Published:Updated:

“ஆர்.கே.நகரில் நான்கு ஜெயலலிதாக்கள் போட்டியிடுகிறார்கள்!”

“ஆர்.கே.நகரில் நான்கு ஜெயலலிதாக்கள் போட்டியிடுகிறார்கள்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“ஆர்.கே.நகரில் நான்கு ஜெயலலிதாக்கள் போட்டியிடுகிறார்கள்!”

கலாய்க்கிறார் கங்கை அமரன்

‘‘டி.டி.வி.தினகரன் நல்ல நடிகர். அரசியல் அனுபவங்கள் அவருக்கு இல்லை. ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் அவர். ஜெயலலிதா மரணம் அடைந்தவுடன்  அ.தி.மு.க-வில் சேர்ந்துகொண்டு, ‘நான் இப்படித்தான் செய்வேன்’ என்று சொல்பவர் நடிகரா... உண்மைத் தொண்டரா?’’ என அதிரடியாகக் கேட்கிறார் கங்கை அமரன். திரை இசையில் கலக்கி வந்த கங்கை அமரன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பி.ஜே.பி-யின் புதுமுக வேட்பாளர். தகிக்கும் வெயிலில் தொகுதிக்குள் வலம்வந்த கங்கை அமரனைச் சந்தித்தோம்.

“ஆர்.கே.நகரில் நான்கு ஜெயலலிதாக்கள் போட்டியிடுகிறார்கள்!”

‘‘ஆர்.கே. நகர் தொகுதியின் பிரச்னைகள் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் பிரசாரம் எதை மையமாக வைத்து இருக்கும்?’’

“மறைந்த முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதி இது. தேர்தலின்போது அவர் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தீர்க்கப் படாத பிரச்னைகளுடன், பல புதிய பிரச்னைகளும் சேர்ந்துள்ளன. குடிநீரில் கழிவுநீர் கலந்துவரும் அவலம் தொடர்கிறது. இந்தப் பிரச்னைகளைத் தீர்க்கக்கூடிய இடத்தில் இருப்பவர்கள், இரக்க மனதுடன் அதைத் தீர்க்க முன்வரவில்லை. மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்னையும் மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. இந்த நிலையில், `அடித்தட்டு மக்களுக்கு அனைத்துத் திட்டங்களும் சென்றடைய வேண்டும்’ என்ற நோக்கத்தில் களமிறங்கியுள்ளேன். வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராடுவேன். வாக்குறுதி கொடுத்தவர்கள் தாங்கள் வைத்துள்ள பணத்திலேயே, இந்த மக்களுக்கு லாரி லாரியாக தண்ணீர் வழங்க முடியும். ஆனால், அவர்களுக்கு மனமில்லை. ‘மக்களுக்குச் சேவை செய்கிறேன்’ எனச் சொல்லிவிட்டு, செய்ய மறந்தவர்கள், கொடுக்க வேண்டிய பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஓடியவர்கள், திட்டங்களை நிறைவேற்றாமல் இருப்பவர்கள்  ஆகியோரைப் பற்றி மக்கள் மன்றத்துக்குக் கொண்டு சென்றாலே போதுமெனக் கருதுகிறேன்.”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz


‘‘ஆளும்கட்சியின் தரப்பில் தினகரன், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் தரப்பில் மதுசூதனன் என அரசியலில் பலம்வாய்ந்தவர்கள் களத்தில் உள்ள நிலையில்,  உங்களுடைய பிரசாரம் எந்தளவுக்கு எடுபடும்?’’

“இப்போது இந்தத் தொகுதியில் நான்கு ஜெயலலிதாக்கள் போட்டியிடுகிறார்கள். எந்த ஜெயலலிதா உண்மையானவர் என்பது தெரியவில்லை. ‘இந்தக் காரை யார் வைத்திருந்தார்கள்?’ என்ற காமெடியைப் போன்று ‘அ.தி.மு.க-வை இப்போது யார் வைத்திருக்கிறார்கள்’ என்று கேட்கவேண்டிய நிலைமையாகிவிட்டது. அ.தி.மு.க-வை தீபா வைத்திருக்கிறாரா? அல்லது, தீபாவின் கணவர் மாதவன் வைத்திருக்கிறாரா? தினகரன் வைத்திருக்கிறாரா? பன்னீர்செல்வம் வைத்திருக்கிறாரா? பொதுமக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். அந்தக் கட்சியை கை வேறு, கால் வேறாகப் பிரித்துவிட்டார்கள். ஜெயலலிதாவின் மரணத்துக்கான காரணங்கள் அறிவிக்கப்படவில்லை. அதனை நாம் கேட்பதற்கு உரிமையில்லை என்று ஆக்கிவிட்டார்கள். அந்த உண்மைகளை வெளியே கொண்டுவர வேண்டும். இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன? யார் அந்த அம்மாவைத் தள்ளிவிட்டார்கள்? இப்படி பல கேள்விகள் உள்ளன. கட்சிகளுக்கு அப்பாற்பட்டது முதல்வர் பதவி என்பதால், இந்தக் கேள்விகளை எல்லாம் கேட்கிறேன்.’’

“ஆர்.கே.நகரில் நான்கு ஜெயலலிதாக்கள் போட்டியிடுகிறார்கள்!”

‘‘சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரின் ஊழல்களைப் பற்றி பேசினீர்கள். அதன் காரணமாகவே ஆர்.கே. நகரில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டீர்கள் என்று சொல்கிறார்களே?’’

“நான் இல்லை என்றாலும், அவர்களுடைய ஊழல் விவகாரங்கள் வெளியில் வரும். மற்றவர்கள் விட்டுவிடுவார்களா? கங்கை அமரன் இல்லை என்று விட்டு விடக்கூடிய பிரச்னையா இது? ‘இப்போது நடந்துகொண்டிருப்பது ஜெயலலிதா ஆட்சியா, அல்லது ஜெயிலில் இருக்கிறவர்கள் உத்தரவு போட்டு நடத்துகிற ஆட்சியா’ என்பது உங்களுக்கே தெரியும். ஜெயலலிதா யார் யாரையெல்லாம் கட்சியை விட்டு நீக்கினாரோ... அவர்களெல்லாம் நீக்கப்பட்டவர்கள்தான். ஜெயலலிதா மறைந்த பிறகு, அவருக்குப் பிடிக்காதவர்களையெல்லாம் சேர்த்து பதவிகள் கொடுப்பது எந்த வகையில் நியாயம்? ஜெயலலிதாவுக்குப் பிடிக்கவில்லை என்பதால், ‘தனக்கும் தன்னுடைய உறவினர்களுக்கும் தொடர்பில்லை’ என்றே எழுதி கொடுத்துள்ளார் சசிகலா. ஜெயலலலிதா மறைந்துவிட்டார் என்பதால் அவற்றையெல்லாம் தூக்கிப்போட்டுவிட்டு தினகரனை முன்நிறுத்தினால் ஏற்றுக்கொள்வோமா?’’

‘‘உங்களுடைய சொத்துகள் அபகரிக்கப்பட்டது பற்றியும் பிரசாரத்தில் பேசுவீர்களா?’’  

“கலைத் துறையில் புகழ்பெற்று விளங்கக்கூடிய குடும்பத்தைச் சேர்ந்த எங்களின் சொத்தையே சசிகலா குடும்பத்தினர் மிரட்டி வாங்கினார்கள். அப்படியென்றால், சாமான்ய மக்களின் நிலை குறித்து சொல்லத் தேவையில்லை. அவர்களுடைய நிலத்தைப் பிடுங்கி, தமிழகத்தையே பட்டா போட்டுக்கொண்டு, வாடகையையும் பொதுமக்களிடமிருந்தே வசூலிப்பார்கள். மக்களுக்கு நல்லது செய்வதற்காக அவர்கள் அரசியலில் இறங்கவில்லை. தமிழகத்தை விலைக்கு வாங்குவதற்காக இறங்கியுள்ளார்கள். ஒவ்வொருவரின் வீட்டையும் பிடுங்கிக்கொண்டு, ‘வாடகை கொடு’ என்று சொன்னால், தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலைதான்வரும். ‘ஒரு குடும்பத்துக்கே அடிபணிய வேண்டுமா, அல்லது உன்னதமான கொள்கைகள் உள்ளவர்களுடன் ஒத்துப்போக வேண்டுமா’ என்பதை மக்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்.”

- கே.புவனேஸ்வரி
படங்கள்: பா.காளிமுத்து