Published:Updated:

“இனி அரசியல் பற்றி பேச வேண்டாம்!”

“இனி அரசியல் பற்றி பேச வேண்டாம்!”
பிரீமியம் ஸ்டோரி
“இனி அரசியல் பற்றி பேச வேண்டாம்!”

இரா.கலைச்செல்வன் - படங்கள்: த.ஸ்ரீநிவாசன்

“இனி அரசியல் பற்றி பேச வேண்டாம்!”

இரா.கலைச்செல்வன் - படங்கள்: த.ஸ்ரீநிவாசன்

Published:Updated:
“இனி அரசியல் பற்றி பேச வேண்டாம்!”
பிரீமியம் ஸ்டோரி
“இனி அரசியல் பற்றி பேச வேண்டாம்!”

``மனிதர்களையும் மனிதத்தையும் நம்பினேன். ஏமாற்றப்பட்டேன்; கைவிடப்பட்டேன்'' என உடைந்த குரலில் பேசுகிறார் `இரும்பு மனுஷி' இரோம் ஷர்மிளா.

மணிப்பூரில் அமலில் இருக்கும் ஆயுதப்படை  சிறப்புச் அதிகாரங்கள் சட்டத்துக்கு எதிராக, கடந்த 16 ஆண்டுகள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டவர் இரோம் ஷர்மிளா. 28 வயதில் போராட்டத்தை தொடங்கியவருக்குத் தற்போது வயது 44. கடந்த ஆண்டு உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துகொண்டவர், `தேர்தலில் போட்டியிட்டு மாநிலத்தின் முதலமைச்சர் ஆகப்போகிறேன்’ என்று சொன்னார். சொன்னபடியே சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டமனறத் தேர்தலில் மணிப்பூர் முதலமைச்சர் இபோபி சிங்கை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்டார். ஆனால், யாருமே எதிர்பாராத வகையில் வெறும் 90 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார் இரோம் ஷர்மிளா. மன அமைதிக்காகக் கடந்த வாரம் கேரளா வந்திருந்தார். 

“இனி அரசியல் பற்றி பேச வேண்டாம்!”

கோழிக்கோட்டை ஒட்டிய கடற்கரைப் பகுதி. இரோம் ஷர்மிளாவைச் சந்திப்பதற்காக இரண்டு நாள்களாக அந்தக் கடற்கரையின் அருகே காத்திருந்த நேரம் முழுக்க இரோம் ஷர்மிளா எழுதிய புத்தகங்களே துணையாக இருந்தன. `அமைதியின் நறுமணம்' என்னும் கவிதைத் தொகுப்பில் `கடவுளுக்கும் புழுவுக்கும் இடையே நடந்த போரில், புழு கடவுளைக் கொன்றுவிட்டது' என எழுதியிருக்கிறார் இரோம் ஷர்மிளா. என்றோ எழுதிய இந்தக் கவிதை, இன்று அவருக்கு அப்படியே பொருந்துகிறது.

ஓர் ஆசிரமத்தில் தங்கியிருந்தவரை, இரவு 9 மணி அளவில் சந்தித்தேன். மெதுவாக... மிக மிக மெதுவாக வார்த்தைகளைத் தேடிப் பிடித்துப் பேசுகிறார் இரோம்.

``எப்படி இருக்கிறீர்கள் ஷர்மிளா? ஒரு பெண்... 16 ஆண்டுகாலம் உண்ணாவிரதம் இருந்திருக் கிறீர்கள். உங்கள் உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது?''


``நன்றாக இருக்கிறேன். இத்தனை ஆண்டுகள் மூக்கின் வழியே திரவ உணவு மட்டுமே செலுத்தப்பட்டிருந்தாலும், எனக்கு நோய்கள் ஏதும் இல்லை. ஆனால், எல்லோரையும்போல் இன்னும் என்னால் சரியாகச் சாப்பிட முடியவில்லை. இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக முயற்சிக்கிறேன். விரைவில் முழு நலமும் பலமும் பெற்றுவிடுவேன்.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


``எந்தத் தருணத்தில் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும், தேர்தல் அரசியலில் பங்கேற்க வேண்டும் என முடிவெடுத்தீர்கள்?''

``இது, ஒரு நாளில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. பல தருணங்கள், பல சம்பவங்கள், பல ஏமாற்றங்கள், பல தோல்விகள், துரோகங்கள் என எல்லாம் ஒன்றிணைந்து, ஒருகட்டத்தில் இந்த முடிவை நோக்கி என்னைத் தள்ளின. என் போராட்டம் வலுவிழந்துகொண்டிருப்பதாக உணர்ந்தேன். மேலும், அடுத்தகட்டமாக அரசியல் அதிகாரத்தைக் கொண்டே இந்த அழுக்கு அரசியலை எதிர்க்க வேண்டும், எதிர்க்க முடியும் என நம்பினேன்.''

``கடந்த வருடம் `ஆனந்த விகடன்’ பேட்டிக்காக நான் உங்களைச் சந்தித்தபோதே, `மக்கள் என்னை ஆதரிக்கவில்லை' என்று சொன்னீர்கள். பிறகு, எந்த நம்பிக்கையில் தேர்தலில் போட்டியிட்டீர்கள்?''

``என் 16 ஆண்டுகாலப் போராட்டமும், `தெளபால்' தொகுதியில் முதலமைச்சர் இபோபி சிங்கின் பதவிக்காலமும் ஒன்றுதான். அதனால் மக்கள் என்னை ஆதரிக்கிறார்களா... அல்லது இபோபி சிங்கை ஆதரிக்கிறார்களா? மக்கள் உண்மையிலேயே எந்த மனநிலையில் இருக்கிறார்கள்? சமூக மாற்றத்துக்கு எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினேன். அதனால்தான் அவரை நேரடியாக எதிர்த்துப் போட்டியிட்டேன். `மக்கள் என்னைத்தான் ஆதரிக்கவில்லை; என் போராட்டத்தை ஆதரித்தார்கள்' என்றே நம்பினேன். இறுதியில் ஏமாந்துபோனேன்.''

“இனி அரசியல் பற்றி பேச வேண்டாம்!”

``தேர்தலுக்கு முன்னர் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்தித்துப் பேசினீர்கள். அவர் உங்களை வழிநடத்தினாரா?''

``அவர் எனக்கு நிறைய அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார். ஆனால், நான் தேர்தல் வெற்றிக்காக வியூகங்கள் அமைப்பதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. மனிதர்களையும் மனிதத்தையும் மட்டுமே எனக்கான வியூகமாக அமைத்துக்கொண்டேன். இன்றைய தேர்தல் அரசியலில் அது எடுபடாது என்பதை இப்போது உணர்ந்துகொண்டேன்.''

``16 ஆண்டுகள் போராடிய நீங்கள், ஒரேயொரு தோல்வியில் துவண்டு `அரசியலைவிட்டே விலகுகிறேன்' எனச் சொல்வது சரியாக இருக்குமா?''

``இத்தனை ஆண்டுகள் நான் யாருக்காகப் போராடினேனோ, அந்த மக்கள் என்னைப் புறக்கணித்துவிட்டார்கள். இதற்கு மேல் என்ன வேண்டும்? அவர்களுக்கு நான் எந்தவிதத் தவற்றையும் தீங்கையும் செய்துவிடவில்லை. இந்தப் புறக்கணிப்பு, ஏனோ எனக்கு வலிக்கிறது. மீண்டும் மீண்டும் மக்களிடம் சென்று, `எனக்குக் கருணை காட்டுங்கள்!' எனக் கையேந்திக் கெஞ்சிக்கொண்டிருக்க என்னால் முடியாது. இங்கு அரசியல் முழுக்கவே பணம் சார்ந்த வியாபாரமாக இருக்கிறது. ஜனநாயகம் வீழ்த்தப் பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடா விட்டாலும் நான் தொடர்ந்து மக்களுக்காகப் போராடிக் கொண்டேதான் இருப்பேன்.''

``உங்கள் தோல்வியிலிருந்து, மணிப்பூர் மக்கள், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் எனப் புரிந்துகொள்ளலாமா?''

``என்னுடைய நீண்ட நெடிய போராட்டத்தின் காரணமாக இந்திய ராணுவம், மணிப்பூர் மக்களிடம் நடந்துகொள்ளும்விதத்தை மாற்றியுள்ளது; கடுமையைக் கொஞ்சம் குறைத்துள்ளது; கொலைகள் செய்வதையும், பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவதையும் குறைத்துள்ளது. ஆனால், மணிப்பூர் இன்று வேறு பல பிரச்னைகளைச் சந்தித்துவருகிறது. இளைஞர்களுக்கு சரியான வேலை இல்லை. வாழ்வாதாரப் பிரச்னைகள், ஊழல் அரசியல், பெண்களுக்கான உரிமைகள் மறுப்பு என, பிரச்னைகள் அதிகரித்திருக்கின்றன. அரசின் திட்டங்களும் மக்களை ஒன்றிணைக்காமல், சிதறடிக்கின்றன. இதன் காரணமாக, என் போராட்டத்தை ஆதரிக்கவும் இந்தக் கொடூர சட்டத்தை எதிர்க்கவும் மக்களுக்கு நேரமில்லாமல் போய்விட்டது. மற்றபடி மக்கள் இதை ஆதரிக்கிறார்கள் எனப் புரிந்துகொள்வது பெரும் தவறு.''

``உங்களின் எதிர்காலத் திட்டம் என்ன?''

``எல்லோரும் இதையேதான் கேட்கிறார்கள். இந்தக் கொடூரச் சட்டத்தை நீக்கப் போராடுவதுதான் என் வாழ்வின் மிகப்பெரிய லட்சியம். எனக்கு சாதாரண ஒரு வாழ்க்கையை, அதிகப்படியான பொறுப்பு உணர்வுடன் வாழ வேண்டும். என் தனிப்பட்ட வாழ்வை இயல்பாக வாழ முயற்சி செய்வதோடு, மனிதாபிமானமற்ற, இந்தக் கொடூரச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று என் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து போராடுவேன்.''

“இனி அரசியல் பற்றி பேச வேண்டாம்!”

``நரேந்திர மோடியின் கீழ் முழுபலத்துடன் இயங்கும் மத்திய அரசாங்கத்தை எதிர்த்து எப்படிப் போராடப்போகிறீர்கள்?''

``மொத்த உலகின் சார்பாகவும் அவருக்கு ஒரேயொரு கோரிக்கை. தயவுசெய்து மனிதாபிமானமற்ற, மிருகத்தனமான இந்தச் சட்டத்தை நீக்குங்கள். பிரிட்டிஷ் இந்தியாவுக்கு சுதந்திரத்தைக் கொடுத்தது போல, இந்தச் சட்டத்தை நீக்குவதன் மூலம் எங்களுக்கு சுதந்திரத்தைக் கொடுங்கள். அவ்வளவுதான். இதை நான் அவரிடம் தொடர்ந்து என் போராட்டங்களின் மூலம் வலியுறுத்துவேன்.''

``மணிப்பூரில் குறைந்த எண்ணிக்கையிலான இடங்களில் வெற்றிபெற்றிருந்தும் பா.ஜ.க ஆட்சி அமைத்துள்ளதே?''


``பணம் மட்டும்தான் காரணம். பணம் அதிகாரத்தை, அரசியலை வென்றெடுக்கிறது. பா.ஜ.க-வுக்கும் காங்கிரஸுக்கும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற மிகப்பெரிய பணப்போட்டி நடக்கிறது. இது குறித்து பேச, நான் துளியும் விரும்பவில்லை. போதும்... இனி அரசியல் பற்றிப் பேச வேண்டாம்.''

``உங்கள் அம்மாவைப் பார்த்தீர்களா... என்ன சொன்னார்?''


``உண்ணாவிரதத்தைக் கைவிடும் முன்னர் பார்த்தேன். என்னை ஆசீர்வதித்தார். அவர் படிப்பறிவு இல்லாதவர்தான். ஆனால், தன்னைச் சுற்றி நடப்பதை உன்னிப்பாகக் கவனிப்பவர். என் எதிர்காலம் குறித்த கவலைகள் அதிகம் அவருக்கு. என்னை ஏதாவது வேலையில் போய்ச் சேரச் சொல்கிறார்.''

``தமிழ்நாட்டு அரசியல் சூழல் பற்றித் தெரியுமா?''

``அதிகம் தெரியாது. சமீபத்தில் உயிரிழந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றிப் படித்தேன். அவர் மக்கள் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தியவராக இருந்தாலும், மக்கள் அவரை அன்போடும் மரியாதை யோடும் `அம்மா' என்று அழைப்பதாகப் படித்தேன். மிக ஆச்சர்யமாக இருந்தது.''

``உங்கள் காதலரைச் சந்தித்தீர்களா... எப்போது திருமணம்?''

(வெட்கப்படுகிறார் முகம் சிவக்கிறது... சிரிக்கிறார்) ``அவரை இன்னும் பார்க்க வில்லை. அவருக்கு உடல்நலம் சரியில்லை. அதனால் பயணிக்க முடியவில்லை. இங்கிலாந்தில் இருக்கிறார். விரைவில் மணிப்பூர் வருவார். விரைவில் நாங்கள் திருமணம் செய்துகொள்வோம்'' அன்பாகச் சிரிக்கிறார் இரோம் ஷர்மிளா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism