உத்தரவிட்டார். ஆனால், ‘‘எனக்கு இது பிடிக்கவில்லை. நான் எதிர்ப்பேன்’’ என்று சொன்னார் யோகி.

பி.ஜே.பி-யில் இருந்தாலும், ‘ஹிந்து யுவ வாஹினி’ என்ற அமைப்பைத் தனியாக வைத்திருக்கிறார் யோகி. பசுக்களைப் பாதுகாப்பது, ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் இந்து பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் காதலித்துத் திருமணம் செய்துகொள்வதைத் தடுப்பது... எனத் தடிகளை ஏந்தியபடி வீதிகளில் வலம் வந்து காரியம் முடிக்கும் இளைஞர்கள் நிறைய பேர் இந்தப் படையில் இருக்கிறார்கள். இந்த அமைப்பின் சார்பில் கடந்த 2005-ம் ஆண்டு, பிற மதங்களில் இருந்த ஐயாயிரம் பேரை இந்துக்களாக மதம் மாற்றிவிட்டு, ‘‘உத்தரப்பிரதேசத்தையும் இந்தியாவையும் முழுமையான இந்து ராஜ்ஜியமாக மாற்றும்வரை நான் ஓய மாட்டேன்’’ என சபதம் எடுத்தார். இவரின் கைவண்ணத்தில் கோரக்பூரில் மியா பஜார் என்ற மார்க்கெட் ‘மாயா பஜார்’ ஆனது. உருது பஜார், ‘இந்தி பஜார்’ ஆனது. அலி நகர் பெயர் மாறி ‘ஆர்யா நகர்’ ஆனது. எதிர்காலத்தில் உத்தரப்பிரதேசத்தின் பல ஊர்கள் இப்படிப் பெயர் மாறக்கூடும்.

பிரதமரானதிலிருந்து மோடி இரண்டு விஷயங்களைச் சாமர்த்தியமாகச் செய்து வருகிறார். பி.ஜே.பி ஜெயிக்கும் மாநிலங்களில், சொந்த செல்வாக்கு இல்லாத புதுமுகங்களையே முதல்வர் ஆக்குகிறார். தேர்தல் நேரத்தில் மட்டும் இந்துத்வா தலையெடுக்கும். தேர்தல் முடிந்ததும் ‘வளர்ச்சி’ என்ற முகமூடியை அணிந்துகொள்வார்கள். ஆனால், உ.பி-யில் தனிப்பட்ட செல்வாக்குக் கொண்ட, தலைமைக்குக் கட்டுப்படாத ஒருவரை ஏன் முதல்வராக்க வேண்டும்?

80 நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்ட உ.பி-யில் 71 எம்.பி-க்களைப் பெற்றதே மோடி பிரதமரானதற்கு முக்கியக் காரணம். மதவாத பிரசாரமே இந்த வெற்றிக்கு உதவியது. இப்போதும் மோடி என்ற மந்திரத்தைத் தாண்டி, யோகி போன்றவர்களின் பிரசாரமே வெற்றிக்கு உதவியதாக மோடியும் அமித் ஷாவும் நினைக்கின்றனர். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் இருக்கின்றன. மீண்டும் மோடி பிரதமராக, உ.பி முக்கியம். உ.பி-யில் வெற்றி கிடைக்க யோகி ஆதித்யநாத் போன்றவர்கள் தேவை. இவரால்தான் அடுத்த தேர்தல்வரை உ.பி-யை கொதிநிலையில் வைத்திருக்க முடியும்.

அதனால், பல அதிரடி நாடகங்களை உத்தரப் பிரதேசத்தில் பார்க்கலாம்.

- தி.முருகன்

அனல் பேச்சுகள்!

‘அ
னல் கக்கும் பேச்சு’ என சிலர் பேசுவதை வர்ணிப்பார்கள். ஆனால், யோகி ஆதித்யநாத் பேச்சில் நிஜமாகவே அனல் பறக்கும். அவரின் சர்ச்சைக்குரிய உரைகளிலிருந்து சில பகுதிகள்:

* சூர்ய நமஸ்காரத்துக்கும் சிலர் மத அடையாளம் பூசுகிறார்கள். சூரியக் கடவுளையும் மதவாத அடையாளத்துக்குள் அடைப்பவர்கள், பேசாமல் கடலில் குதித்து செத்துப் போகலாம்.

* பெரும்பான்மை சமூக மக்கள் நடிகர் படங்களைப் புறக்கணித்தால், ஒரு சராசரி முஸ்லிம் போல தெருவில் திரிய வேண்டியிருக்கும் என்பதை நடிகர் ஷாருக் கான் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.

* இந்தியாவை கிறிஸ்தவ நாடாக மாற்ற முயற்சித்த மிகப் பெரிய சதித்திட்டத்தின் ஒரு அங்கம்தான் அன்னை தெரசா.