Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

 ‘மு.க.ஸ்டாலினும் அவருடைய கட்சி நிர்வாகிகளும் அவர்களின் சொத்துக்கணக்கை வெளியிடத் தயாரா?’ என்று தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் சொல்லி இருக்கிறாரே?


விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கழுகார் பதில்கள்

  தமிழிசை சொல்வது நல்ல விஷயம்தான். அது தி.மு.க-வினருக்கு மட்டுமானது அல்ல. அனைத்துக் கட்சித் தலைவர்களுமே தங்களின் சொத்துக்கணக்குகளை நாட்டுக்கு வெளிப்படையாக அறிவிப்பதுதான் நல்லது. எம்.எல்.ஏ., எம்.பி போன்ற தேர்தல்களில் போட்டியிடும்போது சொத்துக்கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்பது அல்ல. அரசியலுக்குள் நுழைந்தாலே கணக்குக் கொடுக்க வேண்டிய நிலைமையை உருவாக்க வேண்டும்.

கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன் புதூர்.

 அ.தி.மு.க ஆட்சி மன்றக்குழுத் தலைவராக சசிகலா நியமிக்கப்பட்டு இருப்பது குறித்து..?


  சசிகலாவை ஆட்சி மன்றக் குழுத் தலைவராக நியமித்து இருப்பதாக தினகரன் சொல்கிறார். தினகரனை ஆர்.கே.நகர் வேட்பாளராக சசிகலா நியமிக்கிறார். எது கட்சி, எது குடும்பம் என்று பிரிக்க முடியாத அளவுக்குப் பின்னி எடுக்கிறார்கள்.

கழுகார் பதில்கள்

சம்பத் குமாரி, பொன்மலை.

 எம்.ஜி.ஆர் இறந்தபோது, அவர் மரணத்துக்கு ஜெயலலிதாதான் காரணம் என்று சிலர் சந்தேகம் கிளப்பினார்கள். இப்போது, ஜெயலலிதா மரணத்துக்கு சசிகலாதான் காரணம் என்று சந்தேகப்படுகின்றனர். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

  எம்.ஜி.ஆர் இறந்தபோது, அவர் மரணத்துக்கு ஜெயலலிதாதான் காரணம் என்று யாரும் சந்தேகம் கிளப்பவில்லை. ஜானகி மீது சந்தேகம் கிளப்பியவர் ஜெயலலிதாதான். ‘எம்.ஜி.ஆருக்கு மோரில் விஷம் கலந்து ஜானகி கொடுத்துவிட்டார்’ என்று ஜெயலலிதா சொன்னார். இந்த மாதிரி அபாண்டமான பழிகளை அடுத்தவர் மீது போடுவதில் சளைக்காதவர் ஜெயலலிதா. ஆனால், அதை அப்போது யாரும் நம்பவில்லை. இப்படிச் சொன்ன ஜெயலலிதாவே, ஜானகியைச் சந்தித்து உறவைப் புதுப்பித்துக்கொண்டார்.

இன்றைய நிலைமை வேறு. ஜெயலலிதாவின் மரணத்துக்கு சசிகலாதான் காரணம் என்று பரவலாகப் பேசப்படுகிறது. 75 நாட்கள் யாரும் பார்க்க முடியாத வகையில் வைக்கப்பட்டார் ஜெயலலிதா. அ.தி.மு.க-வின் அவைத்தலைவர், பொருளாளர் பதவியில் இருந்தவர்களே இதனைச் சொல்ல ஆரம்பித்து உள்ளார்கள். மக்கள் சந்திப்புகளில் பெரும்பாலும், ‘ஜெயலலிதா மரணம் எப்படி நடந்தது?’ என்பதுதான் பேச்சாக உள்ளது.

அன்று ஒருவர் கிளப்பினார். இன்று ஊரே கிளப்புகிறது.  

கழுகார் பதில்கள்

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

 ‘ஆர்.கே.நகர் தொகுதியில் என்னை எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள்’ என்று, என்ன தைரியத்தில் சொல்கிறார் தீபா?


  இன்னும் தேர்தல் முடிவு வரவில்லை அல்லவா? அந்த தைரியத்தில்தான்!

கழுகார் பதில்கள்

செல்வராஜ் சித்தப்பா, பூம்புகார் மேலையூர்.

 ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகின்றன?


 அந்தந்த மாநிலத்தை ஆண்ட ஆளும்கட்சிகளின் தோல்வியைக் காட்டுகிறது. ஆளும்கட்சிக்கு எதிரான மக்களின் கோபத்தைப் பார்க்க முடிந்தது. உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியும், பஞ்சாபில் அகாலி தளம் - பி.ஜே.பி கூட்டணியும் தோல்வியைத் தழுவி உள்ளன. உத்தரகாண்டில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அது போய்விட்டது. பி.ஜே.பி வந்துவிட்டது. கோவாவில் பி.ஜே.பி ஆட்சி இருந்தது. மெஜாரிட்டி அமைக்கும் அளவுக்கு இந்தத் தேர்தலில் அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. மறுபடியும் காங்கிரஸ் அதிக இடங்கள் வைத்திருந்த கட்சியாக வென்றாலும், பி.ஜே.பி-க்கு மற்ற கட்சிகள் கொடுத்த ஆதரவால் அவர்கள் ஆட்சியை அமைக்கிறார்கள். இப்படிப் பார்த்தால் ஆளும்கட்சிகள் ஆட்சியை இழந்ததும், ஆட்சி அமைக்க முடியாமல் போனதும்தான் ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் தரும் பாடம்.

கி.தா.துரைசாமி, மேட்டுப்பாளையம்.

 ஐந்து மாநிலத் தேர்தல், பி.ஜே.பி-க்குச் சாதகமானதுதானே?


 அகாலி தளம் - பி.ஜே.பி கூட்டணி, பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியில் இருந்தது. இந்தத் தேர்தல் மூலமாக ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. 117 உறுப்பினர்கள் கொண்ட அந்த சட்டசபையில், பி.ஜே.பி உறுப்பினர்கள் மூன்று பேர்தான் இருக்கிறார்கள். மணிப்பூர் மாநிலத்தில் பி.ஜே.பி ஆட்சி அமைத்துள்ளது. 60 உறுப்பினர்கள் கொண்ட சபையில் 28 பேர் காங்கிரஸார். 21 பேர்தான் பி.ஜே.பி. ஆனால், இதர கட்சிகளின் ஆதரவைப் பெற்றுத்தான் ஆட்சியை அமைத்துள்ளது பி.ஜே.பி.

40 உறுப்பினர்கள் கொண்ட கோவா சட்டசபையில் காங்கிரஸ் பெற்ற இடங்கள் 17. பி.ஜே.பி பெற்றது 13 தான். அங்கும் இதரக் கட்சிகளைச் சேர்த்துக்கொண்டுதான் பி.ஜே.பி ஆட்சி அமைத்துள்ளது. அதாவது உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் இரண்டும்தான் முழுமையாகச் சாதகமான முடிவுகள் என்று சொல்ல முடியும்.

த.சத்தியநாராயணன், அயன்புரம்.

  காஞ்சி மடம், ஈஷா ஆகிய இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

  மடமே உலகம் என்று காஞ்சி நினைக்கிறது.

உலகமே மடம் என்று ஈஷா நம்புகிறது.

என்.முருகேஷ், மங்கைநல்லூர்.

  தி.மு.க-வின் செயல் தலைவராக ஸ்டாலின் ஆனதில் இருந்து, அழகிரி மெளனம் ஆனதற்கு என்ன காரணம்?


  ‘முடியல’ என்ற விரக்திதான்!

டி.சி.இமானுவேல், மயிலாடுதுறை.


 தமிழகத்தைச் சேர்ந்த 13 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மத்திய அரசுப் பணிக்கு ஓட்டமெடுத்திருப்பது தமிழக அரசியலில் நிலையற்ற தன்மை ஏற்பட்டு இருப்பதுதான் காரணமாக இருக்குமா?

 தமிழக அரசியலில் நிலையற்ற தன்மை இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஐ.பி.எஸ் மட்டுமல்ல, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்கூட மத்தியப் பணிக்குச் செல்லத் தயாராக இருக்கிறார்கள் என்பதும் உண்மைதான். ஆனால், இந்த 13 ஐ.பி.எஸ் அதிகாரிகளைப் பொறுத்தவரை, இவர்கள் இப்போது இந்த முடிவுக்கு வந்தவர்கள் அல்ல. நான்கைந்து ஆண்டுகளாகவே விண்ணப்பம் அனுப்பிவிட்டுக் காத்துக்கொண்டு இருந்தவர்கள். கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக அரசியல் இப்படித்தான் இருக்கிறது என்பதற்கு உதாரணம் இது.

மத்தியப் பணிக்குப் போனவர்கள் மறுபடி இங்கு வரத் தயாராக இல்லை என்பதும் இதனை உறுதிப்படுத்துகிறது.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

 ‘வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தாலும் தாமரைக்குப் போவது மாதிரி செட் பண்ணி விட்டார்கள்’ என்று மாயாவதி சொன்னதும், அதை அகிலேஷ் யாதவ் ஆதரித்திருப்பதும் எதைக் காட்டுகிறது?


  பொதுவாகவே தோற்றவர்கள் இப்படித்தான் காமெடி செய்வார்கள். ‘முஸ்லிம்கள் பெருவாரியாக உள்ள தொகுதியில்கூட, பி.ஜே.பி ஜெயித்திருப்பதை ஏற்க முடியாது’ என்றும் மாயாவதி சொல்லி இருக்கிறார். முஸ்லிம்களும் பி.ஜே.பி-க்கு ஓட்டுப் போட்டுள்ளார்கள். அதை ஏற்க முடியாது என்று இவர் எப்படிச் சொல்ல முடியும்? தோல்வி நேரத்துப் பிதற்றல் இது.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com  என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!