Published:Updated:

“சின்னம்மாவை ஆதரிக்க 5 கோடி!” - கிலி கிளப்பும் புலிப்படை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“சின்னம்மாவை ஆதரிக்க 5 கோடி!” - கிலி கிளப்பும் புலிப்படை
“சின்னம்மாவை ஆதரிக்க 5 கோடி!” - கிலி கிளப்பும் புலிப்படை

“சின்னம்மாவை ஆதரிக்க 5 கோடி!” - கிலி கிளப்பும் புலிப்படை

பிரீமியம் ஸ்டோரி

‘முக்குலத்தோர் புலிப்படை’ நிர்வாகிகளை கருணாஸ் கூண்டோடு கலைத்துவிட, அதிர்ந்துபோன நிர்வாகிகள் ‘கிலி’ கிளப்பி வருகிறார்கள். “என்னதான் பிரச்னை?” என்று விசாரித்தோம்.

முக்குலத்தோர் புலிப்படையின் பொதுச்செயலாளராக இருந்த பாண்டித்துரை நம்மிடம், “கருணாஸை அரசியலுக்குக் கொண்டுவந்து சீட் வாங்கிக்கொடுத்து, திருவாடனையில் வெற்றிபெற வைத்தது நாங்கள்தான். பழசை மறந்து, இப்போது எங்களை ஒதுக்குகிறார். அவர் பக்கா தி.மு.க குடும்பம். அதனால்தான் அவர் தந்தை அவருக்கு ‘கருணாநிதி’ என பெயர் வைத்திருந்தார். ஆரம்பத்தில் ‘முக்குலத்தோர் புலிப்படை’ என்ற டிரஸ்ட்டை சென்னையில் தொடங்கினார். அதில் அவர், முக்குலத்தோர் அல்லாத மனைவி, மைத்துனர், மேனேஜர் அமல்ராஜ் ஆகியோர்களை டிரஸ்டிகளாக நியமித்தார். எங்களுக்கு இது, பிறகுதான் தெரியும். இவர், ‘முக்குலத்தோர் முகவரி’ என ஒரு பாடல் சி.டி வெளியிட்டபோது நல்ல கூட்டம் வந்தது. அதற்குப் பின்பு கீழத்தூவலில் ஐந்து தியாகிகளின் அஞ்சலிக்கு அழைத்து வந்தேன். அதற்குக் கூடிய கூட்டத்தைப் பார்த்ததும், அவருக்கு அரசியல் ஆசை வந்துவிட்டது.

“சின்னம்மாவை ஆதரிக்க 5 கோடி!” - கிலி கிளப்பும் புலிப்படை

நான் அப்போது அ.தி.மு.க-வில் பரமக்குடி நகர ஜெயலலிதா பேரவைப் பொறுப்பில் இருந்தேன். ‘நான் சினிமாவில் சம்பாதிக்கிறேன். இந்த சமுதாயத்துக்கு ஏதாவது செய்யணும். ஏழை பிள்ளைகளைப் படிக்க வைக்கணும். தமிழகத்தில் நாம் ஒரு சக்தி என்பதை காட்டணும்’ என்று என்னிடம் அருமையாகப் பேசியவர், தொடர்ந்து தேவர் குருபூஜை, மருதுபாண்டியர் பூஜை, பெருங்காமநல்லூர் தியாகிகள் அஞ்சலி, வேலு நாச்சியார் அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு வர ஆரம்பித்தார்.

சட்டமன்றத் தேர்தல் வந்தபோது, அவர் ‘தி.மு.க-தான் ஜெயிக்கும்’ என்று எங்களிடம் சொன்னார். ஸ்‌டாலினுக்குத் தூதுவிட்டார். அங்கு சீட் கிடைக்கவில்லை. நாங்கள்தான் அம்மாவைப் பார்க்க அப்பாயின்ட்மென்ட் வாங்கி, அவரை அழைத்துச் சென்றோம். இரண்டு சீட் கேட்டோம். ஒரு சீட் என்று திருவாடானையை ஒதுக்கினார்கள். பல எதிர்ப்புகளை மீறி, அங்குள்ள அ.தி.மு.க-வினரை சமாதானப்படுத்தி அவரை வெற்றிபெற வைத்தோம். வேட்பு மனு தாக்கல் செய்யும்போதே, மாற்று வேட்பாளராக தனது மனைவியைப் போட்டார். அவருக்காகப் பாடுபடும் எங்களில் ஒருவரைத் தேர்வு செய்ய மனம் வரவில்லை.

எம்.எல்.ஏ-வான பிறகு அவருடைய நடவடிக்கைகள் மாறத் தொடங்கின. ஒப்பந்த வேலைகளை மாவட்டத்திலுள்ள அ.தி.மு.க-வினருக்கோ, எங்களுக்கோ வாங்கித் தரவில்லை. ‘முக்குலத்தோர் என்றால் இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம்’ என்று புது கோஷத்தை வைத்தார். எங்களுடைய கொடியில் தேவர் படத்தை எடுத்தார். எங்கள் கட்சி இதழில் தேவர் படத்தை எடுத்துவிட்டு மும்மதச் சின்னங்களை வைத்தார். இதனால் எங்களுக்குள் விரிசல் ஏற்படத் தொடங்கியது. கூவத்தூர் சென்றபோது, எங்களை அழைத்து பக்கத்தில் ஒரு பங்களாவில் கூட்டம் போட்டார். மறுநாள் போன் போட்டு, ‘ஒரு கோடி ரூபாய் கொடுத்தார்கள். அதில் கடனை அடைத்துவிட்டேன்’ என்றார். ஆனால், ஐந்து கோடி ரூபாய் வாங்கியதாக எங்களுக்கு உறுதியான தகவல் வந்தது. இந்நிலையில்தான் எங்களை நீக்கியுள்ளதாக கடந்த 23-ம் தேதி அறிவித்துள்ளார்’’ என்றார்.

கட்சியின் துணைத்தலைவர் சந்தனகுமார், ‘‘கருணாஸ், சமுதாய மக்களை ஏமாற்றுகிறார். திருவாடானை தொகுதிக்குள் மக்கள் இவரைவிட மறுத்தபோது, நாங்கள்தான் காப்பாற்றினோம். இனி முக்குலத்தோர் புலிப்படையை முறையாக நடத்துவோம்’’ என்றார்.

“சின்னம்மாவை ஆதரிக்க 5 கோடி!” - கிலி கிளப்பும் புலிப்படை

கருணாஸின் அரசியல் பற்றி நம்மிடம் பேசிய மறத்தமிழர் சேனையின் தலைவர் புதுமலர் பிரபாகரன், ‘‘முதலில் அவர் முக்குலத்தோரா என்பதில் சந்தேகம் உள்ளது. அவர் காட்டிய சாதி சான்றிதழில் உண்மை இல்லை. ஒரு டிரஸ்ட்டை நடத்தி, அதை ‘கட்சி’ என்று சொல்லி, விவரம் தெரிந்தவர்களையே ஏமாற்றியிருக்கிறார். இதற்கே இவர் மீது மோசடி வழக்குக் போடலாம்’’ என்றார்.

“சின்னம்மாவை ஆதரிக்க 5 கோடி!” - கிலி கிளப்பும் புலிப்படை

இந்தக் குற்றச்சாட்டுகள் பற்றி விளக்கம் கேட்க கருணாஸிடம் பேச முயன்றோம். அவர் சார்பாக முத்துராமலிங்கம் என்பவர் பேசினார். “நான் முக்குலத்தோர் புலிப்படையின் ‘முக்குலத்தோர் முகவரி’ இதழின் ஆசிரியர். கருணாஸ் மீது இவர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் நேர்மையற்றவை. அண்ணன் இவர்கள் யாரையும் கட்சியைவிட்டு நீக்கவில்லை. அவர்கள் வகித்தது எல்லாம் தற்காலிக பொறுப்புதான். டிரஸ்ட்டாக இருந்ததால், யாருக்கும் நிரந்தரப் பொறுப்பு கொடுக்கவில்லை. சமீபத்தில்தான் சொசைட்டி ஆக்ட்டில் பதிவு செய்திருக்கிறோம். அதனால்தான் அமைப்பைக் கலைத்துவிட்டு புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க உள்ளோம் என அறிவித்தோம். அதை அவர்கள் தப்பாகப் புரிந்துகொண்டு தேவையில்லாமல் அவதூறு கிளப்புகிறார்கள். அவர் முக்குலத்தோரை மறக்கவில்லை. அந்த சமுதாய மக்களுக்காகத்தான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். அவர் சின்னம்மாவை ஆதரிக்க பணம் வாங்கியதாகச் சொல்வதெல்லாம் அவதூறு” என்றார்.

இந்த நிலையில், முக்குலத்தோர் புலிப்படையில் இருந்து கருணாஸ் நீக்கப்பட்டதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர். காமெடி நடிகரின் கட்சி விவகாரம், சண்டைக் காட்சிகளுடன் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது.

- செ.சல்மான்
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு