Published:Updated:

``சேலம் ஐ.டி. கார்டு, ஊட்டி போலீஸ்... என்ன நடக்குதுனே தெரில!" ஆவணப்பட இயக்குநர் திவ்யா

``சேலம் ஐ.டி. கார்டு, ஊட்டி போலீஸ்... என்ன நடக்குதுனே தெரில!" ஆவணப்பட இயக்குநர் திவ்யா

சாப்பிட்டு வரலாமேனு டூவீலரை ஸ்டார்ட் பண்ணினப்போ திடீர்னு ஒருத்தர் வண்டியைப் பின்னாடி ஒரு மீட்டருக்கு இழுத்தார். நான் இறங்கினதும் சாவியை எடுத்துவெச்சுட்டார். யாருன்னு கேட்டதுக்கு போலீஸ்னு சொன்னார்.

``சேலம் ஐ.டி. கார்டு, ஊட்டி போலீஸ்... என்ன நடக்குதுனே தெரில!" ஆவணப்பட இயக்குநர் திவ்யா

சாப்பிட்டு வரலாமேனு டூவீலரை ஸ்டார்ட் பண்ணினப்போ திடீர்னு ஒருத்தர் வண்டியைப் பின்னாடி ஒரு மீட்டருக்கு இழுத்தார். நான் இறங்கினதும் சாவியை எடுத்துவெச்சுட்டார். யாருன்னு கேட்டதுக்கு போலீஸ்னு சொன்னார்.

Published:Updated:
``சேலம் ஐ.டி. கார்டு, ஊட்டி போலீஸ்... என்ன நடக்குதுனே தெரில!" ஆவணப்பட இயக்குநர் திவ்யா

``இரண்டு நாளைக்கு மட்டும் முன்ஜாமீன் கொடுத்திருக்காங்க" என்றவாறே பேசத் தொடங்குகிறார், திவ்யபாரதி. ஆவணப்பட இயக்குநர், களச் செயற்பாட்டாளர், வழக்கறிஞர் என பன்முகங்கள் திவ்யாவுக்கு. ஆனால், அனைத்திலும் ஒடுக்குமுறைக்கு எதிரான ஒற்றைக் குரல்தான். இவர் இயக்கிய `கக்கூஸ்' ஆவணப்படம், மலம் அள்ளும் துப்பரவுத் தொழிலாளர்களின் பிரச்னைகளை வெளிப்படையாகப் பேசியதால், பல அதிர்வுகளை ஏற்படுத்தியது. பல இடங்களில் திரையிடக் கூடாது எனத் தடைவிதிக்கவும் செய்தனர். அந்தத் தடையை மீறியும் சில இடங்களில் திரையிடப்பட்டு, அது குறித்த விவாதம் நடைபெற்றது.

திவ்யாவின் அடுத்த ஆவணப்படம், `ஒருத்தரும் வரேல'. இது, தென் தமிழக மாவட்டத்தில் வீசிய ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் துயரத்தைப் பேசும் படமாக உருவாக்கிவருகிறார். சமீபத்தில், இந்தப் படத்தின் `டீசர்' வெளியானது. அதில் சில காட்சிகள் சர்ச்சைக்குள்ளாயின. இந்தச் சூழலில் அவர் வீட்டில் போலீஸார் அதிரடியாக நுழைந்து தேடியது, நீதிமன்றத்தில் விசாரித்தது எனப் பரபரப்பான சம்பவங்கள் நடந்துவருகின்றன. திவ்யாவுக்கு ஆதரவாகப் பல அமைப்புகளும் களமிறங்கியுள்ளன. இதுகுறித்து திவ்யபாரதியிடம் பேசினோம். 

``புதன்கிழமை நான் பெரம்பலூர் போய்ட்டிருந்தேன். விடியற்காலையில் அஞ்சே முக்காலுக்கே வீட்டை நோட்டம் விட்டுட்டு இருந்திருக்காங்க. ஆறரை மணிக்குத் திடீர்ன்னு வீட்டு வாசல் பக்கமா நாலஞ்சு பேரு, பக்கத்து வீட்டு காம்பவுண்டிலிருந்து ஏறிக்குதித்து நாலஞ்சு பேருன்னு சுமார் 20 போலீஸ்காரங்க வந்திருக்காங்க. அதில், 13 பெண் போலீஸ். ஒருத்தரைத் தவிர மத்தவங்க எல்லாம் சாதாரண டிரஸ்லதான் இருந்திருக்காங்க. சர்ச் வாரன்ட் இல்லாமல் வீடு முழுக்க தேடியிருக்காங்க. அப்பாகிட்ட மிரட்டற மாதிரி விசாரிச்சிருக்காங்க. பீரோ, மேஜை, கிச்சன் என வாட்டர் டேங்கைக்கூட விடலை. என்ன ஏதுன்னு கேட்டதுக்குச் சரியான பதிலும் இல்லே.

பக்கத்து வீட்டுல இருக்கும் நண்பரான வக்கீல் ராஜேந்திரன் விசாரிச்சதுக்கு, `அவங்க எடுத்த படம் பற்றி கேட்கணும்'னு சொல்லியிருக்காங்க.`நானும் வக்கீல்தான் திவ்யாவும் வக்கீல்தான் வாரன்ட் இருந்தா கொடுங்க, நானே ஸ்டேஷனுக்கு அழைச்சுட்டு வரே'னு சொன்னதுக்கும் சரியான பதில் இல்லே. 20 நிமிஷம் தேடிட்டு கிளம்பிட்டாங்க. இந்த விஷயம் கேள்விப்பட்டதும், அங்கிருந்து கிளம்பி மதுரைக்கு வந்துட்டேன். மதுரை ஹைகோர்ட்டுல வக்கீல்களிடம் இதுபற்றி ஆலோசனை பண்ணிட்டு, மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்னுட்டிருந்தேன். மதியம் ரெண்டு மணியாகிடுச்சு. சாப்பிட்டு வரலாமேனு டூவீலரை ஸ்டார்ட் பண்ணினப்போ திடீர்னு ஒருத்தர் வண்டியைப் பின்னாடி ஒரு மீட்டருக்கு இழுத்தார். நான் இறங்கினதும் சாவியை எடுத்துவெச்சுட்டார். யாருன்னு கேட்டதுக்கு போலீஸ்னு சொன்னார்.

ஐடி கார்டைக் கேட்டு பார்த்தால், சேலம் மாவட்டம்னு இருந்துச்சு. அதுபற்றி கேட்டதுக்கு, `சமீபத்தில் டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருக்கேன். இன்னும் சேஞ்ச் பண்ணலே'னு சொன்னார். மற்ற வக்கீல்களும் அங்கே வந்து, `எப்படி கோர்ட் வளாகத்துல இப்படியெல்லாம் நடந்துக்கிறீங்க?'னு கேள்வி மேல் கேள்வி கேட்டாங்க. அங்கே இங்கேன்னு நின்னுட்டிருந்த போலீஸ்காரங்களும் கூடிட்டாங்க. அப்புறம், என்னை வக்கீல் சேம்பருக்குப் போகச்சொல்லி சக வக்கீல்கள் சொன்னதால், அங்கிருந்து போனேன். அங்கிருந்து வெளியே வர்ற மூணு வழிகளிலும் போலீஸ்காரங்க நின்னுட்டிருந்தாங்க. அதுக்கும் வக்கீல்கள் சத்தம் போட்டதும்தான் விலகினாங்க" என்று அயர்ச்சியுடன் சொல்கிறார் திவ்யா

சற்று இடைவெளிவிட்டு தொடர்ந்தவர், ``முன்ஜாமீன் கோரியிருந்ததை விசாரிக்கிறப்போ, `வந்திருந்தவங்க ஊட்டி போலீஸ்'னு அரசுத் தரப்பு வக்கீல் சொன்னார். ஐடி கார்டுல சேலம்னு இருக்கு, அவரோ ஊட்டி போலீஸ்னு சொல்றார். என்ன நடக்குதுனே புரியலே. நிரந்தரமா முன்ஜாமீன் தரமுடியாதுனு சொல்லி, ரெண்டு நாளைக்கு (இன்று வரை) கொடுத்திருக்காங்க. நான் எடுத்துட்டு இருக்கும், `ஒருத்தரும் வரேல' படத்தை முடக்க நினைக்கிறாங்க. அதுதான் விஷயமே. டிரெய்லரைப் பார்த்ததும் எப்படியாவது இதை நிறுத்திடணும்னு நினைச்சிருப்பாங்க. அதுக்கான பயமுறுத்தல்தான் இதெல்லாம்" என்கிறார் சிரித்துக்கொண்டே. 

``அப்படியென்றால் அந்தப் படம் வருமா?" எனக் கேட்டதுக்கு, ``இந்தக் கேள்விக்கே அவசியமில்லை. நிச்சயம் வரும். நாளைக்கு கேஸ் வருது. அநேகமா வழக்கும் போடலாம். என்ன நடந்தாலும் சரி, `ஒருத்தரும் வரேல' நிச்சயமாக வரும். அதில் சந்தேகமே வேண்டாம்" என்கிறார் உறுதியாக.