Published:Updated:

சின்னத்தை காவு வாங்கிய சின்னம்மா! - டெல்லி TO ஆர்.கே.நகர்

சின்னத்தை காவு வாங்கிய சின்னம்மா! - டெல்லி TO ஆர்.கே.நகர்
பிரீமியம் ஸ்டோரி
News
சின்னத்தை காவு வாங்கிய சின்னம்மா! - டெல்லி TO ஆர்.கே.நகர்

சிம்பல் ரிலே!

ஆர்.கே. நகர் என்ற ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு நடக்கும் இடைத் தேர்தல் மீது அகில இந்தியப் பார்வை குவிந்திருக்கிறது. ‘இரட்டை இலை வெற்றி தந்த இலை... உயர் லட்சியம் காத்திட வந்த இலை’ என அ.தி.மு.க மேடைகளில் பாடப்பட்ட இலைக்கு இன்று சோதனை. 1989 சட்டமன்றத் தேர்தலில் தொலைந்த இலை, பிறகு மீண்டு வந்து, 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முடக்கப்பட்டுவிட்டது. ‘இடைத் தேர்தல்களில் ஆளும்கட்சிதான் ஜெயிக்கும்’ என்கிற ஃபார்முலா இங்கு கேள்விக்குறி ஆகியிருக்கிறது. சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் என அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்து நிற்கும் நிலையில், ஜெயலலிதாவின் சாயல் கொண்ட அவரின் அண்ணன் மகள் தீபாவும் கோதாவில் குதித்திருக்கிறார். அ.தி.மு.க-வின் ஓட்டுகள் மூன்றாகச் சிதறும் நிலையில், இரட்டை இலை சின்னமும் இல்லாமல் போயிருக்கிறது. ஆர்.கே. நகரை வைத்து நடக்கும் அரசியல் பரபரப்புகளின் பல்ஸ்...

சின்னத்தை காவு வாங்கிய சின்னம்மா! - டெல்லி TO ஆர்.கே.நகர்

கோட்டைவிட்ட உளவுத்துறை!

‘இரட்டை இலை’ போலவே இருக்கும் ‘மின் கம்பம்’ சின்னத்தைப் பன்னீர் அணி சாதுர்யமாகத் தேர்வு செய்திருந்ததைப் பார்த்து சசிகலா அணியினர் அதிர்ந்துதான் போனார்கள். ஆட்டோ ரிக்‌ஷா, கிரிக்கெட் பேட், கத்தரிக்கோல் ஆகிய மூன்று சின்னங்களை சசிகலா அணியினர் இறுதி செய்திருந்தார்கள். ‘இவற்றில் ஒன்று கிடைத்தால் போதும்’ என்ற மனநிலையில் அவர்கள் இருந்தார்கள். ஆனால், பன்னீர் அணியினர் ‘இரட்டை’ என வரும் சின்னங்களையும் இலை போல தோற்றம் அளிக்கும் சின்னங்களையும் குறிவைத்து, இரட்டை குத்துவிளக்கு, மின் கம்பம் போன்ற சின்னங்களை லிஸ்ட் எடுத்து ரகசியமாக வைத்திருந்தார்கள். உளவுத்துறை எல்லாம் கையில் இருந்தும், இதை அறிந்துகொள்ளாமல் கோட்டைவிட்டது சசிகலா அணி. ‘மின் கம்பம்’ சின்னம் இரட்டை இலையைப் போலவே தோற்றம் அளிப்பதாகத் தெரிந்ததும், ‘எம்.ஜி.ஆரின் தொப்பி எனச் சொல்லிக் கொள்ளலாம்’ என நினைத்தார்களோ என்னவோ... தொப்பிக்கு மாறினார்கள்.

இலையை முடக்கிய பின்னணி!

இரட்டை இலை சின்னத்துக்காக டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் நடந்த கூத்து இது. ஆறாயிரம் பேரின் பிரமாணப் பத்திரம், ஆறு லட்சம் உறுப்பினர்களின் கையெழுத்து, 40 லட்சம் உறுப்பினர்களின் பட்டியல் ஆகியவற்றைத் தாக்கல் செய்தது ஓ.பி.எஸ் அணி. ‘ஜெயலலிதா மரணத்துக்கு சி.பி.ஐ விசாரணை கேட்டு நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் கையெழுத்து வைபவமும் நடந்தது ஏன்’ என்பது இப்போது புரிந்திருக்குமே! இன்னொரு பக்கம், 122 எம்.எல்.ஏ-க்கள், 1,912 பொதுக்குழு உறுப்பி்னர்கள், 37 எம்.பி-க்கள் ஆதரவுப் பட்டியலைக் கொடுத்தது சசிகலா தரப்பு. விசாரணை நடந்தபோது சல்மான் குர்ஷித், மோகன் பராசரன், வீரப்ப மொய்லி, ஆர்யமா சுந்தரம் என ‘பிக் ஷாட்’ வழக்கறிஞர்களை வைத்து வாதாடியது சசிகலா அணி. ஓ.பி.எஸ் தரப்பில் சி.எஸ்.வைத்தியநாதன், குரு கிருஷ்ணகுமார் ஆஜராகியிருந்தனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்புதான் உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவுக்கும், முலாயம் சிங் யாதவுக்கும் இடையே பிளவு ஏற்பட்டு ‘கட்சியின் சைக்கிள் சின்னம் யாருக்கு’ என்ற சர்ச்சை எழுந்தது. எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் அகிலேஷ் பக்கம் இருந்ததால் சைக்கிள் சின்னத்தை அகிலேஷிடம் வழங்கியது தேர்தல் ஆணையம். அதேபோல உரிமை கொண்டாடியது சசிகலா தரப்பு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சின்னத்தை காவு வாங்கிய சின்னம்மா! - டெல்லி TO ஆர்.கே.நகர்

‘‘அ.தி.மு.க எங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் அதிக அளவில் எங்கள் பக்கம்தான் இருக்கி றார்கள். பொதுக்குழு உறுப்பினர்களில் அதிகமானவர்கள் எங்களைத்தான் ஆதரிக்கிறார்கள்’’ என சசிகலா தரப்பு சொல்ல ஆரம்பித்ததுமே தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, “சின்னத்துக்கான விசாரணை மட்டும் நடைபெறுகிறது. பொதுச்செயலாளர் விவகாரம் பற்றிப் பேச வேண்டாம்” என்றாராம். ஓ.பி.எஸ் தரப்போ, “பொதுச்செயலாளர் நியமனமே செல்லாதபோது அவர் எப்படி இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும் அத்தாட்சிப் படிவமான ஃபார்ம் பி-யில் கையெழுத்துப் போட முடியும்’’ என்றார்கள்.

‘‘இரட்டை இலை சின்னத்தை தினகரன் தரப்புக்குத் தந்தால், சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனத்தை ஏற்றுக் கொண்டதாகிவிடும்’’ எனத் தேர்தல் ஆணைய சட்ட வல்லுநர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனால்தான் கட்சியின் பெயரையும் சின்னத்தையும் இரண்டு தரப்பும் பயன்படுத்த இடைக் காலத் தடை விதி்த்தது தேர்தல் ஆணையம். ‘‘ஆரம்பத்திலிருந்தே சின்னம்மாவை முன்னிலைப்படுத்தியதுதான் சின்னம் காவு வாங்கப்பட்டதற்குக் காரணம்’’ எனப் புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள் அ.தி.மு.க-வினர்.

கூடைதான் ‘மின் கம்ப’த்துக்குக் காரணம்!

2011 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில், முரசு சின்னத்தில் போட்டியிட்டது தே.மு.தி.க. ‘முரசு’ சின்னம் போலவே இருக்கும் ‘கூடை’ சின்னம் ஏற்படுத்திய குழப்பத்தால் தே.மு.தி.க வேட்பாளர்கள் இரண்டு தொகுதிகளில் தோற்றுப்போனார்கள். வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க வேட்பாளர் கந்தன் என்கிற முருகேசனை, தி.மு.க வேட்பாளர் செங்குட்டுவன் 7,604 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். உழைப்பாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட ரங்கநாதன் 8,943 ஓட்டுகள் பெற்றார். ரங்கநாதனுக்கு கூடை சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. வாக்காளர்களிடையே குழப்பம் ஏற்பட்டதால், ஜெயிக்க வேண்டிய தே.மு.தி.க தோற்றது. செஞ்சி தொகுதியிலும் இதே குழப்பம்தான். தே.மு.தி.க வேட்பாளர் ஆர்.சிவலிங்கம் 1,811 ஓட்டுகள் வித்தியாசத்தில் பா.ம.க வேட்பாளர் கணேஷ்குமாரிடம் தோற்றுப்போனார். இங்கே சுயேச்சையாகப் போட்டியிட்ட சிவக்குமாருக்கு கூடை சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் 8,627 வாக்குகள் வாங்கினார். முரசுக்கு விழ வேண்டிய ஓட்டுகள் கூடை சின்னத்துக்குப் போயின. விஜயகாந்த் போட்டியிட்ட ரிஷிவந்தியத்திலும் இதே குழப்பம் நிலவியது. அங்கு, கூடை சின்னத்தில் எம்.விஜயகாந்த் என்ற சுயேச்சை களமிறங்கி, 7,355 ஓட்டுகள் வாங்கினார். ஆனாலும், அது விஜயகாந்தின் வெற்றியைப் பாதிக்கவில்லை.

இப்படி கடந்தகாலத் தேர்தல் பாடத்தைக் கணித்துதான் இரட்டை இலையைப் போலவே தோற்றம் அளிக்கும் மின் கம்பம் சின்னத்தைத் தேர்வு செய்தது பன்னீர் அணி. இரட்டை இலையை நேசிப்பவர்கள், மின் கம்பம் சின்னத்துக்கு வாக்களிக்கலாம் என்பதுதான் பன்னீர் அணியினரின் கணக்கு. ‘‘ஆர்.கே. நகர் தொகுதியில் ஏற்கெனவே இரண்டு முறை இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர் சேகர்பாபு. தொகுதியிலும் அவர் ரொம்ப பரிச்சயம். அவர் தி.மு.க-வுக்குத் தாவி 2011 சட்டசபைத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். அவர் அ.தி.மு.க-வில்தான் இருக்கிறார் என நினைத்து இரட்டை இலைக்கு வாக்களித்துவிட்டார்கள். அதுபோல எங்களுக்கும் வாக்குகள் விழலாம்’’ என மதுசூதனன் தரப்பு சொல்லிக்கொண்டிருக்கிறது.

சின்னத்தை காவு வாங்கிய சின்னம்மா! - டெல்லி TO ஆர்.கே.நகர்

வேட்புமனு வைபோகமே!

சின்னத்தை காவு வாங்கிய சின்னம்மா! - டெல்லி TO ஆர்.கே.நகர்

  தொகுதியில் இருக்கும் மீனவ மக்களின் 50 ஆயிரம் ஓட்டுகளைக் குறிவைத்துப் போட்டியிடுகிறார் ‘மீனவர் மக்கள் முன்னணி கட்சி’யின் வேட்பாளர் வே.சங்கர்.

சின்னத்தை காவு வாங்கிய சின்னம்மா! - டெல்லி TO ஆர்.கே.நகர்

‘மதுக் குடிப்போர் விழிப்புணர்வு சங்கம்’ சார்பில் போட்டியிடும் ஆறுமுகம், கையில் தாலியுடன் மனு தாக்கல் செய்தார். ‘குடித்துவிட்டு இறப்பவர்கள் குடும்பத்துக்கு அரசு நிதியுதவி செய்ய வேண்டும்’ என்பதற்காகத்தான் தாலி சென்டிமென்ட்டாம். “தமிழ்நாட்ல ‘குடிமகன்கள்’ இல்லாத தொகுதின்னு ஒண்ணு கிடையாது சார். எல்லா கட்சிகளிலும் எங்களுக்கு ஆதரவாளர்கள் இருக்காங்க. கட்சி வித்தியாசம் பார்க்காம எங்களுக்குத்தான் ஓட்டுப் போடுவாங்க” எனத் தள்ளாடாமல் புதுக்கணக்குச் சொன்னார் ஆறுமுகம்.

சின்னத்தை காவு வாங்கிய சின்னம்மா! - டெல்லி TO ஆர்.கே.நகர்

தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ், ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் தடபுடலாக வந்தார்.

சின்னத்தை காவு வாங்கிய சின்னம்மா! - டெல்லி TO ஆர்.கே.நகர்

சின்னம் பற்றிய கவலையோ, வெற்றி குறித்த பதற்றமோ இன்றி, பரபரப்பாக சுற்றிக்கொண்டிருந்த ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன், “இது நான் போட்டியிடுற 178-வது தேர்தல். இதுவரை ரூ.20 லட்சத்துக்கும் மேல செலவு செஞ்சிருக்கேன். ஆனா, ஒரு முறைகூட டெபாசிட் வாங்கலை” என்றார்.

சின்னத்தை காவு வாங்கிய சின்னம்மா! - டெல்லி TO ஆர்.கே.நகர்

இந்து மக்கள் கட்சி வேட்பாளர் ராம.ரவிக்குமார் மாலையுடன் சவப்பெட்டியில் படுத்துக்கொண்டு வந்தார். திடீரென்று பெரிய சைஸ் சங்கு ஒன்றை எடுத்து அவர் ஊத... “தேர்தல் அலுவலகம் அருகில் இப்படியெல்லாம் இடையூறு செய்யக் கூடாது” என போலீஸ் தடுத்தது. “சமாதி அரசியலையும், சாராய அரசியலையும் ஒழிப்போம்” என அவருடைய ஆதரவாளர்கள் கோஷமிட்டனர்.

தொப்பியைத் தேடிய தினகரன்...  தினகரனைத் தேடிய போலீஸ்!


வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில் தேர்தல் அலுவலகம் ரொம்ப பிஸியானது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பி.ஜே.பி-யின் கங்கை அமரன், ஓ.பி.எஸ் அணியின் மதுசூதனன், எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் தீபா ஆகியோர் தேர்தல் அலுவலகத்துக்குச் சில நூறு மீட்டர் தூரத்திலேயே நிறுத்தப்பட்டனர். அதனால் அவர்கள் ரோட்டில் நடந்து வந்தனர். ஆனால், தினகரன் வந்த கார் மட்டும் அலுவலக வாசல் முன்பாக நிறுத்தப்பட்டது. ஜெயலலிதா இங்கே வேட்புமனு தாக்கல் செய்தபோது தரப்பட்ட அதே அளவு பாதுகாப்பும் மரியாதையும் தினகரனுக்குக் கிடைத்தன. தேர்தல் அலுவலகம் முன்பு கூடுதல் கமிஷனர்கள் சாரங்கன், கணேசமூர்த்தி, சங்கர், இணை கமிஷனர் சந்தோஷ்குமார், துணை கமிஷனர்கள் ஜெயகுமார், செல்வகுமார், சுதாகர் என்று பலரும் அட்டெண்டன்ஸ் போட்டிருந்தனர். தினகரன் வரும் ரூட் குறித்து வாக்கி டாக்கியில் போலீஸ் அதிகாரிகள் தகவலைக் கேட்டபடியே இருந்தனர். தினகரனின் வருகைக்காகப் பிற வேட்பாளர்களை மனுதாக்கல் செய்ய அனுமதிக்கவில்லை. தேர்தல் அலுவலகம் வந்ததும், தினகரன் தலையில் தொப்பி ஏறியது. ‘‘எந்தக் கலர் தொப்பி எடுப்பாக இருக்கும்?’’ எனத் தினகரன் கேட்டு செலக்ட் செய்த தொப்பியைத்தான் அணிந்து வந்தார். அதே மாடலில் 50 தொப்பிகள் வாங்கி வைத்திருக்கிறார்கள். தேர்தல் வரையில் தினமும் ஒரு தொப்பியை அவர் பயன்படுத்துவாராம். தொப்பி சின்னம் கிடைத்து அதை அணிந்து வரவேண்டும் என்பதால்தான் வேட்புமனு தாக்கலுக்குத் தாமதம் ஆனதாம்.

சின்னத்தை காவு வாங்கிய சின்னம்மா! - டெல்லி TO ஆர்.கே.நகர்

மது... சூது!

தினகரனுக்கு முன்னதாக மனு தாக்கல் செய்ய வந்தவர் மதுசூதனன். ஆனால், அவரை வாசலிலேயே நிறுத்தினார்கள். இதில் ஏதோ சூது உள்ளது என்பதைப் புரிந்துகொண்ட மதுசூதனன், ‘‘இப்படி குழப்பங்கள் வரும் என்று தெரிந்துதான், நேற்றே நாங்கள் வருகிற நேரத்தையும், மனுதாக்கல் செய்கிற நேரத்தையும் எழுத்துபூர்வமாகக் கொடுத்திருக்கிறோம். காலை 11 மணிக்கு நான் மனு தாக்கல் செய்வேன் என்று சொல்லியிருக்கிறேன். உள்ளே போய்ச் சொல்லுங்கள்” என்று குரல் கொடுத்தார். அதன்பிறகுதான் மதுசூதனனை அழைத்தார்கள். மனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்தவர், ‘‘எல்லாத்துக்கும் கால நேரம் இருக்கில்லையா?” என்றார்.

“தீபாம்மா, வீட்டிலிருந்து புறப்பட்டு விட்டார், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் விசேஷ பூஜையில் இருக்கிறார். பூஜை நல்லபடியாக முடிந்து கிளம்பி விட்டார்... தண்டையார்பேட்டைக்கு வந்து விட்டார்’’ எனத் தேர்தல் அலுவலக வாசலில் ரன்னிங் கமென்ட்ரி கொடுத்தபடியே இருந்தார்கள் அவரின் ஆதரவாளர்கள். தீபா வந்த நேரத்தில் தினகரனும் வந்துவிட்டார். அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள், “கொஞ்ச நேரம் நீங்க அப்படி உட்கார்ந்து கொள்ளுங்கள், அவங்க முடிச்சுட்டுப் போயிடட்டும்” எனச் சொல்லி, தேர்தல் அதிகாரி அறைக்குப் பக்கத்தில் இருந்த அறையில் தீபாவை உட்கார வைத்தனர்.

இனி ஆர்.கே. நகரில் அனல் பறக்கும்!

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி, அ.சையது அபுதாஹிர், எஸ்.கிருபாகரன், ந.பா.சேதுராமன்
படங்கள்: ஆ.முத்துக்குமார், தி.குமரகுருபரன், சீனிவாசலு