Published:Updated:

குற்றம்... திருட்டு... மக்கள்... வெங்கையா நாயுடு சொன்ன அறிவுரை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குற்றம்... திருட்டு... மக்கள்... வெங்கையா நாயுடு சொன்ன அறிவுரை
குற்றம்... திருட்டு... மக்கள்... வெங்கையா நாயுடு சொன்ன அறிவுரை

குற்றம்... திருட்டு... மக்கள்... வெங்கையா நாயுடு சொன்ன அறிவுரை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``சட்டம் கொண்டு வருவதால் மட்டுமே குற்றத்தைத் தடுத்துவிட முடியாது” என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக புதுச்சேரி வந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, ``புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உங்கள் அனைவருடனும் சந்தித்து உரையாடுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். தமிழில் பேசினால் புரிந்துகொள்வேன். ஆனால், தமிழிலேயே பேசுவது என்பது எனக்கு சிறிது சிரமம். புதுச்சேரி ஒரு சிறந்த இடம் மட்டுமல்ல, உலகப் புகழ் கொண்ட தனித்தன்மை வாய்ந்த நிலப்பரப்பு. புதுச்சேரி பல்கலைக்கழகம் இனி வரும் காலத்திலும் வளமானதாக விளங்க வேண்டும். ஒரே உலகம். ஒரே குடும்பம் அதுவே நமது நாட்டின் பாரம்பர்யம். இயற்கையை நாம் பாதுகாக்க வேண்டும்.

தகவல் தொழில்நுட்பம் மிக முக்கியமான ஒன்று. தகவல் தொழில்நுட்பத்தைப் படிப்பில் மட்டுமல்ல மக்கள் வாழ்க்கைக்கும் கொண்டு வர வேண்டும். மக்கள் நமது எஜமானர்கள். அவர்களை காத்திருக்க வைக்கக் கூடாது. அனைத்தும் ஆன்லைனில் கொண்டு வந்தால் மக்கள் வரிசையில் நிற்க வேண்டியதில்லை. அவர்களுக்குச் சிரமமில்லாமல் விண்ணப்பிக்க/பெற என அனைத்துக்கும் இணையம் வேண்டும். அதற்குத் தகவல் தொழில்நுட்பம் உதவுகின்றது. ஆன்லைன் மூலமாக தேர்வு என்பது மற்ற இடங்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும். அனைத்தும் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் அனைத்தையும் அறிந்துகொள்ள முடியும். நமது நாட்டில் 65% மக்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாகவே உள்ளனர். உலகம் முழுவதும் இந்தியாவை வியந்து பார்க்கிறது. அனைவரும் அவரவர் கடமையைச் செய்தால் இன்னும் 15 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் உலகளவில் முதலிடத்தைப் பிடிக்கும். புதிய திறமைகளையும், அறிவுத்திறனையும் வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். பல வெளிநாட்டு உணவுகள் வந்தாலும் நம் நாட்டு இட்லி, தோசைக்கு உலக அளவில் வரவேற்புள்ளது. இந்திய உணவை நமது முன்னோர் சோதித்துவிட்டனர். அடைக்கப்பட்ட உணவு ஒருபோதும் உடலுக்கு நல்லதல்ல.

இந்தியர் என்று சொல்லிக்கொள்வதில் இளைஞர்களாகிய நீங்கள் பெருமை கொள்ளுங்கள். கல்வி என்பது வேலைக்காக மட்டுமல்ல. கனவையும் குறிக்கோளையும் பெரியதாக எண்ணுங்கள். படிப்பதை சிரமமாக நினைக்காமல் மகிழ்வுடன் படியுங்கள். கல்வி கற்பிக்கும் முறை எளிதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் விரும்பிப் படிப்பார்கள். வாழ்க்கை முழுவதும் கற்றுக்கொண்டே இருங்கள். சம்பாதிக்க வேண்டும் என்று ஓடிக்கொண்டு இருக்காதீர்கள். மாணவர்கள் கல்வியில் ஆர்வம் மிக்கவர்களாக இருக்க வேண்டும். மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் தொடர்ந்து கற்க வேண்டும். பணம் சம்பாதிப்பது மட்டும் குறிக்கோளாக கொள்ளாதீர்கள். இது ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்.

மறைந்த மாணவி நிர்பையாவுக்கு ஏற்பட்ட நிகழ்வு நம் நாட்டில் எதிர்பாராத ஒன்று. பல்கலைக்கழகத்தில் உள்ள வாய்ப்புகளை மாணவர்களாகிய நீங்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். நம் நாட்டில் இருக்கும் 800 பல்கலைக்கழகங்களில் ஒரு சில பல்கலைக்கழகங்களே சர்ச்சைகளில் சிக்குகின்றன. பல்கலைக்கழகம் கல்வி கற்கும் இடமாக மட்டுமே இருக்க வேண்டும். மற்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட இது இடமல்ல. பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வருவதால் மட்டுமே ஒரு குற்றத்தை தடுத்துவிட முடியாது. காவல் நிலையங்கள் இருந்தும் திருட்டுகள் நடக்கத்தான் செய்கின்றன. அதனால் மாற்றம் என்பது மக்களிடம் வர வேண்டும். கல்வியில் மாற்றம் வேண்டும். பெண்களை மதிக்க சிறுவயதிலேயே கற்றுத்தர தர வேண்டும்.

வீட்டில் அனைவரும் தாய்மொழியைப் பேசுங்கள். எங்கு சென்றாலும் உங்கள் தாய்மொழியைப் புரிந்துகொள்ளும் இடங்களில் அதையே பேசுங்கள். மற்ற இடங்களில் வேண்டுமானால் வேறு மொழியைப் பயன்படுத்துங்கள். இது இளைஞர்கள் மாணவர்களுக்கு எனது அறிவுரை. தாய்மொழி நமது கண்களைப் போன்றது. மற்ற மொழி கண்ணாடியைப் போன்றது. தேவையான நேரத்தில் மட்டும் அணியுங்கள். தாய், பிறந்த மண், தாய்மொழி, தாய்நாடு, குரு ஆகிய ஐந்தும் தான் நம் வாழ்க்கையில் முக்கியம்.

இந்தியாவில் தாய் மொழியில் அனைத்து பாடங்களும் வர வேண்டும். உங்கள் எண்ணம் நிறைவேறும் வரை கடுமையாக உழையுங்கள். பிரகாசமான எதிர்காலம் உள்ள நிலையில் எதற்கு வாழ்க்கையை வீணடிக்கின்றீர்கள். கற்கும் நேரங்களைத் தவிர சமூகத்தைப் பற்றி அறிந்துகொள்ள நேரத்தை செலவிடுங்கள். கிடைக்கும் நேரங்களில் கிராமப்புறங்கள் சென்று கல்வி கற்பியுங்கள். தூய்மை இந்தியாவை உருவாக்குவதற்கு எண்ணுங்கள். பல்கலைக்கழகங்களுக்குத் தேவையானவற்றைச் செய்து தர மனித வள மேம்பாட்டுத்துறையிடம் தெரிவிப்பேன். சிறந்த முதல்வரையும், சிறந்த துணைநிலை ஆளுநரையும் கொண்டுள்ளது புதுச்சேரி மாநிலம். ஒரே நாடு, ஒரே எண்ணம், ஒரே இந்தியா” என்று முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு