மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சசிகலா ஜாதகம் - 27 - திகுதிகு தீபா

சசிகலா ஜாதகம் - 27 - திகுதிகு தீபா
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா ஜாதகம் - 27 - திகுதிகு தீபா

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

சசிகலா ஜாதகம் - 27 - திகுதிகு தீபா

ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக் குமாரின் குடும்பம் கார்டனிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதற்கும், ஜெயக்குமாரின் உதவியாளர் மேகநாதன் மீது கஞ்சா வழக்கு பாய்ந்தற்கும் மையப்புள்ளி தீபா.

ஜெயக்குமார் மீது சசிகலா குடும்பத்துக்கு வெறுப்பு வரக்காரணமே ஜெயக்குமாரின் மகள் தீபாதான்! ஜெயக்குமார் குடும்பம் போயஸ் தோட்டத்தில் இருந்தபோது ‘செல்லப் பெண்’ணாக வலம் வந்தார் தீபா. அவரின் துடுக்குத்தனமும் குறும்பும் ஜெயலலிதாவுக்கு ரொம்பவே பிடிக்கும். ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்ததால் சசிகலா ஆட்களால், தீபா தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டார். சசிகலா குடும்பத்தினரை தீபா சட்டை செய்யவில்லை. தீபா மீது ஜெயலலிதா அளவு கடந்த பாசம் வைத்திருந்ததும் சசிகலாவுக்கு எரிச்சலை உண்டாக்கியது.

தி.நகர் வீட்டுக்கு வந்தபிறகும், போயஸ் கார்டனுக்கு அடிக்கடி போய்வந்து கொண்டிருந்தது ஜெயக்குமார் குடும்பம். அப்போது ஜெயலலிதா முதல்வராக இருந்தார். மேகநாதன் கைது செய்யப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பும், இப்படித்தான் ஜெயக்குமார் குடும்பம் கார்டனுக்கு போயிருந்தது. ஹைதராபாத் வீட்டில் சில நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு, ஜெயலலிதா கார்டன் திரும்பியிருந்தார். அந்த நேரத்தில்தான் ஜெயக்குமாரின் பிள்ளைகள் தீபா, தீபக் போயிருந்தனர். அவர்களுடன் ஜெயலலிதா வழக்கம் போலவே கொஞ்சிப் பேசிக்கொண்டிருந்தார். தீபாவை ‘டார்லிங்’ என்றுதான் ஜெயலலிதா அழைப்பது வழக்கம். அன்றைக்கும் அப்படித்தான் தீபாவுடன் பேசிக்கொண்டிருந்தார் ஜெயலலிதா. தீபா, தீபக் ஆகியோரிடம் ஜெயலலிதா, ‘‘உங்களுக்கு ஹைதராபாத்திலிருந்து நிறைய டிரஸ்கள் வாங்கிட்டு வந்திருக்கேன். எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டு பேரும் நன்றாகப் படித்து வெளிநாட்டுக்கெல்லாம் போய் சம்பாதிக்க வேண்டும். உங்களுக்கு என்ன தேவையோ அதையெல்லாம் என்னிடம் உரிமையோடு கேட்கலாம். என்ன வேண்டுமானாலும் உங்களுக்குச் செய்து தருவேன்’’ என அவர்களிடம் சொன்னார். இதையெல்லாம் சற்று தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தன, ஒரு ஜோடி கண்கள்.

சசிகலா ஜாதகம் - 27 - திகுதிகு தீபா

இந்தச் சம்பவம் நடந்ததற்குப் பிறகுதான் மேகநாதன் மீது ஆக்‌ஷன் பாய்ந்தது. அப்போது தீபா, ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்த சின்னப் பெண். மேகநாதன் கைது விவகாரம் தீபாவுக்கும் தெரியவந்தது. பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகின. ‘‘உங்க ஃபேமிலிக்கும் சி.எம்-முக்கும் என்ன சண்டை? உங்க பேரெல்லாம் பேப்பர்ல வருதே’’ என ஸ்கூலில் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இதனால் சில நாட்கள் பள்ளிக்கு அவர்கள் செல்லவில்லை.  ‘‘என்னிடமும் தீபக்கிடமும் எங்க அத்தை கொஞ்சிப் பேசாமல் இருந்திருந்தால் இந்த நிலைமை எங்களுக்கு வந்திருக்குமா? இவ்வளவு கஷ்டம் ஏற்பட்டிருக்குமா?’’ என அப்போதே தீபா உறவினர்களிடம் சொல்லி புலம்பினார்.

ஜெயலலிதாவுக்கும் அவரின் அண்ணன் ஜெயக்குமார் குடும்பத்துக்கும் நல்ல தொடர்பு இருந்து வந்தது. முதல்முறை ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில், உறவு அறுபட்டுப்போனது. அந்தக் காலகட்டத்தில்தான் போயஸ் கார்டனில் புது வரவுகளாக சசிகலாவும் அவரின் உறவுகளும் தங்க ஆரம்பித்தனர். ஜெயக்குமாரின் குடும்பத்துக்கும் சசிகலா குடும்பத்துக்கும் சிறுசிறு உரசல்கள் ஏற்பட ஆரம்பித்தன. அதிகாரம் செலுத்திக்கொண்டிருந்த சசிகலா குடும்பத்துக்கு, ஜெயக்குமார் குடும்பத்தைச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. குறிப்பாக தீபாவை. காரணம், அவர் ஜெயலலிதா சாயலில் இருந்தது மட்டுமல்ல. இன்னும் வேறுவேறு காரணங்கள்.

சின்னப் பெண்ணாக இருந்த தீபா, போயஸ் கார்டனுக்குப் போனபோதெல்லாம் அங்கே ஜெயலலிதாவைப் போலவே நடை, உடை, பாவனைகளைப் பின்பற்றியிருக்கிறார். ஹேர் ஸ்டைல், கர்ச்சீப்பால் முகத்தைத் துடைப்பது, தொண்டையைச் செருமுவது, விரலால் தலை முடியைக் கோதுவது என அத்தையைப் போலவே ஜாலியாக செய்து காட்டியிருக்கிறார் தீபா. ஜெயலலிதாவின் அறைக்குள் உரிமையுடன் நுழைந்து, பீரோவில் இருக்கும் அவரது உடைகளை எல்லாம் எடுத்துப் பார்த்து அடுக்கி வைப்பார். ‘‘அத்தைக்கு இந்த டிரஸ் நல்லா இருக்கும். ரோஸ் கலர்ல புடவை கட்டலாம்’’ எனத் துடுக்குத்தனமாக பேசிக் கொண்டிருப்பார். ஜெயலலிதாவைப் போலவே ஹேர் ஸ்டைலையும் மாற்றிக்
கொண்டார். இதெல்லாம் பாசத்தின் வெளிப்பாடுதான். இதையெல்லாம் தோட்டத்தில் இருந்தவர்கள் ரொம்ப கூர்ந்து கவனித்தார்கள்.

சசிகலா ஜாதகம் - 27 - திகுதிகு தீபா

இப்படித்தான் ஒரு நாள் போயஸ் கார்டன் வீட்டில் முதல்வர் ஜெயலலிதா அமரும் நாற்காலியில் தீபாவும் அமர்ந்தார். அது, முதல்வர் மட்டுமே அமரும் பிரத்யேக நாற்காலி. அதில் அமர்ந்த தீபா, ஜெயலலிதாவைப் போல போஸ் கொடுத்து அமர்ந்தார். விவரம் அறியாத சின்னப் பெண்ணாக தீபா நடந்துகொண்டதை ஜெயலலிதாவிடம் வேறுமாதிரியாகக் கொண்டு சேர்த்தார்கள். விளைவு? ஜெயக்குமார் குடும்பம் வெளியேற்றப்பட்டது.

(தொடரும்)