Published:Updated:

ஜெயலலிதாவுக்கு துரோகிகள்... தினகரனுக்கு தியாகிகள்!

ஜெயலலிதாவுக்கு துரோகிகள்... தினகரனுக்கு தியாகிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயலலிதாவுக்கு துரோகிகள்... தினகரனுக்கு தியாகிகள்!

ஜெயலலிதாவுக்கு துரோகிகள்... தினகரனுக்கு தியாகிகள்!

‘‘ஜெயலலிதா, ‘தே.மு.தி.க-வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை’ என்று சட்டமன்றத்திலேயே சொன்னார். நீங்கள் அவர்களிடம் ஆதரவு கேட்டு அழைப்பு விடுக்கிறீர்களே?’’

ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டதும் டி.டி.வி.தினகரனிடம் இப்படிக் கேட்டார்கள் நிருபர்கள். ‘‘ஜெயலலிதா வருங்காலம் என்று சொன்னது ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான். அதே நிலைப்பாட்டை நாம் என்றைக்கும் கொண்டு செல்ல முடியாது’’ என்றார் தினகரன். மற்ற கட்சிகள் விஷயத்தில் மட்டுமில்லை... அ.தி.மு.க-வில்கூட தினகரன் இதைத்தான் செய்கிறார். ஜெயலலிதாவால் வெறுக்கப் பட்டவர்கள், ஓரங்கட்டப்பட்டவர்கள், ‘கட்சித் துரோகிகள்’ என கட்டம் கட்டப்பட்டவர்களெல்லாம் இப்போது வரிசையாகக் கட்சிக்குள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

ஜெயலலிதாவுக்கு துரோகிகள்... தினகரனுக்கு தியாகிகள்!

மன்னை அண்டு கோ!

மன்னார்குடி முன்னாள் எம்.எல்.ஏ கு.சீனிவாசன், வழக்கறிஞர். திவாகரனுக்கு நெருங்கிய உறவினர். சசிகலா தரப்பினர் மீது ஜெயலலிதா ஆக்‌ஷன் எடுத்தபோது, அதன் ஒரு கட்டமாக ரிஷியூரில் வீட்டை இடித்ததாக திவாகரன் மீது வழக்குப் போட்டு சிறையில் அடைத்தார். அந்த வழக்கில் திவாகரனுக்கு ஆஜரானவர் சீனிவாசன்தான். அப்போது கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட சீனிவாசன், தற்போது தினகரனால் மீண்டும் சேர்க்கப் பட்டிருக்கிறார். திவாகரனுக்கு ஆதரவாக கோர்ட்டில் சாட்சி சொன்ன பலரை ஜெயலலிதா நீக்கினார். அவர்கள் அனைவரும் தற்போது தினகரனால் மீண்டும் சேர்க்கப்பட்டுவிட்டார்கள். மன்னார்குடி முன்னாள் நகராட்சி சேர்மன் சிவா.ராஜமாணிக்கத்தை காங்கிரஸிலிருந்து அ.தி.மு.க-வுக்குக் கொண்டுவந்தவர் திவாகரன்தான். ஒருவகையில் உறவினர். 2011 தேர்தலில், மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ சீட்டையும்  இவருக்குப் பெற்றுக் கொடுத்தார் திவாகரன். ஆனால், அவருக்கு வெற்றியைப் பெற்றுத்தரமுடியவில்லை. திவாகரனு டனான நெருக்கம் காரணமாகவே இவரையும் கட்சியிலிருந்து ஜெயலலிதா விலக்கி வைத்திருந்தார். இப்போது இவரையும் சேர்த்திருக்கிறார்கள்.

முன்னாள் திருவாரூர் மாவட்டச் செயலாளரும், கருணாநிதியை எதிர்த்து 2011ல் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டவருமான குடவாசல் ராஜேந்திரன் மற்றும் அவரது மகன்கள் அரசன்கோவன், தென்கோவன் ஆகிய மூவரும் கட்டப்பஞ்சாயத்து, கொலை வழக்குகள், கட்சிக்கு கெட்டப்பெயர், முக்கியமாக திவாகரனுடன் நெருக்கம் காரணமாக விலக்கப்பட்டனர். இப்போது இவர்களும் அ.தி.மு.க-வில்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஜெயலலிதாவுக்கு துரோகிகள்... தினகரனுக்கு தியாகிகள்!

மருத்துவமனைக்குச் சென்ற உடனே...

ஜி.ராஜேஸ்வரன், தஞ்சை நகராட்சியின் 26-வது வார்டு கவுன்சிலராக இரண்டு முறை பதவியில் இருந்தவர்.  சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனின் மகன் டாக்டர் வெங்கடேஷின் பள்ளிக்காலத்து நண்பர் என்பதால், அவருடன் தொடர்பில் இருந்ததால், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் நடராசனின் தம்பி எம்.ராமச்சந்திரனின் மகன் திருமணத்துக்கு டாக்டர் வெங்கடேஷுடன் சென்றதால், கட்சியிலிருந்தே நீக்கப்பட்டார். ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில், தஞ்சாவூர் தேர்தலில் பணியாற்றினார். அதிகாரபூர்வமாக இப்போது அவர் சேர்க்கப்பட்டு உள்ளார்.

நடராசனின் தங்கை வனரோஜாவின் மகன் ஆர்.தனசேகரன். இவர் கடந்த மூன்று முறையாக மாரியம்மன்கோவில் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர். 2011-ல் அ.தி.மு.க-விலிருந்து சசிகலா வகையறாக்களை கட்சியிலிருந்து நீக்கியபோது, இவரையும், இவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் எதுவும் செய்யவில்லை ஜெயலலிதா. ஆனால் நடராசனின் தம்பி எம்.ராமச்சந்திரன் மகன் திருமணத்தில் கலந்துகொண்டதால், தனசேகரனைக் கட்சியிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா. இவரும் தினகரன் உதவியால் இணைந்துவிட்டார்.

ஜெயலலிதாவுக்கு துரோகிகள்... தினகரனுக்கு தியாகிகள்!

அதானி எதிர்ப்பாளருக்கும் அட்மிஷன்!

ராமநாதபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற பொருளாளராகப் பதவி வகித்தவர், வி.பெரியசாமி. இவரது மகன் மணிகண்டன், ராமேஸ்வரம் நகர இளைஞர் பாசறை செயலாளர். அதானி குழுமத்தின் சூரியசக்தி மின் நிலையத்துக்காக கமுதி பகுதியில் செங்கப்படை, புதுக்கோட்டை கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த விஷயத்தில் தலையிட்டு, அதானி நிறுவன ஊழியர்களுடன் மோதியதால் இந்த இருவரையும் கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா. இப்போது தினகரன், அவர்களை மீண்டும் கழகத்தில் இணைத்துக் கொண்டிருக்கிறார். தேவிபட்டினம் பேரூராட்சி ஜெ.பேரவைச் செயலாளராக இருந்தவர் கணேசமூர்த்தி. கடந்த 2014-ம் ஆண்டு, பெண் ஒருவருக்கு தோஷம் கழிப்பதாகக் கூறி நிர்வாண பூஜை நடத்தியதாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்டார். இதனால் கொந்தளித்து, அவரைக் கட்சியிலிருந்து நீக்கினார் ஜெ. அவரும் இப்போது சேர்க்கப்பட்டுள்ளார்.

சேர்க்கப்பட்ட செந்தில் பாலாஜி ஆட்கள்!

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அரவக்குறிச்சியில் ஜெயித்து எம்.எல்.ஏ ஆனாலும், கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. முன்பு செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவியைப் பறித்து, அவரை டம்மி ஆக்கியபோது, ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர்கள், இப்போது சேர்க்கப்பட்டு உள்ளார்கள். செந்தில் பாலாஜியின் வலதுகரமான அசோக்குமாரையும் தினகரன் கட்சியில் சேர்த்திருக்கிறார்.

ஜெயலலிதாவுக்கு துரோகிகள்... தினகரனுக்கு தியாகிகள்!

மறுபடி வந்த மணல் கடத்தல் பார்ட்டி!

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் விழுப்புரம் நகர 26-வது வார்டு கவுன்சிலராக இருந்தவர் சேகர். சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகன் பாஸ்கரனுக்கு மிக நெருக்கம் என்பார்கள். அரசு வேலை வாங்கித் தருவதாக சுமதி என்ற பெண்ணிடம் மூன்று லட்சம் பணம் வாங்கியதாக புகார் உண்டு. வேலை கிடைக்காததால் அந்தப் பெண் புகார் அளிக்க, கடந்த 2013-ம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு போலீசார் பாஸ்கரனைக் கைது செய்தனர். சேகர் தலைமறைவானார். பின்னர் பதவியைவைத்து எஸ்கேப் ஆனார். திருட்டு மணல் அள்ளியதாக இவரின் மூன்று லாரிகள் கோட்டாட்சியரால் பறிமுதல் செய்யப்பட்டபோது, சசிகலா பெயரைச் சொல்லி மிரட்டினார். இது விவகாரமாகி, ஜெ. இவரைக் கட்சியில் இருந்து நீக்கினார். இவர் இப்போது சேர்க்கப்பட்டுள்ளார்.

போலீஸுடன் மோதியவருக்கும் மன்னிப்பு!

நெல்லை மாநகரம், மேலப்பாளையம் பகுதி அவைத் தலைவராக இருந்தவர், ஏ.அண்ணாமலை. 2012-ம் ஆண்டு, செம்மண் கடத்திய இரு டிப்பர் லாரிகளையும் ஒரு பொக்லைன் இயந்திரத்தையும் போலீஸார் பிடித்தனர். அப்போது போலீஸாருடன் தகராறு செய்தார் அண்ணாமலை. இதனால் அதிருப்தி அடைந்த ஜெயலலிதா, அண்ணாமலையை கட்சியிலிருந்து நீக்கினார். ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அவரைக் கட்சியில் சேர்த்துக் கொள்ளவில்லை. இப்போது அவர் மீண்டும் கட்சியில் இணைந்திருக்கிறார்.

சிஷ்யனிடம் சரண்டரான குரு!

முன்னாள் அ.தி.மு.க அமைச்சரும், இன்றைய திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான எம்.எஸ்.எம்.ஆனந்தனை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து அழைத்து வந்து அ.தி.மு.க-வுக்குள் ஐக்கியமாக்கியவர் சி.சிவசாமி. திருப்பூர் எம்.பி-யாக இருந்தவர். இவரை தனது அரசியல் குருவாக சொல்லிவந்தார் ஆனந்தன்.

காலச் சக்கரம் சுழன்றது. திருப்பூர் காலிபாளையம் பகுதியில் பிரமாண்ட வீட்டைக் கட்டிய சிவசாமி, ‘திருப்பூர் பகுதிக்கு ஜெயலலிதா வரும்போது இந்த வீட்டில்தான் தங்கப்போகிறார்’ என்று தொகுதிக்குள் பில்டப் கொடுத்துவந்தது தலைமையின் காதில் விழ, நேரில் கூப்பிட்டுக் கடிந்திருக்கிறார்கள். அதேபோல கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் திருப்பூரில் போட்டியிட்ட சத்யபாமாவை தோற்கடிக்கும் முயற்சிகளில் சிவசாமியும், அவரது மைத்துனர் தங்கராஜும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் தலைமைக்கு ஆதாரத்துடன் அனுப்பிவைக்கப்பட்டன. சிவசாமிக்கு எதிராக, தலைமையின் பவர் சென்டர்களை நோக்கி காய் நகர்த்தும் வேலைகளை ஆனந்தன் சிறப்பாகச் செய்து முடித்தார். அதைத் தொடர்ந்து சிவசாமி, தங்கராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்களான ஜாஹீர் உசேன், சூர்யா செந்தில் மற்றும் களஞ்சியம் பொன்னுசாமி ஆகியோரைக் கட்சியிலிருந்து தூக்கியெறிந்தார் ஜெயலலிதா. அதன்பிறகு அடையாளமின்றி இருந்த சிவசாமி, ஏற்கெனவே தினகரனுடன் இருந்த பழைய தொடர்புகளின் மூலம் இப்போது மீண்டும் கட்சிக்குள் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

ஜெயலலிதாவுக்கு துரோகிகள்... தினகரனுக்கு தியாகிகள்!

முன்பு சிவசாமி வகித்து வந்த மாவட்டச் செயலாளர் பதவியில் தற்போது சிஷ்யன் எம்.எஸ்.எம்.ஆனந்தன் நங்கூரமிட்டு அமர்ந்திருக்கும் வேளையில், ஓ.பி.எஸ் அணிப் பக்கம் சாயாமல், சிஷ்யன் பக்கம் சரண்டராகியிருக்கிறார்.

இரட்டை இலையைத் தோற்கடித்தவர் இப்போது கட்சியில்!

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றிய சேர்மனாக இருந்தவர் கெங்கையம்மாள். இவரையும், இவரது கணவரான முன்னாள் அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கத்தையும், ‘ஜாதியைச் சொல்லி இழிவாகப் பேசியதாக’ அமைச்சர் விஜயபாஸ்கர் மீது புகார் எழுந்தது. இந்தப் பிரச்னையில், முத்தரையர் சங்கங்களின் கூட்டமைப்பினர் களமிறங்க, புதுக்கோட்டையே கலவரமானது. அமைச்சர் விஜயபாஸ்கர் போகும் இடமெல்லாம் பிரச்னை ஆனது. அதனால், அவரிடமிருந்த மாவட்டச் செயலாளர் பதவியும் பறிபோனது. அமைச்சர் பதவிக்கும் சிக்கல் வந்தது. இந்நிலையில், கடந்த 2015 நவம்பர் 11-ம் தேதி, கெங்கையம்மாளையும், அவரது கணவர் சொக்கலிங்கத்தையும் ஜெயலலிதா, கட்சியில் இருந்து நீக்கினார். கடுப்பான சொக்கலிங்கம், கடந்த 2016 தேர்தலில், புதுக்கோட்டை தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, 22 ஆயிரத்து 973 வாக்குகள் பெற்றார். வெறும் 2 ஆயிரம் வாக்குகளில் அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான், வெற்றி வாய்ப்பை இழந்தார். இப்போது சொக்கலிங்கமும், கெங்கையம்மாளும் மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டுள்ளார்கள்.

ஆள்மாறாட்ட மனிதருக்கும் அடைக்கலம்!

சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் வெங்கடாசலத்திடம் நிறைய லெட்டர்பேடுகளை வாங்கி, அவற்றைத் தவறாகப் பயன்படுத்தி வந்தார் முகமது உசேன். ஆள் மாறாட்ட வழக்கில் ஜெயிலுக்குப் போனதால், ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இப்போது இவர் தினகரனால் சேர்க்கப்பட்டிருக்கிறார். தி.மு.க முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆட்களோடு சேர்ந்து அங்கம்மாள் காலனி நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாகப் புகாரில் சிக்கிய சித்தானந்தம், ஜெயலலிதாவால் முன்பு நீக்கப்பட்டார்; தினகரனால் இப்போது சேர்க்கப்பட்டிருக்கிறார்.

ஜெயலலிதா எடுத்த எல்லா முடிவுகளையும் திருத்துவாரோ தினகரன்!

- நமது நிருபர்கள்

ஜெயலலிதாவுக்கு துரோகிகள்... தினகரனுக்கு தியாகிகள்!

சேர்க்கப்பட்ட திவாகரனின் நிழல்!

சிகலாவுக்கு மிக நெருக்கமான குடவாசல் ராஜேந்திரனின் மருமகன், மணமேல்குடி கார்த்திகேயன். தன் மாமனார் மூலம் திவாகரனுக்கு அறிமுகமாகி, பிறகு திவாகரனின் நிழலாகவே மாறியவர். இதன் பலனாக, மணமேல்குடி ஒன்றியச் செயலாளர் பதவியும், கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் நிற்க வாய்ப்பும் கிடைத்தது. தேர்தலில் தோற்றுவிட்டார் கார்த்திகேயன். 2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தததும், ஆறுமுகசாமியிடமிருந்து, 12 மாவட்டங்களில் மணல் அள்ளும் குத்தகையை இவருக்குப் பெற்றுக்கொடுத்தார் திவாகரன். அடுத்த சில மாதங்களில், கோடிகளில் புரண்டார்.

கடந்த 2011-ல் சசிகலா குடும்பத்தினர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவேளையில், கார்த்திகேயன் தப்பித்தார். ஆனால், வெளிநாட்டுத் தொழிலதிபர் ஒருவரிடம் பல கோடிகளை வாங்கி ஏமாற்றியதாக இவர்மீது புகார் எழுந்தது. தொடர்ந்து இவரின் அடாவடி குறித்து ரிப்போர்ட் வரவே, அதிர்ந்த ஜெயலலிதா, இவரை கடந்த 2012 மார்ச் 30-ம் தேதி கட்சியிலிருந்தே நீக்கினார். திவாகரன் மீது வழக்குப் போடும்போது, கார்த்திகேயன் மீதும் வீரமாங்குடி கொள்ளிடம் ஆற்றில் அத்துமீறி மணல் அள்ளியதாக, வழக்குப் போட்டு சிறையில் அடைத்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சேகர் ரெட்டி உள்ளிட்டோரின் பிரச்னையால், மணல் பிசினஸ் அப்படியே கார்த்திகேயனுக்குக் கைமாற உள்ளதாகப் பேச்சு அடிபட்ட நிலையில், தற்போது இவர் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.